தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 3

மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்?

அக்டோபர் 22

“மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்?” பிர. 6:12

உலகக்காரியங்களில் மூழ்கியிருப்போருக்கு இக்கேள்வி வருத்தத்தைக் கொடுக்கும். தேவனுடைய செயல்கள்தான், இதற்கும் பதில் அளிக்கக்கூடும். சில நேரங்களில் வாழ்வும், சில நேரங்களில் தாழ்வும் நலமானவை. சில நேரங்களில் உடல் நலம் நல்லது. சில நேரங்களில் உடல் நலக்குறைவும் நலமாகும். பூமியிலே சில நேரங்களில் காரியம் கைகூடாமையும், சில நேரங்களில் கை கூடுதலும் நலமாயிருக்கும். நாம் அதிகமாக விரும்பும் காரியங்தான் நமக்குத் தீங்கு ஆகக்கூடும். தேவன் நம்மைத் தடுத்து, நம்மைவிட்டு எடுத்து விடும் காரியம் நமக்கு நன்மையாக இராது.

நமக்கிருப்பது எதுவோ அதை நாம் சரியானபடி பயன்படுத்திக் கர்த்தருடைய மகிமைக்கு அதைப் பயன்படுத்துவோமானால், அது நன்மையாகவே இருக்கும். நமக்கு நாம் மகிமை தேடாமல், தேவனுக்கு மகிமையைத் தேடும்பொழுது அது நன்மையே ஆகும். அன்பானவர்களே நீங்கள் உங்களுக்கு இல்லாததொன்றைத் தேடி அதையே நாடுவீர்களானால் அது தீமையாகவே முடியும். தேவ சித்தத்திற்கு உங்களை ஒப்புக்கொடுத்து, அவருடைய வசனத்தின்படி செயலாற்றுவதே நன்மையைத் தரும். தினமும் விசுவாசத்தினால் இயேசுவோடு ஜெபம்பண்ணி, தேவனோடு சஞ்சரித்து, பரலோகத்தில் உங்களுக்குச் செல்வங்களைச் சேமித்து வைத்து, நம்மைச் சூழ்ந்த யாவருக்கும் நன்மை செய்ய முயற்சிப்பதே மிகவும் நல்லது. இவ்வுலகில் நன்மையைத் தேடுவதில் கவனமாய் இருப்போம். இந்த உயிர் இருக்கும்பொழுதே தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருவதை நாடித்தேடுவோம்.

கர்த்தர் என் தந்தை, எனக்கு
நலமானதையே அவர் தருகிறார்
இவ்வுலகை விட்டுச் செல்கையில்
தருவார்மோட்ச பாக்கியம்.

ஏன் சந்தேகப்பட்டாய்

செப்டம்பர் 06

“ஏன் சந்தேகப்பட்டாய்” மத். 14:31

இந்த வார்த்தை பேதுருவைப் பார்த்து கேட்கபட்டதென்றாலும் நமக்கும் ஏற்றதே. நம்மில் சந்தேகப்படாதவர், அடிக்கடி சந்தேகப்படாதவர் யார்? சந்தேகத்தை பாவம் என்று எல்லாருமே உணருகிறார்களா? ஆம், அது பாவம்தான். நம்முடைய சந்தேகங்கள் எல்லாமே அவிசுவாசத்திலிருந்து உண்டானவைகள்தான். இது ஆண்டவரின் அன்பு, உத்தமம், நீதி இவைகளின் பேரில் சந்தேகிக்கச் செய்கிறது. அவரின் வசனத்தைவிட வேறு ஏதும் தெளிவாய் பேச முடியுமா? அவர் வார்த்தையில் நம்முடைய நம்பிக்கை, சந்தோஷம், சமாதானம், இவைகளைக் காட்டிலும், திடமான அஸ்திபாரம் வேறு ஏதாகிலும் உண்டா?

தம்மிடத்தில் வருகிற எந்தப் பாவியையும் ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிப்பேன் என்று வாக்களிக்கவில்லையா? எந்தப் பரிசுத்தவானையும் அரவணைத்துப் பாதுகாத்து நடத்துவேன் என்று சொல்லவில்லையா? தம்முடைய மக்கள் செய்யும் விண்ணப்பங்களுக்கு உத்தரவு அருளுகிறவிதத்தை அவருடைய வசனத்தின்மூலமும், வேதாகமத்தின் சரித்திரங்கள்மூலமும் நடைமுறையில் காட்டவில்லையா? அவர் எப்போதாவது நம்மை மோசம் போக்கினதுண்டா? அவர் பரியாசம்பண்ணப்படத்தக்கவரா? அவர் மாறாதவர் அல்லவா? தேவ பிள்ளையே, உன் சந்தேகத்திற்குச் சாக்கு சொல்லாதே. சந்தேகிப்பது பாவம் என்பதை அறிக்கையிட்டு எப்பொழுதும் முழு இருதயத்தோடும் அவரை நம்பக் கிருபை தரவேண்டும் என்று ஜெபித்து கேள். சந்தேகம் ஆத்துமாவைப் பெலவீனப்படுத்தும், ஆவிக்கு ஆயாசம் உண்டாக்கும் சந்தேகம், கீழ்ப்படிதல் தடுத்துப்போடும். ஆகவே, அதை எதிர்த்து போராடு.

எப்பக்கம் எனக்குச்
சத்துருக்கள் மிகுதி
அபயம் என்ற தேவவாக்கு
இருப்பது என்றும் உறுதி.

மேன்மையான பரம தேசத்தையே விரும்பினார்கள்

மார்ச் 21

“மேன்மையான பரம தேசத்தையே விரும்பினார்கள்.” எபி. 11:16

மேலான தன்மையே அல்ல மேலான நிலைமையை அல்ல. மேலான தேசத்தையே விரும்பினார்கள். முற்பிதாக்கள் விரும்பினது இதுதான். அப்போஸ்தலரும் இதையே நாடினார்கள். எந்த உண்மை கிறிஸ்தவனும் இதைத்தான் நாடுவான். நாமும் மேலான பரம தேசத்தை நாடுகிறோமா? ஒரு நித்திய தேசம் நமக்குண்டு. அது வேதத்தில் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. இயேசுவை விசுவாசித்து மரண பரியந்தம் உண்மையாயிருக்கிற யாவருக்கும் அது வருத்தம் இல்லை. துன்பம் இல்லை, கண்ணீர் இல்லை, கவலை இல்லை. அது இளைப்பாறும் இடம். அந்த மேல் வீட்டில் அன்பு நிறைந்திருக்கும். சத்துருக்கள் இல்லை. பாவம் செய்யும் மனிதனும் மாய்மாலம் நிறைந்த கிறிஸ்தவர்களும் அங்கே இல்லை. பொறாமையுள்ள சகோதரர் அங்கு இல்லை.

அது பூரண அன்பும் இடைவிடாத துதியும் நிறைந்த ஓரிடம். அங்கே எல்லாரும் தேவனை நேசிப்பார்கள், தேவன் எல்லாரையும் நேசிப்பார். ஒவ்வொருவரும் பிறரை நேசிக்கும் ஸ்தலம். அது பரிசுத்தம் நிறைந்த வீடு. அங்கே பாவமில்லாததால் ஒவ்வொருவரும் இயேசுவைப்போலவே இருப்பார்கள். எங்கும் எப்போதும் மகிழ்ச்சிப் பரவசம், பரிசுத்தம், கலக்கமற்ற ஆறுதல்தான் அங்கு உண்டு. அங்கே இயேசுவை முகமுகமாய் பார்க்கலாம். அங்கே தேவன் தமது மகிமையை வெளிப்படையாகக் காண்பிக்கிறார். நமது ஆசைகளெல்லாம் நிறைவேறும் இடம் அது. எல்லா ஆத்துமாவும் மகிமையின் நிறைவுப்பெற்று பொங்கி வழியும். அதுN நமது நித்திய உண்மை தேசம். ஆத்துமாவே நீ அதை வாஞ்சிக்கிறாயா? அதுவே உனக்கு போதும் என்று நினைக்கிறாயா? கர்த்தருடைய ஜனங்களுக்கு இருக்கும் இளைப்பாறுதல் அதுவே.

வரும் மகிழ்ச்சி கண்டு
பயம் அகற்றுவோம்
தேவன் நம் சொந்தமென்று
கண்ணீரைத் துடைப்போம்.

உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது

யூன் 11

“உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.” சங்.94:19

நாம் அடிக்கடி வருத்தப்படுகிறோம். நம்முடைய நினைவுகள் கலங்கி சோர்ந்துப் போகிறது. நம் தேவன் இப்படிப்பட்ட நேரங்களில் நமக்கு ஆறுதல் அளிக்க அதிக கவனமுடையவராயிருக்கிறார். நிறைவான, எக்காலத்திற்கும் ஏற்ற ஆறுதல் அவரிடத்தில் உண்டு. அருமை வாக்குத்தத்தங்களினாலும், கிறிஸ்துவின் பூரண கிரியைகளிலும், நித்திய உடன்படிக்கையினாலும், பாவம், துன்பம், துக்கம் இவைகளினின்று முற்றிலும் என்றைக்கும் விடுதலையாவோம் என்ற நம்பிக்கையிலும் நமக்கு எவ்வளவு ஆறுதல் அடங்கியிருக்கிறது.

நமக்கு நாமே ஆறுதல்படுத்த அற்றவர்களாய் இருக்கிறோம். நம்முடைய தேவனிடத்தில் நம்மைப் பாக்கியவான்களாக்கத் தக்க தகுதி இருக்கிறது. நமது சொந்த நினைவுகள்கூட அடிக்கடி நமது துக்கத்திற்குக் காரணம். நம்முடைய தேவனைப்பற்றிய நினைவுகளோ, அன்பு, சமாதானம், சந்தோஷம் இவைகளால் நிறைந்திருக்கிறது. அவர் எக்காலத்திலும் நம்மை நேசிக்கும் சிநேகிதன். கண்ணீரைத் துடைக்க நமக்காகப் பிறந்த சகோதரன் நமக்கிருப்பது எத்தனை ஆறுதல். இவர் எப்போதும் பிதாவண்டை பரிந்து பேசும் மத்தியஸ்தர். இதனால் நாம் தேவனோடு ஐக்கியப்பட்டிருக்கிறோம். நம்முடைய ஒவ்வொரு வருத்தங்களில் வருத்தப்பட்டு தம்மைப்போல் நம்மை முற்றிலும் மாற்றி, தாம் இருக்கும் இடத்தில் நம்மை சேர்க்கத்தக்கதான அவ்வளவு நெருங்கிய ஐக்கியம் உண்டென்று அறிவது எவ்வளவு ஆறுதல். இவர்தான் நமக்குத் தலையானவர். நாம் அவருக்குச் சரீரம். கிறிஸ்துவும் அவர் சபையும் ஒன்று என்ற சத்தியம் எத்தனை அருமையானது. எத்தனை பரிசுத்த ஆறுதல் நிறைந்தது. அவநம்பிக்கைக்கும் மனமடிவுக்கும் எத்தனை நல்ல மருந்து. உள்ளும் புறமும் எல்லாம் துக்கமும், துயரமும் வியாகுலமுமாய் இருக்கும்போது, அவருடைய ஆறுதல்களைப்பற்றி ஜீவனம் பண்ணுவோமாக.

துயரம் பெருகும் போதும்
துக்கம் நிறையும் போதும்
உமதாறுதல் அணுகி,
என்னைத் தேற்றும் அப்போது.

அற்பமான ஆரம்பத்தின் நாள்

நவம்பர் 29

“அற்பமான ஆரம்பத்தின் நாள்” சக. 4:10

தேவன் சிலரிடத்தில் அதிகக் கிரியைகள் நடப்பித்தாலும் அவை வெளியே தெரிவதில்லை. அவர்களின் விசுவாசம் பெலவீனமானது. அவர்களுடைய வேத வசன அறிவு மிகவும் குறைவுதான். அவர்களுடைய அன்பு ஆழமானதல்ல. தேவனுக்கு செய்ய வேண்டிய எதையும் அவர்கள் வெளிப்படையாகச் செய்வதில்லை. மனம் திறந்து பேசவும் மாட்டார்கள். எப்பொழுதும் எந்தப் பாவத்திற்காவது அடிமைப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் இப்படிப்பட்டவர்களும் கர்த்தருடைய பிள்ளைகள்தான். வெறுமையான உலகத்தையும், பாவத்தையும் வெறுத்து கிறிஸ்து இயேசுவின் அருமை பெருமைகளை அறிந்துக் கொள்ளக் கூடிய அறிவு அவர்களுக்கிருக்கிறது. அவர்களும் அவருடைய அன்பை ருசிக்க ஆவல் உள்ளவர்கள்தான். எல்லாவற்றையும், சிறப்பாக வேதனையும் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனாலும் நாங்கள் கிறிஸ்துவில் அன்புகூருகிறோம் என்று வெளிப்படையாகக் கூறும் தைரியம் அவர்களுக்கு இல்லை. எனினும் மறைவான அவரை அவர்கள் நேசிக்கிறார்கள். அவர்களுக்கு பயங்கள் அதிகமாயிருப்பதால் மகிழ்ச்சி குறைவாயிருக்கிறது.

அவர்கள் ஜெபிக்காவிடில் தேவ சமுகத்தில் நாடாவிடிலும் பிழைக்கமாட்டார்கள். கிறிஸ்துவோடு ஐக்கியப்படுவதில் வாஞ்சையுள்ளவர்களான கர்த்தரின் பிள்ளைகளைப்போல் பாக்கியசாலிகள் யாருமில்லை. அவ்வாறானவர்களின் விஷயத்தில்தான் அற்பமான ஆரம்பத்தின் நாள் காணப்படும். அந்த நாளில் இரட்சிப்புக்கானவை உண்டு. சிறிய விதைகளிலிருந்துதான் பெரிய மரங்கள் வளருவதுபோலத்தான் இதுவும் அற்பமான ஆரம்பத்தின் நாளைத் தாழ்வாக எண்ணாதே. ஆண்டவர் அதைக் குறைவாக மதிப்பதில்லை. விருப்பத்துடன் ஏற்பார். ஆகவே எவருடைய அற்கமான ஆரம்ப நாளையும் நாம் தாழ்வாக எண்ணலாகாது.

சிறு மழைத்தூறல் பெரும் வெள்ளமாம்,
சிறிதான பொறியும் பெரு நெருப்பாம்
சிறிதான ஆரம்பம் விசுவாசியாக்கும்
சிறது எதையும் அசட்டை செய்யாதே.

உமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்

ஜனவரி 29

“உமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்.”  சங். 119:11

பழைய உடன்படிக்கையின் பலகைகள் பெட்டியில் வைத்து பரிசுத்த ஸ்தலத்தில் பத்திரப்படுத்தப்பட்டது. புது உடன்படிக்கையோடு விசுவாசிகளின் இருதயத்தில் வைத்து பத்திரப்படுத்தப்பட வேண்டும். தினசரி பாரத்தோடு கூடிய ஜெபத்திலும் தியானத்திலும் நாம் தேவனுடைய சுத்த வசனத்தை அறிந்து அனுபவித்து, அதைப் பத்திரப்படுத்தக் பார்க்க வேண்டும். இது தினசரி போஜனத்துக்காக நாம் சேர்க்க வேண்டிய வேலைக்குச் சட்டம். நமது நம்பக்கைக்கு ஆதாரமாகிய கிருபைகளையும், விலையேறப் பெற்ற வாக்குத்தத்தங்களையும் நாம் பத்திரப்படுத்த வேண்டும்.

நமது இருதயத்தில் பத்திரப்படுத்தினால் இந்த விலையேறப் பெற்ற பொக்கிஷத்தை ஒருவனும் நம்மை விட்டு எடுத்துக் கொள்ளமாட்டான். நமக்கு தேவைப்படும்போது நாம் அதைத் தேட வேண்டியதில்லை. ஆகையால் அதன் அருமையை அறிந்து அதிலுள்ளதை மதித்து அதை ஆராய்ந்துப் பார்த்து, தியானஞ் செய்து தினசரி ஆகாரமாய் அதை உள்கொள்ள வேண்டும். நமது மனதில் பத்திரப்படுத்தாமல்விட்டால் நாம் பரிசுத்தமடைய மாட்டோம். நம்முடைய வாழ்வில் கனிகளும் இருக்காது. இருதயத்தில் இருந்தால் தான் நடக்கையில் தெரியும். நாம் அனைவரும் வாசிக்கும்படியான நிருபங்களாயிருக்கும்படி தேவன் தமது பிரமாணங்களை நமது மனிதில் எழுத வேண்டுமென்று தினமும் ஜெபிப்போமாக.

தேவ வாக்கு மதுரம்
அதன் போதகம் சத்தியம்
அறிவு அதனால் வரும்
ஆறுதலும் தரும்.

எந்நாளும் உயிரோடிருக்க விரும்வேன்

நவம்பர் 25

“எந்நாளும் உயிரோடிருக்க விரும்பேன்” யோபு 7: 16

ஆண்டவருக்கு சித்தமானவரைக்கும் நாம் உயிரோடிருப்பது நமது கடமை. அவருடைய மகிமைக்காக எவ்வளவுகாலம் வாழ்கிறோமோ, அவ்வளவு காலம்வரை அவர் நம்மை இப்பூவுலகில் வைத்திருப்பார். இதை நாம் அறிந்திருந்தும் துன்பங்களையும் சோதனைகளையும் கண்டு பயந்து, சோர்வடைந்து, நாம் மரணத்தை விரும்புகிறோம். துன்பப்படுபவர்கள்தான் ஜீவனை வெறுத்து உயிர் வாழ விரும்பவில்லை. என்பர். நாமும் இவ்வாறு கூறியிருக்கிறோம். நாம் உயிரோடிருக்குமளவும் பாவம் செய்யத் தூண்டப்படுவோம். அதனால் வருத்தம் அடைவோம்.

தன் சொந்த நாட்டை விட்டுப் பிற நாட்டில் அந்நியனாகப் குடியிருக்க யார்த்தான் விரும்புவார்? நம்முடைய வாழ்க்கையின் நிலையும் இதுதான். இப்பூமி நமது நிரந்தர உறைவிடமில்லை. நெடுநாள்களும் நாம் வாழப்போவதில்லை. இவ்வுலகில் நாம் எவ்வளவு காலம் வாழப்போகிறோம் என்று கவலை கொள்ளாமல் பயனுள்ளவர்களாக, மகிழ்ச்சியுடள் நமது காலங்களைச் செலவிடுவோமாக. ஆத்துமாக்களுடைய நன்மைக்கென்று, சபையின் வளர்ச்சிக்கென்று, கிறிஸ்து நாதரின் மகிமைக்கென்று, நாம் பாவத்தை வெறுத்து சாத்தானை எதிர்த்து நமது வாழ்க்கையை நடத்துவோம். நித்திய ஜீவன் நமக்காகக் காத்திருக்கிறது. அப்படி நாம் வாழ்ந்தால் வாழ்க்கையின் மன நிறைவடைவோம். மகிழ்ச்சியாய் வாழ்வோம். கிறிஸ்துவின் மேல் சார்ந்து அவருக்காக, கூடியமட்டும் அவரைப்போல வாழ்வோம். அவருடைய மகிமையில் வளர்ந்து, அவருடைய பிரகாசத்தைப் பெற்றுக்கொள்ள அவரோடு சஞ்சரிப்போம்.

பாவம் செய்தே வாழ்ந்திடேன்
பாவம் விட்டுப் பரிசுத்தமாக வாழ
பரிசுத்தரே உம்திரு தயவால்
பாவியேன் முயல்வேன் என்றும்.

தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு

யூன் 03

“தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு….” 1.கொரி. 15:28

யோகோவா எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய் இருக்கிறார். தமது சகல வழிகளிலும் கிரியைகளிலும் தாம் மகிமைப்படுவதே அவர் நோக்கம். இரட்சண்ய ஒழுங்கில் அவர்தான் சமஸ்தம். அந்த ஒழுங்கு நித்தியத்தில் அளவற்ற ஞானத்தால் ஏற்படுத்தப்பட்டு, மகாவல்லமையால் நடத்தப்பட்டு வருகிறது. நாம் இரட்சிப்புக்கென்று தெரிந்துக்கொள்ளப்பட்டோமெனில் அது இயேசு கிறிஸ்துவினால் தேவனுக்குள் ஆயிற்று. நாம் இயேசுவுக்குச் சொந்தமாக்கப்பட்டோமெனில் அதைச் செய்தவர் பிதா. நித்திய ஜீவனுக்கென்றுக் குறிக்கப்பட்டோமெனில் அது உன்னத தேவனின் செய்கை. எல்லா பரம ஆசீர்வாதத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோமெனில் அது இரக்கங்களின் பிதாவால் அப்படியாயிற்று. கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்கப்பட்டோமெனில் அவர் அப்படிச் செய்ய பிதாவினால் முன் குறிக்கப்பட்டார்.

நாம் உயிர்ப்பிக்கப்பட்டோமெனில் அது தேவனால் ஆயிற்று. நாம் தேவனால் போதிக்கப்பட்டோமெனில் அதுவும் தேவனால் ஆயிற்று. நமக்கு விசுவாசமும் மறுபிறப்பும் கிடைக்கிறதா? அதுவும் தேவனுடைய சுத்த ஈவு. நாம் சாத்தானை மேற்கொள்ளுகிறோமா? சமாதானத்தின்தேவன் அவனை நம்முடைய கால்களின் கீழே நசுக்கினபடியால் அப்படிச் செய்கிறோம். நாம் அதிகம் உழைக்கிறோமா? அது நமக்குள் வல்லமையாய் கிரியை செய்கிற அவருடைய சத்துவத்தினால் ஆயிற்று. நாம் பரிசுத்தராய் இருக்கிறோமா? அது தேவ கிருபைதான். நம்முடைய சத்துருக்கள் யாவரையும் மேற்கொள்கிறோமெனில் அது அவர்மூலம்தான். இவ்வுலகில் அவர்தான் சர்வவல்லவர். நாம் மோட்சம் சேர்ந்து வாழப்போகிறதும் அவரால்தான். தேவ நேசமும், நேசத்தின் தேவனுமே நமது நித்திய ஆனந்தத்திற்குக் காரணம். என்றுமுள்ள நிறைவான இரட்சிப்பில் தேவன்தான் சர்வவல்லவர்.

தேவனை அறியப்பார்
அவர் தன்மையை தியானி
நீதி அன்பு உள்ளவர்
மகா மகிமை நிறைந்தவர்.

கிறிஸ்துவின் அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது

ஏப்ரல் 17

“கிறிஸ்துவின் அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது” 2.கொரி. 5:14

நேசிக்கிறவர்களுடைய குணத்துக்கும் தன்மைக்கும் தக்கபடியே அவர்களின் நேசமும் இருக்கும். இயேசு கிறிஸ்து நிறைவுள்ளவரானபடியால் மேலான குணங்கள் எல்லாம் அவரிடத்தில் இருந்தது. அவருடைய அன்பு அதிசயமானது, மகிமையானது. அதில் பாவிகளுக்காக உருகும் உருக்கமும் நீதிமான்களுக்கா மகிழும் மகிழ்ச்சியும் இருக்கிறது. பிதா அவரை நேசிக்கிறதுபோலவே நம்மை அவர் நேசிக்கிறார். பிதா அவர்மேல் வைக்கும் அன்பு எவ்வளவு அதிகமென்று நமக்குத் தெரியாததுப்போலவே அவர் நம்மேல் வைக்கும் அன்பின் அளவு தெரிந்துக்கொள்ள முடியாது.

அன்பு அவர் இருதயத்தில் வாசம்பண்ணி அவர் கண்களில் விளங்கி, தமது கைகளினால் கிரியை செய்து, அவர் நாவில் பேசி அவரால் சகலத்தையும் சம்பாதிக்கிறது. இயேசு எந்த நிலைமையும் தாழ்வாக எண்ணவில்லை. எந்தச் செயலையும் கேவலமாய் நினைக்கவில்லை. எந்தக் குறைவையும் பார்த்துவிட்டுப் போகவில்லை. எந்த ஈவையும் பெரியதாக எண்ணவில்லை. எந்தத் துன்பத்தையும் சகிக்கக் கூடாதென்று சொல்லவில்லை. தமது ஜனத்தின் மத்தியில் கண்ட எந்த நன்மையையும் அற்பமாய் எண்ணவில்லை. அவர்களுக்கு நன்மை செய்ய எந்தப் பேதமும் பார்க்கவில்லை. கிறிஸ்துவின் அன்பு, சொல்லுக்கும் நினைவுக்கும் அடங்காதது. இந்த அன்பால் ஏவப்பட்டு நான் அப்போஸ்தலர்கள் உழைத்தார்கள். துன்பத்தைச் சகித்தார்கள். இரத்த சாட்சிகளாய் மரித்தார்கள். கிறிஸ்துவின் அன்பை நாம் உணருவோமானால் நம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்து சகலத்தையும் வீணென்று தள்ளுவோம். அவருக்காக எதையும் சகிக்க, உழைக்க, மரிக்க கொடுக்க அவரின் அன்பே நன்மை ஏவிவிடுகிறது. கிறிஸ்துவின் அன்பு ஜாக்கிரதைக்கும், வைராக்கியத்துக்கும், உதாரகுணத்துக்கும் உன்னை ஏவி விடுகிறதா?

பாவம் விட்டொழிக்க
கிறிஸ்துவின் அன்பு ஏவுது
அவருக்கு என்னை ஒப்புவிக்க
அது என்னை நெருக்குது.

தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்

யூன் 18

“தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்.” யோபு 15:4

பக்தன் யோபுக்கு, விரோதமாகச் சொல்லப்பட்ட இந்த வார்த்தை, நம்மில் அநேகருக்கு விரோதமாகவும் சொல்லப்படலாம். ஜெபமானது விசேஷித்த சிலாக்கியமாக எண்ணப்பட்டு, புத்திரசுவிகார ஆவியினால் அந்தச் சிலாக்கியத்தை அனுபவித்தாலும் நாம் இந்த உலக சிந்தைக்கு இடங்கொடுத்தால் அது இன்பமான காரியமாயிராமல் பாரமான கடமையாய் விடும். நாம் வெறுப்பு உள்ளவர்களாய் குளிர்ந்து உயிரற்றுப்போகிறதினால் கர்த்தரை விட்டு தூர விலகிப் போகிறோம். சரியானபடி இவை நம்மை அவர் சமுகம் கொண்டுப்போக வேண்டும்.

தேவ சமுகத்தில் நம்மை வழிநடத்த, நல்ல இருதயம்வேண்டும். நல்ல நேரம் வரட்டும், ஏற்ற சமயம் கிடைக்கட்டுமென்று இல்லாமல் சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவர் சமுகம் தேடி போக வேண்டும். ஜெபம் குறையும்போது நாம் ஆவியின் சிந்தை உடையவர்களாய் இருந்தாலும் சீக்கிரம் குளிர்ந்து கவலையற்று பெலனற்றுப்போவோம். பாவம் நமக்குள் பெலன்கொண்டு நற்குணங்கள் குறைந்து, ஜெபத்தியானம் குறைந்து, தேவ சமாதானம் கலைந்துப்போகும். நம் ஆசைகள் மாம்சத்துக்கு உரியவைகளாகும். ஆகவே மெய்மார்க்கம் வாடிவதங்கி, அழிந்துப்போகிற உலக பொருளை பெரிதென்றெண்ணி, கிருபையின் எத்தனங்கள் பலனற்றதாகி, சாத்தான் நம்மேல் வெற்றி அடைவான். ஜெபத்தியானத்தைக் குறைப்பது வேத வசனத்துக்கு நேர் விரோதமானதாகும். அதனால் சாத்தானுக்கு இடங்கொடுத்து, பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்துவதால், எல்லாம் கேடாய் முடியும்.

ஜெபியாதவனுக்கு
மகிழ்ச்சி ஏது?
கேளாதவனுக்கு
கிடைப்பதெப்படி?

Popular Posts

My Favorites

நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவர்

அக்டோபர் 27 "நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவர்" சங். 136:23 இயற்கையாகவே நாம் மிகவும் கீழான நிலையில் இருக்கிறோம். நம் நிலை தாழ்வானது. சுயாதீனமற்றவர்கள் நாம். பிசாசுக்குக் கீழ்ப்படிந்தவர்கள். அக்கிரமங்களுக்கும், பாவத்திற்கும் அடிமைகள். கலகக்காரரோடும், துரோகிகளோடும் ஐக்கியமானவர்கள்....