தேவன் என்னென்ன செய்தார்

நவம்பர் 05

“தேவன் என்னென்ன செய்தார்” எண். 23:23

தேவன் தமது ஜனத்தைப் பாவத்தினின்றும், அறிவீனத்தினின்றும் விடுவித்து, அவர்களுக்கு அதிகமான நன்மைகளைக் கொடுக்கிறதினால் புறவினத்தாரும் அதைப் பார்த்து பொறாதை கொள்ளலாயினர். தம்முடைய சபையைத் தேவன் தமது குமாரனின் பாடுகள் மரணத்தால் மீட்டுக்கொண்டார். அவருடைய சபையைச் சேர்ந்த அவருடைய அவயவங்களை உயிர்ப்பித்து குணமாக்கி தூய்மைப்படுத்துகிறார். அவர்களைப் பூமியின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் ஒன்றாகக் கூட்டி சேர்க்கிறார். அவர்களின் குறைகளைச் சந்தித்துப் பராமரித்து பாதுகாத்து தமது வல்லமையால் அவர்களுடைய விசுவாசத்தின்மூலம் இரட்சிப்பைத் தந்து காக்கிறார்.

தமது ஆத்துமாவைப் பிசாசின் பிடியிலிருந்து விடுவித்து தமது குமாரனுடைய வீட்டிலேகொண்டு போய்ச் சேர்க்கிறார். அவரின் இரத்தத்தினால் நம்முடைய பாவங்களை மன்னித்து, அவரின் கிருபையினால் நீதிமான்களாக்குகிறார். நமது இருதயத்தில் விசுவாசத்தை ஏற்படுத்திக் கிருபையினால் மேலான நன்மைகளைக் கொடுத்து, பரிசுத்த ஆவியால் நம்மை நிரப்புகிறார். நமக்காக சத்துருக்களை வென்று நமக்குள் இருக்கும் தீய எண்ணங்களை நீக்குகிறார்.

தேவன் எவ்வளவு பெரிய காரியங்களை நமக்குச் செய்திருக்கிறார்? அற்புதமானவைகளை நடப்பித்திருக்கிறார். யாருக்காக இவைகளைச் செய்தார்? பாவிகளான நமக்காகத்தான். ஏன்? தமது நாம மகிமைக்காகவே.

பிரியமானவர்களே, தேவன் இம்மட்டும் செய்த காரியங்கள், வரும் நாள்களுக்கு நம்மைத் தைரியப்படுத்த வேண்டும். அவருடைய வாக்குத்தத்தங்கள் இன்னும் நிறைவேறும். தாம் சொன்னபடியெல்லாம் செய்தார்.

தேவன் இம்மட்டும் செய்தது
இனி செய்வதற்கும் ஆதாரம்
விசுவாசக் குறைவின்றியே நாம்
அவரில் தைரியமாயிருப்போம்.

என் தேவன் என் பெலனாய் இருப்பார்

நவம்பர் 04

“என் தேவன் என் பெலனாய் இருப்பார்” ஏசாயா 49:5

தேவகுமாரனாகவும், நமக்கு நல்முன்மாதிரியாகவும், தலைவருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவுக்குத் தேவன் பெலனாயிருந்தார். தமது பிதாவின் வார்த்தையின்மேல் விசுவாசம் வைத்து அவர் வாழ்ந்தார். சத்துருவாகிய சாத்தானால் அதிகமாய் சோதிக்கப்பட்டார். எனினும் பிதாவால் பிழைத்திருந்தார். அப்படியே நாமும் பிழைத்திருப்போம். தமது அளிவில்லாத அன்பினால் நம்மை நேசிக்கிறார். தமது உடன்படிக்கையை நமக்கு நன்மையாகவே செய்து முடித்தார்.

அவரின் வாக்குத்தத்தங்கள் நமக்கெனவே ஏற்படுத்தப்பட்டவை. ஆகையால் பெரிய சோதனைகள், போராட்டங்கள், மாறுதல்கள் வரும்போதும், கடைசி சத்துருவான மரணம் வரும்போதும் என் தேவன் என் பெலனாய் இருப்பார் என்று சொல்லும்படியாக இருப்போமாக.

நான் உன்னைப் பெலப்படுத்துவேன் என்று அவர் கூறியிருப்பதால், தைரியத்தோடும் விசுவாசத்தோடும் இருப்போம். நமது பெலவீனத்தை நாம் உணரும்போது விசுவாசத்தில் பெருகுவோம். என் பெலன் உன் பலவீனத்தில் பூரணமாய் விளங்கும் என்று அவர் கூறியிருக்கிறாரே. அப்படியே அவருடைய பெலன் நமக்கிருக்கிறது. அவருடைய ஒத்தாசையால் இந்நாள்வரைக்கும் வாழ்கிறோம்.

எனவே, வருங்காலத்திலும், அவரை நம்பி கடமையை நாம் நிறைவேற்றும்பொழுது எந்தச் சத்துருவையும் நாம் எதிர்க்கும்பொழுதும், ஆண்டவரின் வல்லமையால் நடப்பேன். உம்முடைய நீதியைப் போற்றுவேன் என்று நாம் தீர்மானிக்க வேண்டும். கர்த்தருடைய பெலத்தால் நான் கடைசி மட்டும் நிற்பேன். சுபீட்சத்தோடு பரலோகம் போவேன். அவர் கொடுத்த சிலாக்கியத்திற்காக மகிழ்வேன். என் தேவன் எனது பெலனாய் இருப்பார் என்பதை தியானித்து அவரிடத்தில் இன்றிரவு வேண்டிக்கொள்வோம்.

என் தேகம் மாண்டு போனாலும்
என் தேவன் என் பெலனாவார்
இதனால் நான் பெலனடைவேன்
என் விசுவாசம் வளர்ப்பேன்.

நீர் உண்மையாய் நடப்பித்தீர்

நவம்பர் 03

“நீர் உண்மையாய் நடப்பித்தீர்” நெகே. 9:33

தேவன் எதையும் உண்மையாகவே நடப்பிப்பார் என்பது யாருமே ஒப்புக்கொள்ளுவதுதான். ஆனால் துன்ப நேரத்தில் இது உண்மை என்று உணர்ந்து அதை நம்பி நடப்பது நம்மால் முடியாமற் போகிறது. கர்த்தர் தாம் ஏற்படுத்திய முறைபடியே என்றுமே செயல்படுவார். அவருடைய உண்மையும் ஒழுங்கும் அவருடைய ஞானத்திலிருந்தும், அன்பிலிருந்தும் பிறக்கின்றன. அவர் தாம் செய்யப்போகிறதெல்லாவற்றையும் ஏற்கெனவே தீர்மானித்துள்ளார். தமது தீர்மானங்கள் யாவும் நல்லவை என்று அவர் அறிந்திருக்கிறார்.

நாம் பணப்பிரியம், தற்பிரியர், திருப்தியற்றவர்கள், ஏழைகள். நாம் தேவனுடைய செயல்களை மனதிருப்தியுடன் ஏற்றுக்கொள்வதில்லை. காரணமின்றி எல்லாக் காரியங்களிலும் முறுமுறுக்கிறோம். நாம் தேவனைப் புரிந்துக்கொள்வதில்லை.

ஆனாலும், சிலவேளைகளில் நமக்கு வரும் இழப்புகள், துன்பங்கள், சோதனைகள் கண்ணீர்போன்று துயர நேரங்களில்தான் தேவரீர் எல்லாவற்றையும் உண்மையாய் நடப்பிக்கிறீர் என்று அறிக்கையிடுகிறோம். எகிப்தில் யாக்கோபு, யோசேப்பை அணைத்துக்கொண்டபோது இவ்வாறு உணர்ந்தான். யோபு இரட்டத்தனை ஆசீர்வாதங்களைப் பெற்றதுபோதுதான் இதை உணர்ந்தான்.

தானியேல் சிங்கங்களிடமிருந்து மீட்கப்பட்டபோது விசுவாசித்ததினால் இதை உணர்ந்தான். சோதனைக்குள் நாம் இருக்கும்போது இவ்வாறு நாமும் அறிக்கை செய்வது மிகவும் அவசியம். ஆண்டவர் நம்மை சோதிக்கும்போது நீர் உண்மையாய் நடப்பித்தீர் என்று உணர்ந்து சொல்வோமாக. இத்தகைய விசுவாசம் நமக்குள் வளர வேண்டும்.

கர்த்தர் செய்வதெல்லாம் நலமே
முடிவை நாமறியோம் அவர் அறிவார்
அவர் செய்வதெல்லாம் நமக்கு
முடிவில் பாக்கியமாகவே நிகழும்.

ஏன் சஞ்சலப்படுகிறாய்

நவம்பர் 02

“ஏன் சஞ்சலப்படுகிறாய்” 1.சாமு. 1:8

அன்பும் பாசமும் நிறைந்தஒரு கணவன், தன் மனைவியைப் பார்த்து இக்கேள்வியைக் கேட்கிறான். நாம் நம்மிடம் இக்கேள்வியை ஆண்டவர்தாமே கேட்பதுபோல எடுத்துக்கொள்வோம். ஏன் சஞ்சகப்படுகிறாய்? பாவத்தினால் துன்பமடைந்து சஞ்சலப்படுகிறாயா? இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும் என்று வேதம் கூறுகிறது.

நம்முடைய பாவஙகளை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னிக்க அவர் உண்மையும் நீதியும் உள்ளவராய் இருக்கிறார் என்று கூறுகிறது. அவர் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. இனி மேல் அவரின் பிரசன்னம் எனக்குக் கிடையாது என்றெல்லாம் சஞ்சலப்படுகிறாயோ?  அவர் திரும்பவும் வந்து நம்மேல் மனதுருகுவார். அவரின் உடன்படிக்கைகள் உண்மையானவைகள். மாறாதவைகள். அவரது முகம் நமக்கு மறைக்கப்பட்டிருந்தாலும் அவர் தமது வாக்கை மாற்றமாட்டார்.

நான் கனி கொடுக்க முடியவில்லையே என்று சஞ்சலப்படுகிறாயோ? அவர் இஸ்ரவேலுக்குப் பனியைப்போல இருப்பார். தானிய விளைச்சலைப்போல் செழித்து திராட்சைச் செடியைப்போல் அவர்கள் படருவார்கள். உன்னையும் அதிகக் கனிகளைக் கொடுப்பதற்காகச் சுத்தம் செய்வார். வறுமையால் கஷ்டப்படுகிறாயோ? வெள்ளியும் பொன்னும் எல்லாம் அவருடைய அதிகாரத்துக்குள் இருக்கிறது. தமக்கு விருப்பமானபோது அவர் நமது தேவைகளையெல்லாம் நிறைவேற்றுவார். உனக்கருமையானவர்களை இழந்து விட்டதால் சஞ்சலமோ? அவர் உன்னைத் தாங்குவார். உன்னைத் தூய்மையாக்குவார். அவரின் அன்பு உனக்கு அமைதியும் பாதுகாப்பும் தந்திடும்.

சஞ்சத்தால் தவிக்கும்போது
இரட்சகரிடம் போய்ச் சேர்
இரட்சகரை நீ நம்பினால் உன்
சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.

அதிபதியாகவும் இரட்சகராகவும்

நவம்பர் 01

“அதிபதியாகவும் இரட்சகராகவும்” அப். 5:31

இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு பெயர், துக்கம் நிறைந்த மனுஷன் என்பது. அவர் இப்பொழுது பிதாவின் வலது பாரிசத்தில் வல்லமைநிறைந்தவராக வீற்றிருக்கிறார். பரலோகத்திலும் பூலோகத்திலும் முழங்கால்கள் யாவும் அவருக்கு முன்பாக முடங்க வேண்டும். அவர் யாவற்றுக்கும் யாவருக்கும் தலைவர். இராஜாதி இராஜா. உயிரளிக்கும் கர்த்தர். எல்லா அதிகாரங்களும் அவருக்குக் கீழ்ப்பட்டதே. பிரபுவைப்போலவும், மீட்பராகவும் அவர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். தமது சொந்தக் கிருபையினால் நம்மை இரட்சிக்கிறார். பாவிகளெல்லாரையும் அவர் இரட்சிக்கிறார். அவருடைய இரட்சிப்பு இலவசமானது. நாம் நமது பாவங்களைவிட்டு மனந்திரும்பினால் அவர் இரட்சிப்பார். இரட்சிப்பு அவருக்கு விருப்பமான செயல்.

அவருடைய இரட்சிப்பின் செயல் உலகத்தின் முடிவு பரியந்தம் நடக்கும். தம்மிடம் வருபவர்களை அவர் இரட்சித்து ஆண்டு கொள்ளுகிறார். பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார். அதற்காகவே அவர் இரத்தம் சிந்தினார். மரித்தார். உயிர்த்தார். இப்போது அவர் இஸ்ரவேலுக்கு மகிமையாகப் பாவிகளுக்கு மன்னிப்பருள தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். ஆதலால் அவர் தம்முடன் வருகிறவர்கள் எல்லாரையும் ஏற்றுக்கொள்ளுகிறார்.

எந்தப் பாவியாயினும் அவர் புறம்பே தள்ளுவதில்லை. சாந்தமும் இரக்கமும் நிறைந்த இந்த இரட்சகராகிய பிரபுவிடம் நீ வந்தால் அவர் உன்னையும் ஏற்றுக்கொள்ளுவார். நீ இரட்சிப்படைய வேண்டுமென்றால் அவரிடம் போய் சேர்ந்துகொள். அவர் உன்னை இரட்சிப்பார். அதுவே உனது வேலை. அவரை மகிமைப்படுத்தி அவர் தரும் மீட்பைப் பெற்றுக்கொள்.

இரட்சகரான இயேசுவே
உயிரோடெழுப்பி பரத்தில்
வீற்றிருப்போரே, பாவியாம்
என்னையும் இரட்சித்தருளும்.

Popular Posts

My Favorites

கர்த்தர் ராஜரீகம்பண்ணுகிறார்

யூலை 14 "கர்த்தர் ராஜரீகம்பண்ணுகிறார்" சங். 97:1 கர்த்தர் உன் இரட்சகர். அவர் உன் தன்மையைத் தரித்திருக்கிறார். அவர் உன்னை நன்றாய் அறிவார். ஒரு தாய் தன் ஒரே மகனை நேசிக்கிறதிலும் அவர் உன்னை அதிகமாய் நேசிக்கிறார்....