முகப்பு தினதியானம் உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது

உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது

யூன் 11

“உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.” சங்.94:19

நாம் அடிக்கடி வருத்தப்படுகிறோம். நம்முடைய நினைவுகள் கலங்கி சோர்ந்துப் போகிறது. நம் தேவன் இப்படிப்பட்ட நேரங்களில் நமக்கு ஆறுதல் அளிக்க அதிக கவனமுடையவராயிருக்கிறார். நிறைவான, எக்காலத்திற்கும் ஏற்ற ஆறுதல் அவரிடத்தில் உண்டு. அருமை வாக்குத்தத்தங்களினாலும், கிறிஸ்துவின் பூரண கிரியைகளிலும், நித்திய உடன்படிக்கையினாலும், பாவம், துன்பம், துக்கம் இவைகளினின்று முற்றிலும் என்றைக்கும் விடுதலையாவோம் என்ற நம்பிக்கையிலும் நமக்கு எவ்வளவு ஆறுதல் அடங்கியிருக்கிறது.

நமக்கு நாமே ஆறுதல்படுத்த அற்றவர்களாய் இருக்கிறோம். நம்முடைய தேவனிடத்தில் நம்மைப் பாக்கியவான்களாக்கத் தக்க தகுதி இருக்கிறது. நமது சொந்த நினைவுகள்கூட அடிக்கடி நமது துக்கத்திற்குக் காரணம். நம்முடைய தேவனைப்பற்றிய நினைவுகளோ, அன்பு, சமாதானம், சந்தோஷம் இவைகளால் நிறைந்திருக்கிறது. அவர் எக்காலத்திலும் நம்மை நேசிக்கும் சிநேகிதன். கண்ணீரைத் துடைக்க நமக்காகப் பிறந்த சகோதரன் நமக்கிருப்பது எத்தனை ஆறுதல். இவர் எப்போதும் பிதாவண்டை பரிந்து பேசும் மத்தியஸ்தர். இதனால் நாம் தேவனோடு ஐக்கியப்பட்டிருக்கிறோம். நம்முடைய ஒவ்வொரு வருத்தங்களில் வருத்தப்பட்டு தம்மைப்போல் நம்மை முற்றிலும் மாற்றி, தாம் இருக்கும் இடத்தில் நம்மை சேர்க்கத்தக்கதான அவ்வளவு நெருங்கிய ஐக்கியம் உண்டென்று அறிவது எவ்வளவு ஆறுதல். இவர்தான் நமக்குத் தலையானவர். நாம் அவருக்குச் சரீரம். கிறிஸ்துவும் அவர் சபையும் ஒன்று என்ற சத்தியம் எத்தனை அருமையானது. எத்தனை பரிசுத்த ஆறுதல் நிறைந்தது. அவநம்பிக்கைக்கும் மனமடிவுக்கும் எத்தனை நல்ல மருந்து. உள்ளும் புறமும் எல்லாம் துக்கமும், துயரமும் வியாகுலமுமாய் இருக்கும்போது, அவருடைய ஆறுதல்களைப்பற்றி ஜீவனம் பண்ணுவோமாக.

துயரம் பெருகும் போதும்
துக்கம் நிறையும் போதும்
உமதாறுதல் அணுகி,
என்னைத் தேற்றும் அப்போது.