செப்டம்பர்

முகப்பு தினதியானம் செப்டம்பர் பக்கம் 3

உண்மையுள்ள தேவன்

செப்டம்பர் 30

“உண்மையுள்ள தேவன்” உபா. 7:9

மானிடரில் உண்மையுள்ளவர்களைக் கண்டுபிடிப்பது முடியாத காரியம். ஆனால், நமது தேவன் உண்மையுள்ளவர் என்று நாம் அறிகிறோம். ஆனால் நாம் அவரை நம்பலாம். அச்சமன்றி அவரை நெருங்கித் தாராளமாக அவரிடத்தில் யாவற்றையும் மனம் திறந்து சொல்லலாம். அவர் உண்மையுள்ளவராகையால் நம்மைப் புதியவர்களாக மாற்றுகிறார். நம்மைக் கண்டிக்கிறார். தம்முடைய சித்தத்தை நமக்கு அறிவிக்கிறார். துன்பங்களில் நம்மை ஆதரித்து, நம்முடைய கஷ்டங்களில் நம்மை மீட்கிறார். நமது பகைவரை வென்று அடக்குகிறார். நமது இருளான நேரங்களில் நமக்கு வெளிச்சம் தருகிறார்.

தேவன் உண்மையுள்ளவர் என்பது நமக்குக் கிடைக்கும் தேவ இரக்கத்திலும், நம்மைப் பாதுகாக்கும் கிருபையிலும், நமது குறைகளிலும், நாம் சுமக்கும் சிலுவையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமது மகத்துவங்களை நமக்குக் காண்பிக்கவும், தமது வசனத்தை அதிகாரத்துடன் செலுத்தவும், நம்முடைய வேண்டுதல்களுக்குப் பதிலளிக்கவும் தமது சித்தத்தைச் செயல்படுத்தவும், நமக்கு சகல நன்மைகளைப் பொழியவும் தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். ஏதேன் தோட்டத்திலிருந்து பாவம் செய்த ஆதாமை வெளியேற்றினதாலும், பெருவெள்ளங்கொண்டு பாவிகளான மக்களை நோவாவின் காலத்தில் அழித்ததினாலும், பாவ மக்களை மீட்கத் தமது குமாரனையே தந்ததினாலும், நமது ஆன்மீக வாழ்க்கையில் நம்மைத் தாங்கி திடப்படுத்தத் தம் ஆவியானவைர அருளினதாலும் அவருடைய நீதியும் உண்மையும் விளங்குகின்றன. அவர் நமது அடைக்கலம். கன்மலை. இளைப்பாறுதல். அவர் உண்மையுள்ளவராதலால் நாமும் உண்மையுள்ளவர்களாக இருப்போமாக.

கர்த்தர் மேல் வைத்திடு
உன் பாரமனைத்தையும்
உண்மையுள்ள அவர் தாம்
உன் பளு நீக்கிக்காப்பார்.

நான் உங்கள் நாயகர்

செப்டம்பர் 27

“நான் உங்கள் நாயகர்” எரேமி. 3:14

மனித உறவிலேயே மிகவும் நெருக்கமானது கணவன், மனைவி உறவுதான். இருவரும் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள். கர்த்தரும் தமது ஜனங்களுக்கு இவ்வுறவையே காட்டியிருக்கிறார். அவர் அவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணியிருக்கிறார். அவர்களும் அவருக்கு வாக்குக்கொடுத்திருக்கிறார்கள். அவர் தம்முடைய அன்பை அவர்கள்மேல் வைத்திருக்கிறார். அவர்களும் அவர்மேல் தங்கள் பாசத்தை வைத்திருக்கிறார்கள். அவர்களை அவர் தேடித் தெரிந்துகொண்டார். அவர்களும் அவரைக் கண்டுபிடித்து விட்டார்கள். இரு சாராரும் ஒருவர்மீது ஒருவன் பிரியங்கொண்டுள்ளார்கள். அவர்களைத் தேடி அவர்கள் மத்தியில் வருகிறார். இரு சாராரும் அன்புடன் கலந்து உரையாடுகின்றனர். சேமித்து வைத்திருக்கிறார். அவருடைய வளத்தில் அவர்கள் வளம் பெறுகிறார்கள்.

தேவ பிள்ளையே! கர்த்தர் உன் நாயகர் என்பதை நீ உணருகிறாயா? அவருடைய ஐசுவரியமும், ஞானமும் அளவிலடங்காதவை என நீ அறிவாயா? அவருடைய மணவாட்டியான திருச்சபையாக நீ சஞ்சரிக்கிறாயா? அவருக்கு வாழ்க்கைப்பட்ட அவருடைய மனைவியைப்போல் நீ தேவனுக்காய் வாழ்கிறாயா? யாவற்றையும் அவருக்கு விட்டு விட்டு, உனக்குத் தேவையானதெல்லாம் அவர் தருவார் என்று நம்பிக்கையுடன் உன் நாயகராகிய அவருக்கு மன நிறைவுதரும்படி வாழ்கிறாயா? உன்னை நேசிக்கும் மற்றவர்கள் என்றும் உன்னை விட்டுப் பிரிவதே இல்லை. அவர் உன்னைக் காத்து நடத்துவார். அவரோடு ஐக்கியப்படு. எதுவும் உன்னை அவரைவிட்டுப் பிரிக்காதிருக்கட்டும்.

நான் உம்மோடு ஐக்கியப்பட்டும்
பிரகாசிக்க அருள் செய்யும்,
அப்போ நான் உம்முடையவன் என
வானமும் பூமியும் அறிந்திடும்.

மரணபரியந்தம் நம்மை நடத்துவார்

செப்டம்பர் 11

“மரணபரியந்தம் நம்மை நடத்துவார்” சங். 48:14

இந்த நம்பிக்கைதரும் வாக்கு எத்தனை ஆறுதலானவது. கர்த்தர் நம்மை நடத்துகிறவர். முதலாவது இந்த உலகினின்று நம்மைப் பிரித்தெடுத்து நடத்தினார். சமாதான வழியில் நம்மை நடத்தினார். கடந்த நாள்களிலும், நமது துன்பங்களிலும் நம்மை நடத்தினதுபோல இனிமேலும் நம்மை நடத்துவார். இத்தனை நாள்களிலும் நம்மை நடத்தினார். இனிமேலும் நம்மை நடத்தாதிருக்க மாட்டாரா? நமது இறுதிமூச்சுவரை நம்மை நடத்துவார். நாம் நடக்கவேண்டிய வழியை அவரே தெரிந்தெடுத்து, நீதியின் பாதையில் நம்மை நடத்துகிறார். வழியில் நம்மோடு அன்பாகப் பேசி நமது பாதையிலிருக்கும் வலைகளையும், கண்ணிகளையும் நமக்குக் காட்டி, விசுவாசத்தின் மூலமாக நம்மைப் பாதுகாத்து, இரட்சித்து வருகிறார்.

நாம் அறியாமலே அந்த ஆரம்ப நாள்களிலும் நம்மை நடத்தினார். நாம் ஜெபிக்கும்பொழுது நமக்குப் பட்சமான வழிகாட்டியாகத் தம்மை வெளிப்படுத்தினார். அந்தத் தேவனே இறுதி மட்டும் பொறுமையோடு நம்மைத் தாங்குவார். நாம் புத்தியீனராக நடந்தாலும், நமது துன்பங்களினால் தொய்ந்து போனாலும், கர்த்தர் கோபப்படாமல் நம் அருகில் வந்து நம்மை நடத்துவார். நமது வாழ்நாள் முடியும் பரியந்தம் அவர் நம்மை நடத்திச் செல்வார். மரண இருளின் பள்ளத்தாக்கில் நாம் நடந்தாலும், அவர் நம்மோடுகூட நடப்பார். தமது இராஜ்யத்திற்கு நம்மை நடத்திச் சென்று அதை நமக்குச் சுதந்தரமாய்த் தருவார்.
அவர் வாக்குமாறாதவர். தாம் கொடுத்த வாக்குகளை நிச்சயம் நிறைவேற்றுவார். அன்பானவரே, நமது பரமதந்தை நமக்கு ஆளுகையைத் தரவிரும்புகிறார். ஆகவே, அவர் நம்மை நடத்திச் செல்வார். நம்மைத் தம் இராஜ்யத்தின் மேன்மைக்கு ஆளாக்குவார்.

என்றும் மாறாதவர் நமது தேவன்
நித்தம் நம்மை நடத்துவார் அவர்
மரணம் மட்டும் நம்மைக் காப்பார்
நம்மைத் தம்மிடம் சேர்த்துக்கொள்வார்.

நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்

செப்டம்பர் 12

“நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்” ஆதி. 6:9

நோவா தேவனோடு வாழ்ந்து வந்தான். தேவனோடு ஒன்றித்திருந்தான். தேவன் பேசுகிற குரலைக்கேட்டு அவருடைய வழியைத் தெரிந்துகொண்டு, அவருடைய நினைவிலே மூழ்கி அவருடைய சித்தமே சரி என்று ஒப்புக்கொண்டான். தேவனோடு உரையாடுவதென்றால் அவனுக்கு மிகப்பிரியம். ஆலோசனைக்காக அவரண்டை அவன் செல்வான். அவரிடத்தல் அன்புடன் பழகுவான். தேவனே அவருடைய சிறந்த நண்பர். அவன் அவருடைய சமுகத்தை விரும்பி, அவருடன் நடந்து, அவருடைய நட்பில் மகிழ்ந்தான். பூவுலகில் இருந்து கொண்டே, குமாரரையும் பெற்று வாழ்ந்து கொண்டே நோவா தேவனோடு சஞ்சரித்தான். அவருடைய வழியில் நடந்தான். ஒவ்வொரு நாளும் பல நன்மைகளைப் பெற்றான்.

அவனுக்குப் பக்தி இருந்ததுடன் கவனமும் இருந்தது. தேவ சமுகத்தையே அவன் பாக்கியமாகவும், மேன்மையாகவும், பெரியதாகவும் எண்ணினான். இந்த மனிதனைப்போலவே நாமும் தேவனுடன் பழகும் சிலாக்கியம் உள்ளவர்களே. நாம் கர்த்தராகிய கிறிஸ்துவை விசுவாசித்தால் இந்த ஐக்கியத்தைப்பெற்று, அவரோடு சஞ்சரிக்கலாம். தேவன் நம்மோடுகூட இருக்கிறார். நாம் அவரோடு கூட இருக்கிறோமா? அவரோடுகூட நடக்கிறோமா? அன்பானவரே, நீர் தேவனோடு வாழ்கிறீரா? இன்று அவரோடே நடந்ததுண்டா? தேவ சமுகத்தினாலுண்டான மகிழ்ச்சியைப் பெற்றீரா? அவருடைய சமுகத்தில் நீங்கள் இருந்து உற்சாகமடைந்தீர்களா? தேவனோடு சஞ்சரிப்பது பெரும் பாக்கியம். இது அவருடைய பெரிதான இரக்கம். கிருபை. நீங்கள் தேவனோடு இருந்தால் அவர் உங்களோடு இருப்பார்.

லோகம் ஆளும் ஆண்டவர்தாம்
என் உயிர் நண்பராம்.
அவரோடு சஞ்சரிப்பேன்
என்றும் பெரும் பேறு பெறுவேன்.

என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறார்

செப்டம்பர் 09

“என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறார்” சங். 31:7

வாழ்க்கையில் ஏராளமான நண்பர்கள் இருக்கலாம். அவர்களது உண்மை நமது துன்பத்தில்தான் விளங்கும். மகிழ்ச்சி என்னும் சூரியன் பிரகாசிக்கும்பொழுது, சிரிப்பும், கும்மாளமும் உண்டு. ஆனால் துன்பம் என்னும் புயல் வரும்பொழுது நம்முடன் இருப்பவன் யார்? தாவீதரசனுக்கும் துன்பங்கள் வந்தன. நண்பர்கள் அந்தநேரங்களில் அவனை தாங்கவில்லை. கைவிட்டுவிட்டனர். ஆனால், தேவன் அவனை மறக்கவில்லை. அவனை கவனித்து, சந்தித்து, அவன்மீது அக்கறை கொண்டு, அன்புகாட்டி, அவனுடைய குறைவுகளை நீக்கி அவனைக் காப்பாற்றினார்.

இதேபோன்ற பெருமை பரிசுத்தவான்கள் அனைவருக்கும் கிடைத்துள்ளது. இஸ்ரவேலரை அவர் அவாந்தரவெளிகளிலும் வனாந்தரங்களிலும் நடத்தி வந்தார். அவரால் தெரிந்துக்கொள்ளப்பட்ட தமது மக்களாகிய நம்மையும் அவர் நினைத்து, நம்மீது அக்கறை கொண்டு, அன்பு செலுத்தி நம்மை ஆதரிப்பார். முன்நாட்களில் அவர் அவ்வாறு செய்தார். கடந்துபோன நாட்களிலெல்லாம் நம்மைக் காத்து, நடத்தி, ஆதரித்தார். நம்மைப் போஷித்துச் செழிப்பான இடத்திற்கு நம்மைக் கொண்டு வந்து சேர்த்தார். நமது ஆத்தும வியாகுலங்களை அவர் அறிந்து, அவர் நன்மைசெய்தபடியால், நாம் சாட்சி கூறி அவரை மகிமைப்படுத்துவோம். இம்மட்டும் நமது துயரங்களை அறிந்து இருக்கிறபடியால், இனியும் நம்மை நடத்த அவர் வல்லவர். பல துன்பங்ளிலிருந்து நம்மை விடுவித்தவர் இன்றும் நம்மை விடுவிப்பார். அதை அவர் நமக்கு வாக்களித்துள்ளார். அவர் உண்மையுள்ளவர், நமது இனிய நண்பர். அவர் நமது துன்ப துயரத்தில், சோதனைகளில் நம்மைக் காத்து ஆதரிப்பார்.

உம் முகம் கண்டால், ஆண்டவா
எம் பயங்கள் நீங்கிப் போம்.
உம் இரக்கம் தான் என்றும்
எமக்குச் சமாதானம் தந்திடும்.

Popular Posts

My Favorites

இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு

யூலை 27 "இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு" லூக்கா 15:2 இதுதான் நமது இரட்சகருக்கு விரோதமாய் சொல்லப்பட்ட வழக்கு. அவர் பாவிகளை ஏற்றுக்கொண்டார் என்ற வார்த்தை நமக்கு எவ்வளவோ ஆறுதலைத் தருகிறது. அவர் பாவிகளாகவே நம்மை ஏற்றுக்கொண்டார். இன்றும்...