முகப்பு தினதியானம் செப்டம்பர் நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ

நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ

செப்டம்பர் 02

“நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ” யோனா 4:4

யோனா தேவனோடு வாக்குவாதம்பண்ணினான். இப்படி செய்யாதவன் யார்? யோனாவைப்போல நாம் வெளியே முறுமுறுக்கவில்லையென்றாலும் அவனைப்போல எரிச்சலடைகிறோம். கர்த்தர் செய்ததே சரியென்று சொல்பவர்கள் ஒருசிலரே. அவர் செய்கிற செயல்களைக் குறித்து சந்தோஷப்படுகிறவர் இன்னும் வெகு சிலரே. பலர் தேவனுடைய செயலை அவர் தம் இஷ்டம்படி செய்கிறார் என்று கோபமடைகிறார்கள். அதைக் குறித்து முறுமுறுப்பவர்கள் அநேகர். அவர் செயலைக் குறித்து முறுமுறுத்து அவர் பட்சபாதமுள்ளவரென்றும், அன்பற்றவரென்றும் நினைக்கிறார்கள்.

அன்பர்களே, நாம் அடிக்கடி தேவன்மேல் கோபம் கொள்கிறோம். முறுமுறுப்பிலும், வெறுப்பினாலும், இதை அடிக்கடி வெளிப்படுத்திவிடுகிறோம். சிலர் அவரோடு பேசவும் மனதில்லாமல் ஜெபம்பண்ணாமலும் இருந்து விடுகிறார். சிலர் தாங்கள் பெற்றுக்கொண்டதை அறிக்கையிட மனமற்று அவரைத் துதிக்காமல் போய் விடுகிறார்கள். நாம் இப்படி எரிச்சலாய் இருப்பது நல்லதா?? அளவற்ற ஞானமுள்ளவராய், எப்போதும் நம்மை நேசித்து நமது பேரில் ஆசீர்வாதங்களைப் பொழிகிற பிதாவின்மேல் நாம் கோபமாயிருக்கலாமா? நம்முடைய அக்கிரமங்களை மன்னித்து, நம்முடைய குறைவுகளை நீக்கி, குமாரனோடு ஐக்கியப்படுத்தி, பரம நன்மைகளால் ஆசீர்வதித்து வழிநடத்திய தேவன்மேல் எரிச்சலடையலாமோ? அவர் கொடுப்பதிலும், அவர் செய்வதிலும் சந்தோஷப்படாமல் இருப்பது பாவமாகும். நீ முறுமுறுத்து மனமடிவாகி எரிச்சல் அடைகிறது நல்லதோ?

நான் கொடிய பாவிதான்
மன்னிப்பளித்து இரட்சியும்
பாவ இச்சைக்கு என்னைக் காரும்
இருதயத்தைச் சுத்தமாக்கும்.