ஜனவரி

முகப்பு தினதியானம் ஜனவரி

என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்

ஜனவரி 13

“என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்” மாற்கு 9:24

நம்முடைய விசுவாசம் பலவீனமுள்ளது. அவிசுவாசமோ மிகவும் பலமுள்ளது. தேவன் சொல்வதை நம்பாமல்போவது பாவத்தின் இயல்பு. வேத வாக்கியங்களை ஒரு கிறிஸ்தவன் முற்றிலும் நம்புகிறது நல்லது. சில வேளைகளில் தேவன் சொல்கிறது மிகவும் நல்லதாயிருக்கும்போது அது உண்மைதானோவென்று சந்தேகிக்க வேண்டியதாயிருக்கிறது. நாம் செய்த பாவங்களை நினைத்து, இவ்வளவு பெரிய மகிமையான காரியங்கள் நமக்குக் கிடைக்குமோவென்று சந்தேகம் கொள்ளுகிறோம். வேதம் சொல்லுகிறபடி, நல்ல தேவன் பெரிய பாவிக்கு பெரிய நன்மைகளை வாக்களிக்கிறார் என்று நம்புவது சுலபமல்ல. நாம் அவைகளை உறுதியாய் நம்பி, நமக்குச் சொந்தமாக்கி கொண்டு, நமக்குரியதாகச் சொல்லி ஜெபிக்கிறதும் அவ்வளவு எளிதல்ல. எங்கே துணிகரத்துக்கு இடங் கொடுக்கிறோமோ என்று பயந்து அவிசுவாசத்துக்குள்ளாகி விடுகிறோம். சாத்தான் சொல்வதைக் கேட்டு சந்தேகத்திற்கும் பயத்திற்கும் இடம் கொடுத்து விடுகிறோம். நான் சத்தியத்தை சொன்னால் ஏன் நம்புவதில்லையென இரட்சகர் கேட்கிறார். வாக்குத்தத்தம் உண்மைதானா? அது பாவிகளுக்குரியதா? கிருபையினின்று அது பிறந்திருக்கிறா? தேவ அன்பும் இரக்கமும் மேன்மை அடைய அது நமக்குக் கொடுக்கப்பட்டதா?

அப்படியானால் தேவ வார்த்தைகளை நம்பி பற்றிக்கொள்ளவும், தேவன் சொன்னபடியே செய்வாரென விசுவாசிக்கவும் வேண்டும். பாவங்களை நாம் எங்கே கொண்டுபோட வேண்டியதோ, அங்கே நம்முடைய அவிசுவாசத்தையும் கொண்டு போடவேண்டும். அவ்வாறு செய்ய முடியாவிடில் இயேசுவிடம்தான் கொண்டு போகவேண்டும். அதை அவரிடம் அறிக்கையிட்டு சீஷர்களைப்போல் ‘கர்த்தாவே எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும்’ என்று கெஞ்சுவோமாக. அல்லது மேலே அந்த மனிதன் சொன்னதுபோல, ‘என் அவிசுவாசம் நீங்கும்படி உதவி செய்யும்’ என்று கேட்போம்.

பிழைகளெல்லாம் மன்னித்திரே
விசுவாசிக்க செய்யுமே
உம்முடையவன் என்று சொல்லி
முத்திரை என்மேல் வையுமே

கண்மணிபோல் என்னைக் காத்தருளும்

ஜனவரி 22

கண்மணிபோல் என்னைக் காத்தருளும்.”  சங். 17:8

இன்றொரு நாளும் கர்த்தர் நம்மைக் காத்தபடியினால் அவரின் உத்தம நேசத்தை இன்று நாம் அறிக்கையிடவேண்டும். கடந்த காலமெல்லாம் அவர் நம்மைப் பட்சமாய்க் காத்திட்டதை அறிக்கை செய்து இனிவருங்காலங்களின் தேவைக்கும் கிருபைக்கும் வேண்டிக்கொள்ளவேண்டும். இந்த ஜெபம் மிகவும் முக்கியமானது. தேவனே நீர் சர்வ வல்லவரும் சர்வஞானமும் உடையவருமானபடியால் என்னைக் காத்தருளும். என்னைச் சத்துருக்கள் சூழ வரும்போதும், எப்பக்கத்திலிருந்தும் நாச மோசங்கள் வரும்போதும் என்னைக் காத்தருளும். நானோ சிறகு முளைக்கிற பெலத்தில் காத்துக் கொள்ளும். நான் விழுந்து வீடுவேனோவென்று பயப்படுகிறேன். உம்மையன்றி வேறு யாருமில்லை எனக்கு. கண்ணின் வருவிழிப்போல் என்னைக் கருத்தாய் காத்தருளும். பிரயோஜனமும், அலங்காரமுமாய் வாழ என்னைக் காத்தருளும்.

நான் உமது சமுகத்தில் விழித்துக்கொண்டு ஆசீர்வாதங்களை அனுபவிக்கவும் தலையாகிய கிறிஸ்துவுக்குள் வளரவும், என்னைக் காத்தருளும். நானும் உலகத்தாரைப்போல பாவத்தில் விழாமலும் உம்மைவிட்டு வழுவிப்போகாமல் இருக்கவும் என்னைக் காத்தருளும். ஆவிக்குரிய வாழ்வில் குளிர்ந்துப்போய் விடுகிறார்கள். நானும் விழக்கூடியவன். ஆகையால் என்னைக் காத்தருளும். கர்த்தர் என்னைக் காக்கிறவர். கர்த்தர் என் வலது பக்கத்தில் எனக்கு நிழலாயிருக்கிறார். கர்த்தர் என் போக்கையும் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்கும் காப்பார் என்று தைரியமாய் சொல்வோம். தேவன் காக்கிற விதங்குளை நாம் உணர்ந்துகொள்வோமாக.

கண் மூடாமல் விழித்து
காக்கிற தேவனே
எந்தன் ஆத்துமாவை
கண்ணிகளுக்கெல்லாம் தப்புவியுமாக.

கர்த்தரில் அன்பு கூறுகிறவர்களோ தீமையை வெறுத்துவிடுங்கள்

ஜனவரி 18

“கர்த்தரில் அன்பு கூறுகிறவர்களோ தீமையை வெறுத்துவிடுங்கள்.” சங்கீதம் 97:10

தெளிவான கடமைகளைக் குறித்து நமக்குப் புத்தி சொல்வது அவசியந்தான். ஏனென்றால் சில வேளைகளில் நாம் அவைகளை மறந்துபோகிறோம். அடிக்கடி கவலையுற்று வெதுவெதுப்பான சிந்தனைகளுக்கு இடங்கொடுத்து விடுகிறோம். நாம் கர்த்தரை நேசிப்பது உண்மையானால் அவரின் ஜனங்ளை நேசிப்போம். அவருடைய நியமங்களையும் அவருடைய சுவிசேஷத்தையும் நியாயப்பிரமாணத்தையும் நேசிப்போம். நமக்குச் சேதமுண்டாக்குகிறதைத்தான் அவர் விலக்குகிறார் என அறிந்து, அவரின் வாக்குத்தத்தங்களையும் நேசிக்கிற அளவிலேயே அவர் வேண்டாமென்று விலக்குகிறதையும் நேசிப்போம். இந்த நாளில் தாவீதைப்போல் ‘நான் உம்முடைய பிரமாணத்தை எவ்வளவாய் நேசிக்கிறேன். நாளெல்லாம் அது என் தியானம்’ என்று நாம் சொல்ல முடியுமா?

தேவபிரமாணம் தீமையான யாவையும் விலக்குகிறது. ஆகவே நாம் தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து பாவத்தையும், தீமையையும் அவர் வெறுக்கிற விதமாகவே வெறுத்து விலக்குவோமாக. தீயநினைவுகளை எதிர்த்துப் போராடுவோமாக. கெட்ட வார்த்தைகளை விலக்கி கடிவாளத்தினால் வாயை காப்போமாக. கெட்ட செய்கையை விலக்கி பொல்லாப்பாய் தோன்றுகிறதைவிட்டு விலகுவோமாக. இருதயம் பொல்லாங்குள்ளதும் அதிக கேடானதுமானது. எல்லா பொல்லாங்குகளும் அதிலிருந்து வருகிறது. முக்கியமாய் தேவனை விட்டு விலகுகிற அவிசுவாசமுள்ள இருதயத்தைப்பற்றி எச்சரிக்கையாய் இருப்போமாக.

நண்பரே! தீமையைப் பகைக்க உனக்கு மனதிருக்கிறதா? அப்படியானால் தேவனோடு நெருங்கி பழகு. அப்போது பரிசுத்த வாழ்வு உனக்குச் சுலபமாகிவிடும். அப்போது எந்தப் பொல்லாப்பையும் வெறுத்துத் தள்ளுவாய். கர்த்தரின் தாசர்களே, பொல்லாப்புக்கு முழு மனதோடு பயப்படுங்கள். யாவரோடும் சமாதானமும் பரிசுத்தமாயுமிருங்க நாடுங்கள். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனைத் தரிசிக்க முடியாதே.

நேச பிதாவே உம்மில்
எனக்கு எல்லாம் சொந்தம்
என்னையும் தந்தேன் உமக்கு
இதுவே எனக்கானந்தம்.

உமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்

ஜனவரி 29

“உமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்.”  சங். 119:11

பழைய உடன்படிக்கையின் பலகைகள் பெட்டியில் வைத்து பரிசுத்த ஸ்தலத்தில் பத்திரப்படுத்தப்பட்டது. புது உடன்படிக்கையோடு விசுவாசிகளின் இருதயத்தில் வைத்து பத்திரப்படுத்தப்பட வேண்டும். தினசரி பாரத்தோடு கூடிய ஜெபத்திலும் தியானத்திலும் நாம் தேவனுடைய சுத்த வசனத்தை அறிந்து அனுபவித்து, அதைப் பத்திரப்படுத்தக் பார்க்க வேண்டும். இது தினசரி போஜனத்துக்காக நாம் சேர்க்க வேண்டிய வேலைக்குச் சட்டம். நமது நம்பக்கைக்கு ஆதாரமாகிய கிருபைகளையும், விலையேறப் பெற்ற வாக்குத்தத்தங்களையும் நாம் பத்திரப்படுத்த வேண்டும்.

நமது இருதயத்தில் பத்திரப்படுத்தினால் இந்த விலையேறப் பெற்ற பொக்கிஷத்தை ஒருவனும் நம்மை விட்டு எடுத்துக் கொள்ளமாட்டான். நமக்கு தேவைப்படும்போது நாம் அதைத் தேட வேண்டியதில்லை. ஆகையால் அதன் அருமையை அறிந்து அதிலுள்ளதை மதித்து அதை ஆராய்ந்துப் பார்த்து, தியானஞ் செய்து தினசரி ஆகாரமாய் அதை உள்கொள்ள வேண்டும். நமது மனதில் பத்திரப்படுத்தாமல்விட்டால் நாம் பரிசுத்தமடைய மாட்டோம். நம்முடைய வாழ்வில் கனிகளும் இருக்காது. இருதயத்தில் இருந்தால் தான் நடக்கையில் தெரியும். நாம் அனைவரும் வாசிக்கும்படியான நிருபங்களாயிருக்கும்படி தேவன் தமது பிரமாணங்களை நமது மனிதில் எழுத வேண்டுமென்று தினமும் ஜெபிப்போமாக.

தேவ வாக்கு மதுரம்
அதன் போதகம் சத்தியம்
அறிவு அதனால் வரும்
ஆறுதலும் தரும்.

அவனைக் கனப்படுத்துவேன்

ஜனவரி 07

“அவனைக் கனப்படுத்துவேன்”  சங். 91:15

என்னைக் கனப்படுத்துகிறவர்களை நான் கனப்படுத்துவேன். தற்பெருமை கர்த்தரைக் கனவீனப்படுத்தி நமக்குக் குறைவையும் அவர்கீர்த்தியையும் உண்டாக்குகிறது. தன்னை வெறுத்தலே மேன்மைக்கும் கனத்துக்கும் வழி நடத்தும். கிறிஸ்தவன் தன்னை வெறுத்து தன் கண்களையும் மனதையும் இரட்சகர்மேல் உறுதியாய் வைப்பானானால் கர்த்தர் அவனைக் கனப்படுத்துவார். அப்பொழுது அவன் வருத்தங்களை பொறுமையோடு சகித்து மற்றவர்கள் சொல்லும் நிந்தைகளையும் பழிச்சொற்களையும் நிராகரித்து துன்பநாளிலும்கூட பிதாவின் முகமலர்ச்சியை அனுபவிப்பான். கர்த்தரோ அவனைச் சந்தித்து அவனுடன் இனிமையாய்ப் பேசி அவனைச் சூழ்ந்திருக்கும் சகல துன்பங்களையும் மறந்துவிடும்படி செய்து அவன் வாழ்க்கையின்மேல் நோக்கமாயிருப்பார். வியாதியில் ஆற்றித்தேற்றி சுகத்தில் அவனை நடத்திக்கொண்டு போவார். வறுமையில் திருப்தியைக் கொடுத்து வாழ்வில் அவனுக்கு உதாரகுணத்தைத் தருவார். வாழ்நாளில் அவனுக்கு வேண்டியதைத் தந்து அவனை ஆதரித்து மரணத்தில் உயிர்ப்பித்து தம்மண்டையில் ஏற்றுக்கொள்வார். உயிரோடிருக்கும்போது ஆசீர்வாதமாயிருந்து மரித்த பிறகு சிங்காசனத்துக்கு அருகில் வைக்கப்படுவான்.

அன்பானவர்களே! உங்களை வெறுத்து மாம்சத்தை வென்று உலகத்துக்கு மேலாக எழும்பி விசுவாசத்தினால் வாழ்ந்து தேவனுடன் சஞ்சரித்துக் கர்த்தரைக் கனம்பண்ணுங்கள். அவரும் உங்களைக் கனப்படுத்துவார். உங்களின் கவலைக்குரிய காரியங்களை அவருக்கு ஒப்புவித்துப் பாருங்கள். அவருடைய இராஜ்யத்தையும் மகிமையையும் விரிவடையச் செய்யப் பாருங்கள். அப்போது தேவன் உங்களை ஆசீர்வதித்து மன்னாவால் உங்களைத் திருப்தியாக்குவார் என்று அறிவீர்கள்.

என் நிமித்தம் இம்மையில்
தன்னை வெறுப்பவன்
எனதன்பை ருசித்து
என் மகிமையை காண்பான்.

நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்

ஜனவரி 15

“நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்.”  ஏசாயா 64:6

மாறாத நித்திய தேவனுக்கும், இலையைப்போல வாடிவிடுகிற பாவிக்கும் எவ்வளவு வித்தியாசமிருகஇகிறது. நமது இம்மைக்குரிய வாழ்நாள் இப்படித்தான் பசுமையாய்ச் செழிப்பாய் இருக்கலாம். இன்னும் கொஞ்சம் காலத்தில் வாடி வதங்கி போகலாம். ‘ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன், வாழ்நாள் குறுகினவனும், சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான். அவன் பூவைப்போல் பூத்து அறுப்புண்டு, நிழலைப்போல் நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்’. இந்நிலை நம்மை எவ்வளவு மோசமாக்கி விடுகிறது. ஆயினும் அது நமக்குப் பிரயோஜனமே. நாம் சீக்கிரம் மாண்டுபோவது நிஜமா? ஆம்மென்றால், நமது வாழ்வில் நடக்கிற காரியங்களைக் குறித்து பெரிதாக எண்ணக்கூடாது. பூமிக்குரியவைகளைவிட்டு மேலானவைகளை நாடி, பரலோக பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கக்கடவோம்.

இயேசுவின்மேல் விசுவாசம் வைத்து, தேவனோடு சஞ்சரித்து, நாம் செய்யும் எல்லாவற்றிலும் அவரைப் பிரியப்படுத்தப்பார்ப்போம். நாம் உலகில்வாழும் நாள்வரையிலும் உலக சிந்தனைக்கு இடம் கொடாமல், பயபக்தியாய் கர்த்தர்முன் செலவழிக்கவேண்டும். சுகம், வியாதியாக மாறலாம். பலம் பலவீனமாய் மாறலாம். வாலிபம் வயோதிபமாகலாம். மரணப்படுக்கை சவப்பெட்டியாகலாம். நமக்கு முன்னே நமது கல்லறை தெரிகிறது. அதற்கு முன்னே நமது தெரிந்துக்கொள்ளுதலையும் அழைப்பையும் நிச்சயித்துக் கொள்வோமாக. தேவனோடு தேவ விள்ளைகளாக நெருங்கி வாழ்வோமாக. நாம் ஆழமாய்த் தோண்டி கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடுவோமாக. பிரியமானவரே, நமது வாழ்நாள்கள் குறுகினது. மகிமை நிறைந்த நித்தியம் நமக்கு முன்னே இருக்கிறது. நாம் எல்லாரும் இலைகளைப் போல் வாழப் போகலாம்.

நித்திய ஜீவ விருட்சம்
என் நம்பிக்கைக்கு ஆதாரம்
என்றென்றும் பசுமையாம்
இதன் இலை வாடாதாம்.

உன் சிநேகிதன்மேல் உனக்கு தயை இதுதானா?

ஜனவரி 25

“உன் சிநேகிதன்மேல் உனக்கு தயை இதுதானா?.” 2.சாமு. 16:17

இயேசு நமக்குக் காட்டும் அன்புக்குச் சமமாய் வேறெங்கும் காணமுடியாது. நாமோ அவருக்குச் செய்யும் கைமாரோ இதற்கு எதிரிடையானது. பல சமயங்களில் நாம் அவரை அசட்டை செய்கிறோம். அவரை நோக்கிக் கேட்கும்போது நமக்கு சந்தோஷமாய் இருக்கிறதே தவிர, சில நேரங்களில் அது ஒரு பாரமான வேலையாய் இருக்கிறது. நமக்குத் தெரிந்தவைகளையெல்லாம் செய்து, அவர் சொல்வதை விட்டு விடுகிறோம். அடிக்கடி அவர் வார்த்தையில் சந்தேகம் கொண்டு அவர் அன்பைச் சந்தேகித்து அவரைக் குறித்து முறையிடுகிறோம். அவருக்குக் கீழ்ப்படியாமல் மாம்சத்துக்கு இடங்கொடுத்துவிடுகிறோம். அவர் எதிர்க்கச் சொல்கிற உலகத்தைச் சேர்த்துகொள்கிறோம். அவர் எதிர்க்கச் சொல்கிற உலகத்தைச் சேர்த்துக்கொள்கிறோம். அவர் எதிர்க்கச் சொன்ன சாத்தானோடு இணைந்துவிடுகிறோம்.

எத்தனை வேளைகளில் உலகத்தாருக்குமுன் அவரை அறிக்கையிட வெட்கப்பட்டிருக்கிறோம்? நம்மீது பட்சமும் தயையும் நிறைந்த நம்முடைய மீட்பருக்கு நாம் செய்கிறதைப் பார்த்து, ‘உன் சிநேகிதன் மேல் உனக்கு இருக்கிற தயை இதுதானோ?’ என்று நம்மைக் கேட்கும்போது, வெட்கம் நம்முடைய முகத்தை மூடவேண்டும். நமது உள்ளமும் கலங்க வேண்டும். அவருக்கு நாம் செய்யும் கொடுமை துரோகம் போன்றது. அவர் மன்னித்து நேசிக்கிற அடையாளங்களை நாம் மறுபடியும் தேடி, இனி சோதனைக்கு இணங்கவாவது, பாவத்தில் இடங்கொடுக்கவாவது நினைக்கும் சமயத்தில், நம்முடைய மனச்சாட்சியைப் பார்த்து உன் சிநேகிதன்மேல் உனக்கும் தயை இதுதானா என்று கேட்போமாக.

நான் மகா துரோகி
என் நேசரை மறந்த பாவி
அவர் கிருபை இல்லாவிட்டால்
என்னை அகற்றுவார் அப்பால்.

சாவு எனக்கு ஆதாயம்

ஜனவரி 5

“சாவு எனக்கு ஆதாயம்”  பிலி. 1:21

தேவ சிருஷ்டிகள் என்ற அடிப்படையில் நாம் மரணத்தைப் பார்த்தால் அதற்குப் பயப்படுவோம். ஆனால் கிறிஸ்தவர்கள் என்ற அடிப்படையில் பார்த்தால் பயப்படமாட்டோம். முன்னே அது நமக்குச் சாபம்: இப்பொழுதோ அது ஆசீர்வாதம். முன்னே அது நமக்கு நஷ்டம். இப்பொழுதோ அது நமக்கு இலாபம். சாகும்போது எல்லாவித சத்துருவினின்றும், சோதனையினின்றும், துன்பத்தினின்றும் விடுதலையடைந்து, கணக்கற்ற நன்மைகளைப் பெற்றுக்கொள்ளுவோம். பாவத்தினின்று விடுவிக்கப்பட்டு பரிசுத்தத்தில் பூரணமாகிறோம். அறிவிலிருந்து தேறுகிறோம். அப்போதுதான் நாம் அறியப்பட்டிக்கிறபடி அறிந்துகொள்வோம். பரிசுத்தமும் பெறுவோம், ஏனென்றால் கிறிஸ்துவோடும் அவரைப்போலும் இருப்போம்: மேன்மையும் கிடைக்கும். ஏனென்றால் வெள்ளை வஸ்திரம் நமக்குக் கொடுக்கப்படும். சாத்தானையும், உலகையும், பாவத்தையும் வென்ற வெற்றி வீரர்களாகக் கருதப்படுவோம். கிறிஸ்துவோடு அவர் சிங்காசனத்திலும் உட்காருவோம்.

எந்த விசுவாசிக்கும் மரணம் இலாபம்தான். உடனடியாகக்கிடைக்கிற இலாபம்: பெரில இலாபம், என்றுமுள்ள இலாபம். மரண நதியைக் கடக்கிறது கடினந்தான். கடந்த பிறகோ மகிமைதான். நாம் மரணத்திற்குப் பயப்படலாமா? ஏன் பயப்படவேண்டும்? இயேசு கிறிஸ்து என்ன சொல்லுகிறார்? ‘என் வார்த்தைகளைக் கைக்கொள்ளுகிறவன் மரணத்தை ருசிப்பதில்லை” என்கிறார். அவன் உறங்கலாம், அவன் துன்பங்கள், போராட்டங்கள் நீங்கி இளைப்பாற வீடு பேறு பெறலாம். ஆகிலும் அவன் மரிக்கவே மாட்டான். மரணம் அவன்மேல் ஆளுகைச் செய்யாது. இயேசுவின் மூலம் மரணத்தைப்பார், மரணத்தின்மூலம் இயேசுவைப் பார்.

கிறிஸ்து வெளிப்படுகையில்
என் துக்கம் நீங்குமே
கிறிஸ்து என் ஜீவனாகில்
பாவம் துன்பம் நீங்குமே.

குறிப்பினால் அறிந்தேன்

ஜனவரி 26

“குறிப்பினால் அறிந்தேன்.” ஆதி. 30: 27

குறிப்பினால் அறிந்தேன் அல்லது அனுபவத்தால் அறிந்தேன். இப்படி சொன்னவன் லாபான். யாக்கோபு தனக்கு ஊழியஞ் செய்ததினால் தான் அடைந்த பிரயோஜனத்தைப்பற்றி இப்படி சொன்னான். தேவ போதனையால் உண்டாகும் நன்மையைக் குறித்தும் ஒரு கிறிஸ்தவன் இப்படிச் சொல்லலாம். அனுபவம் என்பது பரீட்சையினால் உண்டாகும் அறிவு. அனுபவத்தால்தான் உண்மை மார்க்கத்தின் உண்மையும், மேன்மையும் அடைகிறோம். அறிகிறோம். சாத்தானுடைய தந்திரங்களையும், விசுவாசத்தின் ரகசியங்களையும் அறிகிறோம். துன்பத்தால் உண்டாகும் பிரயோஜனத்தையும் இவ்வுலகத்தின் வெறுமையையும் ஒன்றுமில்லாமையையும் உடன்படிக்கையில் நமக்கு தேவனுடைய அன்பையும் உண்மையையும் கற்றறிகிறோம்.

அனுபவத்தால் வருகிற அறிவுக்கு சமமானது ஒன்றுமில்லை. கேள்வியால் உண்டாகும் அறிவுக்கு இது மேலானது. உறுதியைப் பார்த்தாலும் பிரயோஜனத்தைப் பார்த்தாலும் மனதை ஸ்திரப்படுத்துகிற நிச்சயத்தைப் பார்த்தாலும் இது எந்த அறிவுக்கும் மேலானது. வாலிபர்கள் அடக்கமுடியவர்களாயிருக்க வேண்டும். அவர்கள் அறிந்துக் கொண்டது கொஞ்சம். அனுபவமடைந்தவர்கள் தாங்கள் அறிந்ததை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும். இதுபோல் பிரயோஜனமுடையது ஒன்றுமில்லை. அனுபவத்தால் நாம் சொல்லுகிறதும் நமது நடக்கையையும் ஒத்திருக்க வேண்டுமென்பதைக் குறித்து நாம் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

நேசித்து உமது சொல்படி
செய்திட எனக்கு கற்பியும்
உமது அனுபவத்தின்படி
என்னை உம்முடையவனாக்கும்.

மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி

ஜனவரி 12

“மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி”  லூக்கா 2:10

நம்மை மனம் நோகச் செய்யவும், அதைரியப்படுத்தவும், அநேக காரியங்கள் நம் உள்ளத்தில் இருக்கிறது. நம்மை துக்கப்படுத்த குடும்பத்திலும், சபையிலும் பல சோர்வுகளைக் கொண்டு வரலாம். இவ்வுலகம் நமக்குக் கவலையையும் கண்ணீரையும் கொண்டு வரும். ஆனால் சுவிசேஷமோ மிகுந்த சந்தோஷத்தைக் கொண்டு வரும். சுவிசேஷம் பெரிய ஒரு மேலான இரட்சகரை நமக்கு முன் நிறுத்துகிறது. இயேசு கிறிஸ்து மனுஷ ரூபமானபடியினால், மனிதர்களாகிய நமக்கு மனமிறங்கி தேவனிடத்தில் சகலத்தையும் பெற்றுத்தர கூடியவர். என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறார்? ஏன் எனக்குள் தியங்குகிறாய் என உங்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொள்ளுங்கள்.

கிறிஸ்துவின் இரத்தத்தால் நம்முடைய பாவம் எல்லாமே பரிபூரணமாய் மன்னிக்கப்படுகிறது. அவர் தேவனுக்குக் கீழ்ப்படிந்தபடியால், நிறுத்தும்படி கிருபையை தமது நீதியால் உண்டாக்கிக் கொடுத்தார். அவர் பாவமில்லாதவரானபடியால், நமது பாவங்களை மன்னிக்க காத்திருக்கிறார் அவர் இரக்கமுள்ளவரானபடியால் நம்மீது எப்போதும் இரங்குகிற தேவனாய் இருக்கிறார். நாம் துன்பப்படும்போது தேற்றரவாளனால் உதவிட ஓடி வருகிறார். பாவிகளுக்கு இரட்சகராய் இருக்கிறார். பிதாவின் முன் பரிந்து பேசும் நேசராய் இருக்கிறார். பாவிகளை அழைத்து அவர்களைத் தம் இரத்தத்தால் கழுவி தமது இராஜ்யத்தில் சேர்த்துக் கொள்ளுகிறார். செய்திகளைச் சுபசெய்தியாக்குகிறதே சுவிசேஷம் தான். நம்மை சந்தோஷத்தில் நிரப்பும் அனைத்தும் நற்செய்தியில் இருக்கிறது.

இவ்வன்பை அளவிட முடியாது
நீளம் அகலம் அற்றது
ஆழம் உயரம் இல்லாதது
அளவிடப்பட முடியாதது.

Popular Posts

My Favorites

என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.

மே 22 "என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்." சங் 119:172 எல்லா கிறிஸ்தவர்களும் இப்படிச் செய்வார்களானால் உலகில் அறியாமை குறையும். தேவனுடைய வசனம் ஒன்றுதான் பெருமையாய்ப் பேச தகுதியுடையது. நாம் அதை வாசித்து¸ விசுவாசித்து¸...

நானே வழி