முகப்பு தினதியானம் தேவனுடைய வீட்டார்

தேவனுடைய வீட்டார்

யூன் 02

“தேவனுடைய வீட்டார்.” எபேசி. 2:13

கர்த்தர் தமக்குச் சொந்தமான ஒரு விசேஷித்த குடும்பத்தை வைத்திருக்கிறார். அது ஆவிக்குரிய குடும்பம். ஏனென்றால் அதைச் சேர்ந்த ஒவ்வொருவரும், தேவனால் பிறந்து, ஆவியானவரால் போதிக்கப்பட்டு ஆவியானவர் அவர்களுக்குள் வாசம் செய்து, ஒரே சரீரமாக அவரில் ஞானஸ்நானம் பெற்றவர்கள். இக்குடும்பம் அவர் நோக்கத்திலிருந்து தோன்றியது. இது அவருடைய சித்தம் எது என்று காட்டுகிறது. அவர் வல்லமையால் உண்டானது. தேவனுடைய வீட்டார் என்பது அதன் பெயர். உலகத்திலிருந்துப் பிரிக்கப்பட்டதால் தேவனுடைய வீட்டார். அவர் நடத்திச் செல்லும் மந்தை.

அவர் ஒவ்வொருவரைப் பாதுகாத்து, குறைவையெல்லாம் நீக்கி, ஒவ்வொரு பிள்ளைக்கும் வேலை தந்து, நேசித்து, மகிழுகிறதால் பிதாவின் அன்பை வெளிப்படுத்துகிறார். இக்குடும்பத்தைச் சேர்ந்த யாவரும் சகோதரர்கள். இவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவருடைய கிருபையைப் பிரஸ்தாபப்படுத்த, அவருடைய காரியத்தை நடத்த, அவருடைய சித்தத்தை நிறைவேற்றவே இக்குடும்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய குடும்பத்தில் அவர் அறியப்பட்டு, நம்பப்பட்டு, துதிக்கப்படுகிறார். அவருக்குக் கீழ்ப்படிந்து, நேசித்து, அவருக்குள் மகிழுகிறார்கள். நீ இக்குடும்பத்தைச் சேர்ந்தவனா? இந்தக் குடும் விருந்துக்கு நீ செல்கிறாயா? இந்தக் குடும்பத்தின் ஆராதனைகள் உனக்கு இன்பமா? இந்தக் குடும்பத் தலைவரையும் அதன் உறுப்பினர்களையும் நீ உண்மையாய் நேசிக்கிறாயா? இந்த கனம் அவருடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும் உண்டு.

தேவனே, என்னிடம் வாரும்
என் உள்ளத்தில் தங்கும்
உமது குடும்பத்தில் என்னைச் சேர்த்து
இரட்சியும் கண் பார்த்து.