Home செய்திகள் ஓடு ! நாடு ! தேடு !

ஓடு ! நாடு ! தேடு !

2263
0

ஓடு ! நாடு ! தேடு !

புத்தாண்டு பிறந்து பல நாட்கள் ஓடி, புது மாதம் பிறந்து விட்டது. நாம் நின்றாலும் நாட்கள் நிற்பது இல்லை நாம் காத்து இருந்தாலும் நமக்காக காலங்கள் காத்திருப்பதில்லை. இரையின்மேல் பாய்கின்ற கழுகைப்போல (யோபு 9:28), பழங்கதையைப் போல (சங் 90:9) நம் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கு ஒரு நாள் முற்றுப் புள்ளி (மரணம்) உண்டேதவிர திரும்ப ஒரு பிறவி நாம் எடுக்கப்போவதில்லை. (எபி 9:27) இந்தப் பிறவியிலேயே பொன்னான நேரம் வாலிபப் பருவம் தான். அதுவும் மாயை, மாறிப்போகிற ஒன்றுதான் என்று சாலெமோன் ஞானி சொல்கிறார் (பிர 11:10). எனவே, வாலிபப் பருவத்தில் இருக்கிறவர்களே இப்போதாவது இச்செய்தியை ஆழ்ந்து சிந்தித்துப் படியுங்கள். எதையும் சிந்தித்துப் பார்க்க முடியாத பருவம் இதுதான். ஆனால், சிந்தித்தே தீரவேண்டிய பருவம் இதுதான். வாலிபப் பருவத்தை வாடிப்போக விட்டுவிட்டு, ஆடி அடங்கி, கூனிக் குறுகிப்போகிற நேரத்தில் தான் இறைவனைப் பார்க்க ஆசைப்பட்டால் அது அர்த்தமற்ற ஒரு வாழ்க்கையாகும். எனவே தேவ திட்டத்தின்படி வாலிப பருவத்தை திட்டமிட்டு செயல்படுத்துவாயானால் அதுவே தெவிட்டாத இன்பத்தைத் தரும்.

தெவிட்டாத இன்பத்தை நீங்கள் பெற பின்பற்றவேண்டிய விதிமுறைகளை மூன்றே வார்த்தைகளில் கூறவேண்டுமானால் ஓடு! நாடு! தேடு! என்ற வார்த்தைகளையே தெரிந்து கொள்ளலாம்.

ஓடு: ‘சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது@ தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.”வாலிபத்தில் தன் உடலைக்கட்டாக வைத்துக்கொள்ள அநேகர் உடற்பயிற்சி செய்வதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் சரீர முயற்சியோ அற்ப பிரயோஜனமுள்ளது (1தீமோ 4:8). சரீரத்தை வியாதியிலிருந்து காத்துக்கொள்ளவேண்டுமானால் உடற்பயிற்சி அவசியம். அதுபோல ஆத்துமாவை உங்களுக்குள் இருக்கும் உணர்ச்சிகளை, அறிவை சித்தத்தை பாவத்திலிருந்து காத்துக்கொள்ள வேண்டுமாயின் நீங்கள் பாவத்தை விட்டு ஓடித்தான் தீரவேண்டும். வாலிபவயதில் பாவத்திற்கு எதிர்த்து நிற்க முடியாது. பாவத்திற்கும் உங்களுக்கும் சண்டை வந்தால் ஜெயிப்பது பாவந்தான். ஏனென்றால் சலனமும், சபலமும் நிறைந்த பருவத்தில் வாய்ப்புக்களும், சூழ்நிலைகளும் ஒத்து வந்தால் பாவத்தின் விழத்தான் செய்வீர்கள்.

பாவத்தை விட்டு ஓடவேண்டிய சரியான நேரத்தில் அதை விட்டு, விட்டு ஓடு. நித்தம் நித்தம், தினம் தினம் எத்தனையோ பாவங்கள் உங்களை கரம் பற்றி அழைக்கவில்லையா? நான் உடன்படமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே பாவத்தைச் செய்யவில்லையா? எனவே எச்சரிக்கையாயிருங்கள். இந்த வேகம் வந்துவிட்டால் வேலிகள் உடைந்துபோவதுண்டு. எனவே பாவத்திடம் உபதேசங்களைச் சொல்லாமல் உன் ஆத்துமாவை கறைபடுத்தும் சூழ்நிலைகளைவிட்டு ஒடு. எனவே இவ்வாலிப பருவத்தில் உண்மை தேவனை காண ஓடு. பாவம் என்றால் உடனே ஓடு…… ஓட்டமாய் ஒடு.., வேகமாய் ஒடு……….., இளவயதின் பாவங்களுக்கு காரணமாய் இழுக்கும் உறவுகளை தகர்த்து, நண்பர்களின் நட்பை தவிர்த்து விட்டு, சூழ்நிலைகள் வருமானால் உடனே வேகமாய் ஓடிவிடுவதே உத்தமம்.

நாடு: அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு. (2தீமோ 2:22).
உங்கள் நாட்டம் எதன் மீது இருக்கிறது? விருப்பம் எதன் மீது உள்ளது? சிலர் ஆசீர்வாதத்தையே விரும்புகின்றனர். ஆண்டவரை விடுகின்றனர். நீதி, விசுவாசம், அன்பு, சமாதானம் இதைப் பெற… வாடாத சுதந்திரத்திற்கு பங்காளியாக நாடு! எதை? முன்னானவைகளையே (பிலி 3:15) நாடி, நாம் ஓட்டத்தைத் தொடரவேண்டும். நம்முடைய நாட்டத்தை மாற்றிக்கொள்ளவேண்டும். கடல் மேல் நடத்த பேதுரு இயேசுவின் முகத்தை எப்படிப்பார்த்தானோ அதுபோல் இந்நேரத்திலும், எந்நேரத்திலும் உண்மைதெய்வம் இயேசுவின் முகதரிசனத்தை நாடவேண்டும். ஜெபத்தில் நம் முழுங்கால்கள் தளராது இருக்கவேண்டும். மிக வேகமாக ஓடிவந்த ஒரு ஓட்டப்பந்தய வீரனிடம் பேட்டி காணும்போது, நீங்கள் இவ்வாறு வேகமாக ஓடினீர்களே. இதன் இரகசியம் தான் என்ன? என்ற கேள்வியைக் கேட்டார்கள். அதற்கு அவன் நான் என் கண்முன்னே பரிசுப் பொருள் இருப்பதாகவும் அதை நான் தொட்டுவிடவேண்டும் என்று எனக்குள் நினைத்து ஒடினேன். அதனால்தான் இவ்வளவு வேகமாக ஒட முடிந்தது, என்றானான். வாலிபர்களே உங்கள் கண்முன்னே, இவ்வுலகத்தின் பாவத்தைப் போக்கிற இயேசுவை நிறுத்தி, அவரைத் தொடவேண்டும், அவரில் இளைப்பாற வேண்டும், அவரைப்போல் மாறவேண்டும் என்று நாடி, நீங்கள் உங்கள் வாலிபப் பருவத்தில் சீராய் ஓடுவீர்களாக. அவரை மட்டுமே விசுவாசித்து அவரை மட்டுமே தொழுதுகொள்வது உங்கள் விருப்பமாக வேண்டும். தொழுதுகொள்ளுகிறவர்கள்மேல் ஆசீர்வாத மழை நிச்சயமாய் பெய்யும் (சக 14:17).

தேடு: ‘முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள்” (மத் 7:33). வேதத்தின் மற்றொரு ராஜரீகம் பிரமாணம் இதுவே ஆகும். இன்றைய வாலிப உள்ளங்களுக்கு இது எட்டிக் கசப்பாக என்றாவது ஒரு நாள் வருகிற அனுபவமாக இருக்கிறதே தவிர, தேவ ராஜ்ஜியத்தை தேடுவதையே தன் தரிசனமாக மாற்றிக்கொள்வதில்லை. உலக ஞானத்திற்காக பணத்தை அதிகமாக செலவழித்து அறிவை வளர்த்துக்கொள்கிறார்கள். ஆனால் வேதமோ உலக ஞானத்தைப் பைத்தியமாக்குகிறது (1கொரி 3:19) என்றே கூறுகிறது. அறிவு பெருத்த அநேகர் நோவு பெருத்தவர்களாய் (பிர 1:18) காணப்படுகின்றனர். நாற்பது வயதிற்கு மேல் தேவனை தேடிக்கொள்ளலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் அதற்குள் ஆண்டவரின் இரண்டாம் வருகை வந்துவிடும். வேதாகமத்தில் எத்தனை வாலிபர்கள் தேவனைத் தேடினார்கள். அவர்கள் இவ்வுலகத்தை ஜெயித்தார்கள்.

ஆண்டவராம் இயேசுவைத் தேடுங்கள். அப்பொழுது நீங்கள் நினைப்பதையும் வேண்டுவதையும்விட அதற்கு அதிகமாக என் தேவன் செய்துமுடிப்பார். அதுவே உங்களை ஆசீர்வாதத்திற்கு நேரே நடத்தும் வழியாகும். இன்றைக்கே தூசியை உதறிவிட்டு, மரித்தோரை விட்டு, தூக்கத்தை விட்டு, பாவத்தைவிட்டு ஓடுங்கள். மனிதரையல்ல, கர்த்தரையே நாடுங்கள். உலக காரியங்களை அல்ல, தேவராஜ்ஜியத்தையே தேடுங்கள். தேவ ஆசீர்வாதம் உங்களை சூழ்ந்துகொள்ளும். மகிமையான கிரீடம் உங்களுக்கே வந்துசேரும்.