நாம் தேவனால் உண்டாயிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம்

ஜனவரி 30

“நாம் தேவனால் உண்டாயிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம்.” 1.யோவான் 5:19

இது எவ்வளவு பெரிய சிலாக்கியம். எவ்வளவு பெரிய ஆறுதல். நாம் தேவனால் உண்டானவர்கள். கிறிஸ்து இயேசுவின் வல்லமையினாலும் அவரின் இரத்தம் நம்மேல் தெளிக்கப்பட்டதினாலும், அவரின் சேவைக்குப் பிரதிஷ்டையாக்கப்பட்டிருக்கிறோம். நித்திய காலமாய் நாம் அவரை ஸ்தோத்தரிக்கு, பரிசுத்தமும் பிரயோஜனமுள்ளவர்களாய் அவரோடு ஜக்கியப்பட்டிருக்கிறோம். முன்பு அவருக்கு விரோதமாய் கலகஞ் சொய்தோ. இப்போதோ மனமார அவருக்கு ஊழியம் செய்கிறோம். முன்பு அவருக்கு விரோதமான சத்துருக்கள். இப்போதோ அவருக்குப் பிரியமான சிநேகிதர். முன்பு கோபாக்கினையின் புத்திரர். இப்போதோ அவர் நேசத்திற்குரிய பிள்ளைகள்.

அவருடைய வசனத்தை விசுவாசிப்பதினாலும் அவரோடு ஜக்கியப்பட்டிருப்பதினாலும், பாவஞ் செய்வது நமக்கு துக்கமாய் இருப்பதினாலும், அவர் சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து அவருக்குப் பிரியமாய் இருப்பதினாலும், வாக்கிலும், செய்கையிலும், நோக்கிலும், ஆசையிலும் உலகத்தாருக்கு வித்தியாசப்படுவதினாலும், நாம் தேவனால் உண்டானவர்களென்று அறியலாம். தேவனால்தான், நாம் கர்த்தருக்குச் சொந்தமானவர்கள். நாம்தான் அவரின் சொத்து, அவரின் பொக்கிஷம். அவரின் பங்கு. அவரின் மகிழ்ச்சி. என்ன பாக்கியம். நாம் கர்த்தருக்குச் சொந்தமானவர்கள். இது நமக்கு கிடைத்த கிருபை. இக்கிருபை இல்லாமல் ஒருபோதும் நாம் வாழ முடியாது.

தேவனே என்னோடு வாரும்
என் சமீபத்தில் தங்கும்
எது போனாலும் போகட்டும்
நீர் இருந்தால் போதுமே.

குறிப்பினால் அறிந்தேன்

ஜனவரி 26

“குறிப்பினால் அறிந்தேன்.” ஆதி. 30: 27

குறிப்பினால் அறிந்தேன் அல்லது அனுபவத்தால் அறிந்தேன். இப்படி சொன்னவன் லாபான். யாக்கோபு தனக்கு ஊழியஞ் செய்ததினால் தான் அடைந்த பிரயோஜனத்தைப்பற்றி இப்படி சொன்னான். தேவ போதனையால் உண்டாகும் நன்மையைக் குறித்தும் ஒரு கிறிஸ்தவன் இப்படிச் சொல்லலாம். அனுபவம் என்பது பரீட்சையினால் உண்டாகும் அறிவு. அனுபவத்தால்தான் உண்மை மார்க்கத்தின் உண்மையும், மேன்மையும் அடைகிறோம். அறிகிறோம். சாத்தானுடைய தந்திரங்களையும், விசுவாசத்தின் ரகசியங்களையும் அறிகிறோம். துன்பத்தால் உண்டாகும் பிரயோஜனத்தையும் இவ்வுலகத்தின் வெறுமையையும் ஒன்றுமில்லாமையையும் உடன்படிக்கையில் நமக்கு தேவனுடைய அன்பையும் உண்மையையும் கற்றறிகிறோம்.

அனுபவத்தால் வருகிற அறிவுக்கு சமமானது ஒன்றுமில்லை. கேள்வியால் உண்டாகும் அறிவுக்கு இது மேலானது. உறுதியைப் பார்த்தாலும் பிரயோஜனத்தைப் பார்த்தாலும் மனதை ஸ்திரப்படுத்துகிற நிச்சயத்தைப் பார்த்தாலும் இது எந்த அறிவுக்கும் மேலானது. வாலிபர்கள் அடக்கமுடியவர்களாயிருக்க வேண்டும். அவர்கள் அறிந்துக் கொண்டது கொஞ்சம். அனுபவமடைந்தவர்கள் தாங்கள் அறிந்ததை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும். இதுபோல் பிரயோஜனமுடையது ஒன்றுமில்லை. அனுபவத்தால் நாம் சொல்லுகிறதும் நமது நடக்கையையும் ஒத்திருக்க வேண்டுமென்பதைக் குறித்து நாம் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

நேசித்து உமது சொல்படி
செய்திட எனக்கு கற்பியும்
உமது அனுபவத்தின்படி
என்னை உம்முடையவனாக்கும்.

மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி

ஜனவரி 12

“மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி”  லூக்கா 2:10

நம்மை மனம் நோகச் செய்யவும், அதைரியப்படுத்தவும், அநேக காரியங்கள் நம் உள்ளத்தில் இருக்கிறது. நம்மை துக்கப்படுத்த குடும்பத்திலும், சபையிலும் பல சோர்வுகளைக் கொண்டு வரலாம். இவ்வுலகம் நமக்குக் கவலையையும் கண்ணீரையும் கொண்டு வரும். ஆனால் சுவிசேஷமோ மிகுந்த சந்தோஷத்தைக் கொண்டு வரும். சுவிசேஷம் பெரிய ஒரு மேலான இரட்சகரை நமக்கு முன் நிறுத்துகிறது. இயேசு கிறிஸ்து மனுஷ ரூபமானபடியினால், மனிதர்களாகிய நமக்கு மனமிறங்கி தேவனிடத்தில் சகலத்தையும் பெற்றுத்தர கூடியவர். என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறார்? ஏன் எனக்குள் தியங்குகிறாய் என உங்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொள்ளுங்கள்.

கிறிஸ்துவின் இரத்தத்தால் நம்முடைய பாவம் எல்லாமே பரிபூரணமாய் மன்னிக்கப்படுகிறது. அவர் தேவனுக்குக் கீழ்ப்படிந்தபடியால், நிறுத்தும்படி கிருபையை தமது நீதியால் உண்டாக்கிக் கொடுத்தார். அவர் பாவமில்லாதவரானபடியால், நமது பாவங்களை மன்னிக்க காத்திருக்கிறார் அவர் இரக்கமுள்ளவரானபடியால் நம்மீது எப்போதும் இரங்குகிற தேவனாய் இருக்கிறார். நாம் துன்பப்படும்போது தேற்றரவாளனால் உதவிட ஓடி வருகிறார். பாவிகளுக்கு இரட்சகராய் இருக்கிறார். பிதாவின் முன் பரிந்து பேசும் நேசராய் இருக்கிறார். பாவிகளை அழைத்து அவர்களைத் தம் இரத்தத்தால் கழுவி தமது இராஜ்யத்தில் சேர்த்துக் கொள்ளுகிறார். செய்திகளைச் சுபசெய்தியாக்குகிறதே சுவிசேஷம் தான். நம்மை சந்தோஷத்தில் நிரப்பும் அனைத்தும் நற்செய்தியில் இருக்கிறது.

இவ்வன்பை அளவிட முடியாது
நீளம் அகலம் அற்றது
ஆழம் உயரம் இல்லாதது
அளவிடப்பட முடியாதது.

அவனைக் கனப்படுத்துவேன்

ஜனவரி 07

“அவனைக் கனப்படுத்துவேன்”  சங். 91:15

என்னைக் கனப்படுத்துகிறவர்களை நான் கனப்படுத்துவேன். தற்பெருமை கர்த்தரைக் கனவீனப்படுத்தி நமக்குக் குறைவையும் அவர்கீர்த்தியையும் உண்டாக்குகிறது. தன்னை வெறுத்தலே மேன்மைக்கும் கனத்துக்கும் வழி நடத்தும். கிறிஸ்தவன் தன்னை வெறுத்து தன் கண்களையும் மனதையும் இரட்சகர்மேல் உறுதியாய் வைப்பானானால் கர்த்தர் அவனைக் கனப்படுத்துவார். அப்பொழுது அவன் வருத்தங்களை பொறுமையோடு சகித்து மற்றவர்கள் சொல்லும் நிந்தைகளையும் பழிச்சொற்களையும் நிராகரித்து துன்பநாளிலும்கூட பிதாவின் முகமலர்ச்சியை அனுபவிப்பான். கர்த்தரோ அவனைச் சந்தித்து அவனுடன் இனிமையாய்ப் பேசி அவனைச் சூழ்ந்திருக்கும் சகல துன்பங்களையும் மறந்துவிடும்படி செய்து அவன் வாழ்க்கையின்மேல் நோக்கமாயிருப்பார். வியாதியில் ஆற்றித்தேற்றி சுகத்தில் அவனை நடத்திக்கொண்டு போவார். வறுமையில் திருப்தியைக் கொடுத்து வாழ்வில் அவனுக்கு உதாரகுணத்தைத் தருவார். வாழ்நாளில் அவனுக்கு வேண்டியதைத் தந்து அவனை ஆதரித்து மரணத்தில் உயிர்ப்பித்து தம்மண்டையில் ஏற்றுக்கொள்வார். உயிரோடிருக்கும்போது ஆசீர்வாதமாயிருந்து மரித்த பிறகு சிங்காசனத்துக்கு அருகில் வைக்கப்படுவான்.

அன்பானவர்களே! உங்களை வெறுத்து மாம்சத்தை வென்று உலகத்துக்கு மேலாக எழும்பி விசுவாசத்தினால் வாழ்ந்து தேவனுடன் சஞ்சரித்துக் கர்த்தரைக் கனம்பண்ணுங்கள். அவரும் உங்களைக் கனப்படுத்துவார். உங்களின் கவலைக்குரிய காரியங்களை அவருக்கு ஒப்புவித்துப் பாருங்கள். அவருடைய இராஜ்யத்தையும் மகிமையையும் விரிவடையச் செய்யப் பாருங்கள். அப்போது தேவன் உங்களை ஆசீர்வதித்து மன்னாவால் உங்களைத் திருப்தியாக்குவார் என்று அறிவீர்கள்.

என் நிமித்தம் இம்மையில்
தன்னை வெறுப்பவன்
எனதன்பை ருசித்து
என் மகிமையை காண்பான்.

கர்த்தரில் அன்பு கூறுகிறவர்களோ தீமையை வெறுத்துவிடுங்கள்

ஜனவரி 18

“கர்த்தரில் அன்பு கூறுகிறவர்களோ தீமையை வெறுத்துவிடுங்கள்.” சங்கீதம் 97:10

தெளிவான கடமைகளைக் குறித்து நமக்குப் புத்தி சொல்வது அவசியந்தான். ஏனென்றால் சில வேளைகளில் நாம் அவைகளை மறந்துபோகிறோம். அடிக்கடி கவலையுற்று வெதுவெதுப்பான சிந்தனைகளுக்கு இடங்கொடுத்து விடுகிறோம். நாம் கர்த்தரை நேசிப்பது உண்மையானால் அவரின் ஜனங்ளை நேசிப்போம். அவருடைய நியமங்களையும் அவருடைய சுவிசேஷத்தையும் நியாயப்பிரமாணத்தையும் நேசிப்போம். நமக்குச் சேதமுண்டாக்குகிறதைத்தான் அவர் விலக்குகிறார் என அறிந்து, அவரின் வாக்குத்தத்தங்களையும் நேசிக்கிற அளவிலேயே அவர் வேண்டாமென்று விலக்குகிறதையும் நேசிப்போம். இந்த நாளில் தாவீதைப்போல் ‘நான் உம்முடைய பிரமாணத்தை எவ்வளவாய் நேசிக்கிறேன். நாளெல்லாம் அது என் தியானம்’ என்று நாம் சொல்ல முடியுமா?

தேவபிரமாணம் தீமையான யாவையும் விலக்குகிறது. ஆகவே நாம் தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து பாவத்தையும், தீமையையும் அவர் வெறுக்கிற விதமாகவே வெறுத்து விலக்குவோமாக. தீயநினைவுகளை எதிர்த்துப் போராடுவோமாக. கெட்ட வார்த்தைகளை விலக்கி கடிவாளத்தினால் வாயை காப்போமாக. கெட்ட செய்கையை விலக்கி பொல்லாப்பாய் தோன்றுகிறதைவிட்டு விலகுவோமாக. இருதயம் பொல்லாங்குள்ளதும் அதிக கேடானதுமானது. எல்லா பொல்லாங்குகளும் அதிலிருந்து வருகிறது. முக்கியமாய் தேவனை விட்டு விலகுகிற அவிசுவாசமுள்ள இருதயத்தைப்பற்றி எச்சரிக்கையாய் இருப்போமாக.

நண்பரே! தீமையைப் பகைக்க உனக்கு மனதிருக்கிறதா? அப்படியானால் தேவனோடு நெருங்கி பழகு. அப்போது பரிசுத்த வாழ்வு உனக்குச் சுலபமாகிவிடும். அப்போது எந்தப் பொல்லாப்பையும் வெறுத்துத் தள்ளுவாய். கர்த்தரின் தாசர்களே, பொல்லாப்புக்கு முழு மனதோடு பயப்படுங்கள். யாவரோடும் சமாதானமும் பரிசுத்தமாயுமிருங்க நாடுங்கள். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனைத் தரிசிக்க முடியாதே.

நேச பிதாவே உம்மில்
எனக்கு எல்லாம் சொந்தம்
என்னையும் தந்தேன் உமக்கு
இதுவே எனக்கானந்தம்.

உன் சிநேகிதன்மேல் உனக்கு தயை இதுதானா?

ஜனவரி 25

“உன் சிநேகிதன்மேல் உனக்கு தயை இதுதானா?.” 2.சாமு. 16:17

இயேசு நமக்குக் காட்டும் அன்புக்குச் சமமாய் வேறெங்கும் காணமுடியாது. நாமோ அவருக்குச் செய்யும் கைமாரோ இதற்கு எதிரிடையானது. பல சமயங்களில் நாம் அவரை அசட்டை செய்கிறோம். அவரை நோக்கிக் கேட்கும்போது நமக்கு சந்தோஷமாய் இருக்கிறதே தவிர, சில நேரங்களில் அது ஒரு பாரமான வேலையாய் இருக்கிறது. நமக்குத் தெரிந்தவைகளையெல்லாம் செய்து, அவர் சொல்வதை விட்டு விடுகிறோம். அடிக்கடி அவர் வார்த்தையில் சந்தேகம் கொண்டு அவர் அன்பைச் சந்தேகித்து அவரைக் குறித்து முறையிடுகிறோம். அவருக்குக் கீழ்ப்படியாமல் மாம்சத்துக்கு இடங்கொடுத்துவிடுகிறோம். அவர் எதிர்க்கச் சொல்கிற உலகத்தைச் சேர்த்துகொள்கிறோம். அவர் எதிர்க்கச் சொல்கிற உலகத்தைச் சேர்த்துக்கொள்கிறோம். அவர் எதிர்க்கச் சொன்ன சாத்தானோடு இணைந்துவிடுகிறோம்.

எத்தனை வேளைகளில் உலகத்தாருக்குமுன் அவரை அறிக்கையிட வெட்கப்பட்டிருக்கிறோம்? நம்மீது பட்சமும் தயையும் நிறைந்த நம்முடைய மீட்பருக்கு நாம் செய்கிறதைப் பார்த்து, ‘உன் சிநேகிதன் மேல் உனக்கு இருக்கிற தயை இதுதானோ?’ என்று நம்மைக் கேட்கும்போது, வெட்கம் நம்முடைய முகத்தை மூடவேண்டும். நமது உள்ளமும் கலங்க வேண்டும். அவருக்கு நாம் செய்யும் கொடுமை துரோகம் போன்றது. அவர் மன்னித்து நேசிக்கிற அடையாளங்களை நாம் மறுபடியும் தேடி, இனி சோதனைக்கு இணங்கவாவது, பாவத்தில் இடங்கொடுக்கவாவது நினைக்கும் சமயத்தில், நம்முடைய மனச்சாட்சியைப் பார்த்து உன் சிநேகிதன்மேல் உனக்கும் தயை இதுதானா என்று கேட்போமாக.

நான் மகா துரோகி
என் நேசரை மறந்த பாவி
அவர் கிருபை இல்லாவிட்டால்
என்னை அகற்றுவார் அப்பால்.

Popular Posts

My Favorites

கிறிஸ்துவுடன் எழுந்திரு

மார்ச் 20 "கிறிஸ்துவுடன் எழுந்திரு." கொலோ. 3:1 இயேசுவானவர் நமது பிணையாளியாகையால் நமக்கு பதிலாக மரித்தார். தம்முடைய ஜனங்கள் எல்லார் சார்பாகவும் மரித்தார். அப்படியே எல்லாருக்காகவும் உயிர்த்தெழுந்தார். அவர் மரித்தபோது அவருடைய ஜனங்கள் எல்லாரும் மரித்தார்கள்....