தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 2

என்னை இழுத்துக் கொள்ளும்

ஜனவரி 11

“என்னை இழுத்துக் கொள்ளும்” உன். 1:4

ஒவ்வொரு நாள் காலையும் நேசர் நம்மை அழைக்கிற சத்தம் எவ்வளவு இனிமையும் அருமையாயும் இருக்கிறது. ஆனால் அவரின் அழைப்பு மட்டும் கேட்டால் போதுமா? நம்முடைய இருதயம் அதற்குச் செவி கொடுக்க வேண்டும். மந்தமான ஆத்துமாவும், சோம்பலான இருதயமும் இன்னும் பல காரியங்களும் தேவ பரிபூரணத்தைப் பெற்றுக்கொள்ளாதபடி நம்மைத் தடுக்கின்றன. அவர் நம்மை அழைக்கிறது நமக்குத் தைரியத்தைக் கொடுக்க வேண்டும். அவர் நமது தகப்பன், நாம் தாராளமாய் அவரிடம் பிரவேசிக்கலாம். என்ன தேவையானாலும் அவைகளை பெற்றுக்கொள்ள அவரிடம் போகலாம். அவர் பட்சபாதமுள்ளவரல்ல. அவர் வார்த்தைகள் உண்மை நிறைந்தது. அது பரிபூரணமாய் நமக்குண்டு. பரிசுத்தவியானவர் நம்மை இழுக்கும்போது அவரிடம் சென்றிடவேண்டும். அப்போதுதான் நமது சுயம், பலவீனம் எல்லாம் நீங்கி நமக்கு ஆவிக்குரிய வாழ்வில் புத்துணர்ச்சி கிடைக்கும். ‘என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வர மாட்டான் என்று இயேசு சொன்னார்.” இந்த வசனம் தேவன்நம்மீது வைத்துள்ள அநாதி அன்புக்கு சாட்சி கொடுக்கிறது. ‘அநாதி நேசத்தால் உன்னை நேசித்தேன், இரக்கம் உருக்கத்தால் உன்னை இழுத்துக் கொண்டேன்” என்றார்.

ஆத்தும நேசர் நம்மை இழுக்கிற பாசம் எவ்வளவு பெரியது. நாம் முழு இருதயத்துடன் அவர் வார்த்தைகளுக்கு இணங்குவோம். அன்பின் கயிற்றால் நம்மை இழுத்துக்கொண்டது எவ்வளவு பெரிய கிருபை. முழு ஆத்துமாவோடு அவர் வழிகளில் நடப்போம். உலகம் பாவத்துக்கும் இன்பங்களுக்கும் நம்மை இழுக்கும்போது நாம் செல்லாமல், சழங்காசனநாதர் பாதத்தில் அமர்ந்து, அவர் பிரசன்னத்தில் மகிழ்ந்து வாழ அவரின் பாதைகளில் நடப்போம். அவர் உங்களை சேர்த்துக்கொள்வாராக.

கிருபாசனத்துக்கு நேராய் என்னை
உம்மண்டை இழுத்துக்கொள்ளும்
மரியாள் போல் உம் பாதத்திலிருந்து
கற்றுக்கொள்ள உதவி செய்யும்.

நீர் என்மேல் பிரியமாய் இருக்கிறீர் என்று அறிவேன்

யூலை 19

“நீர் என்மேல் பிரியமாய் இருக்கிறீர் என்று அறிவேன்” சங். 41:11

எல்லா விசுவாசிக்கும் இது தெரிந்ததே. ஆயினும் இதைச் சரியாக புரிந்துகொள்ள எவரும் முயற்சிப்பது இல்லை. தேவன் நம்மேல் பிரியமாயிராவிட்டால் நாம் இன்னும் பாவத்தில் செத்துக்கிடப்போம். அல்லது குற்றமுள்ள மனட்சாட்சியோடே வாழுவோம். அல்லது அவநம்பிக்கைக்கு இடங்கொடுத்து கெட்டழிவோம். நம்முடைய சத்துருவும் நமதுமேல் ஜெயம் அடைவான். சாத்தான் நம்மைவிட அதிக ஞானமும், வல்லமையும் திறமையும் அனுபவமும் உள்ளவன். நம்முடைய பெலவீனத்திலும், பயத்திலும் அவன் நம்மை மேற்கொள்வான். நம்முடைய உள்ளான பலம் அவனுக்குத் தெரிந்திருப்பதனாலும் நம்மை அவன் வசப்படுத்துவான். நம்மைப் பாவத்திற்கு இழுத்து விழுவதற்கு முயற்சிகள் செய்து, நம்மை அவநம்பிக்கைக்கொள்ள செய்வான். ஆயினும் அவன் மேற்கொள்வதில்லை.

கர்த்தர் நம்மேல் பிரியமாய் இல்லாதிருந்தால் அவன் நிச்சயமாக நம்மை மேற்கொள்வான். இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார். பரிசுத்தாவியானவர் நமது பெலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நம்முடைய பரம பிதாவும் தம்முடைய உண்மையான வாக்கை நிறைவேற்றி சாத்தானை தடுத்து மட்டுப்படுத்தியுள்ளார். போராட்ட வேளையில் அவர் தமது கேடகத்தால் நம்மை மறைத்து யுத்தத்தின் அகோரத்தில் நம்மைப் பாதுகாக்கிறார். நம்முடைய வேலைக்குத் தேவையான பெலனை அளித்து, அவர் கிருபை நமக்குப் போதும் என்று காட்டுகிறார். அநேகர் விழுந்தாலும் நாம் நிற்கிறோம். அநேகர் பின்வாங்கிப்போனாலும் நாம் உறுதியாய் இருக்கிறோம். இந்த இரவு அவருடைய இரக்கத்திற்கு ஞாபகக் குறிகளாய் இருக்கிறோம். நாம் தேவனுக்குப் பிரியமான பிள்ளையென்று நாம் ஒவ்வொருவரும் சொல்லலாம்.

கர்த்தர் விடுவிப்பார் என்று
அவரை நம்பி இருப்பேன்
அப்போ அவர் பக்தரோடு
என்றும் களித்து நிற்பேன்.

வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தாவி

பெப்ரவரி 15

“வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தாவி.” எபேசி.1:13

பழைய ஏற்பாட்டில் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டிருக்கிற பெரிய ஆசர்வாதம் தே குமாரன்தான். புதிய ஏற்பாட்டில் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டிருக்கிறவர் பரிசுத்தாவியானவர். இயேசு கிறிஸ்து செய்து முடித்த கிரியைகளுக்குப் பதிலாக, அவர் நமக்குக் கொடுக்கப்பட்டார். அவரை நோக்கி கேட்கிற எவருக்கும் ஆவியானவரைத் தந்தருளுவார். இந்த ஜீவத் தண்ணீரைக் கொடுப்பவர் இயேசுவானவN. இதைப் பெறுகிற யாவரும் நித்திய ஜீவகாலமாய் ஊறும்ஊற்றைப் பெறுவர். நம்மைத் தேற்றவும், ஆற்றவும், போதிக்கவும், நடத்தவும், உதவி செய்யவும் ஆவியானவேர பொறுப்பெடுக்கிறார். கிறிஸ்துவால் நமக்கு நீதியும் இரட்சிப்பும் கிடைக்கிறதுபோல, பரிசுத்தாவியானவர்மூலம் நமக்கு அறிவும், ஜீவனும், சந்தோஷமும், சமாதானமும் கிடைக்கிறது.

இவர் வாக்குத்தத்தத்தின் ஆவியாயிருக்கிறார். இவர் உதவியின்றி தேவ வாக்குகளை நாம் வாசித்தால் அதன் மகிமையை அறியோம். சொந்தமாக்கிக் கொள்ளும் உணர்வையும் அடையோம். அவர் போதித்தால் தான் வாக்குகள் எல்லாம் புதியவைகளாகவும், அருமையானதாகவும், மேலானதாகவும் தெரியும். எந்தக் கிறிஸ்தவனும் துன்பமென்னும் பள்ளிக்கூடத்தில் தன் சுய அனுபவத்தால், வாக்குத்தத்தமுள்ள ஆவியானவர் தினமும் தனக்கு அவசியத் தேவையெனக் கற்றுக்கொள்ளுகிறான்.

தேவ பிள்ளையே, ஆவியானவரைத் துக்கப்படுத்தாதபடி ஜாக்கிரதையாக இருப்போமாக. அவர் ஏவுதலை ஏற்று, அவர் சித்தம் செய்ய முற்றிலும் இடங்கொடுப்போமாக.

பிதாவே உமது ஆவி தாரும்
அவர் என்னை ஆளட்டும்
உமது வாக்கின்படி செய்யும்
என் தாகத்தைத் தீரும்.

உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும்

மார்ச் 01

“உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும்.” சங். 17:7

நம்மை மிகவும் அன்பான உறவில், தம்மோடு ஜக்கியப்படுத்திக்கொண்டதினால், இந்தப் பெரிய கிருபையை விளங்கப்பண்ணியிருக்கிறார். ஒரு புழுவைத் தம் பிள்ளையென்று அழைப்பது எத்தனை கிருபை. பாவம் நிறைந்த தீட்டுள்ள ஒரு புழுவைத் தன் மணவாட்டி என்று அழைப்பது எவ்வளவு பெரிய கிருபை. நமது பங்களை நீக்கி, நமக்குள் நம்பிக்கை தந்து, விருப்பங்களை உண்டாக்கி, நம்மோடு இணைந்து விடுகிற தேவனின் கிருபைதான் எவ்வளவு பெரியது. இந்த அன்பை எப்படி சொல்வது.

அதிசயமான கிருபை என்பது அதிகமாய் நம்மை எழுப்பிவிடத்தக்க அன்புதான். இது உருக்கம் கொள்ளுகிற, பட்சம் காட்டுகிறது அன்பு. இது தாழ்ந்த சிந்தையால் அலங்கரிக்கப்பட்ட அன்பு. அதிசயமான கிருபையைக் காண்பிப்பது. அதிக தயவைப் பாராட்டுவதாகும். வழக்கத்திற்கு மாறான தயை. அறிவுக்க விளங்காத கருணை. விசுவாசம் மட்டும் எதிர்பார்க்கிற தேவ அன்பு. இதை விசுவாசத்தோடு கேட்டால் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். அன்பதே, நன்மை செய்வதே தேவனுக்குப் பரியம் என்பதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. தமது ஊழியக்காரனுடைய சுகத்தைத்தான் அவர் விரும்புகிறார். நமக்கு நன்மை செய்வதில் அவர் ஆநன்தப்படுகிறார். நாம் தாழ்மையோடு, மனந்திருப்தியாய் விசுவாசத்தைத் தினமும் முயற்சிப்போமானால், நமக்கு ஒன்றையும் மறுக்கவும் மாட்டார். நாம் கேளாததினால்தான் பெற்றுக்கொள்ளுகிறதில்லை. கேட்டாலும், தகாதவிதமாய் கேட்பதினாலும் பெற்றுக்கொள்ளாமல் போகிறோம்.

தேவனே நான் உம்மையே
நம்பி இருக்கிறேன்.
என் விண்ணப்பம் கேளும்
எனக்குத் துணையாய் வாரும்
புவியில் இருக்கும் எனக்க
இரங்கி தயை காட்டுமே.

நாம் இங்கே தேவ சந்நிதியில் சேரக் கடவோம்

யூலை 29

“நாம் இங்கே தேவ சந்நிதியில் சேரக் கடவோம்” 1.சாமு 14:36

நாம் சுபாவப்படி தேவனுக்குத் தூரமானவர்கள். கிருபையினால் மட்டுமே அவரோடு ஒப்புரவாகி அவரோடு கிட்டச் சேர்கிறோம். ஆயினும் நாம் அவருக்கு இன்னும் தூரமாய்தான் இருக்கிறோம். ஜெபம்பண்ணும்போது கிருபாசனத்தண்டையில் நாம் அவரைச் சந்திக்கிறோம். இதை நாம் உணர்ந்தாலும், உணராவிட்டாலும் சில சமயத்தில் அவர் சமுகத்திதால் இருக்கிறோம். ஜெபமானது தேவனுக்குக் கிட்டி சேருதல் என்பதை நாம் மறுக்கக்கூடாது. அடிக்கடி ஜெபம்பண்ணினால் அடிக்கடி அவரிடம் கிட்டி சேருவோம். இதற்காகவே அவர் இருக்கிறாரென்று விசுவாசிக்க வேண்டும். பிராயச்சித்த பலியை ஏற்றுக்கொண்டு அவர் வசனத்தை அதிலும் அவர் அருளின் வாக்குத்தத்தங்களை நம்ப வேண்டும். நமக்கு கேட்கிற விருப்பமும் வேண்டும். நமக்கு உள்ளபடி தேவையானவற்றையும் வாக்களிக்கிறார் அல்லவா?

நியாயமாய் கேட்கும்போது நிச்சயமாய் கிடைக்குமென்று கேட்க வேண்டும். இயேசுவின் நாமத்தையே தஞ்சமென்று பற்றிப் பிடிக்க வேண்டும். கேட்டது கிடைக்கும்வரை தொடர்ந்து கேட்கவேண்டும். அவர் சந்நிதியில் பிள்ளையைப்போலவும், பாவியைப்போல் பணிவோடும், அவரை அண்டினவர்கள்போல அடிக்கடி போக வேண்டும். சுத்தமான சாட்சியோடும், கோபமின்றியும், சந்தேகமின்றியும், இருதயத்தில் அக்கிரமத்தை பேணி வைக்காமல் போக வேண்டும். தனிமையிலும், குடும்பத்திலும், தேவாலயத்திலும், தெருவில் நடக்கும்போதும் அவரைக்கிட்டி சேருவாமாக. அவர் நம்மை அழைக்கிறார். புத்தி சொல்ல வா என்று அழைக்கிறார். அவர் சமூகத்தில் போவோமாக. அவர் அழைக்கும்போது போகாவிட்டால் அது பாவமாகும். நாமும் வருத்தப்படுவோம்.

கர்த்தாவே இரங்குவேன்,
கடைக் கண்ணால் பாருமேன்
பாவப் பேயைத் தொலைத்திடும்
உம்மைச் சேரச் செய்திடும்.

நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ

செப்டம்பர் 02

“நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ” யோனா 4:4

யோனா தேவனோடு வாக்குவாதம்பண்ணினான். இப்படி செய்யாதவன் யார்? யோனாவைப்போல நாம் வெளியே முறுமுறுக்கவில்லையென்றாலும் அவனைப்போல எரிச்சலடைகிறோம். கர்த்தர் செய்ததே சரியென்று சொல்பவர்கள் ஒருசிலரே. அவர் செய்கிற செயல்களைக் குறித்து சந்தோஷப்படுகிறவர் இன்னும் வெகு சிலரே. பலர் தேவனுடைய செயலை அவர் தம் இஷ்டம்படி செய்கிறார் என்று கோபமடைகிறார்கள். அதைக் குறித்து முறுமுறுப்பவர்கள் அநேகர். அவர் செயலைக் குறித்து முறுமுறுத்து அவர் பட்சபாதமுள்ளவரென்றும், அன்பற்றவரென்றும் நினைக்கிறார்கள்.

அன்பர்களே, நாம் அடிக்கடி தேவன்மேல் கோபம் கொள்கிறோம். முறுமுறுப்பிலும், வெறுப்பினாலும், இதை அடிக்கடி வெளிப்படுத்திவிடுகிறோம். சிலர் அவரோடு பேசவும் மனதில்லாமல் ஜெபம்பண்ணாமலும் இருந்து விடுகிறார். சிலர் தாங்கள் பெற்றுக்கொண்டதை அறிக்கையிட மனமற்று அவரைத் துதிக்காமல் போய் விடுகிறார்கள். நாம் இப்படி எரிச்சலாய் இருப்பது நல்லதா?? அளவற்ற ஞானமுள்ளவராய், எப்போதும் நம்மை நேசித்து நமது பேரில் ஆசீர்வாதங்களைப் பொழிகிற பிதாவின்மேல் நாம் கோபமாயிருக்கலாமா? நம்முடைய அக்கிரமங்களை மன்னித்து, நம்முடைய குறைவுகளை நீக்கி, குமாரனோடு ஐக்கியப்படுத்தி, பரம நன்மைகளால் ஆசீர்வதித்து வழிநடத்திய தேவன்மேல் எரிச்சலடையலாமோ? அவர் கொடுப்பதிலும், அவர் செய்வதிலும் சந்தோஷப்படாமல் இருப்பது பாவமாகும். நீ முறுமுறுத்து மனமடிவாகி எரிச்சல் அடைகிறது நல்லதோ?

நான் கொடிய பாவிதான்
மன்னிப்பளித்து இரட்சியும்
பாவ இச்சைக்கு என்னைக் காரும்
இருதயத்தைச் சுத்தமாக்கும்.

அவருக்குக் காத்துக்கொண்டிரு

பெப்ரவரி 07

“அவருக்குக் காத்துக்கொண்டிரு.” யோபு 35:14

உன் காலங்கள் அவர் கரத்தில் இருக்கிறது. உன் பேர் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அவர் உன் தேவனாயிருப்பேனென்று வாக்களித்திருக்கிறார். அவர் சொன்னபடியே செய்கிறவர். இவைகளை மறவாதே. நமக்கு தேவையான எந்த நன்மையானாலும் கொடுப்பேனென்று வாக்குப்பண்ணியிருக்கிறார். அவர் வாக்கு உறுதியும் நம்பிக்கையுமானது. அவைகளையே நம்பிக் கொண்டிரு. உன் இருதயம் பயப்படலாம். உன் மனம் திகைக்கலாம். உன் சத்துருக்கள் உன்னை நிந்திக்கலாம். ஆனால் உன் பாதைகளோ கர்த்தருக்கு மறைக்கப்படுவதில்லை. ஆகையால் அவரையே நம்பிக்காத்திரு.

ஆதிமுதல் அவர் வார்த்தை உண்மையாகவே இருக்கிறது. இதை அவரின் அடியவர்கள் பரீட்சித்து பார்த்திருக்கிறார்கள். உண்மைதான் அதன் கிரீடம். ஆதலால் நீ உறுதியாய் நம்பலாம். உன் நம்பிக்கையைப் பலப்படுத்து. உன் ஆறுதல் இன்னமாய் இருக்கட்டும். இப்பொழுதும் நீ குழந்தையைப்போல் கீழ்ப்படி. அவரின் மனமோ உன்னை நேசித்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை உனது தப்பிதங்களுக்கு, உன்னை அழிக்க ஒரு பட்டயத்தை பிடித்திருப்பாய். அவர் தோன்றினாலும் தோன்றலாம். அப்போது நீ அவர் என்னைக் கொன்றுப்போட்டாலும் அவுர்மேல் நம்பிக்கையாயிருப்பேன் என்று சொல்ல வேண்டும். அப்போது நீ காட்டின நம்பிக்கையின் நிமித்தம், உன்னை மேன்மைப்படுத்தி, திரண்ட ஐசுவரியமுள்ள மேலான தலத்திற்கு கொண்டுபோவார்.

கர்த்தாவே உமது வழிகள்
மிக ஞானமுள்ளவைகள்
கோணலான வழிகளெல்லாம்
உமதன்பினால் உண்டானவையே
ஆகையால் நான் நம்புவேன்
உம்சித்தம் என் பாக்யம் என்பேன்.

நான் உமது சத்தியத்திலே நடப்பேன்

செப்டம்பர் 20

“நான் உமது சத்தியத்திலே நடப்பேன்” சங். 86:11

தேவனுடைய சத்தியம் மனிதனுடைய விருப்பத்திற்கும் எண்ணங்களுக்கும், வழக்கத்திற்பும் மாறுபட்டே இருக்கும். நமக்கு விருப்பமில்லாததாயிருப்பினும், நன்மையைச் செய்ய அது நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. பயனுள்ள காரியங்களை நமக்குத் தெரிவிக்கிறது. ஆகையால், இந்த வசனத்தின்படி நாம் தீர்மானம்பண்ணுவது நல்லது. தேவனிடத்திலிருந்து வந்ததாகவே ஏற்றுக்கொள்வது. அதை மனப்பூர்வமாய் நம்புவது ஆகும். கிரியையில்லாத விசுவாசம் செத்தது. ஆகையால் தேவ வசனத்தின்படி செய்வதே சத்தியத்தின்படி நடப்பதாகும்.

ஒரு நல்ல கிறிஸ்தவன் உன் சித்தத்தின்படியே என்னை நடத்தும் என்று ஜெபிக்கிறான். உமது வழிகளில் என்றும் நடப்பேன் என்று தீர்மானிக்கிறான். தேவனுடைய சத்தியத்திலே நடந்தால் நமக்கு ஆனந்தம் கிடைக்கும். அது எப்பொழுதும் நமக்கு நற்செய்தியையும், ஆறுதலையும் கொண்டு வருகிறது. அது நமக்குக் கட்டளையாக மாத்திரமல்ல அன்பாகவும் வாழ்த்தாகவும் இருக்கிறது. நம்மைப் பரிசுத்தராகவும், பாக்கியவான்களாகவும் மாற்றுகிறது. நாம் சத்தியத்தை விசுவாசித்து, அதன்படி நடந்து அதை இருக்கும் வண்ணமாகவே அனுபவமாக்க வேண்டுமானால் அதை நம் இருதயத்தில் நிரப்ப வேண்டும். அதை மெய்யாகவே பகிரங்கமாக எங்கும் பிரசங்கிக்க வேண்டும். சத்தியத்தினால் நம்மைத் தினந்தோறும் அலங்கரிக்க வேண்டும். நாம் அழைக்கப்பட்ட அழைப்பிற்குத் தகுதியுள்ளவர்களாகப் பக்தியோடும், உத்தமத்தோடும் நடக்க வேண்டும். நமது நம்பிக்கையை எங்கும் பிரஸ்தாபிக்க வேண்டும். வாக்குத்தத்தங்களைப்பற்றிப் பிடித்துக் கொண்டு அவற்றின்படி நடக்க வேண்டும். நாம் வேத வசனத்தின்படி நடந்தால் நமக்குப் பயமில்லை. வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர்.

நல்ல போதகரே, நான்
நடக்கும் பாதை காட்டிடும்,
நீரே சத்திய மாதலால்
சத்தியவழியைக் காட்டிடும்.

கீழ்ப்படிகிற பிள்ளையாய் இருங்கள்

மார்ச் 03

“கீழ்ப்படிகிற பிள்ளையாய் இருங்கள்.” 1.பேதுரு 1:14

தேவன் என் தகப்பன், நான் அவரின் பிள்ளை என்று ஒவ்வொரு விசுவாசியும் அனுதினமும் பிரியத்தோடு உணரவேண்டும். அவர் ஒரு பிள்ளையைப்போல் அவனை நடத்துகிறார். என் பரமபிதா எனக்கு வேண்டியதெல்லாம் சுதந்தரித்து வைத்திருக்கிறார். பாவியான ஒருவன் பக்தனானபோது இயேசுவிடமிருந்து எல்லாம் கிடைக்கிறது. இயேசுவிலுள்ளதெல்லாம் அவனுக்காகதான். இயேசுவின் நிறைவிலிருந்து கிருபை மேல் கிருபையைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

நீயோ அவர் பிள்ளைப்போல் பிதாவின் சத்தத்திற்குச் செவிகொடுக்க வேண்டும். அவர் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அவர் சித்தத்திற்கு அடிபணிய வேண்டும். கீழ்ப்படிவதுதான் உன் கடமை. உனக்கு வேண்டியதெல்லாம் உன் பிதா தருவார். அவர் சொல்படி செய்வதுதான் உன் வேலை. பின்னால் நடக்கப்போவதைப்பற்றி கவலைப்படாதே. எந்த விஷயத்திலும் பிதாவின் சித்தம் மட்டும் தெரிந்து கொண்டால் அதுவே அவர் திட்டப்படி செய்ய சுலபமாயிருக்கும். உனக்கு இருக்கும் nரிய கௌரவம் தேவன் உனக்கு தகப்பனாயிருப்பதுதான். உன்னை சொல்லமுடியா அன்பினால் ஒருவர் நேசிக்கிறார். அதுவே உனக்குப் பாக்கியம். அவர் பாதம் அமர்ந்து காத்திருக்கும்போது இன்னும் உன்னை நேசிக்கும் பிதா, சகல ஞானத்திலும் அறிவிலும் வல்லமையாலும் நிறைந்த பிதா உனக்கு இருக்கிறார் என்று நினை. இதுவே உனது மகிழ்ச்சி. பிள்ளையைப்போல உன் மனதை அவருக்கு ஒப்புவி. உன் கவலைகளையெல்லாம் அவர் மேல் போட்டுவிடு. அப்போது உனக்கு ஆசீர்வாதமும், ஆறுதலும் நிச்சயமாய் கிடைக்கும். உனக்கு வேண்டியதெல்லாம் தாராளமாய்ப் பெற்றுக்கொள்வாய்.

கர்த்தாவே எனக்கிரங்கி
எனக்குத் தயை காட்டி
குறைவையெல்லாம் நீக்கி
என்மேல் நேசம் வைத்திடும்.

தேவனிடத்தில் சேருங்கள்

மார்ச் 13

“தேவனிடத்தில் சேருங்கள்.” யாக். 4:8

பாவமானது நம்மைத் தேவனைவிட்டு வெகுதூரம் கொண்டுபோய்விடும். அவிசுவாசம் நம்மை அங்கேயே நிறுத்தி வைத்துவிடும். ஆனால் கிருபையோ சிலுவையில் இரத்தத்தைக் கொண்டு நம்மைத் திரும்ப தேவனண்டைக்குக் கொண்டு வருகிறது. நாம் பாவம் செய்யும்போது தேவனைவிட்டு திரிந்தலைகிறோம். தேவனுக்குச் சமீபமாய் வரவேண்டும் என்பதே அவரது பிரியம். அவர் கிருபாசனத்தண்டையில் வீற்றிருக்கிறார். நமக்காகப் பரிந்து பேச இயேசுவானவர் சி;ம்மாசனத்துக்குமுன் நிற்று நம்மை அழைக்கிறார். தேவ சந்நிதியைக்காண இயேசுவின்மூலமாய் அவரின் நம்பிக்கை வைக்க நம்முடைய இருதயங்களை அவருக்கு முன்பாக ஊற்ற நாம் சிங்காசனத்தண்டைக்கு போகவேண்டும்.

நம்மைப் பயப்படுத்துகிற சகலத்தையும் நாம்விரும்புகிற சகலத்தையும் நமக்குத் தேவையான சகலத்தையும் அவருக்குச் சொல்ல, நமக்கு இருக்கிற எல்லாவற்றிற்காகவும், கடந்த காலத்தில் பெற்றுக்கொண்ட நன்மைக்காகவும், இனி வேண்டிய தேவைகளுக்காகவும் சிம்மாசனத்தண்டை சேர வேண்டும். நாம் கூச்சப்படாமல் பயபக்தியாய் சகலத்தையும் அவருக்கு அறிவிக்கலாம். தேவன் சித்தத்தை அறிந்துகொள்ள அவரின் அன்பை ருசிக்க, மனகவலை நீங்க, அவரை சொந்தமாக்கிக்கொள்ள, தேவ சமுகம் தேடி, அவரிடத்தில் வந்து சேருங்கள். அவரும் உங்களுக்குச் சமீபமாய் வருவார்.

இயேசுவே வழியாம்
அவரால் மோட்சம் சேர்வோம்
அவரால் பிதாவின் சமுகம்
கண்டென்றும் ஆனந்திப்போம்.

Popular Posts

My Favorites

அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்

யூலை 03 "அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்." மீகா 7:18 தேவனை விரோதிப்பவர்கள்மேல்தான் தேவ கோபம் வரும். தேவனுடைய கோபம் யார்மேல் வருகிறதோ அவர்களுடைய நிலை மகா வருத்தமானது. கொஞ்ச காலம் அவருடைய ஜனங்களுக்கு விரோதமாகவும் அது...