Home கட்டுரைகள் முட்செடிகள் திராட்சப் பழங்களைத் தருமா?

முட்செடிகள் திராட்சப் பழங்களைத் தருமா?

1924
0

முட்செடிகள் திராட்சப் பழங்களைத் தருமா?

‘நல்ல மரம் நல்ல கனிகளைக்கொடுக்கும்”

வேப்ப மரம் மாங்கனியைத் தரமாட்டாது. களைப்பயிரில் நெல்லை அறுக்கமுடியுமா? இறைவன் தங்கள் தங்கள் இனத்திற்கேற்ற விதைகளைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் தங்கள் தங்கள் இனத்திற்கேற்று விதைகளைத் தாங்கும் கனிகளைத்தரும் மரங்களையும் பூமியிலே விளையும்படிச் செய்தார் என்று காண்கிறோம் (ஆதி 1:11). தேவன் படைப்பில் வைத்துள்ள மாறாத விதி இது. திராட்சைப் பழங்களைப் பறிக்க நாம் திராட்சைச் செடியினிடம் செல்லவேண்டும்.

இயேசுக்கிறிஸ்து நமது மலைப்பிரசங்கத்தில் இந்த உவமையின் அடிப்படையில் ஒருபெரிய உண்மையைப் போதிக்கிறார். ‘நல்ல மரம் நல்ல கனிகளைக்கொடுக்கும். கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது@ கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது” என்றும் கூறினார் ( மத்தேயு 7: 17-18).

மரம் எப்படியோ அப்படியே அதன் கனியும். மனிதன் எப்படியோ அவன் நினைவும், சொல்லும், செயலும். மனிதன் ஒரு முட்செடி. அவன் இருதயம் சீர்கெட்டது. பொல்லாதது. ‘எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?”(எரேமியா 17:9). ஆதாமின் வழித்தோன்றிய மனிதர்கள் யாவரும் பாவ இயல்புடன் தோன்றினவர்கள். கசப்பான ஊற்றிலிருந்துத் தித்திப்பான நீர் சுரக்குமா? ‘ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா? என் சகோதரரே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான ஜலத்தைக் கொடுக்கமாட்டாது” (யாக் 3:11-12). இவனுக்கியல்பான பாவச் செயல்களே இவனுக்குண்டு.

நற்செயல்கள் புரிய அவன் சிறிதேனும் வல்லவனல்லன் ஏனெனில் நற்கனி தரக்கூடிய செடியாக அவன் மாற்றம்பெறவில்லை. எம்மிடத்தில் அதாவது எம் ஊனியல்பில் நம்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நாம் அறிகிறோம். நாம் விரும்புகிற நன்மையைச் செய்யாமல் விரும்பாத தீமையையே செய்கிறோம். ஏனெனில் பாவம் எமக்குள்ளேயே வாசமாயிருக்கிறது, என்பதுவே ஒவ்வொருவரின் அனுபவம். வேதமும் அவ்வாறே சொல்லுகிறது, ‘;நான் அல்ல எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்@ நன்மைசெய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.” (ரோமர் 7:17-20).

இதற்குத் தீர்வு உண்டா? ஆம்! மரத்தை நல்லதாக்குங்கள். அப்பொழுது அதன் கனியும் நல்லதாகும். மரத்தின் இயல்பே முற்றுமாய் மாற்றப்ட்டாலொழிய கனியில் மாற்றம் ஏற்படாது. இதைக் கர்த்தராகிய இயேசு நிக்கோதேமு என்னும் ஒரு மனுஷனுக்கு இப்படியாகச் சொன்னார், ‘ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றும் அவர் சொல்லியுள்ளார் ( மத்தேயு 18:3).

ஒருவன் இயேசுவின் நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவனாய் அவரைத் தன் இரட்சகரும் ஆண்டவருமாக ஏற்றுக்கொண்ட மாத்திரத்தின் அவன் மறுபிறப்படைந்து தேவ பிள்ளையாகிறான் (யோவான் 1:12-13). தேவனுடைய உயிர் வித்து அவனுக்குள் நாட்டப்படுகிறது. அவன் புதுப்படைப்பாகிறான். ‘இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்@ பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (2கொரிந்தியர் 3:17). தன்னிலுள்ள பாவசுபாவத்தை மேற்கொள்ளக்கூடிய ஜீவனுள்ள ஆவியின் ஆற்றலைப் பெறுகிறான். தேவ ஆவியானவர் அவனுக்கள் வாசம் செய்கிறபடியால் அவன் தேவ கற்பனைகளை விரும்வும், அவற்றிற்குக் கீழ்ப்படியவும் பெலன் பெறுகிறான். இந்த மாற்றத்தைக்குறித்து இயேசு ‘மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்” என்றார் (யோவான் 3:6).

நற்கனி மரமாக மாற்றம் பெற்றபிறகு நற்செயலாம் நற்கனிகள் தோன்றுவது கடினமன்று. இயல்பான விளையக் கூடியது, நல்ல மரம் நல்ல கனிகளைக் கொடுக்கும். இந்த ஆவியின் கனி அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, நற்குணம், தயவு, விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம். தேவன் புதிய இருதயத்தை உங்களுக்கு கொடுத்து உங்கள் உள்ளத்திலே அவருடைய ஆவியைவைத்து நீங்கள் அவருடைய கட்டளைகளில் நடக்கவும் அவர் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும் பண்ணுவார். இது அவர் நம்முடைய மக்களுடன் செய்துள்ள உடன்படிக்கை (எசேக்கியேல் 36:26-27). நாம் இயேசுவில் நிலைத்திருப்பதே நம் கடன். அப்பொழுது மிகுந்த கனிகளைக் கொடுப்போம். பிதாவும் மகிமைப்படுவார் (யோவான் 15:5,8).

என் திராட்சத் தோட்டம் கசப்பான பழங்களைத் தந்ததென்ன?
(ஏசாயா 5:4)

மரத்தை நடுபவன் அதில் கனியை எதிர்பார்க்கிறான். நிலத்தைப் பயிரிடுகிறவன் பலனை எதிர்பார்க்கிறான். இறைவனும் தாம் தெரிந்துகொண்ட ஜனத்தைக் குறித்து ஒரு திட்டமான எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளார். இஸ்ரவேலின் வம்சமே சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம். அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று (ஏசாயா 5:7). பூமியின் சகல ஜனங்களிலுமிருந்து தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலரை தமக்குச் சொந்தமாயிருக்கும்படியும் பரிசுத்த ஜனமாகவும், ஆசாரிய ராஜ்யமுமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார் (உபாகமம் 7:6-7, யாத்திரகாமம் 19:6). தேவன், தம்முடைய ஜனத்தைப் பிரத்தியேகப்படுத்தி அவர்களுக்கு முன் சென்று, பிறஜாதிகளைத்துரத்தி, அவர்கள் நாட்டை இவர்களுக்குக்கொடுத்து, சாட்சியின் வாசஸ்தலத்தை அவர்கள் நடுவிலே வைத்தார். ஆசாரியரையும், தீர்க்கதரிசிகளையும் அவர்களுக்குக் கொடுத்து, தமது கட்டளைகளையும், நியாயப்பிரமாணத்தையும் அளித்தார். தம்முடைய தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்கள் மீறுதல்களை அவர்களுக்கு எடுத்துணர்த்தி எச்சரித்தும், அவர்கள் நடக்கவேண்டிய வழியை அவர்களுக்கு எடுத்துக்காட்டியும் வந்தார். பிற இனத்தவர்களினின்று இவர்கள் வேறுபட்டு பரிசுத்த இனமாக, தேவனுக்குச் சாட்சியாக, பிறமக்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கவேண்டுமென்று அவர்களை நியமித்தார்.

ஆனால், அவர்களோ கர்த்தரின் கட்டளைகளை மீறி அவரைவிட்டுப் சோரம் போய், தங்கள் பொல்லாத வழிகளில் நடந்து பிற மக்களைப் போல் தங்கள் வழிகளைக் கெடுத்துக்கொண்டார்கள். ஆகையால் ஏசாயாதீர்க்கன் வாயிலாகக் கர்த்தர் தமது உள்ளத்தின் விசாரத்தை இப்பாடலின் மூலம் தெரிவிக்கிறார்,

‘செழிப்பான மேட்டிலே அந்தத் திராட்சத்தோட்டம். அவர் அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச் செடிகளை நட்டு, அதன் நடுவில் ஒரு கோபுரத்தையும் கட்டி அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல பழங்களைத் தருமென்று காத்திருந்தார். அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது. நான் திராட்சத் தேட்டத்துக்காக செய்யாத எந்த வேலையை இனிச் செய்யலாம்? ” என்று ஆண்டவர் அங்கலாய்க்கிறார் (ஏசாயா 5:1-6).

யூதர்கள் எதிர்நோக்கியிருந்த மேசியா (இயேசு கிறிஸ்து) அவர்கள் நடுவில் வந்தபோதும்கூட அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரோ எருசலேமைப் பார்த்துக் கண்ணீர்விட்டு அழுது ‘எருசலேமே, எருசலேமே, கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழ் கூட்டிச் சேர்த்துக்கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன். உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று” என்றார் (லூக்கா 13:34). நான் உங்களுக்காக செய்யவேண்டுவதனைத்தையும் செய்தேனே. நல்ல கனிகளாகிய மனந்திரும்புதல், உண்மை, நீதி, பரிசுத்தம், அன்பு, இரக்கம் ஆகியவைகளை நான் உங்களில் காணமுடியவில்லையே?. கசப்பான பழங்களாகிய வைராக்கியம், பகைமை, பொறாமை, மாய்மாலம், கொடுமை, அசுத்தம் போன்றவைகளையே காண்கிறேன் என்றார்.

இந்த இயேசுவை, அவர்கள் பிடித்து அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணயடித்துக்கொலை செய்தார்கள். கிருபையின் நாட்களைப் போக்கடித்துவிட்ட அவர்கள் கோபாக்கினையை தங்கள் மேல் குவித்துக்கொண்டார்கள். கி.பி 70 ஆம் ஆண்டு எருசலேம் நகரம் ரோமப் போர் வீரர்களால் பிடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. ஆயிரக்கணக்குhன யூதர்கள் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் பிறநாடுகளுக்குச் சிதறடிக்கப்பட்டுப்போயினர்.

தேவன் இஸ்ரவேல் மக்களுடன் கொண்டிருந்த உடன் படிக்கையை தங்கள் மீறுதலினால் அவர்கள் அவமாக்கிப் போட்டபோதிலும், தேவனின் திட்டம் தோல்வியடைவதில்லை. தேவகிருபையைப் புறக்கணித்துவிட்ட யூதமக்களுக்குப் பதிலாக தேவனுடைய இராஜ்யம் அதற்கேற்ற கனிகளைக் கொடுக்கும் ஜனங்களுக்குக் கொடுக்கப்படும் என்று இயேசு சொன்னார் (மத்தேயு 21:43). அவர்களுடைய தவறுகளினாலே புறஜாதியினருக்கு ஐசுவரியமாயிற்று என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியிருக்கிறார், ‘இப்படியிருக்க, விழுந்துபோகும்படிக்கா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படியல்லவே@ அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்பத்தக்கதாக அவர்களுடைய தவறுதலினாலே புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்தது. அவர்களுடைய தவறு உலகத்திற்கு ஐசுவரியமும், அவர்களுடைய குறைவு புறஜாதிகளுக்கு ஐசுவரியமுமாயிருக்க, அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாய் அப்படியிருக்கும்” (ரோமர் 11:11-12).

இது எப்படியெனில் கிறிஸ்து பரத்துக்கேறியபின் பரிசுத்த ஆவியானவரைத் தம்முடைய விசுவாசிகள்மேல் அவர் பொழியப்பண்ணி ஒரு புதிய வகுப்பினரைத் தமது மகிமைக்குப் புகழ்ச்சியாகத் தெரிந்துகொள்வது அவருக்குப் பிரியமாயிற்ற. இந்தக் கிறிஸ்தவ விசுவாசக் கூட்டத்தினரையே இந்த நாட்களில் கர்த்தர், ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் ஏற்படுத்தினார். (1பேதுரு 2:9).

இவர்கள் உலகத்திற்கு வெளிச்சமாயும் பூமிக்கு உப்பாயும் இருக்கவேண்டியவர்கள். அவர்கள் போய்க் கனிகொடுக்கும்படி அவர்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும் இயேசு அவர்களை ஏற்படுத்தினார் (யோவான் 15:16). என்னிலே நிலைத்திருங்கள். அப்பொழுது மிகுந்த கனிகளைக் கொடுப்பிர்கள். என்னில் கனிகொடாத கொடி எதுவோ அது அதிகக் கனிகளைக் கொடுக்கும்படி அதைச் சுத்தம் பண்ணுகிறார் என்று நமதாண்டவர் கூறினார் (யோவான் 15:2).

நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டிருந்த இஸ்ரவேலரில் நல்ல கனிகள் தோன்றமுடியவில்லை. நாமோ கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறோம் (ரோமர் 6:15). கிறிஸ்து என்று செடியிலே நாம் கொடிகளாக இணைக்கப்பட்டால் நல்ல கனிகளைக் கொடுப்போம்.

நண்பர்களே! நீர் ஒரு முட்செடியாக இருந்து முட்கள் போன்ற உமது பண்புகளால் உம்மையும் பிறரையும் குத்திக்கொண்டிருக்கும் வாழ்க்கை போதும். நீர் கனிச்செடியாய் மாற்றம் பெற்றால் பிறருக்கு ஆசீர்வாதமாய் மாறலாமே! ‘தூய்மையாய் வாழ விரும்பியும் என் வாழ்வு முற்றும் தோல்வியாய் முடிகிறதே” என்பதை மனமாற கர்த்தரிடம் அறிக்கையிட்டு இயேசு உம்மை முழுமையாய் மாற்றும்படி அவரை வேண்டிக்கொள்வீராக. இயேசுவை உமது இரட்சகராக விசுவாசித்து ஏற்றுக்கொண்டு அவரால் மாற்றம் பெறுவீர். அப்பொழுது இயேசுவாம் திராட்சைச் செடியில் நிலைத்திருக்கும் கொடியால் தேவனுக்குகந்த கனி கொடுக்கக்கூடியவராவர். இஸ்ரவேலருக்கு ஏற்பட்டகதி, புறஜாதிகளாகி நமக்கும் ஏற்படாது இருக்க அவரை விசுவாசிப்போம். செடியாகி அவரில் கொடிகளாக நாமும் நிலைத்திருப்போம். நமது நேசர் கனிகளைத்தேடி வரும் காலம் நெருங்கிவிட்டது. ‘நாமோ கெட்டுப்போக பின்வாங்குகிறவர்களாயிராமல் ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்” (எபிரேயர் 10:39).