முகப்பு தினதியானம் அக்கிரம விஷயங்கள் என்மேல் வல்லமை கொண்டது

அக்கிரம விஷயங்கள் என்மேல் வல்லமை கொண்டது

யூலை 17

“அக்கிரம விஷயங்கள் என்மேல் வல்லமை கொண்டது” சங். 65:3

தேவபிள்ளை யுத்தம் செய்கிறவன். பாவம் அவனில் வாசம் பண்ணி அவனில் கிரியை செய்து சில நேரங்களில் அவனை மேற்கொள்கிறது. அவன் பாவத்திற்கு முற்றும் நீங்கலானவன் அல்ல. ஒவ்வொரு நாளும் பாவத்திற்கு எதிராக விழித்திருந்து போர் செய்ய வேண்டியவன். அக்கிரம கிரியைகள் சில சமயங்களில் நமதுமேல் வல்லமை கொள்ளலாம். அப்பொழுது நமது சமாதானம் குறைந்து அவிசுவாசம் பலத்துப்போம். தேவன் மேலுள்ள பாசம் விலகி, ஜெபம் பண்ணமுடியாமல் வாய் அடைப்பட்டுத் துதியின் சத்தம் ஓய்ந்துபோம். அப்போது நமது ஆத்துமா பெலவீனப்பட்டுத் தீட்டாகி நமக்கும், தேவனுக்கும் நடுவே மந்தாரம் உண்டாகி, அவர் முகத்தைப் பார்க்கவும், அவன் அன்பை ருசிக்கவும் கூடாதவர்கள் ஆகிவிடுகிறோம்.

நாம் பாவத்திற்கு இணங்கி அது நம்மை மேற்கொள்ளும்போது நமக்குள் பரிசுத்தாவியானவர் நம்மை கடிந்துக்கொள்வார். கலக்கமும் வருத்தமும் தேவ சமுகத்தில் நம்மைப் பிடிக்கும். நாம் நம்மைத் தாழ்த்தி பாவத்தை அறிக்கையிட்டு தேவனண்டைக்குத் திரும்ப அவசியம் ஏற்படும். இப்படிப்பட்ட சம்பவத்தைத் தேவன் நமக்கு நன்மையாக பலிக்கச் செய்தால் நாம் பாவத்தை அதிகமாய்ப் பகைத்து தேவனுக்குமுன் நம்மை அருவருப்போம். அதிக விழிப்பும் ஜெப சிந்தையும் உள்ளவர்களாகுவோம். நம்மைக் குறித்து வைராக்கியம் கொண்டு பொல்லாங்காய் தோன்றுகிற யாவையும் விட்டு விலகப் பார்ப்போம். தேவன் நம்மை அப்படிப்பட்ட நிலைமையிலிருந்து விடுவிக்கும்போது நாம் தேவனுடைய நீடிய சாந்தத்தையும் இரக்கத்தையும் மன்னிப்பருளும் நேசத்தையும் பெறுவதால் ஸ்தோத்திரித்து அவரை வணங்குவோம். தாழ்மையை அணிந்து தேவனுக்கு முன்பாக பணிந்த சிந்தையோடு நடப்போம்.

என் அக்கிரமம் பெருகி,
என் ஆத்துமா தொய்யுது
என் இச்சை அடக்கும் தேவா
என்னை முற்றும் புதுப்பியும்.