முகப்பு தினதியானம் ஜனவரி மார்த்தாளே, மார்த்தாளே… நீ கவலைப்பட்டுக் கலங்குகிறாய்

மார்த்தாளே, மார்த்தாளே… நீ கவலைப்பட்டுக் கலங்குகிறாய்

ஜனவரி 6

“மார்த்தாளே, மார்த்தாளே… நீ கவலைப்பட்டுக் கலங்குகிறாய்” லூக்கா 10:41

இயேசு மார்த்தாளில் அன்புகூர்ந்தார். மார்த்தாளும் இயேசுவில் அன்புகூர்ந்தாள். ஆனாலும் உலகக் காரியங்களை குறித்து அதிகமாய் கவலைப்பட்டுக்கொண்டிருந்தாள். இதனால் இரட்சகர் அவளைத் தயவாய்க் கண்டித்தார். அவளோ கவலைப்பட்டு படபடப்பாய்த் திரிந்தாள். அதினின்று அவளைத் தப்புவிக்க வேண்டுமென்பதுதான் நேசருடைய நோக்கம். மார்த்தாள் மிகுந்த கவலைக்குள்ளாகி கலங்கினபடியால், அவரோடு சம்பாஷிக்கவும் அவர் சொல்வதைச் சாந்தமாய்க் கேட்கவும் கூடாமற்போயிற்று.

கிறிஸ்தவர்களுக்குள் இது சாதாரணமாய் காணப்படும் குறை. சபையிலும் இன்று மார்த்தாளைப்போல் எத்தனையோ போர் இருக்கிறார்கள். மரியாளைப் போன்றவர்கள் வெகு சிலரே. நாமும் மரியாளைப்போல் இயேசுவின் பாதத்தண்டையில் உட்கார்ந்து, அவர் சொல்பதைக் கேட்டு, அவர் நமக்காகக் கவலைப்படுகிறார் என்று உணர்ந்து, நம்முடைய கவலைகளையெல்லாம் அவர் மேல்வைப்போமாக. நமது காரியங்களை எல்லாம் அவர் கரத்தில் இருக்கின்றன. சகலத்தையும் அவரே நடத்துகிறார். முதலாவது அவருடைய இராஜ்யத்தை நாம் தேடவேண்டுமென்றும், தேவ சமாதானம் உங்கள் இருதயத்தில் ஆளுகை செய்யட்டும். நடக்கிறதெல்லாம் உங்கள் நன்மைக்காக மாற்றப்படும். இவ்வுலகத்தைவிட்டு சீக்கிரத்தில் பிரிந்து, நீங்கள் வெகுவாய்க் கவலைப்படுகிற சகலத்தையும் பின்னால் எறிந்து, நீங்கள் மறுமைக்குட்படுவீர்கள். ஜெப சிந்தையுள்ளவர்களாய் இருங்கள். வீண் கவலைக்கு இடங்கொடாதேயுங்கள். மார்த்தாள் செய்த வேலையை மரியாளுடைய சிந்தையோடு செய்யுங்கள். இந்த நாளில் இரட்சகர் உங்களை இப்படிக் கண்டிக்கிறார் என்று அறிந்து, உங்கள் கவலைகளை, அவர் உங்கள் பாவங்களைப் புதைத்த இடத்தில் புதைத்துப்போடப் பார்ப்பீர்களாக.

நான் மார்த்தாளைப்போல
வீண் கவலை கொள்வனே?
ஒன்றே தேவை என்றாரே
அதனையே நாடாதிருப்பது ஏன்?