நீர் என்னை ஆசீர்வதித்துக் காத்தருளும்

மார்ச் 16

“நீர் என்னை ஆசீர்வதித்துக் காத்தருளும்.” 1.நாளா. 4:10

இது யாபேஸ் பண்ணின ஜெபம். எந்தக் கிறிஸ்தவனும் இப்படித்தான் ஜெபிப்பான். கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும். அதனோடு அவர் வேதனையைக் கூட்டார் என்றே அவன் அறிவான். கர்த்தர் ஆசீர்வதித்தால் அது பலிக்கும். அவர் கிறிஸ்துவில் எல்லா ஞான நன்மைகளாலும் பரமண்டலங்களில் இருந்து ஆசீர்வதிக்கிறார். சகலமும் நமக்கு இயேசுவில் பொக்கிஷமாகச் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. விசுவாசத்தினாலும் ஜெபத்தினாலும் அவருடைய நிறைவிலிருந்து நாம் கிருபைமேல் கிருபையைப் பெற்றுக்கொள்ளுகிறோம்.  அவர் இன்னும் நம்மை ஆசீர்வதித்து வருகிறார். உன் அப்பத்தையும் தண்ணீரையும் அவருடைய அன்பால் சாரம் ஏற்றப்படும்போது வெகு இனிமையாய் இருக்கும். புதியதாக்கும் கிருபையினாலும், சீர்ப்படுத்தும் கிருபையினாலும் முன் செல்லும் கிருபையினாலும் அவர் நம்மை ஆசீர்வதிக்கிறார்.

நம்முடைய ஆத்துமாவைப்போல் என்றும் உள்ளதுமான விலையேறப்பெற்ற ஆசீர்வாதங்களால் நம்மை ஆசீர்வதிக்கிறார். நம்மை ஆசீர்வதிப்பதே அவருக்குச் சந்தோஷம். நம்மை  மகிமையாய், நித்தியமாய் ஆசீர்வதிக்கும்படி, நமக்காக மரிக்கும்படி தமது குமாரனைக் கொடுத்தார். நம்மை ஆசீர்வதித்து ஆசீர்வாதமாக்குவேன் என்றே வாக்களித்திருக்கிறார். அவர் நம்மை ஆசீர்வதிக்க வேண்டும் என்று உணருவதே ஓர் ஆசீர்வாதம். அதை உணருகிற ஒவ்வொருவனும் அதைக் கருத்தாய் தேடுகிறான். ஆகவே நாமும்கூட அவர் வசனத்தை வாசித்து, அவர் அன்பை விசுவாசித்து, அவர் ஆசீர்வாதத்திற்காகக் கெஞ்சி யாபேசைப்போல் நல்வாக்கைப் பெற்றுக்கொள்வோமாக.

முடிந்தது என்று சொன்னாரே
அவ்வாக்கைக் கேள்
அது கடைசி வார்த்தை ஆனதே
அதனால் திடன் கொள்.

நித்திய ஜீவனைக் குறித்த நம்பிக்கையைப்பற்றி

மார்ச் 15

“நித்திய ஜீவனைக் குறித்த நம்பிக்கையைப்பற்றி.” தீத்து 1:3

உத்தம கிறிஸ்தவன் ஒருவன் இப்படித்தான் ஜீவியம் செய்ய வேண்டும். அவன் இருதயம் கீழான உலக காரியத்தைப்பற்றாமல் நித்திய ஜீவனுக்கென்று இயேசுவின் இரக்கத்தையே நோக்கிக்கொண்டிருக்கிறது. கிறிஸ்தவனின் முழு நம்பிக்கைதான் அவன் ஆத்துமாவுக்கத் தைலமாகவும் மருந்தாகவும் இருக்கிறது. அவன் மறுமையில் தேவனோடு பூரண வாழ்வுள்ளவனாய் இருப்பேன் என்றே நம்பியிருக்கிறான். தான் நித்திய நித்தியமாய் மகிழ்ச்சி, சமாதானம் இவைகளை அனுபவிப்பான். தனக்கு நித்திய ஜீவன் நிச்சயமாகவே கிடைக்குமென்று நம்புகிறான்.

பொய்யுரையாத தேவன் வாக்களித்திருக்கிறார். உலகம் உண்டாகுமுன்னே அநாதியாய் முன் குறித்திருக்கிறார். விசுவாச சபைக்குக் கீரீடமான இயேசுவுக்கு வாக்களித்திருக்கிறார். சுவிசேஷமும் அதற்கு சாட்சியிடுகிறது. தேவன் நித்திய ஜீவனைக் கொடுத்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்குpறது. கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டருக்கு இந்த நித்திய ஜீவன் உண்டு. முற்கனி நமக்குக் கிடைத்திருக்கிறது. மகிமையான அறுப்பு கிடைக்கும். நம்பிக்கையில் வளர்ந்தே நாம் தனிந்தோறும் ஜீவித்து வருகிறோம். இந்த நம்பிக்கை துன்பத்தில் வழிநடத்தி நித்திய போராட்டத்தில் நம்மை உயிர்ப்பித்து மோசம் வரும்போது நம்மைக் காக்கிறது. இரட்சிப்பு என்னும் தலைச்சீரா இதுவே. விசுவாசியே மரணத்தையல்ல, நித்திய ஜீவனுக்காக நீ எதிர்நோக்க வேண்டியது, பரம தேசத்தையே அதை அனுபவிப்போம் என்ற நம்பிக்கையும் அதை நிச்சயித்துக் கொள்வோம் என்ற எதிர்பார்த்தலும்தான் விசுவாசம்.

எது வந்தாலும் எது போனாலும்
எது மாறிக் கெட்டாலும்
பேரின்பத்தை நோக்குவேன்
மோட்ச நம்பிக்கைப் பிடிப்பேன்.

தேவனிடத்தில் சேருங்கள்

மார்ச் 13

“தேவனிடத்தில் சேருங்கள்.” யாக். 4:8

பாவமானது நம்மைத் தேவனைவிட்டு வெகுதூரம் கொண்டுபோய்விடும். அவிசுவாசம் நம்மை அங்கேயே நிறுத்தி வைத்துவிடும். ஆனால் கிருபையோ சிலுவையில் இரத்தத்தைக் கொண்டு நம்மைத் திரும்ப தேவனண்டைக்குக் கொண்டு வருகிறது. நாம் பாவம் செய்யும்போது தேவனைவிட்டு திரிந்தலைகிறோம். தேவனுக்குச் சமீபமாய் வரவேண்டும் என்பதே அவரது பிரியம். அவர் கிருபாசனத்தண்டையில் வீற்றிருக்கிறார். நமக்காகப் பரிந்து பேச இயேசுவானவர் சி;ம்மாசனத்துக்குமுன் நிற்று நம்மை அழைக்கிறார். தேவ சந்நிதியைக்காண இயேசுவின்மூலமாய் அவரின் நம்பிக்கை வைக்க நம்முடைய இருதயங்களை அவருக்கு முன்பாக ஊற்ற நாம் சிங்காசனத்தண்டைக்கு போகவேண்டும்.

நம்மைப் பயப்படுத்துகிற சகலத்தையும் நாம்விரும்புகிற சகலத்தையும் நமக்குத் தேவையான சகலத்தையும் அவருக்குச் சொல்ல, நமக்கு இருக்கிற எல்லாவற்றிற்காகவும், கடந்த காலத்தில் பெற்றுக்கொண்ட நன்மைக்காகவும், இனி வேண்டிய தேவைகளுக்காகவும் சிம்மாசனத்தண்டை சேர வேண்டும். நாம் கூச்சப்படாமல் பயபக்தியாய் சகலத்தையும் அவருக்கு அறிவிக்கலாம். தேவன் சித்தத்தை அறிந்துகொள்ள அவரின் அன்பை ருசிக்க, மனகவலை நீங்க, அவரை சொந்தமாக்கிக்கொள்ள, தேவ சமுகம் தேடி, அவரிடத்தில் வந்து சேருங்கள். அவரும் உங்களுக்குச் சமீபமாய் வருவார்.

இயேசுவே வழியாம்
அவரால் மோட்சம் சேர்வோம்
அவரால் பிதாவின் சமுகம்
கண்டென்றும் ஆனந்திப்போம்.

எப்போதும் கர்த்தருடனே கூட இருப்போம்

மார்ச் 12

“எப்போதும் கர்த்தருடனே கூட இருப்போம்.” 1.தெச. 4:17

தேவன் உலகத்தாருக்குத் தம்மை வெளிப்படுத்துவது போலில்லாமல், தமது ஜனத்திற்கு வேறுவிதமாய் வெளிப்படுத்துகிறார். இப்படி அவர் தமது ஜனங்களைச் சந்திப்பது எத்தனை இனிமையாயிருக்கிறது. அப்படி அவர் நமக்கு வெளிப்படுத்துவது நமது விசுவாசத்தை உறுதிப்படுத்துகிறதாயிருக்கிறது. சந்தோஷத்தை வளர்க்கிறதாயுமிருக்கிறது. இன்னும் கொஞ்ச காலத்தில் நம்மை தமது பரம வீட்டிற்கு கொண்டு போக திரும்ப வருவார். ஒருவேளை அதற்கு முன்னே நமக்கு மரணத்தை அனுப்பினாலும் அனுப்பலாம். நாம் சரீரத்தை விட்டு பிரிந்து போய் கிறிஸ்துடன் இருக்க வேண்டியது வரும். நமது நிகழ்காலத்தைவிட அதுவே மிகவும் நல்லது. அப்படியேயானாலும் அவர் சீக்கிரம் வந்து நம்முடைய சரீரங்களைக் கல்லறையினின்று எழுப்பி நமது ஆத்துமாவையும், சரீரத்தையும் அவருடைய சாயலுக்கு ஒப்பாக்கும்போது, நாம் ஆகாயத்தில் அவரைச் சந்திக்கக் கொண்டுபோகப்பட்டு எப்போதும் கர்த்தரோடிருப்போம். இதுதான் நமக்கு மோட்சம். இதுதான் நமது பங்கு. நாம் அவரைப்போல அவராடிருப்போம். நமது இப்போதைய நிலைக்கு அது வித்தியாசமானது. இது அதிக மகிமையான காட்சி.

என்றைக்கும் கர்த்தரோடிருப்பதில் அடங்கா மகிமை உண்டு. எப்போதும் அவரோடிருப்பதில் துன்பமும் இல்லை. மகிமையைக் குறித்து தியானித்து, சந்தோஷம் நிறைந்த இந்த மாறுதலை நோக்கி பார்த்துக்கொண்டே இந்த நாளை முடிப்போமாக. இனி வருத்தத்தையும் துன்பத்தையும் பார்ப்பது சரியல்ல. நான் சீக்கிரம் கர்த்தரோடிருப்பேன் என்று சொல்லுவோம்.

என்றும் தேவனோடிருப்பது
ஆனந்த மகிழ்ச்ச
அதுவே பேரின்ப வாழ்வு
இதுவே நித்திய பேறு.

அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரில் அன்புகூருகிறோம்

மார்ச் 11

“அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரில் அன்புகூருகிறோம்.”
1.யோவான் 4:19

நாம் தேவனை நேசிக்கும் நேசம் அவர் நமதுபேரில் வைத்த நேசத்தின் தயைதான். நாம் இந்த ஜீவகாலத்தில் அவரை நேசிக்கும்படி, அவர் நித்திய காலமாய் நம்மை நேசித்தார். நேசிக்க வேண்டிய தகுதி ஒன்றும் நம்மில் இல்லாதிருந்தும் நம்மை அவர் நேசித்தார். அவர் அளவற்ற அன்பு நிறைந்தவரானபடியால், நாம் அவரை நேசிப்பது நம்முடைய கடமை. அவரின் அன்பு நமக்கு வெளிப்பட்டபடியினாலே தான் அவரை நாம் நேசிக்க ஏவப்படுகிறோம். அவரின் அன்பு நமது இருதயத்தில் ஊற்றப்பட்டபடியால்தான் நாம் அவரை நேசிக்கிறோம் சாபத்தின்படி ஒருவனும் தேவனை நேசிக்கிறதில்லை. தன் மாம்சத்தின்படி ஒருவனும் தேவனை நேசிக்கவும் முடியாது. ஏனென்றால் மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை. அது தேவ பிரமாணத்திற்கு அடங்கியிருக்கிறதுமில்லை. அடங்கியிருக்கவும் மாட்டாது.

நாம் தேவனை நேசித்தால், அல்லது மனதார நேசிக்க விரும்பினால், நமது இருதயம் மாற்றப்பட்டதற்கு அது ஓர் அத்தாட்சி. அந்த மாறுதல் அவர் நம்மை நேசித்ததின் பலன். எந்தப் பரம நம்மையும் அவருடைய அன்பிலிருந்து பாய்கிறது. அவரில் உண்டாகியதெதுவும் உடன் படிக்கைக்குரிய ஆசீர்வாதமானதால் திரும்ப அவரண்டைக்கே நம்மை நடத்துகிறது. அவரின் வார்த்தையில் வைக்கிற  விசுவாசமும், அவர் இரக்கத்தில் நமக்கு நம்பிக்கையும், அவர் பிள்ளைகளிடத்தில் நாம் வைக்கிற அன்பும், அவர் சேவைகளில் நமக்கிருக்கும் வைராக்கியமும், பாவத்திற்காக நாம் படும் துக்கமும், பரிசுத்தத்தின்மேல் நமக்கிருக்கும் வாஞ்சையும் அவர் நம்மை நேசிக்கிறார் என்பதற்கு அத்தாட்சிகள். நம்மைப்போல பாவிகள் தேவனுடைய பிள்ளைகள் என்று சொல்லப்படுவதற்கு இணையான அன்புண்டோ.

நீர் என்னை நேசிக்கிறீரென்பதை
நான் சந்தேகிக்கக் கூடாது
உம்மை நேசிக்கச் செய்யுமேன்
என் நேசம் வர்த்திக்கப்பண்ணுமேன்.

நீங்கள் சந்தேகமப்படாமல் இருங்கள்

மார்ச் 10

“நீங்கள் சந்தேகமப்படாமல் இருங்கள்.” லூக்கா 12:29

நாம் எல்லாரும் சந்தேகங்கொள்ள ஏதுவானவர்கள், சந்தேகிக்கக்காரணம் இல்லாததையே முக்கியமாய் சந்தேகிக்கிறோம். சிலரோ சந்தேகம் மார்க்கத்திற்கு உரியதுப்போல் அதை அதிகப்படுத்திக் கொள்கிறார்கள். இது தவறு. பாவமும்கூட இரட்சகர் நம்மைப் பார்த்து விசுவாசியுங்கள் என்று சொல்லுகிறார். சந்தேகம் கர்த்தரைக் கனவீனப்படுத்தி, நமக்கு வருத்தமுண்டாக்கி, சாத்தானும் நம்மை எளிதாய் மேற்கொள்ள செய்கிறது. அவருடைய செயலைக் குறித்து நாம் சந்தேகங்கொள்ளக்கூடாது. அது உண்மையுள்ள வார்த்தை. கண்டு விசுவாசிப்பது சரியல்ல. ஒருபோதும் மாறாததும் மோசம் போகாததுமான நிச்திய வாக்குகளைப் பிடித்துக்கொள்வோமாக.

நமது தருமங்களையும் திறமைகளையும் நாம் அதிகம் நினைக்காமல், கர்த்தரையும் அவர் வல்லமையைப் பார்த்து நாம் கலங்கவேண்டியதில்லை. சுகபோகமாய் வாழ்வதைவிட தரித்திரராய் தேவனுக்கு வாழ்வதில் அதிக பாக்கியவான்களாகலாம். மனிதன் மனத் மாறுகிறதைப் பார்த்து நாம் கலங்க வேண்டாம். ஏனென்றால் தேவன் மனம் மாறாதவர். ஒரே மனதுள்ளவர். அவர் மனதை மாற்ற யாராலும் முடியாது. நமது மனதைச் சந்தேகிக்க இடங்கொடுத்தால் அது நம்முடைய தற்கால சந்தோஷத்தைக் கெடுத்து, பக்திக்கரிய கடமைகளைத் தடுத்து நம்பிக்கை என்னும் பார்வையை மங்கச் செய்து, நமது பயங்களைப் பெரிதாக்கிவிடும். பின்னும் கிருபை நிறைந்த தேவனுடைய பட்சத்தையும், நமது பேரில அவர் வைத்திருக்கும் அக்கரையும் சந்தேகிக்கும். ஆகவே சந்தேகம் வேண்டாம். விசுவாசிப்போம்.

கர்த்தர்மேல் பாரத்தை
வைத்து அவர் கரத்தை
நோக்கி அமர்ந்திரு,
இரட்சிப்பாரென்று காத்திரு
சிலுவையில் தொங்கி மீட்டாரே
உன்னை இரட்சிக்காமல் போகாரே.

சத்தியத்தை அறிவீர்கள்

மார்ச் 09

“சத்தியத்தை அறிவீர்கள்.” யோவான் 8:32

கிறிஸ்துவானவர் நமக்கு போதிக்கிறவரானால், நாம் பிள்ளைக்குரிய குணத்தோடும் கற்றுக்கொள்கிற மனதோடும் இருப்போமானால் சத்தியத்தை அறிந்துக்கொள்வோம். சீயோன் குமாரர்களும் குமாரத்திகளும் கர்த்தரால் போதிக்கப்படுகிறார்கள். தேவ போதனையைக் கேட்கிற எவரும் கிறிஸ்துவில் வளருவர். இயேசுவிடம் வருகிற எல்லாரும் இரட்சிப்புக்கேற்ற ஞானம் பெற்று சத்தியத்தை அறிந்து கொள்வர். கிறிஸ்துவுக்குள் சத்தியம் இருக்கிறது. அதன் மையம் அவர்தான். அவர் வசனத்தை நம்பி, அவர் பலிபீடத்தின்மேல் சார்ந்து அவருடைய சித்தத்தை அப்படியே செய்யும்போதுதான் அவரை அறிந்துக்கொள்ளுகிறோம். அவரை அறிந்துக்கொள்ளுகிறதே சத்தியத்தை அறிந்து கொள்வதாகும்.

சத்தியம்தான் நம்மை விடுதலையாக்கும். அது அறியாமையிலிருந்தும், தப்பெண்ணத்தினின்றும், புத்தியீனத்தினின்றும், துர்போதகத்திலிருந்தும் நம்மை விடுதலையாக்கும். சாத்தானுடைய அடிமைத்தனத்தினின்றும், நியாயப்பிரமாணத்தினின்றும் பொடுமையிலிருந்தும், அது நம்மை தப்புவிக்குpறது. பாவத்தின் குற்றத்தினின்றும் குற்ற மனசாட்சியினின்றும் அது நம்மை விடுவிக்கிறது. தேவனைப்பற்றி உண்மையான அறிவை நமக்குப் புகட்டி, சமாதானத்தையும் ஒப்புரவாகுதலையும் நமக்குத் தெரியப்படுத்துகிறது. நாம் கிறிஸ்துவின் சத்தியத்தை அறிவோமானால் உலகத்தை ஜெயிப்போம். பரம இராஜ்யத்தில் பிரவேசிப்போம். தேவ சமாதானம் பெற்று அவர் சித்தம் செய்வோம்.

தேவ பக்தியே நமது ஆனந்தம்.
கர்த்தாவே நீர் போதிக்கும்போது
பாவம் அற்றுப்போவதால்
உமதாவியில் நடத்திடும்.
கிருபையால் என்னைப் பிரகாசியும்.

நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?

மார்ச் 08

“நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?.” யோவான் 6:67

ஆண்டவர் இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது, அவருடைய சீஷர்கள் அவரை விட்டுப் பின்வாங்கி போய்விட்டார்கள். அதேப் போல பலர் இந்நாளிலும் அவரை விட்டுப்போய்விட மனதுள்ளவர்களாயிருக்கிறார்கள். அநேகர் லோத்தின் மனைவிப்போல திரும்பிப் பார்க்கிறார்கள். பெத்தேலிலிருந்து வந்த தீர்க்கதரிசியைப்போல் சோதனைக்கு இடங்கொடுத்து விடுகிறார்கள். எத்தனைப் பேர் தோமைவைப்போல ஆண்டவரை நேசித்து பிறகு விசுவாசத்தை விட்டு போய்விடுகிறார்கள். ஆனால் நீங்களோ இளைப்பாறுதலில் பிரவேசிக்கும்வரை அவரை விட்டு பின் வாங்கவே கூடாது என்று தீர்மானியுங்கள்.

இயேசுவை விட்டுப் போகிறது பின்மாறிப்போகிறது ஆகும். இது ஒளியைவிட்டு இருளுக்கும், நிறைவை விட்டு குறைவுக்கும், பாக்கியத்தை விட்டு நிர்ப்பந்தத்துக்கும், ஜீவனை விட்டு மரணத்திற்கும் செல்வதாகும். கிறிஸ்துவை விட்டு போனால், வேறு யாரிடம் போவோம்? உலகமும் அதில் உள்ள பொருள்களும், நிலையான ஆத்துமாவுக்கு சமமாகாது. நம்மில் சிலர் நான் தேவ பிள்ளை என்று சொல்லி உலகத்தை இச்சித்து அதன்பின் சென்று விடுவதால் பின்வாங்கிப் போகிறோம் என்று அறியாதிருக்கிறோம். எச்சரிக்கையாயிருங்கள். எப்போதும் நாம் விழித்திருக்க வேண்டும். தேவனைவிட்டு விலகுகிறோமா என்று எல்லா காரியங்களிலும் சோதித்துப் பார்க்க வேண்டும். தன்னை நிற்கிறவன் என்று சொல்லுகிறவன், தான் விழாதபடி எச்சரிக்கையாயிருக்கடவன்.

ஒரு நிமிஷமாவது இரட்சகரை விட்டு பரிந்து போவதற்கு வழியே இல்லை. அவரை விட்டு பின் வாங்கிப் போவது புத்தியீனம். அவருடைய நியமங்களை அசட்டை செய்வது தவறு. அவருக்கு முதுகைக் காட்டுவது துரோகம். ஆத்துமாவே உன்னையும் பார்த்து, நீ என்னை விட்டுப் போகிறாயா என்று அவர் கேட்கிறார்.

ஒன்றை தேவை என்றீரே
அதை எனக்குத் தாருமே
நான் உம்மை விட்டு,
ஒருபோதும் விலகாதிருக்கட்டும்.

அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா

மார்ச் 07

“அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா.” மத். 6:6

கர்த்தருக்குத் தெரியாமல் யாராவது தன்னை இரகசியமான இடங்களில் மறைத்துக்கொள்ளக்கூடுமோ? ஒரு கிறிஸ்தவன் எந்த வகையிலாவது தன்னை அவரிடமிருந்து ஒளித்துக்கொள்ள முடியாது. எப்போதும் கர்த்தருடைய கண்கள் என்மேல் வைக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் அவர் என்னை நன்றாய்ப் பார்க்கிறார். அது என் தகப்பனுடைய கண்கள். என் பிதா என்னை அந்தரங்கத்திலிருந்துப் பார்க்கிறார். என் சத்துருக்களின் இரகசிய கண்ணிகளுக்கு என்னைத் தப்புவிப்பார். என்னைச் சேதப்படுத்தவிருக்கும் தீங்கிற்கு என்னை அருமையாய்த் தப்புவிப்பார்.

என் இதயத்தின் போராட்டங்களையும், என் அந்தரங்க சோதனைகளையும், அவர் பார்த்து அறிந்துக்கொள்கிறார். நான் ஜெபிக்கக்கூடாதபோது அவரை நோக்கிப் பார்ப்பதை அவர் பார்த்தறிவார். என் குறைவுகளையும், நிர்பந்தங்களையும் அவர் கண்ணோக்குகிறார். என் இரகசியமான பாவங்களையும் பொல்லாத சிந்தனைகளையும், தகாத தீய செயல்களையும் அவர் கவனிக்காமலில்லை. எத்தனை பயங்கரமான ஒரு காரியம் இது. இப்படி கண்ணோக்குகிற ஒரு தேவன் நமக்கிரு;கிறபடியால், இனி சோதனைக்கு இடங்கொடாமல், அவர் வழிகளுக்கு மாறாய் செய்யாமல் நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும். என் பரமபிதா என்னைப் பார்க்கிறார். ஒவ்வொரு நிமிடமும் இந்த நிமிடமும், என்னைப் பார்க்கிறார். என் உள்ளிந்திரியங்களையும் பார்க்கிறார். என் யோசனைகளையும் விருப்பங்களையும் அவர் பார்க்கிறார். இப்படிப் பார்க்கிறவர் எந்தப் பாவத்தையும் அளவற்ற பகையாய்ப் பார்க்கிறார்.

நான் எங்கே இருந்தாலும்
தேவ சிந்தை என்னை காணும்
நீர் என்னைக் காணும் தேவன்
பாவத்தை வெறுப்பேன் நான்.

இப்பொழுது ஆக்கினைத்தீர்ப்பில்லை

மார்ச் 06

“இப்பொழுது ஆக்கினைத்தீர்ப்பில்லை.” ரோமர் 8:1

ஒவ்வொரு விசுவாசியும் கிறிஸ்துவில் இருக்கிறான். அவரோடு ஐக்கியப்பட்டு அவருடைய செயல்களுக்குப் பிரயோஜனப்பட்டு அவருடைய நீதியால் உந்தப்பட்டு அவருடைய ஆவியால் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறான். இப்படிப்பட்ட மனிதருக்கு ஆக்கினைத்தீர்ப்பு இல்லை. பாவம் பெருத்திருக்கலாம். சந்தேகங்கள் அதிகம் இருக்கலாம். நமக்குள் பாவசிந்தை இருந்;தாலும் அது நம்மை மேற்கொள்ள முடியாது. விசுவாசி எவனும் தேவனால் கைவிடப்படுவதில்லை. அவன் கிறிஸ்துவுக்குள் ஒன்றாய் இருப்பதினால் குற்றத்திலிருந்து விடுதலையாகி தேவனோடு நீதிமானாயிருக்கிறான். தனது சொந்தப்பிள்ளை என்று தேவனால் அங்கீகரிக்கப்படுகிறான். கிருபைக்கம் மகிமைக்கும் சுதந்தரவாளியாகிறான். பாவம் செய்தால் தேவனால் தண்டிக்கப்படுகிறான். தண்டனைப் பெற்றால் தன் குற்றங்களை அறிக்கை செய்கிறான். அப்படி செய்வதால் உண்மையும் நீதியுமுள்ள தேவன் அவனுக்கு மன்னிப்பளித்து, கிறிஸ்துவானவர் நிறைவேற்றின கிரியை தன்னுடையது என்று சொல்லி விடுதலையடைகிறான். ஒருவனும் அவனைக் குற்றவாளி என்று தீர்க்க முடியாது. கிறிஸ்து ஒருவர்தான் அவனுக்காக மரித்தபடியால், அவர் மட்டும்தான் அவனைக் குற்றவாளியாக தீர்க்க முடியும்.

அவரே அவனுக்குப் பரிகாரியாய் உயிர்த்தெழுந்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருந்து அவனுக்காய்ப் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவர் அவனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதில்லை. இது பாக்கியமான கிருபை. நீ குற்றவாளியாக தீர்ப்பு பெறுகிற பாவியல்ல. குற்றமற்றவன் என்றும் விடுதலையடைந்த தேவ பிள்ளை என்றும் நினைத்துக் கொண்டே உறங்கச்செல். இது தேவன் தன் பிள்ளைகளுக்குத் தந்த அதிசயமான கிருபை.

ஆக்கினை உனக்கில்லை
தேவன் தாமே சொன்னாரே
கிறிஸ்து மகிமையுள்ளவர்
உன்னையும் மகிமைப்படுத்துவார்.

Popular Posts

My Favorites

பேதுரு தூரத்திலே பின்சென்றான்

செப்டம்பர் 14 "பேதுரு தூரத்திலே பின்சென்றான்." மத். 26:58 எத்தனை முறைகள் நாம் பேதுருவைப்போலப் பின் வாங்கிப் போயிருக்கிறோம்? நான் அன்பில் குளிர்ந்துபோக மாட்டேன். பற்றுறுதியில் அணைந்து போகமாட்டேன், உம் பாதையைவிட்டுச் சற்றும் விலகேன் என்று பலமுறைகள்...