Home கட்டுரைகள் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தின் வல்லமை

ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தின் வல்லமை

2565
0
ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தின் வல்லமை

‘உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்த்த தேவாட்டுக்குட்டியாகிய கிறிஸ்து”

கர்த்தராகிய இயேசுவானவர் சிலுவையில் சிந்தின செங்குருதியின் வல்லமையினால் நாம்பெற்ற ஆசீர்வாதங்கள் தான் எத்தனை எத்தனை!! இதனைத் திருமறை நமக்கு மிகவிரிவாக எடுத்துரைக்கிறது. ‘அதன் அற்புத வல்லமையினால் மனிதனுக்கும் தேவனுக்கும் சமாதானம் ஏற்படுகிறது” (கொலோ 1:20). ‘கர்த்தராகிய இயேசுவானவர் பேரில் விசுவாசம் வைப்பவருக்கு அவரது இரத்தத்தின் வல்லமையின்மூலம் மன்னிப்பாகிய மீட்பும் நித்திய ஜீவனும் உண்டாகின்றன” (யோவான் 6:54, கொலோ 1:14). ‘சாத்தானை மேற்கொண்டதும் அவருடைய திருரத்தத்தின் வல்லமைதானே” (வெளி 12:11). ‘இயேசு கிறிஸ்துவின் இரத்தமானது சகலபாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கிறது” (1யோவான் 1:7). ‘ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்யுமாறு நம்மைத் துர் மனசாட்சியின் கொடுங்கோலிலிருந்து அவரது திருரத்தம் விடுவிக்கிறது” (எபி 9:14). ‘அவரது திருரத்தத்தின் வல்லமையினால் மிகவும் தகுதியற்றவருக்கும்கூட தேவனுடைய தூயபிரசன்னத்திற்குள் நுழையவும் அங்கு எப்பொழுதும் தங்கியிருக்கவும் உரிமை கிடைத்துள்ளது” (எபி 10:19-20).

இத்தகைய அற்புதவல்லமையானது திருரத்தத்திற்கு எவ்வாறு கிடைத்துள்ளது? இதனைத் தொடர்ந்து மற்றொருவினாவும் எழும்புகிறது, நமது வாழ்க்கையில் இயேசுவானவரது இரத்தத்தின் பூரண வல்லமையை நாம் எவ்வாறு அனுபவிக்கலாம்? எம்வாழ்க்கை முழுவதும் பாவத்திலே கழிகிறது. இதைக்குறித்து சற்று ஆராய்வோம்.

திருரத்தத்தின் வல்லமையானது எங்கிருந்து வருகிறது?

வெளிப்படுத்தின புத்தகத்தில் கிறிஸ்துவினது திருரத்தமானது ‘ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தம்” என விவரிக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். (வெளி 7:14). இத்தொடரானது இவ்வினாவிற்குரிய விடையை ஓரளவு புலப்படுத்துகிறது. போர்புரியும் ஒரு வீரனது இரத்தமல்ல இது: ஓர் எளிய ஆட்டுக்குட்டியின் இரத்தமே. இரத்தத்தைச் சிந்தின அவர் ஆட்டுக்குட்டியின் தன்மையை உடையவராய் இருந்தமையாலேயே அந்த இரத்தமானது மனிதருக்காக தேவனிடத்தில் கிரியசெய்ய வல்லதாய் இருக்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய மரணத்திலேதான் ஆட்டுக்குட்டியைப்போன்ற தன்மை அவரிடத்தில் பூரணமாக வெளிப்பட்டது. இயேசுவானவர் ஆட்டுக்குட்டி என ஏன் அழைக்கப்படுகிறார். நமது பாவத்திற்காகப் பலியிடப்பட்டதாலன்றோ? இஸ்ரவேல் வம்சத்தைச் சேர்ந்த ஒருவன் பாவம் செய்தானாகில் ஓர் ஆட்டுக்குட்டியைப் பலியாகக் கொண்டு வந்து அதனை வெட்டி அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளிப்பான். அதன்மூலம் அவன் பாவம் நீங்கி தேவனுடன் ஒப்புரவாவான். இவ்விதமாய் இஸ்ரவேல்மக்கள் யுகயுகமாய் இட்ட அனைத்து பலிகளின் நிறைவேறுதலாய் தெய்வத்திருமைந்தனாகிய இயேசுவானவர் ‘உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டியாகத்” திகழ்ந்தார் (யோவான் 1:29). மேலும் ஆட்டுக்குட்டி என்று அழைக்கப்படுவதால் நாம் ஓர் ஆழ்ந்த கருத்தை அறியலாம். அது அவருடைய தன்மையை வெளிப்படுத்துகிறது. ஆட்டுக்குட்டியைப்போல அவர் சாந்தகுணமுள்ளவராகவும், மனத்தாழ்மையுள்ளவராயும் காணப்பட்டார் (மத் 11:29). அவர் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமலல், தம்முடைய சித்தத்தை தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து அதனையே நிறைவேற்றமுற்பட்டாரல்லவா? (யோவான் 6:38).

மனுக்குலம் இரட்சிக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்படுவதற்காக அவர் இவ்வுலகில் அவதரித்தார். அவர் ஆட்டுக்குட்டியினுடைய தன்மையைக் கொண்டிராவிட்டால் தம்மைத் துன்புறுத்தினவர்களைக்குறித்து மனக் கசப்படைந்திருப்பார்: அவர்களை அவர் சீற்றத்துடன் எதிர்த்திருப்பார். ஆனால் அவரோ பிதாவுக்குக் கீழ்ப்படிந்தவராய் ‘சிலுவையின் மரணபரியந்தம் தம்மைத் தானே தாழ்த்தினார்” (பிலி 2:8). நம்மீது அவர் அன்பு கூர்ந்ததால் நம்மை இரட்சிக்கும்படி எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டார். தங்கள் விரும்பப்படி மக்கள் தம்மை நடத்துமாறு அவர்கள் கரங்களில் தம்மை ஒப்புக்கொடுத்தார். ஆம், ‘அவர் வையப்படும்போது பதில் வையாமலும் பாடுபடும்போமு பயமுறுத்தாமலும்….. தம்மை ஒப்புவித்தார்” (1பேதுரு 2:23). அவர் எந்த உரிமைக்காகவும் வாதாடவில்லை. பதிலுக்குப் பதில்செய்யவில்லை. கசப்பான எண்ணம் யாதும் கொள்ளவில்லை. முறுமுறுக்கவும் இல்லை. மனிதனைவிட அவர் எத்தனை வேறுபட்டவர்! தாம் கொடிய மனிதர்களால் கோரச் சிலுவையில் அறையப்படுவது பிதாவினது சித்தம் என அவர் அறிந்தபோது அவர் அடிக்கப்படும் ஆட்டுக்குட்டியைப்போல மரணத்திற்குத் தமது தலையைத் தாழ்த்தினார். ஏசாயா தீர்க்கன் முன்னுரைத்ததுபோல் ‘அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஓர் ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும் அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்” (ஏசயா 53:7). வாரினால் அவர் அடித்து நொறுக்கப்பட்டதும், முகத்தில் துப்பப்பட்டதும், கேலிசெய்யப்பட்டதும், வாளைந்து சென்ற வியாகுலப் பாதையிலே கோரக்கல்வாரிவரை வலிய சிலுவையைத் தம் முதுகில் சுமந்து களைத்துச் சோர்ந்தவராய் தள்ளாடிச் சென்றதும், சிலுவையில் ஆணிகளாய் அறையப்பட்டதும், தூக்கி நிறுத்தப்பட்ட அச்சிலுவையிலே வேதனையின் உச்ச நிலையில் தொங்கி தம் ஜீவனை விட்டதும், பின்னர் ஈட்டியால் குத்தப்பட்டதும், பிளக்கப்பட்ட அவர் விலாவிலிருந்து இரத்தமும், நீரும் பீறிட்டு வழிந்ததும் ஆகிய இவையாவும் அவர் ஆட்டுக்குட்டியாக இல்லாவிடில் நிகழ்ந்திருக்காதல்லவா? அந்தோ! இவை யாவும் எனது பாவத்தின் பொருட்டாக அன்றோ? அவர் சிலுவையின் மரணமடைந்ததால் ‘ஆட்டுக்குட்டி” என அழைக்கப்பட்டது உண்மையே: ஆனால் அவர் ஆட்டுக்குட்டியின் தன்மையுடையவராய் இருந்தமையால் அன்றோ சிலுவையில் மரணமடைந்தார்?

இயேசுவானவரின் திருரத்தத்தைக்குறித்து நாம் சிந்திக்கும்போதெல்லாம் ஆட்டுக்குட்டியானவருடைய ஆழமான தாழ்மையையும், பணிவுமிக்க ஒப்புக்கொடுத்தலையும் நினைவுகூர்வோமாக. ஏனெனில் இத்தன்மையே தேவசமூகத்தில் அதிசயமான வல்லமையைத் திருரத்தத்திற்கு அளிக்கிறது. எபிரெயருக்கு எழுதப்பட்ட நிரூபத்தில் கிறிஸ்துவானவருடைய திருரத்தமானது அவர் தம்மைத்தாமே தேவனுக்கு ஒப்புக்கொடுத்ததோடு இணைக்கப்பட்டுள்ளது: ‘தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த இரத்தம்” (எபி 9:14). இந்த ஒப்புக்கொடுத்தலே திருரத்தத்திற்கு மாபெரும் வல்லமையை அளிக்கிறது: இந்த தன்மையே தேவசன்னிதியில் மிக உன்னத மதிப்பு வாய்ந்ததாய் விளங்குகிறது.

மனிதன் தாழ்மையோடும், ஆட்டுக்குட்டியின் தன்மையோடும் திகழ்ந்து, தேவனுடைய திருச்சித்தத்திற்குத் தன்னை முற்றிலும் ஓப்புக்கொடுக்க வேண்டுமென தேவன் விரும்புகிறார். இதற்காகவே அவர் மனிதனை ஆதியில் உருவாக்கினார். அவன் இந்தப்பாதையில் வழிநடக்க மறுத்ததாலேயே முதற்பாவத்தைச் செய்தான். அதுமுதல் கீழ்ப்படியாமையே பாவத்தின் மையமாக அமைந்திருக்கிறது. ஆம், ஒப்பற்ற தன்மைகளை மீண்டும் உலகிற்குக் கொண்டுவரவே இயேசுவானவர் இவ்வுலகில் அவதரித்தார். இத்தன்மைகளை அவரில் தேவன் கண்டதினாலேயே அவரைக்குறித்து, ‘இவன் என்னுடைய நேசகுமாரன்: இவரில் நான் பிரியமாயிருக்கிறேன்” என சாட்சி பகர்ந்தார் (மத் 3:17). இரத்தம் சிந்துதலினாலே இந்த ஒப்பற்ற தன்மைகள் முழுவதுமாக அதி உன்னதமாக வெளிப்பட்டமையால் அது தேவனுடைய பார்வையில் மிகவும் விலையேறப்பெற்றதாகவும் அவருக்கு உகந்த சுகந்த பலியாகம் அமைந்தது. அதனாலேயே மனிதனும் தனது பாவத்திலிருந்து மீட்கப்படுவது சாத்தியமாயிற்று.

இவ்வாறு மூன்றால் நாள் உயிர்த்தெழுந்த இயேசு மீண்டும் வருகிறார். தம்மை விசுவாசித்தவர்களை கூட்டிச்சென்று நித்தியகாலமாய் அவரோடு வாழ நித்திய ஜீவனை அளிக்கிறார். இயேசுவின் இரண்டாம் வருகை சரீரப்பிரகாரமான வருகை என்று திருமறை கூறுகிறது. அப்போஸ்தலர் 1:1-11இல் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பரமேறினதைக்குறித்து வாசிக்கிறோம். ‘அவர் போகிற போது அவர்கள் (சீஷர்கள்) வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில் இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று, கலிலேயராகிய மனுஷரே நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்”. அவர் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவருடைய உயிர்த்தெழுந்த உடலில் இருந்தார். அவர் திரும்ப வரும்போது அதே உடலில் வருவாரென்று தேவ தூதர்கள் அறிவித்தார்கள். வெளி 1:7இல் ‘இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்” என்று வாசிக்கிறோம்.

இயேசு திரும்ப வரும்போது கண்ணுக்குத்தெரியாத ஆவியாயல்ல, காணக்கூடிய ஆளாகவே இருப்பார். அவரைக் காணாதிருந்தும் விசுவாசிக்கிறவன் பாக்கியவான். நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறோம்.