முகப்பு தினதியானம் செப்டம்பர் உன் சத்தத்தை நான் கேட்கட்டும்

உன் சத்தத்தை நான் கேட்கட்டும்

செப்டம்பர் 04

“உன் சத்தத்தை நான் கேட்கட்டும்” உன். 2:14

இயேசுவானவர் தம்முடைய சபையையும் நம்மையும் பார்த்து இப்படிச் சொல்லுகிறார். நாம் அவருடைய சிங்காசனத்தண்டை சேருகிறதைப் பார்க்கவும், நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக ஊற்றுகிறதைக் கேட்கவும் அவர் பிரியப்படுகிறார். நீதிமான் செய்யும் ஜெபம் அவருக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கிறது. அது புறா கூறுகிறதுபோல் துக்க இராகமாய் இருந்தாலும் ஒன்றாய் முணங்குவதுபோல இருந்தாலும் அவருடைய செவிக்கு அது இன்பமானது. சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னால் நாம் சலித்து விடுவதுப்போல் அவரும் சலித்து விடுவார் என்று நாம் தவறாய் நினைத்து விடுகிறோம். ஆண்டவரோ அப்படியல்ல. நான் உன் சத்தத்தை கேட்கட்டும் என்கிறார். நாம் மாட்டோமென்று சொல்லலாமா?

அவரின் பாதத்தில் போய் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, நம்முடைய புத்தியீனத்திற்காக வருத்தப்பட்டு, மன்னிப்பை நாடி, அவருடைய அருமையான வாக்குத்தத்தங்களை எடுத்துக்காட்டி, அவரிடம் கெஞ்சி அவரிடம் இருக்கும் ஆசீர்வாதங்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாய் கேட்டு வாங்குவோமாக. நாம் அடிக்கடி மிஞ்சி கேட்கிறோம் என்று சொல்லவுமாட்டார். தாராளமாய் நாம் அவரிடம் செல்லலாம். அடிக்கடி அவர் சமுகத்தில் வரும்படி ஏவிவிடுகிறார் செல்லாமலிருக்கும்போது நம்மைக் கண்டிக்கிறார். நம்மை அவரின் பக்கம் வரவழைக்க துன்பங்களையும் சோதனைகளையும் அனுப்புகிறார். அவர் அளிக்கும் ஒவ்வொரு ஆறுதலிலும் உன் சத்தத்தை நான் கேட்கட்டும் என்கிறார். ஒவ்வொரு துன்பத்திலும் என்னை நோக்கிப் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன் என்கிறார்.

இரவில் கவலை நீக்குவேன்
என்னை ஆராய்ந்துப் பார்ப்பேன்
கண் மூடும் முன்னே நான்
ஜெபத்தில் பேசுவேன்.