Home செய்திகள் மனிதத் தன்மை

மனிதத் தன்மை

2707
0
மனிதத் தன்மை
‘குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து”

‘தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப் பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது” (கொலோசெயர் 2:9)

‘சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும்…. பிரியமாயிற்று” (கொலோசெயர் 1:19)

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொருளாகிய கர்த்தரின் பாவமில்லாத மனிதத் தன்மையைக் குறித்து விரிவாக அறிந்து கொள்ளுவதற்கு முன்பு போற்றுதற்குரிய அவருடைய மனித மகிமையைக் குறித்து கவனம் கொள்ளுதல் அவசியமானதாகும். அவர் முடிவு இல்லாத ‘வார்த்தை” யாவார் (யோவான் 1:1). ‘பிதாவின் மடியிலிருக்கிய ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்” (யோவான் 1:18). ‘இவரைக் கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய்” (எபிரெயர் 1:2-3). ‘நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து எப்பொழுதும் அவர் சமூகத்தில் களிகூர்ந்தேன்” (நீதிமொழிகள் 8:30) ‘தேவதூதர் யாவரும் அவரைத் தொழுது கொள்ளக்கடவர்கள்” (எபிரெயர் 1:6) கிழக்கிலிருந்து வந்து சாஸ்திரிகள் பிள்ளையை கண்டு சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டார்கள் (மத்தேயு 2:11). மேற்கூறிய உண்மையைன கருத்துக்களை மனதிற் கொண்டவாறு அவரது முழுமையுடைய மனிதத்தன்மையைக் குறித்துப் பேசுவது பயபக்திக்குரிய செயலாகும். மேலும், அவரைத்தொழுதுகொள்ளுகிற நிலையில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். ‘எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.” (2கொரிந்தியர் 10:5).

மகத்துவம் நிறைந்த அவருடைய மனிதத் தன்மையின் அதிசயமானது மனிதனுடைய எண்ணத்திற்கும் அறிவுக்கும் அப்பாற்பட்டதாயிருக்கிறது. ஏனெனில், ‘பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்” என மத்தேயு 11:27 வசனம் கூறுகிறது. எனவே, தேவனுடைய வார்த்தையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டதை நாம் அறிந்திருக்கிறபடியால் திருமறை வசனங்களுக்கு அப்பால் நமது எண்ணங்களைச் செல்லவிடக்கூடாது. மேலும் கிறிஸ்துவைப்பற்றி விரிவாக எழுதப்பட்ட பல நூல்களில் சொல்லப்பட்டதற்கு மிஞ்சியும் நமது எண்ணங்கள் செயல்படக்கூடாது என்பது மிக முக்கியமானதாகும்.

முதலாவது, ஏதேன் தோட்டத்தில் அறியாத தன்மையிலிருந்த ஆதாம் என்ற முதல் மனிதனைக் குறித்துத் திருமறை வசனங்கள் என்ன கூறுகிறன என்று கவனிப்போம். அவன் பாவம் செய்யாததற்கு முன் நன்மை தீமை அறிவு இல்லாதவனாய், கீழ்ப்படிதல் என்ற இடத்தில் சாதாரண நிலையில் இருந்தான் (ஆதியாகமம் 2:16-17). ஆதாம் படைக்கப்பட்டபோது விழுந்து போகும் தம்மையுடையவனாக இருக்கவில்லை. மேலும் அவன் தூயதன்மையோடிருந்தான். பரிசுத்தம் என்பது பாவத்தின் மீது வெறுப்பையும், நன்மையில் மகிழ்ச்சியையும் காட்டும் ஓர் மேலான நிலையாகும். ஆதாம் குற்றமில்லாத இயல்புடையவனாக இருந்தான். அவன் விழுந்தபோது, அத்தன்மையை இழந்து விட்டான். ஆதாம் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டபடியாலும், மீண்டும் திரும்பி வராததாலும் தூயத்தன்மையை மீண்டும் பெற இயலவில்லை (ஆதியாகமம் 3:22-24) இன்று உலகத்தில் பிறக்கிற குழந்தைகள் குற்றமில்லாத இயல்புடையனவாகப் பிறக்காமல், பாவத்தில் விழுந்துபோன இயல்புடையனவாகப் பிறக்கின்றன (சங்கீதம் 51:5).

காலம் நிறைவேறினபோது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிறக்கப்போகிறார் என்ற திருவாக்குப்படி கன்னியாகிய மரியாளிடம் கூறப்பட்டசெய்தி, ‘பரிசுத்த ஆவி உன்மேல் வரும். உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்: ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடையகுமாரன் எனப்படும்” (லூக்கா 1:35) என்பது, அவர் அறியாத இயல்பு உடையவராயிருக்கவில்லை. அதாவது நன்மை தீமை என்ற அறிவு இல்லாதவராயிருக்கவில்லை. இன்னும் பரிசுத்தமுள்ளவராயிருக்கிறார். அவர் தேவனின் திருக்குமாரன். ‘குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து” (1பேதுரு 1:19). ‘அவரிடத்தில் பாவமில்லை” என திருமறை கூறுகிறது (1யோவான் 3:5). அதாவது அவரிடம் பாவத்தன்மையே இல்லை. ‘இந்த உலகத்தில் ஒன்றுமில்லை”. என அவரால் கூறமுடிந்தது (யோவான் 14:30) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்றும் மாறாதவராய் இருக்கிறபடியால் இவ்வுலகில் மனிதனாக தூய தன்மையுடைய நிலையில் அவரது திருநாமம் என்றும் போற்றப்படுவதாக (எபிரெயர் 13:8, சங்கீதம் 11:9).

ஆதாமின் சந்ததியைச் சேர்ந்த நாம் அனைவருமே பாவத்தில் பிறந்தவர்கள். (சங்கீதம் 51:5, யாக்கோபு 1:14) நாம் அனைவரும் விழுந்துபோன இயல்புடையவர்களாக இருக்கிறோம். ‘மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்”(யோவான் 3:6), ஆதலால் ஒரு மனிதன் தேவனுடைய இராச்சியத்துக்குத் தகுதியுடையவனாயிருக்க அவன் மறுபடியும் பிறக்க வேண்டியது அவசியமாகிறது. நாம் மறுபடியும் பிறக்கும்போது தேவன் நமக்கு அருளும் மெய்வாழ்வு கிறிஸ்துவின் வாழ்வேயாகும். எனவே ‘நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து” (கொலோசெயர் 3:4) என திருமறையில் வாசிக்கின்றேன். புதிய மனிதன் என்ற இந்த வாழ்வில் சத்தியத்தினால் ஏற்படும் நீதியும் தூய்மையும் விளங்குகின்றன (எபேசியர் 4:24). மேலும், ‘பிறந்த எவனும் பாவம் செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது: அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவம் செய்யமாட்டான்” (1யோவான் 3:9) என்றும் வாசிக்கிறேன். ஒரு விசுவாசி பாவம் செய்யாதவாறு நீதியும் பரிசுத்தமும் நிறைந்த கிறிஸ்துவின் மெய்வாழ்வை தேவன் அவனுக்குப் பகிர்ந்தளிக்கிறார் என்று திருமறை தெளிவாகக் கூறுகிறது.

ஆயினும் கிறிஸ்துவின் பாவமில்லாத மனிதத் தன்மையைப்பற்றிய தெளிவான போதனையை எதிர்பார்க்கிறபோது, கிறிஸ்து பாவம் செய்யவில்லை என்று ஒப்புக்கொண்டபோதிலும் ‘அவரால் பாவம் செய்திருக்க முடியும்” என்று கூறுகிற சிலரது பயங்கரத்துவக் கொள்கையை இன்று காண்கிறோம். இப்படிப்பட்ட கருத்து கிறிஸ்துவை தேவகுமாரனாக ஏற்றுக்கொண்டு அவரிடத்தில் அன்புகூறுகிறவர்களுடைய உள்ளங்களில் ஆழமானதுக்கத்தை உண்டாக்குகிறது. இந்தக்கொள்கையை உறுதிப்படுத்த, ‘நம்முடைய பெலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்பொல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்” (எபிரெயர் 4:15) என்ற திருவசனத்தைத் தவறாக பயன்படுத்துகின்றனர். ஆகவே இந்த வசனம் ‘கிறிஸ்து பாவம் செய்திருக்கமுடியும்” என்ற கொள்கையை உறுதியுடன் மறுக்கிறது. கர்த்தராகிய கிறிஸ்து முழுமை நிறைந்த, நீதியுள்ள மனிதராக, இந்த உலகத்தில் ஒரு மனிதன் அனுபவித்ததுபோல் முழுமையாக அனுபவித்தார். ஆனாலும் அவர் தாமே பாவம் இல்லாதவரானார். அல்லது பாவம் அவருக்கு ஒதுங்கி நின்றது.

அவர் பசி, தாகம், சோர்வு, களைப்பு, கண்டனம் ஆகியவற்றை அனுபவித்தார். ஆயினும் முழுதூய்மை அவரில் விளங்கியது. சோதனை சமயத்தில் வனாந்தரத்தில் இருந்தபோது சாத்தான் அவரிடம் சென்றான்: ‘அவரில் பாவமே இல்லாததால்” சோதனை நேரத்தில் எந்தப் பிரதிபலிப்பும் ஏற்படவில்லை. தமது பிதாவிடமிருந்து எந்த உத்தரவும் இல்லாதபோதும், கல்லை அப்பமாக்கும்படி அவர் மறுத்தபோதும், பசியோடு இருந்தார். காரணம் அவர் முழுமை நிறைந்த மனிதராக விளங்கினார். இம்முறையில் ‘சோதிக்கப்பட்டுப் பாடுபட்டாh.” (எபிரெயர் 2:18) பிதாவிடம் கீழ்ப்படியாமலிருக்க கிறிஸ்துவிடம் எந்த எண்ணமும் இல்லை. அவர் மனிதனாது ஸ்தானத்தில் இருந்து கொண்டு இவ்வாறு கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார் (எபிரெயர் 5:8).

‘சோதனை” என்ற சொல் பாவம் செய்வதற்குரிய சாத்தியக் கூற்றை உணர்த்தாவிடில் அதற்குப் பொருளேயில்லை என்று சிலரால் தவறாக கூறப்படுகிறது. இக்கூற்று திருமறை போதனைக்கு விரோதமானதும், தேவனுடைய மகிமைக்குப் பயங்கரமான பங்கமுமாகும், ஏனெனில் கர்த்தராகிய கிறிஸ்துவை சோதிக்கப்பட்ட ஒரு மனிதராக திருமறை விளக்குகிறது: இன்னும் பழைய ஏற்பாட்டுக் காலங்களில் மனிதர்கள் தேவனைச் சோதித்தனர் (சங்கீதம் 95:8-9) அப்படியானால் தேவன் பாவம் செய்திருக்கமுடியும் என்று எவ்வாறு கூறமுடியும்? ஆண்டவருக்கு கனவீனம் உண்டாகாதவாறு நம்மைக் காத்துக்கொள்ளுவோம். இவ்வித பயங்கர போதனையினால் தேவனுக்கும் தேவகுமாரனுக்கும் ஏற்படும் கனவீனத்தை உணர்ந்தாலொழிய தேவனின் எந்தவொரு உண்மையான மகன் அக்கொள்கையை ஏற்றுக்கொள்ளமாட்டான். இல்லையென்றால் நமது மீட்புக்காக அவருடைய திருவசனத்தை எவ்வாறு சார்ந்திருக்கமுடியும்? ‘எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன்” (எபிரெயர் 6:18) என்ற திருவசனத்திற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்.

இப்போது கர்த்தராகிய இயேசுவுக்கு ஏற்பட்ட சோதனை மனிதராக இருந்த அவர் யார் என்று நிரூபிக்கவே ஏற்பட்டது. சாத்தான் தனது சோதனைகளுடன் முதல் மனிதன் ஆதாமிடம் வந்தான், ஆமாம் அவனுக்கு இணங்கி வீழ்ந்தான். பிறகு சாத்தான் தனது சோதனைகளுடன் விண்ணிலிருந்து வந்த இரண்டாம் மனிதராகிய கிறிஸ்துவிடம் வந்தான். (1கொரிந்தியர் 15:47) ஆனால் சாத்தானோ தேவ வசனங்களைச் சார்ந்து எல்லா சோதனைகளுக்கும் விடை பகர்ந்ததூய்மை நிறைந்த ஒருவரைக் கண்டான். கிறிஸ்துவே நமது மெய்வாழ்வு என்று சொந்தமாக்கிக்கொண்ட கிறிஸ்தவர்களாகிய நாம், சாத்தானின் சோதனைகளுக்கு தேவ வசனங்களைக் கொண்டு பதில் கூறும்போது நாம் வெற்றி பொறுவோம். அந்தோ! நம்மில் பழைய விழுந்துபோன இயல்பு இன்னும் இருக்கிறது ஆதலால் நாம் இணங்குகிறோம். ‘அவனவன் தன் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்” (யாக்கோபு 1:14) இந்த திருவாக்கு கர்த்தராகிய இயேசுவுக்குப் பொருந்தவில்லை. ஏனெனில், அவர் தேவன். எனவே ‘தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல” என்று யாக்கோபு 1:13 கூறுகிறது.

சிலர் இவ்வாறு கூறலாம். அதாவது கர்த்தராகிய இயேசு கெத்சமனே தேட்டத்தில் ‘……… என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று தமது பிதாவினிடம் கூறினார். (லூக்கா 22:42) இதை கவனித்துபார்க்கும்போது இது மிகவும் அசாதாரணமாயிருக்கிறது. பரிசுத்தராகிய கர்த்தராகிய கிறிஸ்து பாவமாக்கப்பட்டவராய் கெத்சமனேயிலிருந்து வெளியேறிய பின் மூன்று மணி நேரம் சிலுவையில் அந்தகாரத்திலிருந்தார். (2கொரிந்தியர் 5:2) ஆனால் அவர் தமது பிதாவின் சித்தத்தை முழுமையாக கீழ்படிந்து நிறைவேற்றினார். ஆதலால் இங்கு ஒளியும், அன்பும் சேர்ந்து வெகு சிறப்புடன் பிரகாசிக்கின்றன. தேவன் மகிமைப்படவும், எப்பொழுதும் தள்ளப்படவும் வேண்டிய பாவத்தை வெறுக்கும் கர்த்தராகிய இயேசு, அன்பிலும் கீழ்ப்படிதலிலும் பிதாவின் திருச்சித்தத்தை நிறைவேற்றுகிறவராய் சிலுவைப்பாடுகளைச் சகித்தார். பாவமானது போற்றற்குரிய தேவதூய திருச்சித்தத்துக்கு எதிரானதாகும்.

முழுமை நிறைந்த தேவனும், முழு மனிதருமாகிய கர்த்தராகிய இயேசுவின் மனிதத்தன்மையின் தெய்வீக இரகசியத்தைக் கண்டு பிடிப்பதற்கு பதிலாக, பூர்வீக கிழக்கு சாஸ்திரிகளைப்போல நம்மைத் தாழ்த்தி, அவரை வணங்கி ஆராதிப்போம். திருமறையில் இரண்டு உண்மைகள் தெளிவாகக் காணப்படுகின்றன. முதலாவது முதல் மனிதன் தனது வீழ்ச்சி மூலம் முழுவதும் அழிவு பெற்றான்: அவனது சுய சித்தம் எப்போதுமே தேவனோடு பகைமையுடன் போராடும் நிலை கொண்டது. இரண்டாவது, தேவன் போற்றப்படும் தமது தூய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் மீண்டும் ஆரம்பிக்கிறார். தமது பிதாவின் விருப்பத்தை நிறைவேற்றுவதே அவரது விருப்பமாயிருக்கிறது. தேவன் ஒரு மனிதனுடைய ஆத்துமாவில் கிரியை செய்யும்பொழுது முதலில் புதிய வாழ்வைத் தருகிறார். மேலும் அப்புதிய வாழ்விலிருந்து தேவனுக்கு ஏற்றதும் பரியமுமான சகலமும் வெளியே வழிந்தோடுகின்றன. ‘அவர்கள் இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல் தேவனாலே பிறந்தவர்கள்” (யோவான் 1:13). ஆதலால் ‘மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்க மாட்டார்கள்”. (ரோமர் 8:8) பரிபூரணமும் தெய்வீகத் தன்மையுடைய கர்த்தராகிய இயேசுவின் மகிமை நிறைந்த மனிதத்தன்மையைக் குறித்து நாம் தெளிவுள்ளவர்களாயிருப்போமாகில், இருவித இயல்புகளையுடைய நாம் தேவ குமாரனின் பாவமில்லாத மனிதத் தன்மையை மறுதலிக்கக் கூடிய பயங்கரமான குற்றத்திலிருந்து ஐயமின்றி பாதுகாக்கப்படுவோமாக!

‘கிறிஸ்து, தேவகுமாரனாக இருந்தபோது, தெய்வ மனிதனாக தோன்றியபோதும், தெய்வீகத்தினுடைய மகிமையை முற்றிலும் பெற்றிருந்தார்: இந்த இணைப்பு தான் அவருடைய உள்ளத்தில் ஒரு அன்பின் ஊற்றாக அமைந்தது”.

தெய்வீக மனிதனையோ அல்லது அவரது அன்பான திருக்குமாரனின் ஊழியத்தையோ தாக்கக்கூடிய எல்லா செயல்களிலிருந்து, சோதனைகள் மிகுந்த இந்த நாட்களில் கர்த்தர் தமது ஜனங்களின் இருதயங்களையும் நினைவுகளையும் ஆட்சி செய்து காப்பாராக!!

‘தம்மைத் தாமே பெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்”
‘அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரண பரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகிய, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார்.

இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்” பிலிப்பியர் 2:7-10.