முகப்பு தினதியானம் நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்

நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்

யூன் 25

“நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்.” 1.கொரி. 3:23

யார் கிறிஸ்துவினுடையவர்கள்? தமக்கென்று தேவன் பிரித்து வைத்த பரிசுத்தவான். அவரைத் தங்கள் தேவனாகவும், இரட்சகராகவும் தொழுது கொள்ளுகிறார்கள். அவர் நாமத்தை விசுவாசித்து அவருக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து, அவர் சித்தம் செய்கிறவர்கள். எந்த ஒரு தேவ பிள்ளையானாலும், வளர்ச்சியில் குறைவுள்ளவர்களானாலும், பெலவீனர்களானாலும், பயங்களானாலும், சந்தேகங்களானாலும் சோர்ந்து போய் இருந்தாலும் அவர்கள் கிறிஸ்துவினுடையவர்கள். அவர்கள் கிறிஸ்துவினுடையவர்களாகும்போது பிதா அவர்களுடையவர்களாகிறார். பரிசுத்தாவியானவரும் அவர்களுடையவரே. தேவநீதி அவர்களுடையதாகிறது. அவருடைய சமாதானமும் அவருடையயதே. அவருடைய சகல ஐசுவரியமும் அவர்களுடையதாகிறது. அவரும், அவருடையதெல்லாம் அவர்களுடையது.

தேவன் கிறிஸ்துவினுடையவர்களைத் தமது சொத்தாகப் பாதுகாக்கிறார். தம்முடைய பிள்ளைகளாக அவர்களை ஆதரிக்கிறார். தம்முடைய மணவாட்டியாக அவர்களை அரவணைக்கிறார். நாம் கிறிஸ்துவினுடையவர்களானால் அவர் பேசும்போது, முற்றிலும் அவருக்குச் செவி கொடுக்க வேண்டும். அவர் கட்டளையிடும்போது நாம் சந்தோஷமாய்க் கீழ்ப்படியவேண்டும். சாத்தானும் அவன் மக்களும் அவருக்கு விரோதமாய்ச் சொல்லும் எதையும் நம்பக்கூடாது. எப்போதும் அவரை நம்முடைய ஆண்டவரும் எஜமானுமாய் பாவிக்க வேண்டும். அடிக்கடி கிருபாசனத்தண்டையிலும், திருவிருந்திலும், தேவாலயத்திலும் அவரைச் சந்திக்க வேண்டும். வருங்காலத்தில் நித்தியமாய் அவரோடு வாழுவோம் என்ற நம்பிக்கையோடு, இப்போது அவரோடு ஜீவனம்பண்ண வேண்டும். நீர் கிறிஸ்துவினுடையவர் என்பதற்கு அத்தாட்சி உண்டா? உமக்கு அனுதினமும் வேண்டிய ஞானம், நீதி, பரிசுத்தம், மீட்பு இவைகளுக்காக நீர் அவரிடத்தில் கேட்கிறீரா?

எனக்குத் தேவை யாவையும்
அளிப்பவர் உண்டே
மன்னிப்பும் சமாதானமும்
அவர் அளிக்க வல்லவரே.