முகப்பு தினதியானம் டிசம்பர் மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது

மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது

டிசம்பர் 11

“மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது” 1.யோவான் 2:8

இவ்வுலகில் எங்குமே பாவ இருள் மூடியிருக்கிறது. எங்கெல்லாம் சுவிசேஷ ஒளி செல்கிறதோ, அங்கெல்லாம் அவ்விருள் மறைந்து விடுகிறது. பிசாசின் இருள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அவ்விடத்திற்கெல்லாம் தேவ ஒளி செல்லும்போது அது நீங்கிப்போய்விடுகிறது. இன்று பல இடங்களில் அவிசுவாசம், அவபக்தி என்னும் மேகங்கள் காணப்படுகின்றன. மெய்யான நற்செய்தியின் ஒளிமட்டுமே அவைகளை நீக்க முடியும். தேவாலயங்களில் பிரசங்கிக்கப்படும் வசனத்தின்மூலம் அவ்வொளி பிரகாசிக்கிறது. நமது இருதயத்திலும் அவ்வொளி வீசுகிறது. இப்படி வந்த பிரசங்கத்தினால் இரட்சிப்பின் வழியையும், மெய்ச் சந்தோஷத்தையும், கீழ்ப்படிதலையும் நாம் அறிந்து கொள்கிறோம்.

இப்பொழுதும் அவ்வொளி நம்மை சூழ தெளிவாகவும், அழகாகவும் பிரகாசிக்கிறது. இந்தப் பிரகாசம் தேவனுடைய சுத்த தயவை விளக்குகிறது. மகிழ்சியாய் இருக்கவும், ஆறுதலாக நடந்து நம்பிக்கையோடு போர் செய்யவும், தீமையை விட்டுவிலகவும், மனநிறைவோடு பரலோகம் சேரவும் நமக்குப் பெலன்தருகிறது. நம்மில் மெய்யான ஒளி பிரகாசிக்கிறதென்றால், கோடானகோடி மக்கள் கண்டு கொள்ளாத ஒளியை நாம் கண்டு கொண்டோமே. ஆகவேதான் நம்முடைய தேவன் ஒளியில் இருக்கும்பொழுது நாமும் ஒளியில் நடந்து, உயிருள்ளவர்களாய் அவரோடு ஐக்கியப்பட்டு, நமக்குக் கிடைத்துள்ள சிலாக்கியத்தைப் பயன்படுத்திக் கொள்வோமாக.

மனிதனை மீட்கவே
தெய்வ ஒளி பிரகாசித்தது
பாவிகளை இரட்சிக்க
அதன் ஜோதி வீசுது.