Home தினதியானம் சகோதரரிடத்தில் அன்பு கூருங்கள்

சகோதரரிடத்தில் அன்பு கூருங்கள்

90
0

மே 13

“சகோதரரிடத்தில் அன்பு கூருங்கள்.”
1.பேதுரு 2:17

கிறிஸ்தவர்கள் எல்லாரும் சகோதரர்கள். நாம் தேவனால் பிறந்தவர்களானால் அவர் நமது பிதா. இயேசுவானவர் நமது மூத்த சகோதரன். விசுவாசிகள் நமது சகோதரர்கள். பல விதங்களில் இவர்கள் வித்தியாசப்பட்டாலும் அவர்கள் நம்மைப் போன்ற சுபாவமுள்ளவர்களாய் இருப்பதால் நாம் அவர்களை நேசிக்க வேண்டும். நாம் நேசிக்கவில்லையென்றால் சகோதரர் என்று எண்ணி அவர்களுக்கு உதவி செய்யவில்லையென்றால் அது பாவமாகும். ஏனெனில் ஒருவரை ஒருவர் நேசியுங்கள். சகோதரர்மேல் பட்சமாய் இருங்கள் என்று நம் தேவனே சொல்லி இருக்கிறார். ஆகவே நாம் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய அன்பான பிள்ளைகளாகவும் நம்முடைய அன்பான சகோதரர்களாகவும் பாவித்துக் கொண்டு அவர்களுக்காக கவலைப்பட்டு, நம் சகோதரர்போல் அவர்களை நேசிக்க வேண்டும்.

இப்படிப்பட்ட அன்பு இயல்பானது, பலத்தது, உருக்கமுள்ளது. நிலையுள்ளது. சந்தோஷமானது. துன்பத்தில் அவர்களுக்காகப் பரிதவித்து, வறுமையில் அவர்களுக்கு உதவி செய்து, வருத்தத்தில் தாங்கி, உலகத்தார் பலவிதத்திலும் மேன்மையுள்ளவர்களாய் இருந்தாலும் அவர்களிலும் மேன்மையாயுள்ளவர்களாய் இருந்தாலும் அவர்களிலும் மேன்மையாய் எண்ணத்தக்கதாக இவர்களை நேசிக்க வேண்டும். மூத்த சகோதரரான இயேசுவின் நிமித்தம், பிதாவின் நிமித்தம், இவர்கள் நம் உறவினர் என்பதினிமித்தம் இவர்களை நேசிக்க வேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவனும் சகோதரன் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்வோமாக. பிதா இயேசுவை நேசிக்கிறபோல் இயேசு தமது சகோதரர்களை நேசிக்கிறார். அவர் உங்களை நேசித்ததுபோல், நீங்கள் ஒவ்வொருவரையும் நேசிக்க வேண்டும் என்கிறார்.

ஆவியாய் நான் பிறந்தேன்
அவர் அடியரை நேசிப்பேன்
ஓரே தந்தையின் மக்களாய்
துதிப்பேன் அவரை மகிழ்வாய்.