Home தினதியானம் சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்

சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்

320
0

மே 19

“சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.”
சங் 25:9

சாந்த குணமுள்ளவர்கள் தங்கள் மதியீனத்தை அறிந்து போதனையடையவேண்டும் என்று விரும்பி இன்னும் அதிகம் அறியவேண்டுமென்று ஆசைக்கொள்கிறார்கள். தேவனால் போதிக்கப்பட வேண்டும் என்பதே முக்கிய நோக்கம். தேவ கரத்திலிருந்து பெற்றுக்கொள்ளுகிற ஒவ்வொரு சின்ன இரக்கத்திற்கும் தங்களை அபாத்திரர் என்று எண்ணினபோதிலும், அவர் வாக்களித்திருக்கிறபடியால் பெரிய காரியங்களைத் தேடி அவைகள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள். சாந்தம் தேவனுக்கு மிகவும் பிரியமான காரியம்.. சாந்தகுணமுள்ளவர்கள் தேவனிடம் எல்லா தயவையும் பெற்றுக்கொள்வார்கள். சாந்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள். அவர்களுக்குக் கர்த்தர் தமது வழியை போதிக்கிறார். பாவிகளுக்கு மன்னித்து அவர்களை நீதிமான்களாக்கி இரட்சிக்கிற வகையை அவர்களுக்குப் போதிக்கிறார். அவர்களுக்கு இந்த உலகில் நடக்க வேண்டிய வழியைப் போதிப்பார். மோசமும் சோதனையும் நேரிடும் நேரங்களில் அவர்களைத் தப்புவிக்கிறதற்கு அவர் வழிகளைப் போதிக்கிறார். தந்திரக்காரரைக் கலங்கடித்து சத்துருக்களுடைய யோசனைகளை அபத்தமாக்கி தமது மக்களை ஒடுக்குகிறவர்களை அழிக்கும் வழியை அவர்களுக்குப் போதிக்கிறார்.

தேவன் போதிக்கும் சமாதான வழியை அவர்கள் அனுபவிப்பார்கள். பரிசுத்த வழியில் நடப்பார்கள். இரட்சிப்பின் வழியை அனுபவித்து, விடா முயற்சியாய் நடப்பார்கள். தேவனோ தம்முடைய வசனத்தை அவர்களுக்கு விவரித்து, தமது ஆசீர்வாதத்தை அவர்களுக்கு அளித்து, அவர்களோடு ஐக்கியப்பட்டு நடந்து, நிலையுள்ள ஐசுவரியத்தையும், நீதியையும் அவர்களுக்குக் கொடுப்பார். சாந்த குணமுள்ளவர்கள் தேவனுக்குப் பிரியர், சபைக்கு அலங்காரம், உலகத்திற்கு நல் சிநேகிதர். அவர்கள் சமாதானமாயிருந்து எப்பக்கத்திலும் சமாதானம் பரவச் செய்வர்.

இயேசுவே நான் உம்மைப்போல்
சாந்தம் உள்ளவனாய்
இருக்கச் செய்யுமேன் பரிசுத்தன்
ஆவேன் அல்லோ, அப்போ.