முகப்பு தினதியானம் மேன்மைக்கு முன்னானது தாழ்மை

மேன்மைக்கு முன்னானது தாழ்மை

நவம்பர் 30

“மேன்மைக்கு முன்னானது தாழ்மை” நீதி. 18:12

தேவன் நம்மை உயர்த்துமுன் நமது நிலை தாழ்ந்துதான் இருக்க வேண்டும். நல்ல ஆடைகளை அவர் நமக்கு உடுத்துவிக்குமுன்னர், அவர் நமது கந்தை ஆடைகளை அகற்றிப் போடுவார். தமது கிருபைகளால் நம்மை நிரப்ப, நம்மை வெறுமையானவர்களாக்குவார். அவருடைய பிரபுக்களுக்குச் சமமாக நம்மை உயர்த்துவதற்கும் நாம் தாழ்மையை அனுபவிக்க வேண்டும் என்கிறார். அவர் பெலவீனருக்குப் பெலன் கொடுத்து ஏழைகளை ஆதரிக்கிறார். குற்றவாளியையே அவர் நீதிமானாக்க விரும்புகிறார். தகுதியற்றவர்களைத் தகுதியாக்கி தம்முடைய மகிமையால் முடிசூட்டுவார். நாம் தாழ்வில் இருந்தால் தான் உயர்த்தப்படுவோம். யாவற்றையும் நமது உடைமையாக்க வேண்டும். தேவன், நாம் வெறுமையாயிருந்தால்தான் நம்மை நன்மைகளால் நிரப்புவார்.

தாழ்மையுள்ளவர்களுக்குத் தேவன் கிருபை அளிக்கிறார். யோசேப்பு பார்வோனுக்கடுத்த இடத்திற்கு வரவேண்டுமானால், அவன் சிறையில் வாட வேண்டும். தாவீது இஸ்ரவேலின் மன்னனாவதற்கு முன்னால், பறவையைப்போல வேட்டையாடப்பட வேண்டும். பவுல் சிறந்த அப்போஸ்தலனாவதற்கு முன்னால் தன்னைப் பாவியென்று ஒப்புக்கொள்ள வேண்டும். இதுதான் தேவனுடைய முறை. இப்பொழுது உலகில் தாழ்வாக எண்ணப்படும் பரிசுத்தவான்களே பிதாவின் ஆட்சியில் சூரியனைப்பேலா ஒளி வீசுவார்கள். பிரியமானவனே, நீ தாழ்ந்திருக்கிறாயென்று அஞ்சாதே. எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்திருக்கிறாயோ, அவ்வளவுக்கவ்வளவு உயர்த்தப்படுவாய். எவ்வளவாய் துக்கிக்கிறாயோ அவ்வளவாக மகிழ்ச்சியடையலாம். பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.

நம்முடைய தாழ்வில்
நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை இன்றுமென்றும்
நமக்குள்ளதே.