முகப்பு தினதியானம் நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்

நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்

பெப்ரவரி 25

“நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்.” சங். 104:34

தியானம் என்பது ஒன்றைக்குறித்து ஆழமாய் கவனித்து சிந்திப்பது ஆகும். அந்த ஒன்று ஆவிக்குரியதானால் எத்தனை பயனுள்ளதாயிருக்கும். பரலோகத்தை நினைத்து ஆண்டவராகிய இயேசுவைப்பற்றி தியானம் செய்வது எத்தனை இனிமை.

அவரில் விளங்கும் மகிமையைப்பற்றியும் அவர் கிருபையின் ஐசுவரியத்தைப்பற்றியும், அவர் அன்பின் ஆழம்பற்றியும், கனிவான உருக்கம்பற்றியும், இரக்கம்பற்றியும், அவரின் பராக்கிரம புயத்தைப்பற்றியும், அவரின் இரத்தத்தால் கிடைக்கும் புண்ணியத்தைப்பற்றியும் மகத்தான அவருடைய நீதியைப்பற்றியும், அவர் அடைந்த பூரண வெற்றியைப்பற்றியும், அவர் பரமேறின ஜோதிப் பிரகாசத்தைப்பற்றியும், அவர் நமக்காய் மன்றாடி வாங்கும் நன்மைகளைப்பற்றியும், மோட்சத்தில் அவர் வீற்றிருக்கும் மேன்மையைப்பற்றியும், பூமியில் தமது ஜனங்களை காத்துவரும் பாதுகாப்பைப்பற்றியும், இரண்டாம் வருகையைப்பற்றியும், அதன் மகிமையைப்பற்றியும் நாம் தியானிக்க வேண்டும்.

நம் தியானமெல்லாம் இயேசுவைப்பற்றியே இருக்க வேண்டும். இயேசுவைப்பற்றியே தியானிக்க வேண்டும். அவரைப்பற்றியும், அவரின் ஊழியம்பற்றியும், அவர் செய்த கிரியைகளைப்பற்றியும், அவர் இராஜ்யம்பற்றியும் அவர் தாழ்த்தப்பட்டு மேன்மையடைந்ததுப்பற்றியும், நாம் தியானிக்க வேண்டும். அப்படிப்பட்ட தியானம் இனிமையாயிருக்கும்.

உம்மைக் குறித்த தியானம்
என் மனதிற்கு இன்பம்
சிருஷ்டித்தார் இரட்சித்தார்
என்று கீதம் பாடுவேன்.