முகப்பு தினதியானம் ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது.

ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது.

யூலை 04

“ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது.” சங். 63:3

உயிரோடு இருப்பதுதான் ஜீவன். நல்வாழ்வு என்பது அதன் பொருள். சுகமாய், மேன்மையாய், சமாதானத்தோடு குறைவின்றியிருப்பது. மற்றவர்களோடு நல்ல ஓர் உறவை வைத்து மனதிருப்தியோடிருந்தால் அரசன் தன் சிம்மாசனத்திலும், வியாபாரி தன் வியாபாரத்திலும் மாணவன் தன் படிப்பிலும் திருப்தி அடைவான். ஜீவனோடிருப்பவனை நற்காரியங்கள் சூழ்ந்திருக்கும். ஆனால் தேவன் காட்டும் கிருபை எது? அன்பான வார்த்தைகளும், பட்சமான செயல்களுமே. தம்முடைய குணாதிசயங்களை வெளிப்படுத்துதலும் ஆகும். நம்மை ஞான நன்மைகளால் அவர் திருப்தி செய்கிறார். இந்த நன்மைகள் ஜீவனைவிட மேன்மையானவை. ஏனெனில் அவை மேலான கனத்தைக் கொடுக்கிறது. அதிக இன்பங்களை அளிக்கிறது.

இந்தக் கிருபைதான் மேலான காரியங்களை எதிர்பார்க்கும்படி நம்மை ஏவிவிடுகிறது. நம்மை அதிக பத்திரமாய் காக்கிறது. அது ஜீவனைவிட நல்லது. அது நித்திய நித்தியமானது. ஆத்துமாவின் தன்மைக்கும் மிகவும் ஏற்றது. மகிமை நிறைந்தது. அது கலப்பற்ற நன்மை. அழியாத இன்பம், குறையாத ஐசுவரியம். ஆகையால்தான் சங்கீதக்காரன் இது ஜீவனைவிட நல்லது. ஆகவே என் உதடுகள் உம்மை துதிக்கும் என்று சொல்லுகிறான். மற்றவர்களோடு பேசும் போதும் அதைப் புகழ்ந்து பேசுவேன் என்கிறான். என் ஜெபத்தில் உமக்கு நன்றி செலுத்துவேன். அதை எனக்குத் தெரியப்படுத்தினதற்காகவும் இப்போது அது எனக்கு கிடைத்தமைக்காகவும், எப்போதுமே அதை அனுபவிப்பேன் என்ற நம்பிக்கைக்காகவும் உம்மைத் துதிக்கிறேன் என்கிறான். நண்பரே, ஜீவன் உனக்கு அருமையானதுதான், ஆனால் அதிலும் தேவகிருபை பெரிதானதென்று எண்ணுகிறாயா?

உம் தயவும் அன்பும்
ஜவனிலும் நல்லதே
தேவ இரக்கம் பூமியைப்
பரலோகமாக்குகிறது.