முகப்பு தினதியானம் உங்கள் அன்பைத் திருஷ்டாந்தப்படுத்துங்கள்

உங்கள் அன்பைத் திருஷ்டாந்தப்படுத்துங்கள்

யூன் 01

“உங்கள் அன்பைத் திருஷ்டாந்தப்படுத்துங்கள்.” 2.கொரி 8:24

தேவனை நேசிக்கிறோமென்று சொல்லியும் நேசியாமலிருந்தால் நாம் கிறிஸ்தவர்கள் அல்ல. கிறிஸ்தவ அன்பு எல்லாவற்றையும்விட கிறிஸ்துவையும் அவர் காரியத்தையும் பெரிதாக எண்ணும். அவரின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து அவர் சித்தம் செய்யும். அவர் கற்பனைகள் எல்லாவற்றிற்கும் உண்மையாய் கீழ்ப்படிந்து அவர் பிள்ளைகள் இவ்வுலகில் மேன்மக்கள் என்று அவர்களோடு சந்தோஷப்படும். இந்த அன்புதான் துன்பப்படுகிறவர்களோடு பரிதபிக்கும். எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாயிருக்கும். நாம் உண்மையுள்ள ஜாக்கிரதையுள்ள கிறிஸ்தவர்கள் என்றால் இப்படிச் செய்வோம்.

தேவனுடைய பிரமாணம் இப்படி நம்மை நேசிக்கும்படி செய்கிறது. சர்வ வல்ல பிதா இந்த நேசத்தை நமக்குள் உண்டாக்குவேன் என்கிறார். பரிசுத்த ஆவியானவரால் இந்த அன்பு நம் உள்ளத்தில் ஊற்றப்படுகிறது. இயல்பாகவே நம்மில் அன்பு இல்லாதபோது அவர்தான் தெய்வீக அன்பை ஊற்றுகிறார். அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, விரும்பி தேடப்பண்ணுகிறார். சுவிஷேத்தை விளக்கிக் காட்டி நம்முடைய இருதயத்தில் தேவ அன்பை ஊற்றி அதை உண்;டுபண்ணுகிறார். தேவனோடு தினமும் அவர் ஐக்கியத்தில் நம்மை வழி நடத்திச் செல்லுகிறார். அன்பர்களே, நாம் தேவனையும் அவர் பிள்ளைகளையும் நேசிக்கிறோமென்று சொல்லுகிறோம். அப்படியானால், நல்வசனத்திலும், கிரியைகளிலும் அவர்களுக்கு உதவி செய்து, மற்றெல்லாரிலும் அவர்களை மேன்மையாக எண்ணி அந்த அன்பை நிரூபிக்க வேண்டும். வியாதியில் அவர்களைச் சந்தித்து, வறுமையில் உதவி செய்து, ஒடுக்கப்படும்போது பாதுகாத்து இயேசுவின் நிமித்தம் அவர்களிடத்தில் பட்சமாய் நடந்துகொள்வோமாக.

இயேசுவின் இரத்தம் பெற்றோம்
அதில் காப்பற்றப்பட்டோம்
அவ்விரக்கத்தைக் காட்டுவோம்
அன்பைப் பாராட்டுவோம்.