Home கட்டுரைகள் நமது பஸ்கா ஆட்டுக்குட்டி இயேசு கிறிஸ்து

நமது பஸ்கா ஆட்டுக்குட்டி இயேசு கிறிஸ்து

2218
0

நமது பஸ்கா ஆட்டுக்குட்டி இயேசு கிறிஸ்து

இஸ்ரவேலரின் பஸ்கா

பஸ்கா என்னும் சொல் பாசாக் என்னும் எபிரேயச் சொல்லிலிருந்து எழுகிறது. இச்சொல் ‘நொண்டுதல்”, ‘குதித்தல்”, ‘சாடுதல்” என்று பொருள்படும் (2சாமு 4:4, 1இரா 18:21). இப்பெயர் பஸ்காவின் பண்டைய சடங்கு ஒன்றிலிருந்து எழுந்திருக்கலாம். அச்சடங்கில் நொண்டி அல்லது குதித்து ஆடுவது ஒரு அம்சமாக இருந்திருக்க வேண்டும். ஆசாரியப் பாரம்பரிய ஆசிரியர் இச்சொல்லை இங்கு யாவேயின் ‘கடந்துபோதலோடு” தொடர்புபடுத்தி விளக்குகிறார் (யாத் 12:13,23,27). பஸ்கா ஆட்டின் இரத்தம் தோய்க்கப்பட்ட வீடுகளை யாவா கடந்துபோகிறார்.

இந்த ஆசரிப்பில் பஸ்கா ஆடு முக்கிய இடம் பெறுகிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு ஆடு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இது முதல் மாதத்தில் பத்தாவது நாள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்: பழுதற்றதாக, ஒரு வயது ஆண் குட்டியாக இருக்கவேண்டும். பதினான்காம் நாள் மாலை எல்லா இஸ்ரவேலரும் ஒன்றுபோல், ஒரே நேரத்தில் இதனைப் பலியிட வேண்டும். அதன் இரத்தத்தை எடுத்து வாசலின் இரு நிலைகளிலும் மேல் நிலையிலிம் தேய்க்கவேண்டும். அந்த வீட்டினுள் பஸ்கா ஆசரிக்கப்படும். அன்று இராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதனைப் புசிக்க வேண்டும்: பச்சையும், தண்ணீரில் அவிக்கப்படதாயும் அதனைப் புசிக்கக்கூடாது. ஒரு ஆட்டுக்குட்டி ஒரு குடும்பத்தினருக்குக் கூடுதலாக இருந்தால், அதனை அடுத்த வீட்டாரோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். அப்படியும், அதில் மீதியிருக்குமானால், அதனை விடியற்காலம் மட்டும் வைக்கக்கூடாது. மீதியாய் இருக்கிறதை அக்கினியால் சுட்டெரிக்கவேண்டும். அதை, அரைகளில் கச்சைக் கட்டிக்கொண்டும், கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், கையில் தடி பிடித்துக்கொண்டும் தீவிரமாய்ப் புசிக்க வேண்டும். இது, கடவுள் எவ்வளவு தீவிரமாய் இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டார் என்பதைக் குறிப்பிடும்.

மேலே குறிப்பிட்ட ஆசாரங்களில் இரண்டு முக்கிய அம்சங்கள் நம் கவனத்திற்குரியவை: முதலாவது, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல், இரண்டாவது, மக்களின் பிணைப்பு. பஸ்கா ஆடு ஒரு குடும்பத்திற்குக் கூடுதலாக இருந்தால், அதனை அடுத்த குடும்பத்தோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். கூடுதலாக இருப்பதைப் பகிர்தல் இங்கு நியதியாக கொடுக்கப்படுகிறது: இயேசு, இந்த நியதியும் தாண்டிச் செல்கிறார். தன்னை வெறுமையாக்கிப் பகிர்தலை வாழ்க்கை நியதியாகத் தருகிறார். இரண்டாவது அம்சம், மக்களின் பிணைப்பு. இங்கு இந்த மக்களைப் பிணைப்பதற்குக் காரணமாக அமைந்தது என்ன? இரு அம்சங்கள். அவர்கள் அனைவரும் அனுபவித்த துன்பம் – துன்பப் பிணைப்பு, துன்பக் குரலைக் கேட்கும் கடவுள்பேரில் உள்ள அவர்கள் பொதுவான கடவுள் நம்பிக்கை. பஸ்கா ஆட்டைத் தெரிந்துகொள்ளல், பலியிடல், புசித்தல் ஆகிய கூட்டுச் செயல்கள் மூலமாக அவர்கள் தங்கள் துன்பப் பிணைப்பையும், நம்பிக்கைப் பிணைப்பையும், யாவா நடத்துதலுடன் துன்ப நுகத்தடியை முறித்தெறிந்து விடுதலை பெற்றுச் சொல்லும் தங்கள் முடிவையும் வெளிப்படுத்தினர். இந்த இரு பிணைப்புகளும் – துன்பப்பிணைப்பு, நம்பிக்கைப் பிணைப்பு அவர்கள் விடுதலைக்கு வழிவகுத்தது. இப்படியாகப் பஸ்கா, அடிமைகளாயிருந்த இஸ்ரவேல் மக்கள், ஒடுக்குதலின் வீடாகிய எகிப்தைவிட்டு, விடுதலையின் கடவுளாகிய யாவாயின் நடத்துதலுடன் புறப்பட்டு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நம்பிக்கையின் நாட்டை நோக்கி முன்னேறிச் செல்வதைக் குறிக்கும் ஒரு நியமமாயிற்று.

இந்தப் பலியில் பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் முக்கிய இடம் வகிக்கிறது. இரத்தத்தின் ஆற்றலைக் குறித்த நம்பிக்கைகள் வெகு பழமையானது என்று கண்டோம். இஸ்ரவேலர் இரத்தத்தை உயிரின் இருப்பிடமாகக் கொண்டனர் (லேவி 17:11-14). பலியிடப்படும் மிருகத்தின் இரத்தம் யாவேக்காக தெளிக்கப்பட்டது அல்லது வார்க்கப்பட்டது, அல்லது பூசப்பட்டது: இந்த இரத்தத்திற்குப் பக்தர்களுடைய பாவங்களைப் போக்கி யாவேயின் கோபத்தைத் தணிக்கும் ஆற்றல் உண்டு என்று நம்பப்பட்டது: அத்துடன் மக்களைத் தீமைகளுக்கு விலக்கிக் காக்கும் ஆற்றல் உண்டு என்றும் நம்பப்பட்டது. இங்கு வீட்டு வாசல் நிலைக்கால்கள் இரண்டிலும், மேல் சட்டத்திலும் பூசப்பட்ட பஸ்கா ஆட்டின் இரத்தம் அந்த வீட்டினுள் இருந்த அனைவரையும் சங்காரத்திலிருந்து பாதுகாத்தது என்று காண்கிறோம் (யாத் 12:13). எகிப்தியர் தலைப்பிள்ளைகளைச் சங்குரிக்கும்போது யாவே இரத்தம் பூசப்பட்ட இஸ்ரவேலர் வீடுகளைக் கடந்து செனறு;hர் (பஸ்கா). அதாவது பஸ்கா ஆட்டின் இரத்தத்தின் மூலம் இஸ்ரவேலர் காப்பாற்றப்பட்டனர். இயேசு நாதரின் மீட்பின் பணி இதே அடிப்படையில் புதிய ஏற்பாட்டில் விளக்கப்படுவதைக் காணலாம்.

( இயேசுகிறிஸ்துவின் இரத்தம் புதிய ஏற்பாட்டு இறையியல் சிந்தனையில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. இச்சிந்தனையின் தோற்றம் பழங்கால மக்களின் வளர்ச்சியடையாத சமயச் சிந்தனைகளில் காணப்பட்தாகப் பார்க்கிறோம். இச்சிந்தனை இன்று இயேசுவின் மீட்பின் பணியை விளக்கப் பயன்படுத்தப்படுகிறது. இங்கு நமக்கு ஒரு கேள்வி. இன்று பிற சமய மக்களிடையில் காணப்படும் இதனைப் போன்ற நம்பிக்கையும், வழக்குகளையும் நாம் எந்தக் கண்களுடன் காண்கிறோம்? எவ்வாறு புரிந்து கொள்கிறோம்?)

‘பதலீடு” இப்பலியின் ஒரு முக்கிய அம்சம். இஸ்ரவேலர் நம்பிக்கையின்படி முதல் பிறந்த ஆண்கள் அனைத்தும் கடவுளுடையது. கன்று காலிகளின் முதல் பிறப்புக்கள் பலியிடப்படவேண்டும் (யாத் 13:2): ஆனால் ஆண் குழந்தைகள் பதிலீட்டுப் பலியால் மீட்கப்படவேண்டும் (யாத் 13:13). இங்கு எகிப்தியர்களின் தலை ஆண் குழந்தைகள் யாவும் யாவேயின் கோபத்தால் சங்கரிக்கப்பட்டன (யாத் 12:29): ஆனால் இஸ்ரவேலரின் குழுந்தைகள் பஸ்கா ஆட்டின் பலியால் மீட்கப்பட்டன (யாத் 13:14-15).

பஸ்கா பதிலீட்டுப் பலி இஸ்ரவேலரைத் தனித் தனியாக மட்டுமல்ல, இஸ்ரவேல் யாவேயுடைய தலைப்பிள்ளை, ‘சேஷ்ட புத்திரன்” (யாத் 4:33): பஸ்பா பலியின் மூலமாக இஸ்ரவேல் மக்கள் முழுமையாக மீட்டுக்கொள்ளப்பட்டனர்.

பஸ்கா ஆடு நெரும்பினல் சுடப்பட வேண்டும்: மீதி இருப்பது முழுவதுமாக எரிக்கப்பட வேண்டும். இதன் பொருள் என்னவென்றால், இந்தப் பலி உணவு முழுமையாக கடவுளுக்கு உரியது என்பதாகும். இந்த பஸ்கா பலி எபிரேயத்தில் ஓலா என்ற வகையைச் சார்ந்த தகன பலிகளைச் சார்ந்ததாகும். இப்பலிகள் கடவுளுக்கென்று முழுமையாக எரிக்கப்பட்டன. ஆகையால் இவ்வகை பலிகள் சர்வாங்க (எபிரேயத்தில் காலீல்) பலிகள் என்றும் அறியப்பட்டன (1சாமு 7:9, உபா 33:10, சங் 51:21). இப்படி முழுமையாக எரிப்பதன் பொருள் என்ன? இப் பலி உணர்வு முழுமையாக யாவேக்குரியது என்பதே பொருள். கடவுளுக்கு உரியது எதுவும் பரிசுத்தமானது: ஆகையால், அது மனித உபயோகத்திற்கு விலக்கப்பட்டது. அதனால் சர்வாங்க தகனபலிகள் யாவும் முழுமையாக எரிக்கப்பட்டன. ஆனால் பஸ்கா பலி இதற்கு ஒரு விதிவிலக்கு. இங்கு இஸ்ரவேல் மக்கள் இப்பலி உணவில் பங்குகொள்ளலாம்: அதாவது கடவுளின் உணவில் பங்குகொள்ளலாம். இது கடவுளோடு ஐக்கிய உறவுகொள்வதை, அவருடைய ஆட்சியில் பங்கு கொள்வதைக் குறிக்கிறது. பஸ்கா பலியைப் புசிப்பதின் மூலமாக இஸ்ரவேல் மக்கள் கடவுளுடன் ஆன்மீக ஐக்கியம்கொள்ளுகின்றனர். இப்படியாக இஸ்ரவேல் திருச்சபை, கடவுளுடைய ‘சேஷ்ட புத்திரன்” , பஸ்கா ஆட்டின் இரத்தம் சிந்துதலின் மூலமாக விடுதலை பெற்றது. புனிதமாக்கப்பட்டது, பஸ்கா உணவின் மூலமாகக் கடவுளுடன் இணையுறவு பெற்றது.

பஸ்காவின் இந்த ஆன்மீக அனுபவம் மக்களின் அரசியல் விடுதலைக்கு வழிநடத்தினது. இஸ்ரவேல் மக்களுக்கு அடிமைத் தனத்திற்கும் ஒடுக்குதலுக்கும் உரிய இடமான எகிப்தை விட்டு புறப்பட்டுச் செல்ல ஆற்றல் அளிப்பதாகக் காணப்பட்டது. இங்கு எகிப்து மக்களை அடிமைப்படுத்தி ஒடுக்கும் உலக அரசாரங்களின் ஒரு சின்னமாகக் குறிப்பிடப்படுகிறது. கடவுளின் முதல் பிள்ளையான இஸ்ரவேல் இந்த ஒடுக்குதலின் அதிகாரத்தை விட்டு விலகி ஓடவேண்டும்: எகிப்தின் வழிகளை எப்பொழுதுமே பின்பற்றக்கூடாது (உபா 16:15, 15:11-12, 24:18-22). எகிப்தில் ‘இறைச்சிப் பாத்திரங்கள் அண்டையில் உட்கார்ந்த” நாட்களை நினைத்துப் பார்ப்பதே (யாத் 16:3) கடவுளுக்கு விரோதமான பாவம். அடிமைத்தன வீடாகிய எகிப்தைவிட்டு விலகுவதின்மூலம், இஸ்ரவேல் கடவுளின் மீட்பின் வரலாற்றில் பிரவேசிக்கிறது: நீதியும் சமாதானமும் நிலவும் வாக்குத்தத்த வருங்காலத்திற்கு நேராக நடைபோடுகிறது (ஏசா 11:1, மீகா 4:1).

புளிப்பில்லாத அப்பத்தைப் புசித்தல் (யாத் 12:39), கடவுள் அருளும் விடுதலையின் அவசரநிலையைக் குறிக்கிறது: அடிமைத்தனத்திலும், ஒடுக்குதலிலும் இருக்கும் மக்கள் உடனடி விடுதலை செய்யப்படவேண்டும். மக்கள் இம்மட்டும் அனுபவித்துவந்த அநீதி, ஒடுக்குதல், அடிமைத்தனம், துன்பம், அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளன. சுதந்திரம், நீதி சமாதானம் ஆகிய மூன்றும் ஒன்றையொன்று தழுவிக்கொள்ளும் புது யுகம் பிறந்துள்ளது. புளிப்பில்லாத அப்பம் புது யுகத்தின் அப்பம்: அது இயங்கிக்கொண்டிருக்கும் மக்களின் அப்பம்: இவ்வுலகமே எல்லாம் என்று இங்கேயே பொருளையும் அதிகாரத்தையும் குவித்துக்கொள்ளும் மக்களின் அப்பமல்ல. கடவுளுடைய பிள்ளைகள் இவ்வுலகில் பயணிகளைப் போன்றவர்கள்: கடவுளுடைய சித்தத்தைச் செய்து நிறைவேற்றிக் கடந்துசெல்ல அழைக்கப்பட்டவர்கள். பஸ்காவைப் புசிப்பதின்மூலம் இஸ்ரவேல் மக்கள் தங்கள் வாழ்க்கையின் தத்துவத்தை உணர்ந்துகொள்ளக் கடமைப்பட்டனர். உலகத்தின் அநீதியான போக்குகளில் பங்குகொள்ளாதிருக்கக் கடமைப்பட்டனர்: புளித்த மாவின் நாடான எகிப்தை விட்டு விலகி ஓட அழைக்கப்பட்டனர்.

யூத ஏடான பெசாகீம் (யாத்12:8) கசப்பான கீரை இஸ்ரவேலர் எகிப்தில் அடைந்த துன்பத்தை நினைவுபடுத்துவதாக குறிப்பிடுகிறது. கடந்த காலப் பாடுகளை மட்டுமல்ல, இஸ்ரவேல் கடவுளுடைய தாசனாக வருங்காலத்தில் எதிர்நோக்கு வேண்டிய பாடுகளையும் கசப்பான கீரை குறிப்பதாகக் கொள்ளலாம். இந்த உண்மையை இஸ்ரவேல் அடிக்கடி மறந்துவிட்டது: இதுவே இஸ்ரவேல் கடவுளை விட்டு விலகி அடிக்கடி முறுமுறுப்பதற்குக் காரணம்.

பஸ்கா ஆசரிப்பு முழுவதுமே ஒரு நினைவுகூருதல் நியமம் (யாத் 12:14). கடவுளின் விடுதலையைப்பற்றிய செய்தியைத் தலைமுறை தலைமுறையாக மக்களுக்குப் பஸ்கா நினைவுபடுத்துகிறது: கடவுள் ஒடுக்கப்பட்ட மக்களின் கூக்குரலைக் கேட்கிறார்: ஒடுக்கப்பட்டோர் சார்பாக ஒடுக்குகிற அதிகாரங்களை எதிர்த்துப் போராடி மக்களுக்கு விடுதலையளிக்கிறார் (யாத் 12:24-28) என்பதே இச்செய்தி.
இப்படியாக பஸ்கா ஆசரிப்பில் இஸ்ரவேல் மக்கள் பின்வரும் உண்மைகளைக் கண்டனர்:

– பாவமன்னிப்பு, சுத்திகரிப்பு.

– கடவுளுடன் ஐக்கிய உறவு.

– ஒடுக்கும் அதிகாரத்திலிருந்து விடுதலை, வாக்குத்தத்த நாட்டுக்கு நேரான வழிநடத்துதல்.

– கடவுளுடைய முதற்போறான குமாரனாக இருந்து மற்றும் மக்களுக்குக் கடவுளின் விடுதலையைச் கொடுத்தல்.

– கடவுள் ஒடுக்கப்பட்டோர் கூக்குரலுக்குச் செவிசாய்த்து, அவர்கள் பக்கமாக நின்று போராடி விடுதலையளிக்கிறவர் என்ற செய்தியைப் பின்வரும் சந்ததியினருக்கு எடுத்துச் சொல்லல்.

இஸ்ரவேல் தெரிந்துகொள்ளப்பட்டது, அது பெரிய ஜனம் என்பதாலோ, மற்றவர்ளைவிட நீதி நிறைந்த ஜனம் என்பதாலோ அல்ல (உபா 7:7, 9:5): மக்கள் படும் துன்பத்தைப் பார்த்து கடவுள் அவர்கள்மேல் அன்புவைத்ததே காரணம் (உபா 7:8). தன்னில் ஆங்காரமும், பெருமையும் அடையாதிருக்க, இஸ்ரவேல் இந்த வரலாற்று உண்மையை ஒருபோதும் மறுக்கக் கூடாது (உபா 8:11, 10:9).. கடவுள் இஸ்ரவேலை அதன் சொந்த நன்மைகளுக்காக மட்டும் தெரிந்துகொள்ளவில்லை: ஆனால் உலகில் தன் சித்த்தைச் செய்து நிறைவேற்றNவு கடவுள் இஸ்ரவேலைத் தெரிந்துகொண்டார் (ஏசா 42:6). தன் அழைப்பின் இந்தத் தத்துவத்தை இஸ்ரவேல் அடிக்கடி மறந்துவிட்டது. ஆகையால் கடவுளை விட்டுத் தூரம் போனது. தன் அழைப்பை எப்பொழுதும் தனக்குரிய ஒரு சலுகையாகவே புரிந்துகொண்டது: உலகில் தனக்குள்ள பொறுப்பை மறந்துவிட்டது: ஆகையால் கடவுள் கூறுகிறார்: ‘இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை சிநேகித்தேன்: எகிப்பதிலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன். அவர்கள் தங்களை அழைக்கிறவர்களின் முகத்துக்கு விலக்கி போய்விட்டார்கள்…….” (ஓசியா 11:1). தன் அழைப்பில் தவறினதால் இஸ்ரவேல் தண்டனைக்குப் பாத்திரமானது: ‘பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்துகொண்டேன்: ஆகையால் உங்களுடைய எல்லா அக்குpரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன்” (ஆமோஸ் 3:2). இஸ்ரவேல் எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்டு, அழைக்கப்பட்டது பணிசெய்வதற்காக, கடவுளின் மீட்பின் பணியில் பங்கு கொள்வதற்காக: நீதியும் சமாதானமும் நிறைந்த கடவுளின் ஆட்சியை நிறுவுவதற்காக. ஆனால், இஸ்ரவேல் இந்தத் தன்னுடைய பொறுப்பில் தவறினது. ஆகையால் கடவுளின் மீட்பின் சித்தம், அவருடைய குமாரனின் வருகைக்காகக் காத்திருக்க வேண்டியதாயிற்று.

இயேசுவின் பஸ்கா

யூதா வம்சத்தில் பிறந்த இயேசு பஸ்காவைப்பற்றிய யூத நம்பிக்கைகள் அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும். அவர் பஸ்கா ஆசரிப்பில் ஒழுங்காகப் பங்கு கொண்டுவந்துள்ளதாகச் தெரிகிறது (லூக் 2:41, யோவா 2:13, 23, 6:4). பஸ்காவை மையமாக வைத்து அவர் தன்னுடைய பணியைக் குறித்து சிந்தனை செய்திருக்க வேண்டும். பஸ்காவின்மூலம் அவர் தன்னுடைய பணியைப் பற்றி ஒரு தெளிவைப் பெற்றதாகத் தெரிகறிது. கடவுளுடைய மீட்புப் பணியில் தன்னுடைய பங்கை பஸ்கா ஆட்டுக்குட்டியில் காண்கிறார். பஸ்கா ஆட்டுக்குட்டி இஸ்ரவேலர் மீட்புக்கரிய பதிலீட்டுப் பலியானதுபோல, இயேசு கிறிஸ்துவும் உகதை மீட்கும் பதிலீட்டுப் பலியானார் (மதற் 10:45). யோவான்ஸ்நானன் இயேசுவை, ‘இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று அறிமுகப்படுத்துகிறார் (யோவா 1:29, 36). யோவான் அப்போஸ்தலர் இயேசுவைப் பழுதற்ற பஸ்கா ஆட்டுக்கட்டியாகக் காண்கிறார். ஏனெனில் அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படவில்லை. (யோவா 19:33, 36: யாத் 12:5, 46: எண் 9:12, சங் 35:20). பேதுரு நிருப ஆசிரியரும் அவ்வாறே காண்கிறார்: ‘குற்றமற்ற மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து” (1பேதுரு 1:19). பவுலடியார் ‘கிறிஸ்துவாகிய நமது பஸ்காப் பலி ஏற்கெனவே செலுத்தப்பட்டதாயிற்று….” என்கிறார் (1கொரி 5:7). இயேசு கிறிஸ்து பஸ்கா ஆட்டுக்கட்டி என்ற கருத்து தரிசன ஆகமம் (வெளிப்படுத்தின விசேஷம்) முழுவதிலும் அடிக்கடி தொடர்ந்து வருகிறது.

மாற்கு 14:12-26 (மத் 26:17-19, ,லூக் 22:7-13) இல் இயேசு இவ்வுலகில் ஆசரித்த கடைசி பஸ்காவைக் குறித்த வரலாற்றைக் காண்கிறோம். இந்தப் பஸ்கா ஆசரிப்பில் இயேசு தம்மையே பஸ்கா ஆட்டுக்கட்டியாக கொடுக்கிறார். அப்பத்தின் மூலமாகவும், திராட்சை இரசத்தின் மூலமாகவும் தமது உடலையும், இரத்தத்தையும் அடியார்களுக்குக் கொடுத்து தூய இராப்போஜனம் என்ற நினைவு நியமத்தை நிறவுகிறார். இப்படியாக இந்த இராப்போஜனம் புதிய இஸ்ரவேலின், அதாவது கிறிஸ்துவுக்குள்ளாக எழும் புதிய சபையின் பஸ்காவாகிறது. இந்தப் பஸ்காவின் பலியாட்டுக்குட்டி இயேசு கிறிஸ்துவே. இதனை ஆசரிப்பதின்மூலம் அவருடைய சிலுவை மரணம் அவருடைய வருகைமட்டும் கூறி அறிவிக்கப்படுகிறது. இயேசுகிறிஸ்துவாகிய இந்தத் தெய்வீக உணவை உட்கொள்கிறவர்கள் பசியடைவதில்லை. தாகமடைவதில்லை (யோவா 6: 35-58).

புதிய ஏற்பாட்டுப் பக்கதர்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தில் பெரும் முக்கியத்துவத்தைக் காண்கிறார்கள். இதனை நாம் பஸ்காப் பலியின் பின்னணியிலேயே புரிந்துகொள்ள முடியும். முதற்கண், இயேசு கிறிஸ்து சிந்தின இரத்தம் புதிய உடன்படிக்கையின் இரத்தம் (மாற் 14:24, மத் 26:28, லூக் 22:10, 1கொரி 11:25, எபி 9:20, 13:20). இந்த உடன்படிக்கை மனிதருக்கும் கடவுளுக்கும் இடையிலிருந்த பிரிவை அகற்றி உறவை உண்டாக்குகிறது ( எபே 2:13-16, கொலோ 1:20): இயேசுவின் இரத்தம் மக்ளை விடுதலை செய்கிறது (1பேது 1:18): மக்களின் பாவங்களைக் கழுவி சுத்திகரிக்கிறது (எபி 13:12, 1பேது 1:2, 1யோவா 1:7, வெளி 1:5). இரத்தம் பூசப்பட்ட வீடுகளைக் கண்டு யாவே கடந்து சென்றதுபோல, இயேசுவின் இரத்தத்தினால் கடவுள் நமது கடந்த கால பாவங்களைக் கடந்து செய்கிறார் (ரோம 3:25). கடவுள் தமது சொந்த இரத்தத்தினாலே, அதாவது தமது திருக்குமாரனுடைய இரத்தத்தினாலே திருச்சபையைச் சம்பாதித்துக்கொண்டார் (அப் 20:28).

இயேசு தன்னைப் பஸ்கா ஆட்டுக்கட்டியாக உலகின் மக்களுக்குக் கொடுக்கிறார்: ‘நீங்கள் மனுஷக்குமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமல் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. நான் அவனைக் கடைசி நாளில் எழும்புவேன். என் மாம்சத்ம் மெய்hன போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. என் மாமிசத்தைப் புசித்து என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னில் நிலைத்திருக்கிறான். நானும் அவனில் நிலைத்திருக்கிறேன்.” என்றார் (யோவா 6:53-56). இஸ்ரவேல் பஸ்காவைப் போலவே, இங்கும் கிறிஸ்துவாகிய பஸ்கா உணவில் பங்கு கொள்கிறவர்ள் கிறிஸ்துவோடும், தந்தையாகிய கடவுளோடும் ஐக்கிய உறவு கொள்கிறார்கள்.

முன்னாள் பஸ்பாவைப்போலவே இதுவும் ஒரு நினைவு நியமமாகிறது (லூக் 22:19, 1கொரி 11:23-26). பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்து தன்னைத்தானே பலியாகச் சிலுவையில் ஒப்புக்கொடுத்தலை நினைவுகூரும் நியமம்: ‘ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்” (1கொரி 11:26).

இப்படியாக புதிய ஏற்பாடு இயேசுகிறிஸ்துவை எல்லா அம்சங்களிலும் ஒரு பஸ்கா ஆட்டுக்குட்டியாகக் காண்கிறதாகப் பார்க்கிறோம். அவருடைய சிலுவை மரணம் மக்கள் விடுதலைக்கான பஸ்கா பலி.

ஆனால் இயேசு கிறிஸ்துவின் பஸ்கா பலிமுன்னாள் பஸ்காவைக் கடந்து செல்கிறது. அடிக்கப்பட்ட பஸ்கா ஆட்டுக்குட்டி அழிந்துபோகவில்லை: மரணம் அதனை மேற்கொள்ளமுடியவில்லை. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தா. இதுவே புதிற ஏற்பாட்டுப் பஸ்காவின் சிறப்பு. முன்னாள் பஸ்காவில் பஸ்கா ஆட்டுக்குட்டி திரும்பவும், திரும்பவும் அடிக்கப்பட்டது: ஆனால் இயேசுவாகிய பஸ்கா ஆட்டுக்குட்டி உலகத்தின் பாவத்திற்காக ஒரேதரம் அடிக்கப்பட்டார். அவரது உயிர்த்தெழுதல், பாவம், மரணம் ஆகியவற்றின் கூர் ஒடித்தது. இயேசு அவற்றின்மேல் வெற்றி கொண்டார் என்ற உண்மையை அறிவிக்கிறது. விசுவாசத்தின்மூலம் அவருடைய மரணத்திலும், உயிர்த்தெழுதலிலும் பங்கு கொள்குpறவர்கள் யாவரும் பாவ மன்னிப்படைவார்கள். மரணத்தின்மேல் ஜெயம் பெறுவார்கள். இனிமேல் இன்னொரு பஸ்கா ஆட்டுக்குட்டி அடிக்கப்பட வேண்டியதில்லை. இப்படியாக, இஸ்ரவேலரின் பஸ்கா எதிர்பார்த்தவற்றையெல்லாம் இயேசு, தன் பஸ்காவில் நிறைவேற்றி, எல்லாக் காலத்திற்கும், எல்லா மக்களுக்கும் உரிய ஒரே பலியாகத் தன்னையே தருகிறார். பாவங்களினாலும், பாவ விளைவுகளினாலும் துன்புறும் எல்லா மக்களுக்கும் விடுதலையளித்து, அவர்கள் கடவுளோடும் உடன் மக்களோடும் ஒப்புரவாகி வாழ வழிவகுக்கிறார்.