முகப்பு தினதியானம் ஜனவரி சாவு எனக்கு ஆதாயம்

சாவு எனக்கு ஆதாயம்

ஜனவரி 5

“சாவு எனக்கு ஆதாயம்”  பிலி. 1:21

தேவ சிருஷ்டிகள் என்ற அடிப்படையில் நாம் மரணத்தைப் பார்த்தால் அதற்குப் பயப்படுவோம். ஆனால் கிறிஸ்தவர்கள் என்ற அடிப்படையில் பார்த்தால் பயப்படமாட்டோம். முன்னே அது நமக்குச் சாபம்: இப்பொழுதோ அது ஆசீர்வாதம். முன்னே அது நமக்கு நஷ்டம். இப்பொழுதோ அது நமக்கு இலாபம். சாகும்போது எல்லாவித சத்துருவினின்றும், சோதனையினின்றும், துன்பத்தினின்றும் விடுதலையடைந்து, கணக்கற்ற நன்மைகளைப் பெற்றுக்கொள்ளுவோம். பாவத்தினின்று விடுவிக்கப்பட்டு பரிசுத்தத்தில் பூரணமாகிறோம். அறிவிலிருந்து தேறுகிறோம். அப்போதுதான் நாம் அறியப்பட்டிக்கிறபடி அறிந்துகொள்வோம். பரிசுத்தமும் பெறுவோம், ஏனென்றால் கிறிஸ்துவோடும் அவரைப்போலும் இருப்போம்: மேன்மையும் கிடைக்கும். ஏனென்றால் வெள்ளை வஸ்திரம் நமக்குக் கொடுக்கப்படும். சாத்தானையும், உலகையும், பாவத்தையும் வென்ற வெற்றி வீரர்களாகக் கருதப்படுவோம். கிறிஸ்துவோடு அவர் சிங்காசனத்திலும் உட்காருவோம்.

எந்த விசுவாசிக்கும் மரணம் இலாபம்தான். உடனடியாகக்கிடைக்கிற இலாபம்: பெரில இலாபம், என்றுமுள்ள இலாபம். மரண நதியைக் கடக்கிறது கடினந்தான். கடந்த பிறகோ மகிமைதான். நாம் மரணத்திற்குப் பயப்படலாமா? ஏன் பயப்படவேண்டும்? இயேசு கிறிஸ்து என்ன சொல்லுகிறார்? ‘என் வார்த்தைகளைக் கைக்கொள்ளுகிறவன் மரணத்தை ருசிப்பதில்லை” என்கிறார். அவன் உறங்கலாம், அவன் துன்பங்கள், போராட்டங்கள் நீங்கி இளைப்பாற வீடு பேறு பெறலாம். ஆகிலும் அவன் மரிக்கவே மாட்டான். மரணம் அவன்மேல் ஆளுகைச் செய்யாது. இயேசுவின் மூலம் மரணத்தைப்பார், மரணத்தின்மூலம் இயேசுவைப் பார்.

கிறிஸ்து வெளிப்படுகையில்
என் துக்கம் நீங்குமே
கிறிஸ்து என் ஜீவனாகில்
பாவம் துன்பம் நீங்குமே.