முகப்பு தினதியானம் ஒகஸ்ட் கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்

கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்

ஓகஸ்ட் 14

“கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்”  லூக்கா 6:38

இந்த வசனத்தைப் போதித்தவர் அதன்படியும் செய்து காட்டினார். நமதாண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே. அவர் ஐசுவரியம் உள்ளவராய் இருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படி உங்கள் நிமித்தமாகத் தரித்திரர் ஆனாரே. இதில் கண்டிருக்கிற வாக்குத்தத்தத்திற்கு அவர் ஒரு நல்ல உதாரணம். அவர் மரணபரியந்தம் அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆனால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

கொடு என்பது கட்டளை. உதாரத்துவமாய் கொடு. உன்னால் கூடுமானவரையும் எல்லா நல்ல காரியத்துக்கும் கொடு. நல்ல நோக்கத்தோடு கொடு. ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நம்பி கொடு. இது என் கடமை. மனுஷருக்கு இதனால் ஆசீர் கிடைக்கும்.தேவனுக்கு இதனால் மகிமை வரும் என்று எண்ணிக்கொடு. கொடுக்கப்படும் என்பது வாக்குத்தத்தம். இப்படிச் சொன்னது யார்? சொன்னதை நிறைவேற்றக் கூடியவர். எப்படியென்றால், அவர் ஐசுவரியமுள்ளவர். செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர். ஏனெனில் அவர் உண்மையுள்ளவர். நிறைவேற்றக் கூடியவர். உதாரத்துவமாய் கொடுக்கும் எவருக்கும் இப்படி வாக்குக் கொடுக்கப்படுகிறது. இது ஆத்துமாவுக்கும் சரீரத்துக்கம் இம்மைக்கும் மறுமைக்கும் ஏற்றது. கொடுங்கள் அப்போது அமுக்கி குலுக்கி சரித்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். சில விதைகளை விதைக்கிறோம். ஆனால் எவ்வளவோ தானியங்களை அறுவடை செய்கிறோம். உன் உதாரகுணம் இயேசுவில் விசுவாசம் வைத்து அவருடைய நாமத்தை நேசிக்கிறதிலிருந்துப் பிறக்கிறதா?

நீ வாழவேண்டுமானால்
உதாரமாகக் கொடு
உலகத்தான் சேர்த்து வைப்பான்.
கிறிஸ்தவன் கொடுத்துப் பூரிப்பான்.