Home செய்திகள் இரட்சிப்பின் வெளிப்பாடுகள் யாவை?

இரட்சிப்பின் வெளிப்பாடுகள் யாவை?

2314
0

இரட்சிப்பின் வெளிப்பாடுகள் யாவை?

மரமானது அதின் கனியினால் அறியப்படும் என்றார் இயேசு. நல்ல மரம் கெட்ட கனிகொடாது. கெட்ட மரம் நல்ல கனி கொடாது. போலி அனுபவங்கள் நிறைந்துள்ள இக்காலத்தில் சரியானதொரு இரட்சிப்பின் அனுபவத்தை எவ்விதம் அடையாளம் கண்டுகொள்ளலாம் என்று இங்கு கவனிப்போம்.

முதலாவது, பரிசுத்த ஆவியானவர் மூலாக இருதயத்தில் மெய்யான சமாதானமும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

தேவனோடு சமாதானமானவன் தேவ சமாதானத்தைப் பெறுகிறான். அதை உலகம் தரமுடியா சமாதானம் என்று இயேசு அழைத்தார். அது அவரது சமாதானமேயாம். பாவத்தின் பாரம் நீங்கிற்று! குற்றவுணர்வு அகன்றது! அடிமைத்தனம் தொலைந்தது! பயம் பறந்தது! இப்பொழுது சமாதானம் நதியைப்போல் இருதயத்தில் பாய்கிறது. இனி ஆக்கினைத் தீர்ப்பு இல்லை. நித்திய ஜீவன்!

மனந்திரும்புகிற ஒரு பாவியினிமித்தம் பரலோகத்திலுள்ள தூதர்களிடையே அவ்வளவு சந்தோஷம் உண்டாகும்.

இரண்டாவது, பாவத்தையும் உலகத்தின் பொல்லாத வழிகளையும் இரட்சிக்கப்பட்டவன் வெறுக்கத் துவங்குகிறான்.

‘ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான்: பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் பதிதாயின. இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது.”

விரும்பமாய், தாரளமாய், முன்பு செய்து வந்த பாவச்செயல்கள் இப்பொழுது அவனுக்கு வெறுப்பாய்த் தோன்றுகின்றன. பேரின்பம் பெற்றுவிட்டதால் சிற்றின்பத்தில் நாட்டமில்லை. மனம்போல் மனம் விரும்பியதையெல்லாம், கட்டுப்பாடின்றி செய்து வந்த அவன் இப்பொழுது ‘நான் ஆண்டவருக்குச் சொந்தம், அவருக்கே அடிமை” எனக் கூறி பிசாசின் தூண்டுதலுக்கும் உலகக் கவர்ச்சிக்கும் ‘இல்லை” என்று பதில் சொல்லிவிடுகிறான்.

துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடக்கவும், பாவிகளுடைய வழியில் நிற்கவும், பரியாசக்காரர் உட்காருமிடத்தில் உட்காரவும் இப்பொழுது அவனுக்கு விருப்பமுமில்லை. நேரமுமில்லை.

இப்படிச் சொல்லுவதால் அவன் பாவம் எதுவுமே செய்யமாட்டான் என்று பொருளல்ல. இரட்சிக்கப்படுமுன் அவன் ஒரு பன்றி சாக்கடை என்றால் அவ்வளவு பிரியம். அதிலேயே கிடப்பான். இப்பொது அவன் ஒரு ஆட்டுக்குட்டி. யாராவது ஆட்டுக்குட்டியை பிடித்துச் சகதியில் தள்ளிவிட்டாலும், அது உடனே கதறிக்கொண்டு வெளிவந்துவிடும். மேய்ப்பன் கழுவிவிடுவான். வேறுபாடு புரிந்துவிட்டதா?
மூன்றாவது, வேதத்தின் மீதும், ஜெபத்தின் மீதும், தேவப்பிள்ளைகளின் ஐக்கியத்தின் மீதும் இரட்சிக்கப்பட்டவனுக்கு ஒரு தனிப்பிரியம் உண்டாகும்.

ஏதோ ஒரு கடமைக்காக ஒரு சில வசனங்களைத் தினமும் வாசிக்கும் பழக்கம் போய், வேதத்தை மணிக்கணக்காய் உட்கார்ந்து தியானிக்க வேண்டும் என்ற வாஞ்சை உண்டாகிறது. திருவசனத்தைப் பாய் விரும்பும் குழந்தையைப்போல் விரும்பிச் சுவைக்கிறான். வேதத்தின் ஒவ்வொரு பக்கமும் தேவனே நேரடியாக அவனோடு பேசுவதுபோல் இருக்கிறது. பல பகுதிகள் அவனுக்கு முதலிலேயே விளங்கி வீடுவதில்லை. ஆனால் வசனத்தில் விருப்பம் தணிவதில்லை. விசுவாசம் குறைவதில்லை. இதற்குக் காரணம் என்ன தெரியுமா? ‘அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனமாகிய அழிவில்லாத வித்தினாலேயே” அவன் மறுபடியும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறான்.

இனம் இனத்தோடு சேரும் என்பார்கள். இவ்வுலகில் இரு இனம்தான் உண்டு. இரட்சிக்கப்பட்டோர். இரட்சிக்கப்படாதோர். தேவப் பிள்ளைகள், பிசாசின் பிள்ளைகள். பரலோகப் பிரஜைகள், நரகம் செல்லுவேம். இரட்சிக்கப்பட்டவர்களின் கூட்டத்திற்கே சபை என்றுபெயர். இதை அப் 4:47 இல் காண்கிறோம்.

நான்காவதாக, இரட்சிக்கப்பட்டவர்கள் பிறர்மீது அன்புடனும் பாசத்துடனும் நடந்துகொள்ளுவார்குள். தவறிழைத்தவரோடு காரியங்களைச் சரிசெய்வார்கள்.

இருதயத்தில் ஊற்றப்பட்ட தேவ அன்பினால் பிறரையும் பயன்கருதாது நேசிக்கத் துவங்குவோம். சத்துருக்களையும், துன்புறுத்துவோரையும், எதிர்க்கிறவர்ளையும் நேசிப்பதே பரந்த இருதமுடிடைய அதே பிதாவுக்கு நாம் பிள்ளைகள் என்பதற்கு நிரூபணமாகும். தேவனிடம் அன்புகூருவது முதல் கட்டளையானால் மனிதரிடம் அன்புகூருவது அதற்கிணையான இரண்டாம் கட்டளையாகும்.

இரட்சிப்பில் கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்ட மனச்சாட்சியைப் பெற்றுக்கொண்ட நாம் அம்மனச்சாட்சியை தேவனுக்கு முன்பாக மட்டுமல்ல மனிதருக்கு முன்பாகவும் குற்றமற்றதாகக் காத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.