தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 3

நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல

ஒகஸ்ட் 11

“நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல” யோவான் 13:34

இயேசுவின் சிநேகத்தை எவ்வளவாய் ருசித்தாலும் அது போதாது. அது எவ்வளவோ இனிமை நிறைந்தது. நாம் அவரைத் தெரிந்து கொள்ளுமுன்பே அவர் நம்மை நேசித்தார். அவர் நம்மேல் அன்பாயிருந்தபடியால் தேவதூதர்களுடைய சுபாவத்தைத் தரித்துக் கொள்ளாமல், நம்முடைய சுபாவத்தைத் தரித்துக்கொண்டு நம்முடைய பாவங்களுக்கு பலியாக மரித்தால் தம் அன்பை காட்டுகிறார். நம்முடைய ஆத்தும சத்துருவை ஜெயித்தாலும், நமக்கு முன்னோடியாக பரமேறியதாலும், தம் அன்பை காட்டினார். பரிசுத்தாவியானவரை அனுப்பியதாலும், நமக்காகப் பரிந்து பேசுகிறவராய் இருப்பதாலும் தமது அன்பை நமக்கு வெளிப்படுத்தினார்.

அவர் செய்து வருகிற ஒவ்வொன்றிலும் தமது அன்பைக் காட்டுகிறார். தேவனுக்குச் சத்துருக்களாக இருந்த நம்மைக் கண்டு, தமது பிள்ளைகளாக்கினார். பாவிகளாகிய நம்மைக் கண்டு மனதுருகுகிறார். ஒவ்வொரு நிமிடமும் நம்மைப் பாதுகாக்கிறார். தமது அன்பினால்தான் நாம் தவறு செய்யும்போது நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம். அலைந்து திரிந்தாலும் திரும்பவும் நம்மை அவர்பக்கம் கொண்டு சேர்க்கிறார். அவர் அன்பாயிருப்பதினால் நம்மை இரட்சிக்கிறார். நமக்கு அவசியமான எல்லாவற்றிலும் நன்மையால் நிரப்புகிறார். அவர் மணவாளனாக திரும்பவும் வந்து நம்மை தம்மோடு சேர்த்துக்கொள்வதும் அவரின் பெரிய ஆழமான அன்பைக் குறிக்கும். பாவம் செய்பவர்களை விட்டுவிட்டு தம்முடைய பிள்ளைகளைத் தமது மகிமையில் நிரப்ப அழைத்து செல்வார். அவரின் சிங்காசனம்முன் நம்மை உயர்த்துவார். மகிமை நிறைந்த இரட்சகரே, உம்முடைய அன்பு அறிவுக்கு எட்டாதது.

கர்த்தாவே உமதன்பு
அளவில் எட்டாதது
அது கறையில்லா மகா
ஆழமான சமுத்திரம்.

தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது

யூன் 17

“தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது.” லூக்கா 17:21

தேவன் தமது சிங்காசனத்தை மனிதனுடைய இருதயங்களில் வைக்கிறார். அவர் பூமியின்மேல் ஆளுகை செய்தாலும் அவர்களுக்குள் அரசாளுகிறார். ஒரு தேவனுடைய பிள்ளை ஒரே சமயத்தில், தேவ வாசஸ்தலமாயும், அவர் ஆலயமாயும், அவரின் இராஜ்யமாயும் இருக்கிறான். அவர் நமக்குள் வாசம் செய்து அரசாளுகிறார். மறு பிறப்பில் அவர் நம்மைச் சொந்தமாக்கி, நம்மை முற்றும்முடிய அவரின் ஊழிய மகிமைக்கும், புகழ்ச்சிக்கும் ஒப்புக்கொடுக்கும்போது நமக்குள் அரசாளுகிறார். அவர் இப்படி அரசாளுகிறதினால், தேவனோடு ஒப்புரவாகுதலும், தேவனாடு நேசமாகுதலும், தேவசித்தத்திற்கு முற்றும் கீழ்ப்படிதலும் அடங்கியிருக்கிறது.

இவையெல்லாம் அவரின் கிரியைகளினாலும், தயவினாலும், ஆவியானவரின் தேற்றுதலினாலும் உண்டாகிறது. கர்த்தர் ஆளுகைச் செய்யும் இடத்தில், ஆத்துமா குற்றம் நீங்கி, தேவ சமாதானத்தை அனுபவித்து, பிதாவின் மகிமையை உணர்ந்து ஆனந்தங்கொள்ளுகிறது. ஒருவன் ஆண்டவரின் ஆளுகைக்குள் வரும்போது இருதயத்தில் பகை கொல்லப்பட்டு மனதில் இருள் நீங்க மாய்மாலம் நீங்கி, தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்ற சிந்தைப் பிறக்கிறது. தேவ சித்தமே அவனுக்குப் பிரமாணம். கிறிஸ்து முடித்த கிரியை அவனுக்கு அருமை. தேவ மகிமை அவன் நாடும் மகிமை. அவன் விரோதி அவனுக்கு சிநேகிதனாகிறான். இராஜதுரோகி உத்தம குடிமகனாகிறான். அந்நியன் அருமையான பிள்ளையாகிறான். தேவ இராஜ்யம் நமக்குள் இருந்தால், தேவ வாக்குகளைப் பிடித்தவர்களாய் தேவனுக்கு பிரியமாய் நடக்கப் பார்க்க வேண்டும்.

கர்த்தாவே என்னை ஆளும்,
என் பாவம் கழுவும்,
சமாதானத்தை அளியும்,
தேவ மகிழ்ச்சியாய் நிரப்பும்.

கர்த்தர் நன்மையானதைத் தருவார்

மார்ச் 31

“கர்த்தர் நன்மையானதைத் தருவார்.” சங். 85:12

நலமானது எதுவோ அதைக் கர்த்தர் நமது ஜனத்திற்குத் தருவார். நம்மை ஆதரிக்க உணவையும், பரிசுத்தமாக்க கிருபையையும், மகுடம் சூட்டிக்கொள்ள மகிமையையும் நமக்குத் தருவார். தலமானதை மட்டும்தான் தேவன் தருவார். ஆனால் நாம் விரும்பிக்கேட்கிற அநேக காரியங்களைத் தரமாட்டார். நலமானதைத் தருவார். தகுந்த காலத்திலதான் எந்த நன்மையையும் தருவார். கடைசியில் பெரிய நன்மைகளை நாம் பெற்றுக்கொள்ளத்தக்கதாக இப்போது நமக்கு நலமானதைத் தருவார். எந்த நன்மையும் இயேசுவின் கரத்திலிருந்தே வரும். அவர் தமது ஜனங்களுக்கு நன்மையைத் தருவார் என்வது அவருக்க் அவர்களுக்கம் இருக்கும் ஐக்கியத்தினால் உறுதிப்படுகிறது. அவர்களுக்கு இவர் பிதா. அவர்களுக்காக அவர் அளவற்ற அன்பையும் உருக்கமான கிருபையையும் வைத்திருக்கிறார். அது கிருபையினாலும் வாக்குத்தத்தத்தினாலும் உறுதிப்படுத்தப்படுகிறது.

தேவன் சத்துருக்களை நேசித்து சிநேகிதரைப் பட்டினிப்போடமாட்டார். அவர் நமக்குக் கொடுக்கும் நிச்சயம் நம் பொறுமையில்லாமையைக் கண்டிக்க வேண்டும். கர்த்தருக்குக் காத்திரு. ஜெபத்திற்கு அது உன்னை ஏவி எழுப்பட்டும். அவரிடம் நன்மையான காரியத்தைக் கேள். அது உன் விசுவாசத்தை வளரப்பண்ணும். அவரின் வார்த்தையை விசுவாசி. அது உனக்குத் திருப்பதியை உண்டாக்கு. தேவன் உனக்கக் கொடுக்கும் நன்மையில் திருப்பி அடையப்பார். அது உனக்குள் நம்பிக்கையை எழுப்பட்டும். எந்த நல்ல காரியத்தையும் கர்த்தரிடத்திலிருந்துப் பெற்றுக்கொள்ளப் பார்.

கர்த்தர் நன்மை தருவார்
மகிமை அளிப்பார்
தம்முடையோர்களுக்கு அதை
அவசியம் அளிப்பது நிச்சயம்.

பரிசுத்த ஆவியில் பலத்தினாலே

அக்டோபர் 23

“பரிசுத்த ஆவியில் பலத்தினாலே” ரோமர் 15:13

பரிசுத்த ஆவியானவர் தெய்வத் தன்மையுள்ளவர். பிதாவுக்கும் குமாரனுக்கும் வல்லமையிலும், மகத்துவத்திலும், மகிமையிலும் ஒப்பானவர். இவர் கிரியை செய்வதில் வல்லவர். இவரது கிரியை இல்லாவிட்டால் இரட்சிப்பு இல்லை. அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்துக்கிடக்கிற நமக்கு அவர்தான் மறு உயிர் அருளுகிறார். நாம் அறியாமையினால் கலங்கி நிற்கிறபோது அவர்தான் நமக்குப் போதிக்கிறார். பாவத்தால் கெட்டுப்போயிருக்கிற நம்மை அவர்தான் தூய்மைப்படுத்துகிறார். நாம் சோர்ந்து மனமடிவாக இருக்கும்பொழுது நம்மைத் தூய ஆவியானவர் ஆற்றித்தேற்றுகிறார். ஜெபிக்க நமக்கு உதவி செய்து நமக்காகப் பிதாவினிடத்தில் பெருமூச்சுகளோடு வேண்டுதல் செய்கிறார். தேவனுடைய உயர் பண்புகள் நம்மில் மிளிரும்படி செய்கிறார். நமக்கு வல்லமையைத் தருகிறார். அது மங்கும்போது, அதைத் தூண்டிவிட்டு அதைப் பயனுள்ளதாக்கினார். நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதற்கு அவர் சாட்சி கூறி, மீட்கப்படும் நாளுக்கென்று நம்மை உறுதியாக்குகிறார்.

நாம் அவருடைய கைகளின் கிரியை. அவர் வாசம் செய்யும் தேவாயலம். அவரே நம் போதகர். ஆறுதல் அளிக்கிறவர். நமக்காகப் பரிந்து பேசுகிறார். அவருடைய வல்லமையே தேவ வசனத்தை அதிகம் பலனுள்ளதாக்குகிறது. கிறிஸ்து இயேசுவைப்போல நம்மை மாற்றுகிறவர் தூய ஆவியானவரே. அவரின் உதவி நமக்கு எப்பொழுதும் தேவை. நாம் இடைவிடாது அவரைப் பற்றியிருக்க வேண்டும். கிறிஸ்து நாதரின் நீதியைக் கொண்டு நம்மைக் கிறிஸ்துவோடு ஒப்புரவாக்குகிறார். இன்றையத் தேவை தூய ஆவியானவர் தரும் இந்த அனுபவம்தான்.

தேவாவியே, நீர் வாருமே
வந்தென்முன் தங்கிடும்
பயம் இருள் நீக்கியே
அன்பால் எம் இதயம் நிரப்பும்.

இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்

ஓகஸ்ட் 17

“இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்” கொலோ. 4:2

எப்போதும் ஜெபம் அவசியம். அது எப்பொழுதும் பயனுள்ளதுதான். நாம் தேவனுக்கு முன்பாக நம்முடைய ஜெபத்தை சுருக்கி விடுகிறோம். இது பாவம். இது தேவனைக் கனவீனப்படுத்தி, நம்மை பெலவீனப்படுத்துகிறது. ஜெபிக்கும்போது தேவ குணத்திற்கு ஸ்தோத்திரம் சொல்லுகிறோம். அவர் எங்கும் இருக்கிறதை விசுவாசிக்கிறோம். நமது தேவைகளைச் சந்திக்கும் தஞ்சமாக நுழைகிறோம். நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு உண்மையைத் தெரிந்தெடுக்கிறோம். ஜெபத்தில் உள்ளான எண்ணங்களைத் தேவனுக்குச் சொல்லுகிறோம். நமக்கு இருக்கும் சந்தோஷத்தையும், துக்கத்தையும், நன்றியையும், துயரத்தையும் விவரித்துச் சொல்லுகிறோம். நமது குற்றங்களை அறிக்கையிட்டு மன்னிப்பை பெற்று தேவனிடம் கிருபையைப் பெற்றுக் கொள்ளுகிறோம். நமது விருப்பங்களை வெளியிட்டு நம்முடைய நிலையை அவருக்கு முன்பாக விவரிக்கிறோம்.

ஜெபம் என்பது தேவனுக்கும் நமக்கும் நடுவே செல்லுகிற வாய்க்கால். அதன் வழியேதான் நாம் தேவனுக்கு விண்ணப்பங்களையும், வேண்டுதல்களையும் தெரிவிக்கிறோம். அவர் நமக்கு அறிவையும், பலத்தையும், ஆறுதலையும், கிருபையையும் அனுப்புகிறார். ஜெபிப்பது நமது கடமை. இது பெரிய சிலாக்கியம். நமது வேலைகள் ஜெபத்தை அசட்டை செய்யும்படி நம்மை ஏவும். ஆனால் ஜெபத்தில் உறுதியாயும், கருத்தாயும், நம்பிக்கையாயும், விசுவாசமாயும், விடாமுயற்சியுள்ளவர்களாயும், பொறுமையுள்ளவர்களாயும் இருக்க வேண்டும். தேவன் ஜெபத்தை விரும்புகிறார். சாத்தானோ அதைப் பகைக்கிறான். நாம் எப்பொழுதும் முழங்காலில் இராவிட்டாலும் ஜெபசிந்தை உள்ளவர்களாய் இருக்க வேண்டும். இது அவசியம், பிரயோஜனமானது. தேவன் அங்கிகரிக்கத்தக்கது. மெய்க் கிறிஸ்தவன் அதை மதிக்கிறான்.

ஜெபியாவிட்டால் கெடுவேன்
கிருபைத் தாரும் கெஞ்ச
உம்மைச் சந்திக்க வருகையில்
என்னிடம் நீர் வாரும்.

கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களை மன்னித்தார்

யூன் 12

“கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களை மன்னித்தார்.” எபேசி. 4:32

ஆசீர்வதாங்களிலே மிகவும் முக்கியமான ஒன்று தேவன் கொடுக்கும் பாவ மன்னிப்பு. நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு போயிற்றென்று அறிந்து உணருவது நமக்குக் கிடைத்த பெரிய சிலாக்கியம். நம் தேவன் மன்னிக்கிறவர். இலவசமாய் மன்னிக்கிறவர். அடிக்கடி மன்னிக்கிறவர். மனதார மன்னிக்கிறவர். சந்தோஷமாய் மன்னிக்கிறவர். நியாயப்படி மன்னிக்கிறவர். அவர் மன்னிக்கிறதால் மன்னிக்கப்பட்ட பாவம் மறைக்கப்பட்டுப் போகிறது. இந்த மன்னிப்பு கிறிஸ்துவினால் மட்டுமே கிடைத்த ஒன்றாகும். இது மனந்திரும்புதல், விசுவாசம், நற்கிரியைகள், இவைகளினால் நாம் பெற்றவைகளல்ல. கிறிஸ்துவின் நிமித்தம்மட்டுமே நாம் மன்னிக்கப்படுகிறோம்.

இயேசுவானவர் நம்மை தேவனிடம் சேர்க்கும்படி அக்கிரமகாரருக்காய் நீதிமானால் ஒருதரம் நம்முடைய பாவங்களுக்காகப் பாடுபட்டார். அவர் நம்முடைய பாவங்களுக்காக நிறைவும், பூரணமும் நித்தியமுமான பிராயச்சித்தத்தை உண்டுபண்ணி, தம்மைத்தாமே பலியாக ஒப்புக்கொடுத்து பாவத்தைத் தொலைத்தார். ஆகவே நாம் இயேசுவை விசுவாசித்து, தேவன் தம் குமாரனை குறித்து கொடுத்த சாட்சியை ஏற்றுக்கொண்டு, கிருபாசனத்தைக் கிட்டிச்சேர்ந்து, அவர் நாமத்தைச் சொல்லி பாவ மன்னிப்புக்காக கெஞ்சும்போது தேவன் நமக்கு மன்னிப்பளித்து, தம் குமாரனை மகிமைப்படுத்துகிறார். எந்த விசுவாசிக்கும் மன்கிக்கிறார். எந்த அக்கிரமத்தையும் மன்னிக்கிறார். அவர் பாவங்களையெல்லாம் குலைத்துப்போடுகிறார். எல்லா குற்றங்கக்கும் பாவியை நிரபராதியாக்குகிறார். தேவன் மன்னித்தவரை ஆக்கினைக்குள்ளாக்குகிறவன் யார்? தேவன் தம்மை நீதிமானாக்கினாரே? கிறிஸ்து மனதார நமக்காக மரித்தார். நித்திய மீட்பைச் சம்பாதித்தார். அவர் நிமித்தம் இன்று நாம் தேவனுக்கு முன்பாக மன்னிப்புப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட பாவிகளாக நிற்கிறோம்.

என் பாவம் மன்னிக்கப்பட்டதை
என் நேசத்தால் ரூபிப்பேன்
எனக்குரியது யாவையும்
அவருக்கே படைப்பேன்.

அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்

ஓகஸ்ட் 15

“அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்” 1.சாமு. 2:9

பரிசுத்தமாக்கப்பட்டவர்களே பரிசுத்தர்கள். தம்முடைய புகழ்ச்சிக்காக பிதாவினால் பிரித்தெடுக்கப்பட்டவர்கள். கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் மீட்டெடுக்கப்பட்டவர்கள். உலகத்திலிருந்து எடுத்து பரிசுத்தாவியானவரால் நிரப்பி சுத்திகரிக்கப்பட்டவர்கள். இயேசு உலகத்தாரல்லாததுபோல இவர்களும் உலகத்தாரல்லாதவர்கள். இந்தப் பாக்கியம் இவர்களுக்கு இருந்தாலும்,இவர்கள் முற்றிலும்பலவீனமானவர்கள். இவர்களை எப்போதும் காதுகாக்க வேண்டியது அவசியம். தேவன்தான் இவர்களைப் பாதுகாக்கக் கூடியவர் உலகத்து மனிதனால் இது முடியாது. அவர்களும் பலவீனர்தானே.

இவர்களின் பாதைகள் கரடுமுரடானது. முள்ளுள்ளது. மோசமானது. இவர்களுக்குத் திரளான சத்துருக்கள் இருக்கிறார்கள். ஆயினும் இவர்கள் விழிப்புள்ளவர்கள். தைரியமானவர்கள். வெட்கப்படாதவர்கள். காரணம் கர்த்தர் இவர்களைக் காக்கிறார். கொடுமைக்கும், துணிகரத்திற்கும், கவலைக்கும், அழிவுக்கும் இவர்களைக் காக்கிறார். தம்முடைய ஆவியானவராலும், வல்லமையினாலும், தேவ தூதர்களாலும், துன்பங்களினின்றும், நஷ்டங்களினின்றும், மார்க்கப்பேதங்களினின்றும் இவர்களைக் காக்கிறார். தேவன் யாரைக் காக்கிறாரோ, அவர்கள்தான் பத்திரமாய் இருப்பார்கள். தமது பரிசுத்தவான்கள் எல்லாரையும் காக்கிறார். விசுவாசிகளை மாத்திரம் காக்கிறபடியால் பெயர் கிறிஸ்தவர்கள் கெட்டழிவார்கள். விசுவாசத்தினாலும், தேவன் மேல் வைக்கும் நம்பிக்கையினாலும் இவர்கள் காக்கப்படுகிறார்கள். என்னை ஆதரித்தருளும், அப்போது நான் இரட்சிக்கப்படுவேன்.

இயேசுவே நீர் உத்தமர்
என் நடையைக் காத்தருளும்
உம்மோடு நடப்பேன்
மோட்சம்பேறு அடைவேன்.

அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்

யூலை 03

“அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.” மீகா 7:18

தேவனை விரோதிப்பவர்கள்மேல்தான் தேவ கோபம் வரும். தேவனுடைய கோபம் யார்மேல் வருகிறதோ அவர்களுடைய நிலை மகா வருத்தமானது. கொஞ்ச காலம் அவருடைய ஜனங்களுக்கு விரோதமாகவும் அது வரலாம். ஒவ்வொருவனும் நீர் என்மேல் கோபமாயிருந்தீர் என்று சொல்லக்கூடும். தேவனுடைய கோபத்திற்கு காரணம் பாவம். அவர் தம் பிள்ளைகள்மேல்தான் கோபப்படுகிறார். அது தகப்பனுக்கொத்த கோபம். நம்மைச் சீர் செய்யவேண்டும் என்பதே அவருடைய கோபத்தின் நோக்கம். அந்தக்கோபம் பல விதங்களில் நம்மை வருத்தப்படுத்தக்கூடும்.

தேவ கோபத்தால் உலக நன்மைகள் கெட்டு ஆவிக்குரிய ஆறுதலும், சந்தோஷமும் குறைந்து போகலாம். அது குறுகிய காலம் தான் இருக்கும். அவர் கோபம் ஒரு நிமிஷம். அவருடைய தயவோ நீடிய வாழ்வு. தேவன் நம்மேல் கோபமாய் இருக்கும்போது ஒரு மணிநேரம் ஒரு நாள்போலவும், ஒரு மாதம், ஒரு வருடம்போலவும் இருக்கும். ஆகையால் அவர் எப்பொழுதும் கோபம் வைக்கிறதில்லை என்ற உண்மை நமக்கு இன்பமாய் இருக்கவேண்டும். கோபப்படுவது அவர் இயல்பு அல்ல. அவர் சுயசித்தமாய் கோபிக்கிறவரும் அல்ல. அவர் வெகுகாலம் கோபம் வைக்கிறதில்லை. அவர் பிராயசித்த பலியை நோக்கி சீரடைந்தவனுடைய விண்ணப்பத்திற்குப் பதிலளிக்கிறார். தம்முடைய உடன்படிக்கையை நினைக்கிறார். இரக்கம் காட்டுவதே அவருக்குப் பிரியம் என்று நிரூபிக்கிறார். அவருடைய கோபம் பாவிகளுக்கு விரோதமாக, பாவத்தால் நெருப்பு மூட்டப்பட்டு எப்பொழுதும் எரியும். ஆனால் அவர் பிள்ளைகளின்மேல் வைக்கும் கோபம் சீக்கிரம் அணைந்துப்போம். தேவனின் அன்பு என்கிற நீர் அதை அவித்துப்போடும்.

பாவத்தை ஒழித்து
முற்றும் மன்னிப்பார்
கோபம் ஒரு நொடி மாத்திரம்
அவர் அன்போ என்றும் உள்ளது.

மகா பிரதான ஆசாரியர்

ஓகஸ்ட் 28

“மகா பிரதான ஆசாரியர்” எபி. 4:14

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக ஊழியஞ் செய்கிறவராயிருக்கிறார். அவர் நமக்கு ஆசாரியர். நமக்காகவே பிரதான ஆசாரியராக அபிஷேகம்பண்ணப்பட்டு அனுப்பப்பட்டார். நம்முடைய பாவங்களுக்காக அவர் பிராயச்சித்தம் செய்துக்கொள்ள முடிவு செய்தார். அந்தப் பிராயச்சித்தமே தேவ மகிமையால் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அது மதிப்புக்கு அடங்காதது. என்றும் பிரசித்தி பெறத்தக்கது. அது நம்முடைய குற்றங்களையும் பாவங்களையும் நிராகரித்துவிட்டது. இப்போதும் அவர் நமக்காகப் பரிந்து பேசுகிறார். இதற்காகவே அவர் பிழைத்தும் இருக்கிறார். எப்போதும் அதைச் செய்துக் கொண்டு வருகிறார்.

தம்முடைய கிருபையினால் பலவித ஊழியங்களையும், நம் ஜெபங்களையும், பெலவீனங்களையும், சுகந்த வாசனையாக்குகிறார். இந்தப் பரிந்து பேசுதல் நமதுமேல் வரும் துன்பங்களை விலக்கி நமக்குத் தேவையான எல்லா நன்மைகளையும் சம்பாதித்து தம்முடைய தயவுகளை நம்மேல் பொழிகிறது. இப்போதும் நமக்காக மகா பரிசுத்த ஸ்தலத்தில் நமக்காக பரிந்து பேசுகிறார். இரத்தத்தை தெளித்து தூபத்தைச் செலுத்துகிறார். அவர் ஆசாரியர் மட்டுமல்ல. பிரதான மகா பிரதான ஆசாரியர். அவர் மகத்துவத்திலும் வல்லமையிலும் மகிமையிலும், இலட்சணங்களிலும் அவர் ஊழியங்களின் பலனிலும் அவருக்கு மேலானவர் ஒருவரும் இல்லை. இவரே நம்முடைய மகா பிரதான ஆசாரியர். இவர் தேவக் குமாரனாகவும் நமக்கு இருக்கிறார். நமக்காக அவர் தேவ சமுகத்தில் நிற்கிறார். இன்று இரவு அவர் நமக்காகத் தம்முடைய இரத்தத்தைச் சமர்பிக்கிறார்.

அவர் பிதாவின் சமுகத்தில்
நமக்காகப் பரிந்து பேசுவார்
அவரிடம் ஒப்புவித்ததெல்லாம்
நலமாய் முடிப்பார்.

நீர் என்மேல் பிரியமாய் இருக்கிறீர் என்று அறிவேன்

யூலை 19

“நீர் என்மேல் பிரியமாய் இருக்கிறீர் என்று அறிவேன்” சங். 41:11

எல்லா விசுவாசிக்கும் இது தெரிந்ததே. ஆயினும் இதைச் சரியாக புரிந்துகொள்ள எவரும் முயற்சிப்பது இல்லை. தேவன் நம்மேல் பிரியமாயிராவிட்டால் நாம் இன்னும் பாவத்தில் செத்துக்கிடப்போம். அல்லது குற்றமுள்ள மனட்சாட்சியோடே வாழுவோம். அல்லது அவநம்பிக்கைக்கு இடங்கொடுத்து கெட்டழிவோம். நம்முடைய சத்துருவும் நமதுமேல் ஜெயம் அடைவான். சாத்தான் நம்மைவிட அதிக ஞானமும், வல்லமையும் திறமையும் அனுபவமும் உள்ளவன். நம்முடைய பெலவீனத்திலும், பயத்திலும் அவன் நம்மை மேற்கொள்வான். நம்முடைய உள்ளான பலம் அவனுக்குத் தெரிந்திருப்பதனாலும் நம்மை அவன் வசப்படுத்துவான். நம்மைப் பாவத்திற்கு இழுத்து விழுவதற்கு முயற்சிகள் செய்து, நம்மை அவநம்பிக்கைக்கொள்ள செய்வான். ஆயினும் அவன் மேற்கொள்வதில்லை.

கர்த்தர் நம்மேல் பிரியமாய் இல்லாதிருந்தால் அவன் நிச்சயமாக நம்மை மேற்கொள்வான். இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார். பரிசுத்தாவியானவர் நமது பெலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நம்முடைய பரம பிதாவும் தம்முடைய உண்மையான வாக்கை நிறைவேற்றி சாத்தானை தடுத்து மட்டுப்படுத்தியுள்ளார். போராட்ட வேளையில் அவர் தமது கேடகத்தால் நம்மை மறைத்து யுத்தத்தின் அகோரத்தில் நம்மைப் பாதுகாக்கிறார். நம்முடைய வேலைக்குத் தேவையான பெலனை அளித்து, அவர் கிருபை நமக்குப் போதும் என்று காட்டுகிறார். அநேகர் விழுந்தாலும் நாம் நிற்கிறோம். அநேகர் பின்வாங்கிப்போனாலும் நாம் உறுதியாய் இருக்கிறோம். இந்த இரவு அவருடைய இரக்கத்திற்கு ஞாபகக் குறிகளாய் இருக்கிறோம். நாம் தேவனுக்குப் பிரியமான பிள்ளையென்று நாம் ஒவ்வொருவரும் சொல்லலாம்.

கர்த்தர் விடுவிப்பார் என்று
அவரை நம்பி இருப்பேன்
அப்போ அவர் பக்தரோடு
என்றும் களித்து நிற்பேன்.

Popular Posts

My Favorites

தேவன் பிரியமானவர்

ஓகஸ்ட் 08 "தேவன் பிரியமானவர்" கலா. 1:15-16 அப்போஸ்தலனாகிய பவுல் தன் தாயின் வயிற்றிலிருந்து முதல் பிரித்தெடுக்கப்பட்டதையும், கிருபையினால் அழைக்கப்பட்டதையும், கிறிஸ்து தன்னில் வெளிப்பட்டதையும், தான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், பிரித்தெடுக்கப்பட்டதையும் குறித்து இவை யாவும் தேவனுடைய...