முகப்பு தினதியானம் விசுவாசம் அன்பு என்னும் மார்கவசம்

விசுவாசம் அன்பு என்னும் மார்கவசம்

யூன் 07

“விசுவாசம் அன்பு என்னும் மார்கவசம்.” 1.தெச.5:8

எப்பொழுதுமே நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். சத்துருக்கள் நம்மைச் சூழ்ந்திருந்தார்கள். இரட்சிப்பின் அதிபதி நமக்கு ஆயுதங்களைச் சவதரித்து தந்திருக்கிறார். அந்த ஆயுதங்கள் முழுவதையும் எடுத்து அதைக் கொண்டு நம்மைத் தற்காக்க வேண்டும். அன்பு விசுவாசம் இவைகளால் செய்யப்பட்ட மார்க்கவசத்தை எடுத்து இருதயத்தைக் காத்துக்கொள்ள வேண்டும். இவ்விரண்டும் ஆவியானவருடைய சிறப்பான கிருபைகள். விசுவாசம் என்பது தேவன் பேரில் வைக்கும் நம்பிக்கை. அன்பென்பது தேவனைப்பற்றும் பாசம். இவை வெவ்வேறானாலும் ஒன்றாய் சேர்ந்திருக்கிறது. தம்மையில் வேறுபட்டாலும் இணைந்திருக்கிறது.

விசுவாசம் எப்போதும் அன்பைப் பிறப்பிக்கும். அன்பு விசுவாசத்தை உறுதிப்படுத்தும். இவ்விரண்டும் இருந்தால் ஒரு கிறிஸ்தவன் எந்தச் சத்துருவையும் எதிர்க்கலாம். விசுவாசம் எப்போதும் கர்த்தராகிய இயேசுவைப் பாவிகளின் இரட்சகராகவும் சிநேகிதனாகவும் ஆண்டவராகவும் பிடித்துக்கொள்கிறது. அன்போ கண்பளுக்குத் தோன்றின தேவனாகவும் கிருபை ஊற்றாகவும் பிடித்துக்கொள்ளுகிறது. விசுவாசம் வாக்குத்தத்தங்களை ஏற்றுக்கொண்டு அவைகளை நம்புகிறது. அன்பு அதிசயத்து அவைகளுக்காய் துதி செலுத்துகிறது. விசுவாசம் நீதிமானாக்கிக் கொள்ள கிறிஸ்துவின் நீதியைத் தரித்துக் கொள்ளுகிறது. அன்போ மகா மகிமை நிறைந்ததாகக் கிறிஸ்துவில் களிகூறுகிறது. விசுவாசம் அனுதின சுத்திகரிப்பாக திறந்த ஊற்றண்டைக்கு நம்மை நடத்திச் செல்லுகிறது. அன்போ ஐக்கியப்பட்ட நம்மை அவர் சிங்காசனத்தண்டை நடத்துகிறது. விசுவாசம் ஆதரவுக்காகக் கிறிஸ்துவை நோக்குகிறது. அன்போ, அவருக்காய் உழைக்கவோ துன்பப்படவோ ஆயத்தமாயிருக்கிறது. விசுவாசம், மோட்சம் நம்முடைய வீடு என்று நமடக்குச் சுட்டிக்காட்டுகிறது. அன்போ அங்கே சீக்கிரம் போக நம்மை ஏவிவிடுகிறது.

விசுவாசம் அன்பும்
எனக்கிருந்தால் போதும்
அப்போது வெற்றி பெற்ற
மோட்ச இன்பம் அடைவேன்.