முகப்பு தினதியானம் அக்டோபர் இஸ்ரவேலில் நம்பிக்கை

இஸ்ரவேலில் நம்பிக்கை

அக்டோபர் 09

“இஸ்ரவேலில் நம்பிக்கை” எரேமியா 14:8

தேவன் இஸ்ரவேலின் நம்பிக்கைக்குக் காரணர். அந்த நம்பிக்கை அவருடைய ஆவியானவராலும், அவருடைய வசனத்தினாலும் உண்டாகிறது. வாக்கில் அவர் உண்மையுள்ளவராதலால், அவருடைய வாக்கிலும் ஆழமான கருத்துள்ள நித்திய வசனங்களிலும் நம்பிக்கை கொள்ளவேண்டும். இஸ்ரவேல் கர்த்தரை நம்புகிறான். தேவ பிள்ளைகள் அவரை நம்பியிருப்பார்களாக. கர்த்தரிடத்தில் கிருபையும், திரளான மீட்பும் உண்டு. மனிதனை நம்புவதில் பயன்யாதும் கிடையாது. மனிதன் பெலவீனன். மாறக்கூடியவன், உண்மையற்றவன். சுயநலக்காரன். அவனை நம்பாதே, கர்த்தரோ பெரியவர். உயிர் நண்பர், மன்னிப்பளிப்பவர், ஞானத்தோடு நடத்துபவர், கிருபையாகக் காப்பவர், இரக்க உருக்கம் உள்ளவர், மாறா அன்புள்ளவர். ஆகவே அவரையே நம்பு.

அவருடைய கிருபை நமக்குப் போதும். அவருடைய பெலன் நமக்குப் பூரணமாய்க் கிடைக்கும். அவர் இஸ்ரவேலின் கன்மலையாக நம்பிக்கைக்குரியவர். உறுதியானவர். அவரே அடைக்கல பட்டணமானவர். எனவே, ஆபத்துக்காலத்தில் அவரே நமக்கு ஒதுக்கிடமானவர். ஜீவ ஊற்றாகிய அவரில் நம் தாகம் தீர்த்துக்கொள்ளலாம். அவர் பாவத்தினின்று நம்மை இரட்சிக்கும் இரட்சகர். ஆதலால் அவரிடம் போவோம். அவரை நம்புவோம், அவரில் விசுவாசம் வைப்போம்! யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் தன் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். எனவே, இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு. அவரை உன் முழுமனதோடும், முழுப்பெலத்தோடும் நம்பு. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்.

இஸ்ரவேல் நம்பும் கர்த்தாவே
என் வேண்டுதல் கேட்டிடும்
எத்துன்பத்திலும் எனைக்காப்போரே,
என் முழுமையும் உம்மையே நம்பும்.