Home தினதியானம் நம்மில் அன்பு கூறுகிறார்

நம்மில் அன்பு கூறுகிறார்

142
0

மே 11

“நம்மில் அன்பு கூறுகிறார்.”
ரோமர் 8:37

நம்மை ஒருவர் நேசிக்கிறாரென்றால் அது எத்தனை சந்தோஷமான ஒன்று. அதேபோல் ஒருவரும் நம்மை நேசிக்கவில்லை. ஒருவரும் நமக்காகக் கவலைப்படுகிறதில்லை என்றால் எவ்வளவு வருந்துகிறோம். ஒரு சிறு பிள்ளை நேசித்தால்கூட அதிக சந்தோஷப்படுகிறோம். பெரிய உத்தியோகத்தில் இருக்கிற ஐசுவரியமுள்ள ஒருவர் நேசிக்கும்போது எத்தனை மகிழ்ச்சி அடைகிறோம். அப்படியானால் கர்த்தராகிய இயேசு நம்மை நேசிக்கிறாரென்றால் எவ்வளவு சந்தோஷப்படவேண்டும். இது எவ்வளவு ஆனந்தத்தைக் கொடுக்கவேண்டியது ஒன்று. நாம் எவ்வளவு ஏழைகள், எவ்வளவு அற்பர், எவ்வளவு அசுத்தமானவர்கள் என்றும் அவர் எவ்வளவு மகத்துவமானவர், அன்பு நிறைந்தவர், மேன்மையானவர் என்றும் நாம் அறியும்போது அவர் நேசம் நம்மைச் சந்தோஷத்தால் நிரப்ப வேண்டும்.

இயேசு நம்மை நேசிக்கும்போது உலக பொக்கிஷங்களைவிட நம்மையே அதிகம் எண்ணுகிறார். அவர் எவ்வளவு மகிமையுள்ளவர், எவ்வளவு ஐசுவரியசம்பன்னர். எவ்வளவு அதிகாரமுடையவர், எவ்வளவு நல்லவர் என்பதை யோசித்துப்பார். நம்மை அவர் நேசிக்கிறதினால் அவருக்கு எவ்வளவோ வருத்தம் உண்டாகும் என்றும், நாமும் பிறரும் அவரை எவ்வாறு நடத்துவோம் என்றும் அவர் நன்றாய் அறிந்தும் நம்மை நேசிக்கிறார் என்பதை மறந்துவிடக்கூடாது. நேசிக்கவேண்டும் என்று விருப்பங்கொண்டே நேசிக்கிறார். நம்மைவிட மேலானவர்களையும், ஞானவான்களையும் அவர் தெரிந்துக்கொள்ளாமல் நம்மை நேசித்து தெரிந்துக்கொண்டார். நம்மால் அவருக்குப் பயன் ஒன்றும் இல்லை. அவருடைய அளவற்ற பாக்கியத்துக்கும் மகிமைக்கும் நம்மாலே ஒரு கூடுதலுமில்லை. ஆயினும் நம்மை நேசித்தார். இன்னும் நேசிக்கிறார்.

இயேசுவைப் பற்று: பயமில்லை
எல்லாம் முடியும் நலமுடன்
பரம கானானில் சேர்த்து
ஜெயம் அளிப்பார் உனக்கென்று.