முகப்பு தினதியானம் செப்டம்பர் நான் உமது நாமத்திற்குப் பயந்திரும்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்

நான் உமது நாமத்திற்குப் பயந்திரும்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்

செப்டம்பர் 10

“நான் உமது நாமத்திற்குப் பயந்திரும்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்” சங். 86:11

கர்த்தருக்குப் பயப்படுகிறதென்றால் அவர் வார்த்தையே நம்பி, அதற்குக் கீழ்ப்படிந்து, அவரை மகிமைப்படுத்துகிறதே ஆகும். அவருடைய நாமத்தில் பக்திவைராக்கியம் கொள்வது, அவரைப் பிரியப்படுத்த முயற்சி செய்து, அவரை விசனப்படுத்தாமல் இருப்பது அவரைத் தொழுவது ஆகும். ஆராதனை என்பதில், துதி, தோத்திரம், ஜெபம் ஆகியவை அடங்கும். முழு உள்ளத்தோடு செய்யாத ஆராதனை ஒன்றுக்கும் உதவாது. தேவனைத் தொழுதுகொள்ளும்பொழுது, நமது சிந்தனை அவர்பேரில் இல்லாது சிதறிப்போவதுண்டு. இதனால்தான் நாமும் சங்கீதக்காரனைப்போல், உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இதயத்தை ஒரு முகப்படுத்தும் என்று ஜெபம் செய்ய வேண்டும்.

அதாவது, சமாதானமாய் இருக்கவும், தேவ சமுகத்தில் களிகூர்ந்து ஆராதனை செய்யவும் இது முக்கியம். இவ்வாறு நாம் ஜெபிக்கும் பொழுது, நாம் தேவ ஆராதனையில் பிரியம் கொள்வோம். பயத்தோடும், பக்தியோடும் தேவனுக்கு ஊழியம் செய்யத்தக்க கிருபையைப் பெற்றுக்கொள்ளத் தேடுவோம் என்று காட்டுகிறோம் பரிசுத்தவான்கள்கூட இருதயத்தை அலையவிடுவதினால் கர்த்தருக்கு ஊழியம் செய்யத்தடைப்படுகிறார்கள். சில நேரங்களில் நாமும் அவ்வாறு உணர்வதுண்டு. இந்நிலையிலுள்ளவர்கள், மந்தமனமுள்ளவர்களாகவும், ஊழியத்தில் உற்சாகமில்லாமல், இரண்டுங்கெட்டானாயிருப்பார்கள். அவர்கள் தாவீதைப்போல ஜெபிக்க வேண்டும். அப்பொழுது மேலான தேவசமாதானம் இவர்களுடைய சிந்தையை ஆளும். இருதயத்தை ஒருமுகப்படுத்தி, தேவனுக்குப் பயந்திருங்கள். ஆவிக்குரிய வாழ்வில் வளருங்கள்.

என் இதயம் அலைந்து
திரியாமற் செய்திடும்
உம்மையே பற்றி நிலைத்து
வாழ்ந்திருக்க உதவிசெய்யும்.