Home கட்டுரைகள் தெய்வீகப் பரிமாற்றம்

தெய்வீகப் பரிமாற்றம்

2755
0

மனுக்குலம் அனைத்திற்கும் ‘வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்” என்னும் அழைப்பை இயேசு விடுத்துள்ளார். உங்கள் பாவங்கள் எதுவாயினும் அவர் மன்னிப்பார். ஒரே இடத்திலிருந்து மட்டுமே நீங்கள் பதிலைப்பெற முடியும். அது இயேசு மரித்த சிலுவையாகும். சிலுவையின் மூலமாக மட்டுமே உங்கள் தேவைகள் சந்திக்கப்படும். பாரங்களுக்குப் பதில் கிடைக்கும். பாவத்திற்கு விடுதலை கிடைக்கும்.

ஓர் அழைப்பு

சுவிசேஷ செய்தி முழுவதும் ஓர் ஒப்பற்ற சரித்திர சம்பவத்தை மையமாகக் கொண்டு சுழல்கிறது. அச்சம்பம் சிலுவையில் இயேசுவின் தியான மரணம் ஆகும். இதைக்குறித்து எழுதும் போது எபிரேயர் நிருபத்தின் ஆசிரியர் ‘ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் (இயேசு) என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்” (எபி 10:14) என்று கூறுகிறார். இங்கு ‘பூரணப்படுத்தியிருக்கிறார்” என்றும் வார்த்தையும் ‘என்றென்றைக்கும்” என்னும் வார்த்தையும் ஆற்றல் நிறைந்த ஒரு வார்த்தைகள். இவ்விரண்டும் மனுக்குலம் முழுவதின் எல்லாத் தேவைகளையும் சந்திக்கின்ற ஒரு தியாக மரணத்தை தெளிவாய் விளக்குகிறது. அதனுடைய பலன்கள் தொன்றுதொட்டு நித்தியம் வரை தொடர்கிறது.

இந்தத் தியாகத்தின் அடிப்படையில் பிலிப்பியர் 4:19 ல் பவுல் ‘என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவை எல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்” எனக்கூறுகிறார். உங்கள் குறைவை எல்லாம் என்று சொல்லும்போது குறிப்பாக சாபத்திலிருந்து உனக்குத் தேவையான விடுதலையும் அதில் அடங்குகிறது. ஆனால் முதலில் நீ இந்தச் சத்தியத்தை முழுமையாகப் பார்க்க வேண்டியது அவசியமாகும். உன்னதமான தேவனின் ஓர் ஒப்பற்ற தனிச் செயல் மனுக்குலத்தின் எல்லா பாவத்தையும், துயரத்தையும் ஒரு உச்ச காலகட்டத்திற்கு கொண்டு வந்தது.

மனுக்குலத்தின் எண்ணிறந்த பிரச்சனைகளுக்கு பலவிதமான தீர்வுகளை தேவன் கொடுக்க முற்படவில்லை. அதற்கு மாறாக, அவர் எல்லாவற்றையும் சந்திக்கும் ஆற்றல் உள்ளடக்கிய ஒரு தீர்வை நமக்குத் தருகிறார். அதுதான் எல்லா பிரச்சனைகளுக்கும் அவருடைய பதிலாக உள்ளது. நமது பின்னணி பலதரப்பட்டதா இருக்கலாம். நாம் ஒவ்வொருவரும் நமது சொந்தத் தேவைகளை சந்திக்க முடியாதவாறு பாரப்பட்டிருக்கிறோம். ஆனால் தேவனுடைய பதிலைப்பெற்றுக்கொள்ள நாம் அனைவரும் வரவேண்டிய இடம் ஒன்றே. அது இயேசுவின் சிலுவையே.

சிலுவையில் நிறைவேற்றப்பட்ட காரியத்தின் முழுமையான விவரத்தை ஏசாயா தீர்க்கதரிசி அது நடைபெறுவதற்கு எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு கூறியுள்ளார். ஏசா 53:10ல் தீர்க்கதரிசி பாவ நிவாரணபலியாக தேவனுக்கு செலுத்தப்பட வேண்டிய ‘கர்த்தருடைய ஊழியனின்” ஆத்துமாவைப் பற்றி விளக்குகிறார். புதிய ஏற்பாட்டின் எழுத்தாளர்கள் ஒருமனதாக பெயர் குறிக்கப்பெறாத இந்த ஊழியரை இயேசு என இனம்கண்டுள்ளனர். இந்த தியாக பலியினால் நிறைவேற்றுபட்ட தெய்வீக நோக்கம் ஏசாயா 53:6 ல் தொகுத்து கூறப்பட்டுள்ளது:

‘நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து,
அவனவன் தன்தன் வழியிலே போனோம்: கர்த்தரோ
நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்”

மேற்கூறப்பட்டுள்ளது மனுக்குலம் அனைத்திற்கும் உண்டான அடிப்படை பிரச்சனையாகும். நாமெல்லாரும் வழிதப்பி திரிந்து ஒவ்வொருவரும் தம்தம் வழியிலே போனோம். நம்மில் அநேகர் ஒருபோதும் செய்திராத கொலை, விபச்சாரம், களவு போன்ற குறிப்பிட்ட பாவங்கள் உள்ளன. ஆனால் நாம் எல்லாரும் ஏகமாய் செய்த ஒன்று உள்ளது. நாம் நமது சொந்த வழியில் செல்லலானோம். அப்படி செய்ததின் மூலம் ‘ நமது முதுகுகளை தேவனை நோக்கித் திருப்பியுள்ளோம்” இதைத் தொகுத்துக் கூறும் எபிரெயச் சொல் ‘அவான்” என்பதாகும். இது ‘அக்கிரமம்” என்று இங்கு மொழிபொயர்க்கப்பட்டுள்ளது. இதை வேறுவிதமாய் சொன்னால் ‘முரட்டாட்டம்” எனலாம். இது மனிதனுக்கு விரோமானது அல்ல. தேவனுக்கு விரோதமானது. இது உபாகமம் 28ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள அனைத்து சாபங்களுக்கும் இதுவே பிரதான காரணம் ஆகும்.

‘அக்கிரமமோ”, ‘முரட்டாட்டமோ” வேறு எந்த தமிழ் சொல்லோ ‘அவான்” என்னும் வார்த்தையின் முழு அர்த்தத்தை நமக்கு எடுத்துக் காட்டுவதில்லை. வேதாகமத்தில் உபயோகத்தின்படி ‘அவான்” என்பது அக்கிரமத்தை மாத்திரமல்ல, அக்கிரமத்தோடு வரக்கூடிய தண்டனையையும், தீய விளைவுகளையும் குறிப்பதாக உள்ளது.

உதாரணமாக ஆதியாகமம் 4:13 ல் தேவன், தன் சகோதரனைக் கொன்றதற்கு காயீனுக்கு நியாயத்தீர்ப்பு வழங்கியபோது, காயீன் ‘எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்க முடியாது” என்றான். இங்கே ‘தண்டனை” என்னிடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சொல் ‘அவான்” என்பதாகும். இது காயீனுடைய ‘அக்கிரமத்தை” மாத்திரமல்ல அதற்குரிய ‘தண்டனையையும்” உள்ளடக்கிக் கூறுகிறது.

லேவியாராகமம் 16:22 ல் பாவநிவாரண நாளிலே போகவிடப்பட்ட ஆட்டைக்குறித்து கர்த்தர் சொல்லும் போது, ‘அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களை எல்லாம் தன் மேல் சுமந்து கொண்டு, குடியில்லாத தேசத்துக்குப்போவதாக” என்று கூறுகின்றார். இந்த உவமானத்தில் அந்த வெள்ளாட்டு இஸ்ரவேலர்களின் அக்கிரமங்களை மட்டுமல்ல அக்கிரமங்களுக்கான தண்டனையையும் சுமந்து செல்லுகிறது.

புலம்பல் 4 ம் அதிகாரத்தில் ‘அவான்” என்னும் சொல் இதே அர்த்தத்தில் இரண்டு தடவை வருகிறது. 6ம் வசனத்தில் ‘என் ஜனமாகிய குமாரத்தியின் அக்கிரமத்துக்கு வந்த தண்டனை……..” என்று மொழி பெயர்க்கபட்பட்டுள்ளது. மீண்டும் 22ம் வசனத்தில் ‘சீயோன் குமாரத்தியே, உன் அக்கிரமத்துக்கு வரும் தண்டனை” என்று வருகிறது. இந்த இரண்டு இடத்திலும் ‘அவான் என்ற தனிப்பதம் அக்கிரமத்துக்கு வந்த தண்டனை” என்னும் முழு அர்த்தத்தை குறிக்கும்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வேறு வார்த்தைகளில் சொன்னால் ‘அவான்” என்பது அக்கிரமத்தை மாத்திரமன்று, அக்கிரமத்தின் மேல் தேவ நியாயத்தீர்ப்பு கொண்டு வரும் எல்லா தீய விளைவுகளையும் ஒன்று சேர குறிக்கிறது.

இது சிலுவையில் இயேசு செய்த தியாகத்தைக் குறிக்கிறது. இயேசு தாமே எந்தப் பாவத்தையும் செய்யவில்லை. ஏசாயா 53:9ல் தீர்க்கதரிசி, ‘அவர் கொடுமை செய்யவில்லை: அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை” என்று கூறுகின்றார். ஆனால் 6ம் வசனத்தில் ‘கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப்பண்ணினார்” என்று கூறுகின்றார். நம்முடைய அக்கிரமத்தை மட்டும் இயேசு ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த அக்கிரமத்தினால் உண்டான எல்லா தீயவிளைவுகளையும் அவர் ஏற்றுக்கொண்டார். தன்னை சித்தரித்த அந்த வெள்ளாட்டுக்கடாவைப் போலவே, நமது அக்கிரமத்தையும் அதற்குரிய தண்டனையையும் நம்மீது திரும்பி வராதபடி நிரந்தரமாய் அவரே சுமந்து தீர்த்தார்.

இதுவே சிலுவையின் முக்கிய அர்த்தமும் நோக்கமுமாயிருக்கிறது. இதிலே தேவனால் நியமிக்கப்பட்ட ஒரு பரிமாற்றம் நடைபெற்றது. முதலாவதாக, நாம் இருக்கவேண்டிய இடத்தில் இயேசு இருந்து நமது அக்கிரமத்திற்குரிய தெய்வீக நியாயத்தீர்ப்பின் எல்லாத் தீய விளைவுகளையும் அவர் ஏற்றுக்கொண்டார். இதற்குப் பதிலாக தேவன் நம்மனைவருக்கும் பாவமற்ற இயேசுவின் கீழ்படிதலினால் உண்டாகக்கூடிய எல்லா நற்பலன்களையும் வழங்குகின்றார்.

இரத்தனச் சுருக்கமாகக் கூறினால் தீமையின் காரணமாக நல்மில் வர இருந்த தீயபலன், இயேசுவின் மேலும் இயேசுவிற்கு உரிய நல்பலனின் நன்மை நம்மேலும் வந்தது. தேவன் தமது சொந்த நித்திய நியாயத்தீர்ப்பைக் கைவிட்டுவிடவில்லை. நமது அக்கிரமங்களினிமித்தமாக நியாயமாய் நம்மேல் வர இருந்த தண்டனையைத் தாம் ஏற்றுக்கொண்டதினாலே, தேவனால் இவ்வாறு நமக்கு நன்மை செய்ய முடிந்தது.

இவை அனைத்தும் அளக்க முடியாத தேவகிருபையினால் மட்டுமே நமக்கு வருகிறது. இது முற்றிலும் விசுவாசத்தினால் பெற்றுக் கொள்ளப்படுகிறது. இதற்கு நாம் காரண காரியத்தை தர்க்கரீதியில் கூற முடியாது. இப்படிப்பட்ட ஈவைப் பெற்றுக்கொள்வதற்கு தகுதியாக நாம் யாரும் எதையுமேசெய்ததில்லை. நம்மில் எக்காலத்திலும் எதையாவது செய்து இதை சம்பாதித்துக்கொள்ளவே முடியாது.

வேதம் இந்தப் பரிமாற்றத்தின் பலவிதமான பரிமாணங்களைப் பற்றியும் அது பெற்றுத்தரும் பலவிதமான நற்பலன்களைப் பற்றியும் விளக்குகிறது. இவையனைத்திற்கும் கீழ் ஒரே அடிப்படைக் கொள்கை தான் உள்ளது: இயேசுவினால் வரும் நற்காரியங்கள் நமக்கு கொடுக்கப்படும்படி, நம்மேல் வரவேண்டிய தீமை அனைத்தும் இயேசுவின் மேல் வந்தது.

இந்தப் பரிமாற்றத்தின் இரு முக்கியக் கூறுகளை ஏசாயா 53:4-5 அறியலாம்:

‘மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார், நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் ”

இங்கு இரு சத்தியங்கள் பிணைந்து வருகின்றன. ஒன்று ஆவிக்குரியது, மற்றொன்று சரீரப்பிரகாரமானது. ஆவிக்குரிய தளத்தில், நமது மீறுதல்களுக்கும், அக்கிரமங்களுக்குமான தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் நாம் மன்னிக்கப்பட்டு தேவனுடன் சமாதானம் பெறுகிறோம் (ரோமர் 5:1). சரீரதளத்தில் இயேசு நமது நோய்களையும், வலிகளையும் ஏற்றுக்கொண்டார். ஆகவே அவரது காயங்களின் மூலம் நாம் குணமாகிறோம்.

சரீரப் பிரகாரமான ஆசீர்வாதத்தைக் குறித்த பரிமாற்றம் புதிய ஏற்பாட்டில் இரண்டு பகுதிகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மத்தேயு 8:16-17, ஏசாயா 53:4 யைக் குறிப்பிட்டு ‘இயேசு………… பிணியாளிகளையெல்லாம் சொஸ்தமாக்கினார்:

‘அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு,
நம்முடைய நோய்களைச் சுமந்தார்”

என்று ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது, என்று கூறுகிறது.

மீண்டும் 1பேதுரு 2:24 ல் அதை எழுதியவர் ஏசாயா 53:5-6 யைக் குறிப்பிட்டு இயேசுவைப் பற்றி இவ்வாறாகக் கூறுகிறார்:

‘ நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்: அவருடைய தழும்புகளால் (காயங்களால்) குணமானீர்கள்.”

மேலேயுள்ள வசனங்களில் கூறப்பட்டுள்ள இந்நிலை பரிமாற்றத்தை நாம் கீழ்கண்டவாறு தொகுத்துக்கூறலாம்.
நாம் மன்னிக்கப்படும்படி இயேசு தண்டிக்கப்பட்டார்.
நாம் சுகத்தைப் பெற்றுக்கொள்ளும்படி இயேசு காயமடைந்தார்.

இந்த பரிமாற்றத்தின் மூன்றூவது கூறு ஏசாயா 53:10ல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பிதாவாகிய கர்த்தர் இயேசுவின் ஆத்துமாவை குற்ற நிவாரண பலியாக ஒப்புக்கொடுத்தார் என்று கூறப்பட்டுள்ளது. பலவிதமான பாவநிவாரண பலிகளுக்கான மோசேயின் ஒழுங்கு முறைகளின் அடிப்படையில் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும். பாவம் செய்த மனிதன் தன் பாவத்திற்கான பலியை ஓர் ஆடாகவோ அல்லது வெள்ளாடாகவோ அல்லது ஒரு காளையாகவோ அல்லது ஒரு மிருகமாகவோ ஆசாரியனிடத்தில்கொண்டுவர வேண்டும். அந்தப் பலியின் மேல் அவன் தன் பாவத்தை அறிக்கையிடுவான். பலியாட்டின் மேல் அறிக்கையிடப்பட்ட பாவத்தை அறிக்கையிட்டவன் மேலிருந்து எடுத்து அந்த மிருகத்தின் மேல் சுமத்தப்பட்டதாக அடையாள நிலையில் ஆசாரியன் செய்வான்.

தேவனுடைய எல்லையற்ற ஞானத்தில் இவையெல்லாம் எல்லாவற்றிற்கும் போதுமான இயேசுவின் ஒரே பலியினால் ஈடுசெய்ய இருப்பதின் நிழலாட்டமாய் உள்ளது. சிலுவையில் உலகத்தின் பாவமனைத்தும் இயேசுவின் ஆத்துமாவிற்று மாற்றப்பட்டது. இதனுடைய விளைவு ஏசாயா 53:12 ல் ‘அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி” என்பதிலிருந்து அறியலாம். இயேசு தம்முடைய ஒப்பற்ற தியாக மரணத்தினால் மனுக்குலம் அனைத்தின் பாவத்திற்கும் பரிகாரம் செய்தார்.

2கொரி 5:21 ல் பவுல் ஏசாயா 53:10 யைக் குறிப்பிட்டு இப்பரிமாற்றத்தினால் வரும் முற்போக்கான பலனைச் சொல்லுகிறார்.

‘நாம் அவருக்குள் (இயேசுவுக்குள்) தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை (இயேசுவை) நமக்காகப் பாவமாக்கினார்.”
இங்கு பவுல் நமது சொந்த முயற்சிகளினால் நாம் அடையக்கூடிய எந்த விதமான நீதியைப் பற்றியும் சொல்லவில்லை. ஆனால் பாவத்தையே அறியாத தேவனுடைய சொந்த நீதியைக் குறித்து சொல்லுகிறார். நம்மில் யாரும் இதை ஒருபோதும் சம்பாதிக்க முடியாது. பூமிக்கு வானம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறதோ, தேவனுடைய நீதியும் நம்முடைய சொந்த நீதியிலிருந்து அவ்வளவு உயர்வானதாய் இருக்கிறது. இதை விசுவாசத்தின் மூலமாக மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.
பரிமாற்றத்தின் இந்த மூன்றாவது, பகுதியை கீழ்க்கண்டவாறு தொகுத்துக்கூறலாம்:

‘இயேசுவின் நீதியினால் நாம் நீதியாகும்படிக்கு,
நம்முடைய பாவங்களினால் அவர் பாவமாக்கப்பட்டார்.”

இந்த பரிமாற்றத்தின் செயல்பாடு இதற்கு முந்திய கூற்றிலிருந்து தொடர்வதாக உள்ளது. பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு ஆகியவற்றைக் கொண்ட வேதம், பாவத்தின் இறுதிப் பலன் மரணம் என்று வலியுறுத்துகிறது. எசேக்கியேல் 18:4ல் கர்த்தர் ‘பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்” என்று சொல்லுகின்றார். யாக்கோபு 1:15ல் அப்போஸ்தலர் ‘பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்” என்று கூறுகின்றார். இயேசு நமது பாவத்தை ஏற்றுக்கொண்டபொழுது பாவத்தின் விளைவான மரணத்தையும் அனுபவிக்க வேண்டுமென்பது தவிர்க்க முடியாததாய் இருந்தது.

இதையே உறுதிப்படுத்தி எபி2:9ல் அதன் எழுத்தாளர் ‘………… தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம்…….. ” என்று கூறுகின்றூர். அவர் ஏற்றுக்கொண்ட மரணம் தன்மேல் அவர் ஏற்றுக்கொண்ட மனித பாவத்தின் தவிர்க்க முடியாத விளைவாக இருந்தது. அவர் மாந்தர் அனைவரின் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு எல்லா மனிதர்களுக்குரிய மரணத்திலும் பங்கேற்றார்.

அவருடைய தியாக மரணத்தை ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும் அவர் நித்திய ஜீவனை ஈவாக அளிக்கிறார். ரோமா 6:23 ல் பவுல் இவ்விரண்டையும் ஒப்பிட்டு ‘பாவத்தின் சம்பளம் (நியாயமான வெகுமானம்) மரணம்: (சம்பாதியாத) தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்” என்று கூறுகின்றார்.

பரிமாற்றத்தின் நான்காவது பகுதியை இவ்வாறு தொகுத்துக்கூறலாம்:

‘நாம் இயேசுவினுடைய ஜீவனில் பங்குள்ளவர்களாகும்படி
அவர் நமது மரணத்தை ஏற்றுக்கொண்டார்.”

இந்தப் பரிமாற்றத்தின் அடுத்தபகுதி பவுலினால் 2 கொரி 8:9 ல் கூறப்பட்டுள்ளது. ‘நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே@ அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே.” இந்த பரிமாற்றம் தெளிவாக உள்ளது: வறுமையிலிருந்து செல்வத்திற்கு மாற்றப்பட்டுள்ளோம். நாம் ஐசுவியவான்களாகும்படி இயேசு தரித்திரரானார்.

எப்பொழுது இயேசு தரித்திரரானார்? சிலர் அவரது பூலோக ஊழியம் முழுவதிலும் அவர் ஏழையாக இருந்ததாக சித்தரிக்க முற்படுகின்றனர். ஆனால் இது சரியான கணிப்பு அல்ல. அவர் தாமே பெருமளவில் பணத்தைச் சுமந்து செல்லாவிட்டாலும் அவருக்குத் தேவையானது எதுவுமே எவ்வேளையும் குறைவுபட்டதில்லை. அவருடைய சீஷர்களையும் அவர் அனுப்பிய பொழுது அவர்களுக்கும் ஒன்றும் குறைவுபடவில்லை. (லூக்கா 22:35) ஏழைகளாய் இருக்கலாம் அவரும் அவருடைய சீஷர்களும் ஒழுங்காக ஏழைகளுக்கு உதவினார்கள் (யோவான் 12:4-8, 13:29 பார்க்க).

சிலவேளைகளில் அவர் உணவளித்த விதமும் வியப்பிற்குரியதாய் இருந்தது. ஒரு மனிதன் ஐயாயிரம் ஆண்களுக்கும, பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் திருப்பதியாக உணவளிப்பார் என்றால் அவரை ஏழை என்று எந்த நிலையில் சொல்லக்கூடும்! (மத் 14:15-21).

உண்மையில் தம்முடைய பூலோக ஊழியம் முழுவதிலும் இயேசு ‘பரிபூரண” வாழ்விற்கு உதாரணமாய் வாழ்ந்தார். தம்முடைய சொந்த வாழ்வில் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற அவருக்கு தேவையான யாவற்றையும் அவர் எப்பொழுதும் உடையவராயிருந்தார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர் மற்றவர்களுக்கும் கொடுத்தார். அவருக்கு எப்போதுமே இல்லையென்ற நிலை வரவில்லை.
இயேசு எப்பொழுது நமது நிமித்தமாய் ஏழையானார்? அதற்கான பதில் : ‘சிலுவையில்” என்பதாகும். உபாகமம் 28:48 ல் மோசே, தரித்திரத்தின் முழுமையை நான்கு வார்த்தைகளில் தொகுத்து கூறுகிறார்: பட்டினி, தாகம், நிர்வாணம், சகலத்திலும் குறைவு இவை அனைத்தின் முழுமையையும் இயேசு சிலுவையில் அனுபவித்தார்.

அவர் பரியுள்ளவராய் இருந்தார். அவர் சுமார் 24 மணிநேரம் உணவு உட்கொள்ளவில்லை.

அவர் தாகமுள்ளவராய் (மாமிசத்திற்குரியதல்ல) இருந்தார். அவருடைய கடைசி வாசகங்களில் ஒன்று: ‘நான் தாகமாயிருக்கிறேன்” என்பதாகும் (யோவான் 19:28).
அவர் ஆடையற்றவராய் இருந்தார். போர்ச்சேவகர்கள் அவருடைய வஸ்திரங்கள் அனைத்தையும் அவரிடமிருந்து எடுத்துக்கொண்டனர். (யோவான் 19:23).
அவர் சகலத்திலும் குறைவுபட்டிருந்தார். அவருக்கு எதுவுமே சொந்தமாக இல்லை. அவருடைய மரணத்திற்குப் பின்பு அவர் கடன் வாங்கப்பட்ட ஆடையுடன் கடன்வாங்கப்பட்ட கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டார் (லூக்கா 23:50-53). இவ்வாறாக இயேசு ஏழ்மையின் உச்சகட்டத்தை நமது நிமித்தமாய் முழுமையாக ஏற்றுக்கொண்டார்.

2 கொரிந்தியர் 9:8ல் இந்த பரிமாற்றத்தின் நற்பலனை பவுல் விபரமாக விளக்குகிறார்: ‘மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.” இந்தப் பரிமாற்றத்திற்கு தேவனுடைய கிருபை மாத்திரமே அடிப்படை காரணம் என வலியுறுத்தும்படி கவனமாக உள்ளார். இதனை ஒருபோதும் சம்பாதிக்க முடியாது. இதை விசுவாசத்தின் மூலமாக மட்டுமே பெற்றுக்கொள்ளமுடியும்.

இநேக தடவைகளில் இயேசு கிறிஸ்துவிற்கு பூலோக நாட்களில் உண்டாயிருந்த ‘அபரிமிதம்” நமக்கும் உண்டாயிருக்கும். நமது கையில் அதிக பணமிருக்காது அல்லது வங்கியிலும் அதிக சேமிப்பு நம்பேரில் இருக்காது. ஆனால் நமது அன்றாட தேவைகளுக்குப் போதுமானது போக மற்றவர்களுக்கும் கொடுக்க நம்மிடம் அதிகம் இருக்கும்.

தேவைகள் இவ்விதமாய் சந்திக்கப்படுவதின் ஒரு முக்கிய காரணம் அப்போஸ்தலர் 20:35 ல் கூறப்பட்டுள்ள இயேசு சொன்ன வார்த்தைகளினால் விளக்கப்படுகிறது: ‘வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” தேவனுடைய பிள்ளைகள் அனைவரும் உயர்ந்த ஆசீர்வாதங்களை அனுபவிக்க வேண்டும் என்பது தேவனுடைய நோக்கமாய் உள்ளது. ஆகவே அவர் நமது சொந்த தேவைகளுக்கும் கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கும் கொடுக்கும்படியான நிலையில் நம்மை வைக்கிறார்.
இந்த பரிமாற்றத்தின் ஐந்தாம் பகுதியை இவ்வாறு தொகுத்துக்கூறலாம்:

‘இயேசு நமது ஏழ்மையை ஏற்று கொண்டு ஏழையானார்.”

சிலுவையில் ஏற்பட்ட பரிமாற்றம் மனிதனுடைய பாவத்தை தொடரும் உணர்ச்சிக்கடுத்த விளைவுகளின் துயரத்திற்கும் பரிகாரம் அளிக்கிறது. மீண்டும் இங்கு நாம் நன்மையையே அனுபவிக்கும்படி, இயேசு தீமையை ஏற்றுக்கொண்டார். நம்முடைய அக்கிரமம் நம்மேல் கொண்டு வந்த இரண்டு கொடுரமான காயங்கள் வெட்கமும், புறக்கணிப்புமாகும். இவைகள் இரண்டும் சிலுவையில் இயேசுவின்மேல் வந்தன.

வெட்கம் என்பது கேவலமான மனக்கவலையிலிருந்து அருகதையற்ற மனப்பான்மை வரை நீண்டதாய் இருக்கலாம். இது ஒருவனை தேவனுடனான அல்லது மனிதனுடனான அர்த்தமுள்ள ஐக்கியத்திலிருந்து பிரித்து விடுகிறது. இதற்கான பொதுவான காரணங்களில் ஒன்று நம்முடைய தற்கால சமுதாயத்தில் அடிக்கடி காணப்படுவது. பாலுணர்ச்சியை தகாதமுறையில் பயன்படுத்துதல் அல்லது பிள்ளைப்பருவத்தில் அனுபவித்த இடையூறு. இவைகள் அடிக்கடி காயத்தின் தழும்புகளை நம்மில் உண்டாக்குகிறது. இத்தழும்புகள் தேவகிருபையினால் மட்டுமே குணமடையக்கூடும்.

சிலுவையில் தொங்கிய இயேசுவைக்குறித்து சொல்லும்பொழுது எபிரெய நிருபத்தின் எழுத்தாளர், ‘அவமானத்தை எண்ணாமல் சிலுவையைச் சகித்தார்”, என்று கூறுகிறார். (எபிரெயர் 12:2). சிலுவை மரணம் எல்லாவித மரணங்களிலும் மிகவும் வெட்கத்திற்குரியது. இது கீழ்த்தரமான கைதிக்கே அளிக்கப்படும். சிலுவையில் அறையப்பட இருக்கும் நபரின் ஆடைகள் அனைத்தையும் எடுத்து விடுவார்கள். அவரின் நிர்வாணத்தை, கடந்து செல்பவர்கள் கண்டு சத்தமிட்டு கேலி செய்ய முட்படுவர். இப்படிப்பட்ட அவமானத்தின் உச்சக்கட்டத்தை இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போது அனுபவித்தார் (மத் 27:35-44).

இயேசு அனுபவித்த வெட்கத்திற்கு பதிலாக தேவனுடைய நோக்கமானது அவரில் நம்பிக்கை வைப்பவர்கள் அவருடைய நித்திய மகிமையில் பங்குகொள்ள வேண்டும் என்பதாகும். எபிரெயர் 2:10ல் அதன் எழுத்தாளர், ‘…. அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டு வந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை (அதாவது இயேசுவை) உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது” என்று கூறுகின்றார். இயேசு சிலுவையில் கசித்த அவமானம் அவரில் நம்பிக்கை வைக்கும் யாவருக்கும் அவர்களுடைய சொந்த அவமானத்திலிருந்து விடுபடும்படிக்கு வாசலைத் திறந்தது. அது மாத்திரமல்ல, நித்திய உரிமையினாலே, அவருக்குள்ளே மகிமையை நம்முடன் அவர் பகிர்ந்து கொள்ளுகிறார்!

அநேக நேரங்களில் வெட்கத்தைவிட அதிகமாக நம்மை வருந்தச்செய்யும் இன்னொரு காயம் உள்ளது. அது புறக்கணக்கப்படுதல் ஆகும். இது சாதாரணமாக முறிந்த உறவினால் உண்டாகிறது. இது ஆரம்ப நிலையில் தங்கள் பிள்ளைகளைப் புறக்கணிக்கும் பெற்றோர்களால் உண்டாகிறது. புறக்கணிக்கப்படுதல் கடுமையானதாக எதிர்மறையான வழிகளில் வெளிப்படுத்தப்படலாம். அல்லது அன்பு காட்டப்படாத நிலை ஏற்படலாம். கருத்தரித்த ஒரு பெண் தன் கருப்பையில் வளரும் குழந்தைக்கு விரோதமாக எதிர்மறையான எண்ணங்கள் அனுமதிப்பாள் என்றால் அந்த குழந்தை அநேகமாக புறக்கணிக்கப்புட்ட ஒரு மனநிலையில் பிறக்கும். அப்புறக்கணிப்பின் விளைவு அதனுடைய முதிhபருவம் வரை தொடர்ந்து கல்லறை வரை கூடச்செல்லும்.

புறக்கணிப்பின் நிமித்தமாக அடிக்கடி அநேக திருணமங்கள் தோல்வியைக் காண்கின்றன. இது ஏசாயா 54:6ல் கர்த்தருடைய வார்த்தைகளில் அழகாக படம் தீட்டப்பட்டுள்ளது:

‘கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம்பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார்.”

புறக்கணிக்கப்பட்ட காயத்திற்கு தேவன் தரும் மருந்து மத்தேயு 27:46, 50ல் சொல்லப்பட்டுள்ளது. இது இயேசு துயரத்தின் உச்சத்தில் கூறியதாகும்.
‘ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.”, ‘இயேசு, மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.”

உலக சரித்திரத்தில் முதல் முறையாக தேவகுமாரன் தன் தந்தையை நோக்கி கூப்பிட்டபோது அவர் ஒரு பதிலையும் பெறவில்லை. இயேசு மனிதனுடைய அக்கிரமத்தை முற்றிலும் ஏற்றுக்கொண்டதினால் விட்டுக்கொடுக்கமுடியாத தேவனுடைய பரிசுத்தமானது அவரை தன் சொந்த குமாரனையும் புறக்கணிக்கும்படியாக செய்தது. இவ்விதமாக இயேசு மிகவும் துன்பம் நிறைந்த புறக்கணிப்பை ஏற்றுக்கொண்டார். அது ஒரு தந்தையின் புறக்கணிப்பு. அதற்கு பின்பு உடனே அவர் மரித்தார். சிலுவையில் உண்டான காயங்களினால் அல்ல, உடைந்த உள்ளத்தினாலேயே. இவ்வாறாக அவர் சங்கீதம் 69:20ல் ‘நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது” என்று மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசன வார்த்தைகளை நிறைவேற்றினார்.

மத்தேயு இதைத் தொடர்ந்து எழுதும்போது, ‘அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கி, கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது” என்று எழுதுகின்றார். இது பாவமுள்ள மனிதன் பரிசுத்தமான தேவனுடன் நேரடியாக ஐக்கியம் கொள்வதற்கான வழி திறக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது. இயேசு புறக்கணிக்கப்பட்டதால் நாம் தேவனுடைய பி;ள்ளைகளாய் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு வழி பிறந்தது. இது பவுலினால் எபேசியர் 1:5-6ல் தொகுத்துக் கூறப்பட்டுள்ளது. ‘பிரியமானவருக்குள் தாம் (தேவன்) நமக்குத் தந்தருளின……… நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.” இயேசுவின் புறக்கணிப்பு நம்முடைய ஏற்றுக்கொள்ளுதலின் பலனாய் ஆனது.

வெட்கத்திற்கும், புறக்கணிப்பிற்கும் தேவனுடைய பரிகாரம் முற்காலத்தை விட நமது காலத்தில் மிகவும் அதிகம். தேவையாயுள்ள என்னுடைய கணிப்பின்படி இன்று அமெரிக்க நாட்டிலுள்ள வயது வந்தவர்களுள் குறைந்த கால் பகுதி வெட்கம் அல்லது புறக்கணிப்பின் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட மக்களுக்கு இயேசுவின் சிலுவையில் இருந்து பாயும் சுகத்தை காட்டுவதில் நான் அளவிடமுடியாத மகிழ்ச்சி கொண்டுள்ளேன்.

புறக்கணிப்பு, வெட்கம் ஆகிய இவ்விரண்டு உணர்வுகள் சிலுவையின் பரிமாற்றத்தில் ஏற்படுத்திய பலன் கீழே தொகுத்து கூறப்பட்டுள்ளது:

இயேசுவினுடைய மகிமையில் நாம் பங்குள்ளவர்களாகும்படி
அவர் நமது வெட்கத்தை ஏற்றுக்கொண்டார்.

நாம் தேவனுடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளப்படும்படி இயேசு
நம்மேல் வர இருந்த புறக்கணிப்பை ஏற்றுக்கொண்டார்.

இப்பரிமாற்றத்தை குறித்து மேலே ஆராய்ந்தோம். இந்த ஆய்வு எல்லா பகுதியையும் விளக்கியுள்ளது என்று கூறமுடியாது: எனினும் மனுக்குலத்தின் அடிப்படை முக்கியத்தை தேவைகளை சந்திப்பதாக உள்ளது. இந்த பரிமாற்றத்திற்கு அப்பாட்பட்ட சந்திக்கப்புட முடியாத மனித தேவை எதுவுமில்லை. உண்மையில் மனிதனுடைய முரட்டாட்டத்தில் விளைந்த அனைத்து தீய பலனும் இந்த பரிமாற்றத்தால் நீக்கப்படுகிறது: ‘நமக்கு நன்மை அளிக்கப்புடும்படி இயேசு மேல் தீமை வந்தது.” இந்த அடிப்படைத் தத்துவத்தை நாம் நமது வாழ்வில் செயல்படுத்த கற்றுக்கொள்வோமானால் நமது எல்லாத் தேவைகளும் தேவ உதவியினால் சந்திக்கப்படும்.

இப்பொழுது உன்னுடைய வாழ்க்கையில் பிரதானமாய்த் தேவையான, ‘சாபத்திலிருந்து விடுதலைபெறுவதற்” நீ இந்த மூல சத்தியத்தை பிடித்துக்கொள்ள வேண்டும். பவுல் பரிமாற்றத்தின் இந்த குறிப்பான பலனை கலாத்தியர் 3:13-14 கூறுகிறார்:

‘மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.”

‘ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக் குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று.”

பவுல் சிலுவையில் தொங்கினபோது உபாகமம் 21:23 ல் கூறப்பட்டுள்ள மோசேயினுடைய நீதிச்சட்டத்தை நடப்பித்தது என குறிப்பிடுகின்றார். அதன்படி ஒரு மரத்தில் (ஒரு மரக்கம்பத்தில்) அறையப்பட்ட எவனும் தேவனுடைய சாபத்திற்குள்ளாகின்றான். பின்பு இதன் பலனைக உண்டாகும் எதிரான கரியத்தை குறிப்பிடுகின்றார்: ஆசீர்வாதம்.

நாம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும்படி இயேசு சாபமானார் என்ற இந்த பரிமாற்றத்தின் பலனை ஒரு இறையியல் வல்லுநர் அலசி ஆராயத் தேவையில்லை.
இயேசுவின் மேல் வந்த சாபம் ‘நியாயப்பிரமாணத்தின் சாபம்” என்று விளக்கப்படுகிறது. உபாகமம் 28ல் அதிகாரத்தில் மோசே அளித்த பட்டியலின் சாபங்கள் அனைத்தையும் இது உள்ளடக்கி இருக்கிறது. இந்த சாபங்கள் ஒவ்வொன்றும் இயேசுவின் மேல் முழுமையாய் வந்தது. இவ்வாறாக இதற்கு சமமான முழு விடுதலையைப் பெறவும் அதற்கு ஏற்ற ஆசீர்வாதங்களுக்குள் செல்லவும் அவர் நமக்கு வழியை உண்டாக்கினார்.

இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்ததை ஒரு நிமிடம் கற்பனை செய்து பாருங்கள். அப்பொழுது சாபம் எவ்வளவு கொடுரமானது என்பதை நீ உணர்ந்துகொள்ளலாம்.

இயேசு அவருடைய சொந்த இனத்தாரால் புறக்கணிக்கப்பட்டார். சீஷர்களில் ஒருவனால் காட்டிக்கொடுக்கப்பட்டார். மற்றவர்களினால் கைவிடப்பட்டார். (சிலர் அவருடைய இறுதி வேதனையைப் பின்பற்ற மீண்டும் திரும்பினார்). அவர் பூமிக்கும் பரலோகத்திற்கும் இடையே ஆடையற்றவராய் தொங்கிக்கொண்டிருந்தார்.. அவருடைய சரீரமானது எண்ணிறந்த காயங்களின் வேதனையால் தாக்கப்பட்டது. அவருடைய ஆத்துமாவோ மனுக்குலம் அனைத்தின் பாவத்தினால் தொய்ந்து போனது. பூலோகத்தார் அவரை ஒதுக்கித்தள்ளிவிட்டனர். பரலோம் அவர் குரலுக்கு செவிசாய்கவில்லை. சூரியன் தன் ஒளியை குறைத்துக்கொள்ள இருள் அவரைச் சூழ்ந்தது. அவருடைய ஜீவ இரத்தம் தூசியான கல்லான மண்ணில் வடிந்தது. என்றாலும் அந்த இருளிலும் அவர் மரிப்பதற்கு முன்பு ‘எல்லாம் முடிந்தது!” (அது முடிந்தது) என்று அறுதியாக ஒரு வெற்றிக்குரலை எழுப்பினார்.

கிரேக்கத்திலே ‘அது முடிந்தது” என்னும் பதம் ஒரே ஒரு வார்த்தையினால் ஆனது. இது ‘ஒன்றை முற்றுப் பெறச்செய்வது அல்லது பரிபூரணப்படுத்துவது” என்னும் அர்த்தம் கொண்ட வினைச்சொல்லின் முற்றுப்பெற்ற காலமாகும். தமிழிலே இதை ‘முழுமையான முடிவு” எனவும் ‘பரிபூரணம் அடைந்த பரிபூரணம்” எனவும் கூறலாம்.
இயேசு தன் மேலே மனுக்குலத்தின் கீழ்ப்படியாமையையினால் வந்த தீய விளைவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டார். மீறப்பட்ட தேவ சட்டத்தினால் வந்த ஒவ்வொரு சாபத்தையும் அவர் ஏற்றுக்கொண்டார். அவருடைய கீழ்ப்படிதலினால் உண்டான ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் நாம் பெற்றுக்கொள்ளும்படி இதைச் செய்தார். இப்படிப்பட்ட தியாகம் அதன் நோக்கத்தில் வியப்பானது: எனினும் அதன் எளிமையில் அதிசயமானது.

இயேசுவின் இந்த தியாகத்தையும் அவர் உனக்காய் பெற்றுத் தந்த யாவற்றையும் விசுவாசத்துடன் உன்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா? குறிப்பாக, நீ ஒரு சாபத்தின் நிழலுக்குக் கீழாய் வாழ்ந்துகொண்டு இருப்பாய் என்றால் உனக்காக இயேசு செலுத்திய எல்லையற்ற விலைக்கிரயத்தால் உனக்கு முழு விடுதலை உண்டாயிருக்கிறது என்பதை காண்கிறாயா?

அப்படியென்றால், நீ உடனே செய்ய வேண்டிய ஒரு காரியமுண்டு. அது உன்னுடைய மெய்யான விசுவாசத்தை வெளிப்படுத்தும்படி ‘உமக்கு நன்றி” எனக்கூறுவதாகும்.
இதை இப்பொழுதே செய்! உமக்கு நன்றி! ஆண்டவராகிய இயேசுவே நீர் எனக்காய் செய்த யாவற்றிற்கும் உமக்கு நன்றி! நான் இதை முற்றிலும் புரிந்துகொள்ளாவிட்டாலும் நான் விசுவாசிக்கிறேன். நான் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன்! என்றுசொல்வீர்களாக.

இப்பொழுது தொடர்ந்து உன்னுடைய சொந்த வார்த்தைகளில் அவருக்கு நன்றியைத் தெரிவி. அவருக்கு நீ அதிகமாய் நன்றி செலுத்தும்போது அவர் உக்கு செய்ததை அதிகமாய் நீ விசுவாசிக்கிறாய் என்று பொருள். நீ அதிகமாய் விசுவாசிக்கும் பொழுது நீ அதிகமாய் அவருக்கு நன்றி செலுத்துவாய்.

“நன்றி செலுத்துவதே விடுதலையின் முதல்படி”