முகப்பு தினதியானம் அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரில் அன்புகூருகிறோம்

அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரில் அன்புகூருகிறோம்

மார்ச் 11

“அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரில் அன்புகூருகிறோம்.”
1.யோவான் 4:19

நாம் தேவனை நேசிக்கும் நேசம் அவர் நமதுபேரில் வைத்த நேசத்தின் தயைதான். நாம் இந்த ஜீவகாலத்தில் அவரை நேசிக்கும்படி, அவர் நித்திய காலமாய் நம்மை நேசித்தார். நேசிக்க வேண்டிய தகுதி ஒன்றும் நம்மில் இல்லாதிருந்தும் நம்மை அவர் நேசித்தார். அவர் அளவற்ற அன்பு நிறைந்தவரானபடியால், நாம் அவரை நேசிப்பது நம்முடைய கடமை. அவரின் அன்பு நமக்கு வெளிப்பட்டபடியினாலே தான் அவரை நாம் நேசிக்க ஏவப்படுகிறோம். அவரின் அன்பு நமது இருதயத்தில் ஊற்றப்பட்டபடியால்தான் நாம் அவரை நேசிக்கிறோம் சாபத்தின்படி ஒருவனும் தேவனை நேசிக்கிறதில்லை. தன் மாம்சத்தின்படி ஒருவனும் தேவனை நேசிக்கவும் முடியாது. ஏனென்றால் மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை. அது தேவ பிரமாணத்திற்கு அடங்கியிருக்கிறதுமில்லை. அடங்கியிருக்கவும் மாட்டாது.

நாம் தேவனை நேசித்தால், அல்லது மனதார நேசிக்க விரும்பினால், நமது இருதயம் மாற்றப்பட்டதற்கு அது ஓர் அத்தாட்சி. அந்த மாறுதல் அவர் நம்மை நேசித்ததின் பலன். எந்தப் பரம நம்மையும் அவருடைய அன்பிலிருந்து பாய்கிறது. அவரில் உண்டாகியதெதுவும் உடன் படிக்கைக்குரிய ஆசீர்வாதமானதால் திரும்ப அவரண்டைக்கே நம்மை நடத்துகிறது. அவரின் வார்த்தையில் வைக்கிற  விசுவாசமும், அவர் இரக்கத்தில் நமக்கு நம்பிக்கையும், அவர் பிள்ளைகளிடத்தில் நாம் வைக்கிற அன்பும், அவர் சேவைகளில் நமக்கிருக்கும் வைராக்கியமும், பாவத்திற்காக நாம் படும் துக்கமும், பரிசுத்தத்தின்மேல் நமக்கிருக்கும் வாஞ்சையும் அவர் நம்மை நேசிக்கிறார் என்பதற்கு அத்தாட்சிகள். நம்மைப்போல பாவிகள் தேவனுடைய பிள்ளைகள் என்று சொல்லப்படுவதற்கு இணையான அன்புண்டோ.

நீர் என்னை நேசிக்கிறீரென்பதை
நான் சந்தேகிக்கக் கூடாது
உம்மை நேசிக்கச் செய்யுமேன்
என் நேசம் வர்த்திக்கப்பண்ணுமேன்.