முகப்பு தினதியானம் சகோதரரே நாம் கடனாளிகளாய் இருக்கிறோம்

சகோதரரே நாம் கடனாளிகளாய் இருக்கிறோம்

யூன் 08

“சகோதரரே நாம் கடனாளிகளாய் இருக்கிறோம்.” ரோமர் 8:12

அபாத்திரருக்குத் தயைக் காட்டுகிறதினால் அவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் அதிகரிக்கின்றன. சிருஷ்டிகளாக நம்மைப் பார்த்தால் நாம் கடன்காரர். புது சிருஷ்டிகளாய் பார்த்தாலோ இன்னும் பெரிய கடன்காரர். தேவதீர்மானத்தின்படி வாக்குத்தத்தப் புத்தகத்தில் நம்முடைய பேர் எழுதப்பட்டுள்ளதாலும் ஆண்டவரின் ஊழியத்தில் பங்கிருப்பதாலும் அவரின் கீழ்ப்படிதல், மன்றாட்டு, மரணம் இவைகளின் நன்மைகள் நமக்காயிருப்பதினாலும், நாம் தேவ கிருபைக்குக் கடன்பட்டவர்கள். பிராயசித்த, இரத்தத்தால் நீதிக்கு திருப்தி உண்டாக்கி நாம் தேவ கோபத்தினின்று விடுவிக்கப்பட்டதாலும், பிசாசின் வல்லமைக்கு தப்புவதாலும் நாம் அவருக்குக் கடன்பட்டவர்கள்.

அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்துக்கிடந்த பொழுது, நாம் தேவ வல்லமையால் உயிர்ப்பிக்கப்பட்டு, தேவ சித்தத்தைக் கற்று, சுயாதீனத்திற்கும், சுகத்திற்கும் உள்ளானபடியினால் நாம் கடன்பட்டவர்கள். அனுதினமும் நிமிஷந்தோறும் நாம் பெற்றுக்கொள்ளுகிற விலையேறப்பெற்ற நன்மைகக்காகத் தேவனுக்குக் கடன்பட்டவர்கள். அன்பர்களே, நம் கடமையை உணர்ந்துப் பார்ப்போமாக. அன்பு நன்றியறிதல் என்னும் கடமை நமக்குண்டு. ஆகவே நமது பரம பிதாவின் கற்பனைகளை நன்கு மதித்து, ஆண்டவரின் வழிகளைக் கவனித்து, பரிசுத்தாவியானவரின் வழி நடத்துதலுக்கு இடங்கொடுத்து, தேவ வசனத்துக்கெல்லாம் சந்தோஷமாய் கீழடங்குவோமாக. கடனாளிகளாக நம்மைத் தாழ்த்தி, யோக்கியமாய் நடந்து, நாம் நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல என்றும், நமது காலமும் பலமும் நமக்கு உரிமையல்லவென்றும் ஒத்துக்கொண்டு எல்லாம் கர்த்தருடையவைகளே என அறிக்கையிடுவோமாக.

நான் மன்னிப்படைந்த பாவி
என் கடன் மகா பெரியது
அவர் செய்த நம்மைக்கீடாக
எதைப் பதிலாய்த் தருவேன்.