Home செய்திகள் பின்வாங்கினவர்கள்

பின்வாங்கினவர்கள்

2087
0

பின்வாங்கினவர்கள்

மனிதன் பாவஞ்செய்தான் என்ற செய்தி மோட்சத்திற்கு எட்டியபின்பு சம்பவித்த முதல் காரியம் தேவன் கெட்டுப்போன மனிதனைத்தேடி பூமிக்கு வந்தார் என்பதே. அவர் பகலில் குளிர்ச்சியான வேளையில் தோட்டத்தில் உலாவுகையில் ‘ஆதாமே, ஆதாமே நீ எங்கே இருக்கிறாய்” என்றுகூப்பிட்டார். இது கிருபை, இரக்கம் அன்பு ஆகிய இவைகளின் குரல். தேடவேண்டியவன் ஆதாம். அவனே குற்றம் செய்தவன். அவனே தோட்டத்திற்கு அங்கும் இங்கும் ஒடி ‘என் தேவனே, என் தேவனனே, நீர் எங்கே இருக்கிறீர்” என்று தேட வேண்டும். அதற்குப் பதிலாக தேவனே மோட்சத்தை விட்டு கெட்டுப்போன கலகக்காரனைத் தேடும்படி ஈனபூமிக்கு வந்தார். பூமியைவிட்டு அவனைத் துரத்திப்போடும்படியாக அல்ல பாவத்தின் நிர்ப்பந்தத்திலிருந்து அவனை இரட்சிக்கும் வழியை உண்டாக்கவே வந்தார். அவர் அவனைக் கண்டுபிடித்தார். எங்கே? தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே. தன் சிருஷ்டிகருக்கு மறைந்து ஒளிந்துகொள்ளுகிறவனாய்க் கண்டார். ஒரு மனிதன் தேவனுடைய பிள்ளை எனப்பட்டாலும் அவரிடமுள்ள ஐக்கியத்தை இழந்துபோகும் நிமிடத்திலே அவருக்கு தன்னை ஒளித்துக்கொள்ள விரும்புகிறான். அவன் பாவத்தில் விழுந்தபோதே தேவ ஐக்கியத்தை இழந்துபோகிறான். அவரைக் காணவும் அவரை நினைக்கவும் அவனுக்கு மனம் இல்லை.

உலகத்தை நோக்கிப் பின்வாங்கிப்போனவர்களுடன் இவைகளைப் பகிர்ந்துகொள்ளுகிறேன். ஒரு வேளை சிலவருடங்களுக்கு முன்னே, நீ ஒரு கிறிஸ்தவனாய் ஒரு பெரிய பட்டணத்திற்குப் போனாய். நீ முன்னே ஒரு சபையிலே இருந்தாய். ஒருவேளை ஒய்வுநாள் பள்ளிக்கூட ஆசிரியனாகவும் இருந்தாய். ஆனால் நீ அந்நியருக்குள் போனபொழுது, ‘கொஞ்சம் பொறுத்திருப்பேன்: நாள் செல்லட்டும். ஓய்வுநாள் பள்ளியில் போதிப்பேன்” என்று ஒருவேளை எண்ணினாய்: ஆனால் ஓய்வுநாளில் போதிப்பதை விட்டுவிட்டாய். பின்பு கிறிஸ்துவுக்காக எல்லா வேலையையும் விட்டுவிட்டாய். முடிவிலே நீ சேர்ந்த புதிய சபையிலே நீ காத்திருந்தபடி அனலாய் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கவனிக்கப்படவும் இல்லை. ஆகையால் ஆலயத்துக்குப் போகிறதையும் விட்டுவிட்டாய். இப்பொழுது அதிகமாய் வழுவிப்போனதால், உங்கள் பிதாவின் வீடாகிய ஆலயத்தை விட்டு வெகு நாளாய்ப் பரதேசம் போனவர்களாய் இருக்கலாம். பின்வாங்கிப் போனவர்களே! வாருங்கள்! நீங்கள் சந்தோஷமாய் இருக்கிறீர்களா? சொல்லுங்கள்! கிறிஸ்துவை நீங்கள் விட்ட பின்பு சந்தோஷமான ஒரு மணி நேரமாவது உங்களுக்கு இருந்ததா? உலகமாகிய தூரதேசத்தில் உங்களுக்குக் கிடைக்கும் தவிடு உங்களைத் திருப்தியாக்குகிறதோ? நான் அநேக நாடுகளைப் பார்த்தேன். பின் வாங்கினவர்களின் சந்தோஷமாய் இருக்கும் ஒருவரையும் கண்டதில்லை. உண்மையாய் தேவனால் பிறந்த மனிதன், பின்பு எப்போதாவது உலகத்தால் திருப்தியடைகிறதாய் நான் ஒருக்காலும் கண்டதில்லை. கெட்டகுமாரன் அந்நிய தேசத்திலே திருப்தியடைந்தான் என்று நினைக்கிறாயா? இங்கே இருக்கும் கெட்ட குமாரனைக் கேளுங்கள். அவர்கள் சந்தோஷமாய் இல்லை என்று நீங்களே அறிவீர்கள். ‘துன்மார்க்கனுக்குச் சமாதானம் இல்லை” என்று என் தேவன் சொல்லுகிறார்.

தன் சிருஷ்டிகருக்கு விரோதமாய் கலகம் செய்யும் மனிதனுக்குச் சந்தோஷம் இல்லை. அவன் முன்னே பரம ஈவை ருசிபார்த்து, தேவனுடைய ஐக்கியம் கொண்டு எஜமானுக்காய் சந்தோஷத்தோடு வேலை செய்தவன் என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்போது தவறிவிட்டான்: அவன் சந்தோஷமாய் இருப்பது கூடிய காரியமோ? அவன் சந்தோஷமாய் இருந்தால், அது அவன் ஒருக்காலும் உண்மையாய் மனந்திரும்பவில்லை என்பதற்குப் போதிய அத்தாட்சி. ஒரு மனிதன் மறுபடி பிறந்து, பரம சுபாவத்தை அடைந்தவனேயாகில் இந்த உலகம் அவன் கூபாவத்தின் வாஞ்சையை ஒருக்காலும் திருப்தியாக்கமாட்டாது. ஆ! பின் வாங்கின மனிதனே, உன்னைப்பற்றிப் பரிதபிக்கிறேன். யாரும் பரிதபிக்கக்கூடியதிலும் அதிகமாய்க் கர்த்தராகிய இயேசு உன்னைக் குறித்துப் பரிதபிக்கிறார் என்று நான் உனக்குச் சொல்லுகிறேன். உன் ஜீவியம் எவ்வளவு கசப்பென்று அவர் அறிவார். உன் ஜீவியம் எவ்வளவு இருண்டதென்று அவருக்குத் தெரியும். வீட்டுக்குத் திரும்பி வரும்படிக்கு அவர் உனக்குச் சொல்லுகிறார். ஆ! பின்வாங்கினவனே, இப்போது திரும்பி வீட்டுக்கு வா. உன் பிதா உனக்குச் சொல்லி அனுப்பும் நேச செய்தி ஒன்று கேள். கர்த்தர் உன்னை வரச் சொல்லுகிறார். இப்போது உன்னை அழைக்கிறார். அவர் சொல்வது: பரதேசம் போனவனே இப்போது வீட்டுக்குத் திரும்பி வா, உன் பிதா உன்னை நேசத்தோடு ஏற்றுக்கொள்வார்.

நீ பரதேசம் போனபடியால் தேவன் உன்னை அணுகவொட்டார் என்று பிசாசு உனக்கு சொல்லுகிறான் என்று அறிவேன். அது உண்மையாகில் மோட்சத்தில் மிகச் சொற்ப மனிதர் மாத்திரம் இருப்பார்கள். தன் ஜீவியத்தில் ஒருக்காலமாவது தேவனை விட்டுப் பின்வாங்கிப் போகாத ஒரு நீதிமான் மோட்சத்தில் இருக்கிறார் என்று நான் நம்பவில்லை. ஒருவேளை ஜீவியத்தில் பின்வாங்காவிட்டால் இருதயத்தில் பின்வாங்கி இருப்பான். கெட்டகுமாரன் சரீரம் தூரதேசத்துக்குப் போகுமுன்னே அவனுடைய இருதயம் போனது. பின்வாங்கினவனே, இப்போது பிதாவின் வீட்டுக்கு வா. நீ வெளியே தங்குவது உன் பிதாவுக்குப் பிரியம் இல்லை, கெட்ட குமாரன் பரதேசம் போய் இருந்த அநேக வருடங்களாய், அவன் வீட்டுக்குத் திரும்பிவிட வேண்டும் என்று அவன் தகப்பன் ஆசிக்கவில்லை என்று நினைக்கிறாயா? ஒவ்வொரு வருடமும் அவனைப்பார்த்துக்கொண்டே அவன் வீட்டுக்கத் திரும்பிவர வேண்டுமென்று ஆவலாய் இருந்தான். அப்படியே தேவனும் நீ வீடுவர ஆவலாய் விரும்புகிறார். நீ எவ்வளவுதூரம் போயிருந்தாலும் என்ன? பிரதான மேய்ப்பன் இப்போது உன்னைத் தன் மந்தையில் சேர்த்துக்கொள்வார். பின்வாங்கினவன் திரும்பி தேவனிடத்திற்கு வரும்போது தேவன் அவனை ஏற்றுக்கொள்ள மனதாயிருக்கவில்லையென்று எப்போதாவது கேள்விப்பட்டாயோ? பிள்ளைகள் திரும்பி வந்தபோது, அவர்களை ஏற்றுக்கொள்ள மனமில்லாத உலக பெற்றோர்களைக் குறித்துக் கேள்விப்பட்டேன். பின்வாங்கிப் போனவன் உண்மையாய் மனந்திரும்பினபோது தேவன் அவனை ஏற்றுக்கொள்ள மனமில்லாதிருக்க கண்டேன் என்று யாராவது சொல்லக்கூடுமோ?

ஆ! கெட்ட குமாரனே, நீ பாவத்தின் இருண்ட பாதைகளில் அலைந்து திரிகிறவனாய் இருக்கலாம். தேவன் உன்னை வீட்டுக்கு வரச்சொல்லுகிறார். பிசாசு உனக்கு தேவனைக்குறித்துப் பொய் சொல்லிக்கொண்டு வருகிறான். அவர் உன்னை ஏற்றுக்கொள்வாரா என்று நினைக்கிறாய். நீ வருவாயாகில், இந்த நிமிடமே அவர் உன்னைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்வார் என்று நான் உனக்குச் சொல்லுகிறேன். ‘நான் எழுந்து என் தகப்பன் வீட்டுக்குப்போவேன்” என்று சொல். இப்படிச் செய்யும்படி தேவன் உன் மனதை மாற்றுவராக. இயேசு தேடாத பாவி ஒருவனும் இல்லை. நீ அவரை விட்டுப்போன நாள் முதல் ஒவ்வொரு நாளும் அவர் உன்னைத் தேடி வந்தார். உன் சென்ற காலம் எப்படிப்பட்டதாய் இருந்தது? உன் ஜீவியம் எவ்வளவு கெட்டதாய் இருந்தது என்று பாராதே! அவர் உன்னை ஏற்றுக்கொள்வார். பின்வாங்கினவனே எழுந்திரு. உன் பிதாவின் வீட்டிற்கு மறுபடியும் வா.