முகப்பு தினதியானம் ஜனவரி உன் சிநேகிதன்மேல் உனக்கு தயை இதுதானா?

உன் சிநேகிதன்மேல் உனக்கு தயை இதுதானா?

ஜனவரி 25

“உன் சிநேகிதன்மேல் உனக்கு தயை இதுதானா?.” 2.சாமு. 16:17

இயேசு நமக்குக் காட்டும் அன்புக்குச் சமமாய் வேறெங்கும் காணமுடியாது. நாமோ அவருக்குச் செய்யும் கைமாரோ இதற்கு எதிரிடையானது. பல சமயங்களில் நாம் அவரை அசட்டை செய்கிறோம். அவரை நோக்கிக் கேட்கும்போது நமக்கு சந்தோஷமாய் இருக்கிறதே தவிர, சில நேரங்களில் அது ஒரு பாரமான வேலையாய் இருக்கிறது. நமக்குத் தெரிந்தவைகளையெல்லாம் செய்து, அவர் சொல்வதை விட்டு விடுகிறோம். அடிக்கடி அவர் வார்த்தையில் சந்தேகம் கொண்டு அவர் அன்பைச் சந்தேகித்து அவரைக் குறித்து முறையிடுகிறோம். அவருக்குக் கீழ்ப்படியாமல் மாம்சத்துக்கு இடங்கொடுத்துவிடுகிறோம். அவர் எதிர்க்கச் சொல்கிற உலகத்தைச் சேர்த்துகொள்கிறோம். அவர் எதிர்க்கச் சொல்கிற உலகத்தைச் சேர்த்துக்கொள்கிறோம். அவர் எதிர்க்கச் சொன்ன சாத்தானோடு இணைந்துவிடுகிறோம்.

எத்தனை வேளைகளில் உலகத்தாருக்குமுன் அவரை அறிக்கையிட வெட்கப்பட்டிருக்கிறோம்? நம்மீது பட்சமும் தயையும் நிறைந்த நம்முடைய மீட்பருக்கு நாம் செய்கிறதைப் பார்த்து, ‘உன் சிநேகிதன் மேல் உனக்கு இருக்கிற தயை இதுதானோ?’ என்று நம்மைக் கேட்கும்போது, வெட்கம் நம்முடைய முகத்தை மூடவேண்டும். நமது உள்ளமும் கலங்க வேண்டும். அவருக்கு நாம் செய்யும் கொடுமை துரோகம் போன்றது. அவர் மன்னித்து நேசிக்கிற அடையாளங்களை நாம் மறுபடியும் தேடி, இனி சோதனைக்கு இணங்கவாவது, பாவத்தில் இடங்கொடுக்கவாவது நினைக்கும் சமயத்தில், நம்முடைய மனச்சாட்சியைப் பார்த்து உன் சிநேகிதன்மேல் உனக்கும் தயை இதுதானா என்று கேட்போமாக.

நான் மகா துரோகி
என் நேசரை மறந்த பாவி
அவர் கிருபை இல்லாவிட்டால்
என்னை அகற்றுவார் அப்பால்.