Home கட்டுரைகள் நல்ல பங்கு

நல்ல பங்கு

131
0
நல்ல பங்கு

‘போதகர் வந்திருக்கிறார்: உன்னை அழைக்கிறார்” யோவான் 11:28

பெத்தானியா சகோதரிகளின் ஒரே சகோதரன் லாசரு. அவனும் மரித்துவிட்டான். அவன் வியாதியாயிருக்கும்போது இயேசுவுக்குச் சொல்லியனுப்பியும் அவர் வரவில்லை. லாசரு இறந்து கல்லறையில் வைத்து நான்கு நாள்கள் ஆகிவிட்டபின் இயேசு வந்தார். அவர் இன்னும் ஊருக்குள் வராதிருக்கையிலே மார்த்தாள் அவரைச் சந்தித்தாள். பின்னே, தன் சகோதரியாகிய மரியாளை அழைத்து, போதகர் வந்திருக்கிறார் உன்னை அழைக்கிறார் என்றாள். இந்தச் செய்தி மரியாளின் காதுகளிலே இன்பத் தேனாக பாய்ந்தது. துக்கம் இருதயத்தை அடைத்து, கண்ணீர் கண்களில் மல்க நம்பிக்கையெல்லாம் இழந்தவளாய் இருந்த மரியாளுக்கு, போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்ற செய்தி ஒரு பரவசத்தையுண்டாக்கிற்று. அவர் வந்தது மட்டுமல்ல, அவர் தன்னை அழைத்தனுப்பியுமிருக்கிறார். இயேசு தன்னை மறந்துவிடவில்லை: அவர் தன்னை நினைத்திருக்கிறார்: அவர் தனக்காகக் கரிசனையும் கவலையும் உள்ளவராய் இருக்கிறார் என்று அறிந்தது மரியாளுக்குப் பெரிய ஆறுதலையளித்தது. ஒரு புது உற்சாகத்துடன் அவள் சீக்கிரமாய் எழுந்து அவரிடத்தில் வந்தாள். சகோதரிகளுக்கு ஆறுதல் சொல்ல வீட்டிலே அநேக மக்கள் வந்திருந்தனர் (யோவான் 10:31). ஆனால் அவர்கள் கொடுக்கக்கூடாத அன்பையும் ஆறுதலையும் இயேசுதான் கொடுக்கக்கூடும் என்று அறிந்து அவள் அவர்களை விட்டுச் சீக்கிரமாய் எழுந்து சென்றாள்.

ஆம், அருமையானவர்களே, நீங்கள் துக்கப் பாதையிலே நடந்துபோகிறீர்களா? மனம் நொந்தவர்களாய் நம்பிக்கையிழந்தவர்களாய் இருக்கிறீர்களா? இயேசு வந்திருக்கிறார். உங்களை அழைக்கிறார். நண்பர்களும் உறவினர்களும் உங்களைத் தேறுதல்படுத்தப் பார்க்கலாம். ஆனால் மெய்யான தேறுதலை அளிக்கும் ஆண்டவர் வந்திருக்கிறார். அவரிடமே சொல்லுங்கள். உங்கள் கஷ்டத்தை அவரிடம் சொல்லுங்கள். அன்று இயேசு கண்ணீர் விட்டார். அதே கர்த்தர் உங்களை அழைக்கிறார். உங்களுடைய துக்கத்தையும் இருதய வேதனையையும் புர்pந்துகொள்ளக்கூடிய அன்பர் இயேசுதான். அவரிடதே தன்னுடைய அங்கலாய்ப்பைப் கொட்டிவிட வேண்டும் என்றுதான் மரியாள் அவரிடம் சென்றாள். முன்பு ஒரு நாள் அவருடைய பாதப்படியில் அமர்ந்து அவருடைய அருள்மொழிகயைக் கேட்டபொழுது அவளுடைய ஆன்மா பரலோக இன்பத்தை அனுபவித்ததே (லூக்கா 11:39). அதேபோல் அவரிடம் சென்று அவருடைய அன்பு வார்த்தைகளைக் கேட்க வேண்டும் என்று ஆவலோடு ஓடி வந்தாள் மரியாள். நாம் நமது இக்கட்டுகளிலும், துன்பங்களிலும் நாம் சொல்லவேண்டிய இடம் இயேசுவின் பாதபடி. கேட்கவேண்டிய ஆறுதல் மொழி அவருடைய வசனம். இயேசுவிடம் வந்து அழுத அவள் வெட்கப்பட்டுப் போகவில்லை. அவள் ஒரு போதும் நினைத்திருக்கமுடியாத அற்புதத்தை அன்று இயேசு செய்தார். மரித்துப்போன லாசருவை அவள் திரும்ப உயிரோடேப் பெற்றாள்.

போதகர் வந்திருக்கிறார். உன்னை அழைக்கிறார். உனது துக்கத்தை மாற்றி உன் கண்ணீரையெல்லாம் துடைக்கும்படி அவர் உன்னை அழைக்கிறார். உன் கூப்பிடுதலைக் கேட்டு உன் மன்றாட்டுக்குப் பதிலளிக்கும்படி அவர் அழைக்கிறார். இரட்சிப்பை பெற வாஞ்சையாயிருக்கிற உன்னைப் பெயர் சொல்லி அழைத்து இரட்சிப்பையளிக்கிறார். உன் ஆத்தும நேசர் உன்னுடன் ஆவியில் ஐக்கியம் கொள்ளும்படி உன்னை அழைக்கிறார். அவருடைய வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்கிற உன்னைத் தம்முடைய மகிமையில் சேர்க்கும்படி அவர் வந்து அழைத்துப்போவார்.