முகப்பு தினதியானம் செப்டம்பர் உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்

உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்

செப்டெம்பர் 24

“உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்” சங்.86:4

தேவ ஊழியனாக இருப்பது, உலகின் ஒரு பெரிய நாட்டின் ஜனாதிபதியாயிருப்பதைக் காட்டிலும் மிகப் பெருமையான நிலையாகும். தேவனுடைய உண்மையான ஊழியர்கள் அனைவரும் அவருடைய மக்களே. அவருடைய சித்தத்தின்படி தமது ஊழியத்தின் மக்களாகிய அவர்களை அவர் இன்னும் அதிகமாக நேசிக்கிறார். உழைப்பவர்கள், அவருக்கு உழைக்கத் தங்களை ஒப்புக்கொடுத்து, தங்கள் எஜமானாகிய ஆண்டவரையும், தங்கள் ஊழியத்தையும் அவர்கள் அதிகம் நேசிக்கிறார்கள். ஆனால், கர்த்தருக்காகவே எப்பொழுதும் ஊழியம் செய்தாலும் எப்பொழுதும் அவர்கள் மகிழ்ச்சியாயிருப்பதில்லை. தங்களுடைய உயர்வான நிலை, மேலான உறவு, மகிமையான வெளிப்பாடுகள், கிருபையாகப் பெற்ற சிலாக்கியங்கள் ஆகியவற்றை மறந்துவிடுகிறார்கள். சில சோதனை வேளைகளில் தாங்கள் தேவ ஊழியர் என்பதையும் மறந்துவிடுகின்றனர். அச்சமயங்களில் தேவனுடைய செயல் அவர்களுக்கு விநோதமாகத் தெரிகிறது. மனசோர்வு அடைகிறார்கள். தேவன் தங்களைக் கடிந்து கொள்கிறார் என்றெண்னி வேதனையடைகிறார்கள்.

இவைகளெல்லாம் நம்மை மனமடிவாக்குகின்றவை. ஆகவேதான் தாவீதரசன் உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும் என்றான். உன் வேதனைகளை நீயும் அவரிடம் கூறு. உன் மனநோவை அவர் அறியச்சொல். கதிரவனொளியைப்போல அவர் தமது கிருபையை உன்மேல் பிரகாசிக்க் செய்வார். உனக்குச் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தந்தருளுவார். சோர்வுற்ற நேரத்தில் ஊக்கமும், துயரத்தில் ஆறுதலும் ஈவார். மனம் கலங்காதே. கர்த்தர் உன் ஆத்துமாவை மகிழ்ச்சியாக்குவார்.

உம்மில் நான் களி கூர்ந்ததால்
என் பயங்கள் நீங்கிடும்
என் துன்ப நேரத்திலும்
வீழ்ந்திடுவேன் உம்பாதத்தில்.