Home கட்டுரைகள் மெய்யான சமாதானம்

மெய்யான சமாதானம்

4081
0

மனிதன் எக்காலத்திலும் சமாதானத்தை விரும்புகிறவனாயிருக்கின்றான். இக்காலத்தில் மனிதன் சமாதானத்தை அதிகமாக விரும்புகின்றான். சமாதானத்தை நாடி மனிதன் மேற்கொள்ளுகின்ற முயற்சிகளைத் தினசரி செய்தித்தாள்கள் தினமும் ஏந்தி வருகின்றன. சமாதானம் ஏற்பட்டிட நாடுகள் தம்மிடையே தூதுவர்களைப் பரிமாற்றிக் கொள்ளுகின்றுன. சமாதானம் மாநாடுகள் உலகின் பல பாகங்களிலும் நடைபெற்றவண்ணமுள்ளன. ஐக்கிய நாட்டு நிறுவனம், உலகில் சமாதானம் ஏற்படப் பலவித முயற்சிகளை மேற்கொள்ளுகின்றது. ஆனால், மெய்யான சமாதானம் ஏற்பட்டுள்ளதா? உலக நாடுகளிடையே மெய்யான சமாதானம் ஏற்பட்டுள்ளதா? உலகப் பெருந்தலைவர்கள் சமாதானத்தைப் பற்றிப் பேசுகின்றனர். ஆனால், அவர்கள் மெய்யான சமாதானத்தை அடைந்துள்ளனரா? இவ்வித நிலமை ஏன்? சமாதானம் ஏற்படுவதற்கான மனிதனின் முயற்சிகள் ஏன் வெற்றியளிக்கவில்லை? உலகெங்கும் அமைதியின்மையும் குழப்பமும் மலிந்து காணப்படுகின்றனது.

சமாதானப்பிரபு

உலகப் பெருந்தலைவர்களால் மெய்யான சமாதானத்தைக் கண்டடைய முடியாதைக்குக் காரணம் என்ன? மெய்யான சமாதானத்தை அருளும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் அவர்கள் வந்திடாது, சமாதானத்திற்காக முயற்சிப்பதுதான் அதற்குக் காரணம். திருமறை, கர்த்தராகிய இயேசுவை ‘சமாதான பிரபு” என்று உலகிற்கு அறிமுகப்படுத்துகிறது. இதனை உலகம் உணர்ந்து, அவரிடம் வரும்போதுதான் மெய்யான சமாதானம் அடைய முடியும் (ஏசாயா 9:6-7).

இதோ கர்த்தராகிய இயேசு தமது சீஷர்களுக்கருளிய அற்புத வாக்குத்தத்தம்:
‘சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன். என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரமாய் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை” (யோவான் 14:27).

இவ் வாக்குத்தத்தத்திலிருந்து உலகில் இருவித சமாதானம் உள்ளன என அறியலாம். இயேசு அருளும் சமாதானம்- உலகம் கொடுக்கும் சமாதானம். இயேசு அருளும் சமாதானம் மெய்யானது. நிலைவரமானது. உலகம் கொடுக்கும் சமாதானம் பொய்யானது. நிலைவரமற்றது.

உலகின் பெருந்தலைவர்கள் தங்கள் ஞானத்தால் நிரந்தர சமாதானம் ஏற்படுத்த முயன்று முயன்று, தோல்வியடைந்துகொண்டிருக்கின்றனர். ஏமாற்றமடைகின்றனர். ஐக்கிய நாட்டு நிறுவனமும் சமாதானம் உலகில் நிலைத்திட வெகுவாய் முயற்சிக்கின்றது. ஆனால், பிரச்சினைகளும் தொல்லைகளுந்தான் அதிகரிக்கின்றன: சமாதானம் எட்டாத தொலைவில் காட்சியளிக்கின்றது.

பாவம் எல்லாத் தீமைக்கும் வேர்

ஒரு ஆசிரியரின் தோட்டத்தில் முட்செடி ஒன்று செழித்து வளர்ந்துகொண்டிருந்தது. அதனைக்கண்ட ஆசிரியர் ஒருநாள் அதனை வெட்டி, தோட்டத்திற்கு வெளியே எறிந்தார். ஆனால், மீண்டும் சில நாட்களில் அச்செடி துளிர்த்து வளரலாயிற்று. காரணம் என்ன? அதன் வேர் வெட்டி எறியப்படவில்லையன்றோ?

இவ்வண்ணமே உலகப் பெந்தலைவர்களும் செயலாற்றுகின்றனர். முட்செடியின் மேல்பாகத்தை வெட்டி எறிகின்றனர்- வேரினை வெட்டி எறியவில்லை.
எல்லாத் தீமைக்கும் வேராய் இருக்கின்ற பாவம் இருதயத்தினுள்ளே ஆழமாய் சென்றிருக்கின்றது. அதனை வெட்டித் தோண்டி எறிந்தாலன்றித் தீமை மாய்ந்து போகாது என்பதை மறந்திட வேண்டாம்.

‘எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது: அதை அறியத்தக்கவன் யார்?” (எரேமியா 17:9).

‘துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்: அது அமர்ந்திருக்கக் கூடாமல், அதின் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது. துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்லுகிறார்” (ஏசாயா 57:20-21).

‘ஒருவன் தேவனுடைய கிருபையை இழந்து போகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்” (எபிரேயர் 12:15).

மெய்சமாதானமற்ற நிலையில் எத்தனையோ பேர் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளுவதைப்பற்றிய செய்திகளை நாம் தினமும் பத்திரிகைகளில் காணலாம். உயர் உத்தியோகம் வகிப்பவர்கள்கூட தற்கொலை செய்துகொள்ளுகின்றனர். எல்லா வசதிகளையும் பெற்றிருந்தும்கூட தற்கொலை செய்துகொள்ளுகின்றனரே ஏன்? என ஆராய்ந்தால் சமாதானமற்ற மனநிலைதான் காரணம் என்பதை அறிந்துகொள்ளலாம். சமாதானமற்ற நிலைக்குப் பாவமே காரணம்.

சமாதானத்தின் பொய்த் தோற்றம்

முதல் உலகமகா யுத்தம் (1918 ஆம் ஆண்டு)முடிந்ததும் சர்வதேச சங்கம் நிறுவப்பட்டது. இனிமேல் உலகில் யுத்தம் ஏற்படமாட்டாது. சமாதானம் நிலவும், என யாவரும் நம்பினர். ஆனால் 1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலகமகா யுத்தம் ஆரம்பமாயிற்று. உலகின் பெரும்பாலான நாடுகள் அவதியுறலாயின. இப்போது ஐக்கிய நாடுகள் நிறுவனம் (ரு.N.ழு) சமாதானத்தை நிலைநாட்ட முயற்சிக்கின்றனர். ஆங்காங்கே சமாதானம் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால் மெய்யான சமாதானம் ஏற்படுகின்றதா? இல்லையே! ஏன்? திருமறை இதுபற்றிக் கூறுவதென்ன என்பதை சற்றுக் கவனியுங்கள்.

‘சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும். அவர்கள் தப்பிப் போவதில்லை! (1தெசலோனிக்கேயர் 5:3). மனிதன் தன் அறிவினால் சமாதானத்தை நிலைநாட்ட முயற்சிக்கின்றபோது ‘அழிவு” என்னும் பலனைத்தான் அடையமுடியும்.

1935 ஆம் ஆண்டில், ஓர் இரவு, குவெட்டா நகர மக்கள் எனு;றும்போல தூங்கிடச்சென்றனர். நடு இரவு நேரத்தில் பூமி நடுங்க ஆரம்பித்தது. கட்டடங்கள் விழுந்தன. தூக்கத்திலேயே ஏராளமானோர் மாண்டனர். விழித்திருந்த அநேகர் அலறினர். ஆம்! இது போன்று தான் மனிதன் ஏற்படுத்தும் சமாதானம் திடீரெனச் சிதைந்து, சின்னாபின்னமாகிவிடுகின்றது. எச் சமயத்தில் மனிதன் ஏற்படுத்தும் சமாதானம் நொறுங்கி விழும் என்பதை அறிவோம். ஆனால், மனிதன், தான் ஏற்படுத்தும் சமாதானம் நிரந்தரமானது என்று நம்பிவிடுகின்றான். சாத்தான் அவனை நம்ப வைக்கின்றான். பூமி அதிர்ச்சி ஏற்படும் வரை அமைதியாயிருந்த குவெட்டா நகரம் போல், மனிதன் ஏற்படுத்தும் சமாதானம் அமைதியைத் தருகின்றது.

தற்கால உலகில் பலநிறுவனங்கள் சமாதானம் நல்கும் என மனிதன் எதிர் பார்க்கின்றான். ஆனால் அவை உலகை அதிரச் செய்வனவாய் மாறிவிடுகின்றன.

மெய்யான சமாதானம்

அதிர்ந்துகொண்டிருக்கும் உலகிற்கு இயேசு கிறிஸ்துவைத்தவிர வேறு யாராலும் மெய்யான சமாதானம் அளித்திடமுடியாது. அவர்தான் சமாதானப்பிரபு. அவரை உள்ளங்களில் ஏற்றுக்கொண்டவர்களுக்கு மெய்யான நிலைவரமான சமாதானம் உண்டு. (ஏசாயா 9: 6-7).

வேதனையின் போர் வீரன் ஒருவன் யுத்தத்தில் குண்டடிபட்டுக் கீழே சாய்ந்தான். அவனருகே ராணுவ அதிகாரி ஒருவர் ஓடோடிச் சென்று, ‘உனக்கு என்ன வேண்டும்? எது வேண்டுமானாலும் கேள்: தருவதற்கு ஒழுங்கு செய்கிறேன்” என்றார்.

அதற்கு அவன், ‘மிக்க நன்றி! எனக்கு எதுவும் வேண்டாம்: நான் சமாதானமாயிருக்கிறேன். எனது பையினுள்ளே இருக்கும் புதிய ஏற்பாட்டை எடுக்க முடியுமானால் எடுங்கள் ஐயா,” என்றான்.

உடனே ராணுவ அதிகாரி அதனை எடுத்தார். அவன் அவரிடம், ‘ஐயா, அப்புத்தகத்தில் யோவான் பதினான்காம் அதிகாரத்தில், ‘சமாதானம்” என்று குறிப்பிடப்பட்டுள்ள பாகத்தைத் தயவு செய்து வாசியுங்கள்” என்றான். அவரும் அவ்விதமே பின்வரும் வசனத்தை அவனுக்குப் படித்துக் காண்பித்தார்.

‘சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்@ உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” (யோவான் 14:27).

‘ஐயா, நான் சமாதானமாய் என் இரட்சகர் இயேசுவிடம் செல்லுகிறேன்: நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள்” என்று கூறி மகிழ்ச்சியுடன் மரித்தான்.

ஆம், முதியவர் சீமோன் ஜெபாலயத்தில் இயேசு பாலகனைக் கைகளில் எந்தியவராய்த் தேவனுக்கு நன்றி கூறினார். அவரது உள்ளம் மெய்ச்சமாதானத்தால் நிறையலாயிற்று.

‘ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்@ புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.”
நீங்கள் கிறிஸ்துவில் தேவனது இரட்சிப்பைக் கண்டிருக்கிறீர்களா? அதனை அடைந்திருக்கின்றீர்களா? நீங்கள் மனஸ்தாபமடைந்து இயேசுகிறிஸ்துவை விசுவாசத்தின் மூலமாய் உங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா? அவரை ஏற்றுக்கொண்டிருப்பீர்களானானல், அவர் உங்கள் உள்ளத்தை நிரந்தர மெய்ச் சமாதானத்தால் நிரப்பிடுவார்.

மெய்ச் சமாதானம் என்பது என்ன?

மெய்ச்சமாதானம் என்றால் என்ன என்பதைத் திருமறை பலவாறு விளக்குகிறது.

1. அது ‘தேவ சமாதானம்” (கொலோசெயர் 3:15)
2. அது ‘மிகுந்த சமாதானம்” (சங்கீதம் 119:165)
3. அது ‘பரிபூரண சமாதானம் (எரேமியா 33:6)
4. அது ‘பூரண சமாதானம்” (ஏசாயா 26:3)
5. அது ‘புரண்டு ஓடும் ஆற்றைப் போன்ற சமாதானம்” (ஏசாயா 66:12)
6. அது ‘எல்லாப்புத்திக்கும் மேலான தேவசமாதானம்” (பிலிப்பியர் 4:7)
7. அது ‘முடிவில்லாத சமாதானம்” (ஏசாயா 9:7)

இந்த சமாதானத்தை உங்கள் பொருளால் பெற்றுக்கொள்ள முடியாது. சமயச் சடங்குகளைத் தவறாது செய்வதால் அடையமுடியாது. சமாதானப் பிரபுவாகிய கர்த்தர் இயேசுவை உங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளுவதால் மாத்திரமே அடைந்திடமுடியும்.

சிலுவையும் மெய்ச்சமாதானமும்

சிலுவை மூலம் மெய்ச் சமாதானம் கிடைப்பதைப் பற்றித் திருவசனம் உரைப்பதைக் கருத்துடன் படியுங்கள்.

‘மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார், நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசாயா 53:4-5)

பாவம் நமது இருதயத்திற்குத் துக்கத்தையும், வேதனையையும் தருகின்றது: ஆனால், நமது துக்கத்தையும், வேதனையையும் கிறிஸ்து சுமந்து நமக்கு விடுதலை தந்துள்ளார். கிறிஸ்துவின் இரத்தம் நமது துக்கத்தையும் வேதனையையும் மாற்றும்போது நமக்குச் சமாதானமுண்டாகிறது.
‘குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்” (1யோவான் 1:7)

இயேசுவின் இரத்தம் பாவங்களாலுண்டாகும் காயங்களுக்கு மருந்தாக உள்ளது. அவர் தமது இரத்தத்தால் நம்மைக் கழுவும்போது நமது இருதயத்திற்குச் சுகமும் சமாதானமும் ஏற்படுகிறது. எனவே, அவரிடம் செல்வோம். இரத்தத்தால் கழுவப்பட்டுச் சுகமும் சமாதானமும் அடைவோமாக.