Home கட்டுரைகள் ஒருவருக்குப் பதிலாக வேறொருவர் பலி

ஒருவருக்குப் பதிலாக வேறொருவர் பலி

2370
0

ஆபிரகாம் செலுத்திய பலி

பரிசுத்த வேதாகமத்தில் எல்லா பலிகளிலும் சில சத்தியங்களைக் காணலாம். எல்லா சத்தியங்களும் ஒரே பலியில் வெளிப்படவில்லை. ஆதியாகமம் முதற்கொண்டே வெவ்வேறு குறிப்பிட்ட காரியங்களுக்காக பலிகள் செலுத்தப்பட்டது. ஒவ்வொரு பலியிலும் வெளிப்பட்ட வெவ்வேறு சத்தியங்கள் கல்வாரி மலையில் தேவ ஆட்டுக்குட்டியின் ஒரே பலியில் ஒருங்கே நிறைவேறுவதைக் காணலாம். சிலுவை பலியில் நிறைவேறிய சத்தியங்களை சத்திய வேதம் படிப்படியாக ஏதேன் முதல் வெளிப்படுத்தியிருக்கிறது.

வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டிலிருந்தே மனிதர்கள், கடவுளுக்கு மிருகங்களையும் பறவைகளையும் தகன பலி செலுத்தி வந்தனர். முதல் முறையாக ஒரு மனிதன் பலிபீடத்தில் கிடத்தப்பட்டிருப்பதை இங்கு காண்கிறோம்.

பலியின் காரணம் : இது ஒரு அன்பின் சோதனை. ஆபிரகாம் தேவனை நேசிக்கிறானா? இல்லை உலகத்தில் மேன்மையான மற்றெதையாகிலும் நேசித்தானா? இதை தேவன் சோதித்தறிய விரும்பினார். முதிர்வயதில் கிடைத்த ஏக சுதனை பலியிடுமாறு தேவன் கட்டளையிட்டார். ஆபிரகாமிடம் பேசுகையில் அவனுடைய மகன் மீதுள்ள பாசத்தையும், இரக்கத்தையும் கிளம்பும் விதம் பேசுகிறார். ‘உன் புத்திரனும், உன் ஏக சுதனும், உன் நேச குமாரனுமாகிய ஈசாக்கை” என்றார் (ஆதி 22:2). அப்படியாகிலும் ஆபிரகாம் தடுமாறுவானா என சோதித்தார். ஆம்! நமது வாழ்க்கையிலும் மிகவும் உச்சிதமானவைகளையும் தேவனுக்காக துறக்க நாம் ஆயத்தமாயிருக்கவேண்டும். உலக சிநேகிதம் தேவனுக்கு விரோதமான பகை. ‘தகப்பனையாவது , தாயையாவது , மகனையாவது, மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல” என்றார். மத் 10:37. ஆனால் ஆபிரகாம் தேவனை அதிகமாக நேசித்தான். அதனால் கடவுள் கேட்டவுடனே உடனே கீழ்படிந்தான். தேவன் காண்பித்த மலைக்கு புறப்பட்டான்.

சில காரியங்களுக்கு தேவன் விரும்பும் சில மனிதருண்டு. இடங்களுண்டு. ‘கண்ட இடமெல்லாம் நீ உன் சர்வாங்க தகன பலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு” என்றார் நம் தேவன். உபா 12:13. அநேகர் நினைப்பதுபோல எல்லாம் நல்லதல்ல. எல்லோரும் மோட்சம் அடைவதில்லை. நாம் இரட்சிக்கப்பட வேண்டியவிதம் உண்டு. இதைக் கண்டு கொள்ளத் தவறுவோர் மோட்சத்தை அடையவும் தவறுவர். தேவன் காண்பித்த மலை மோரியா தேசத்தில் இருக்கிறது ஆதி 22:1-2. தேவன் கூறுகையில் மோரியா தேசத்துக்குப் போய் அங்கே தேவன் குறிப்பிடும் மலைகள் ஒன்றின் மேல் பலியிடு என்றார். நம் தேவனும் அப்படியே ‘தன் சொந்தக் குமாரனை எமக்காக ஒப்புக்கொடுத்தார்”, அவர் எம்மேல் வைத்த அன்பினால்.

பலிக்காக முதல் பயணம் : இங்கே தான் பலியிடுவதற்காக ஒரு பிரயாணம் நடைபெறுகிறதை முதல் தடவையாகக் காண்கிறோம். முந்திய பலிகள் எல்லாம் ஆங்காங்கே நடைபெற்றன. இப்போதோ தேவன் குறித்த இடத்தில் பலியிட பிரயாணம் செய்கின்றனர். மோரியா தேசத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மலைகள் உண்டென ஆதி 22:2ல் தெளிவு. அப்படியே எருசலேமிலும் அதைச் சுற்றிலும் மோரியா மலை, ஒலிவமலை, சீயோன் மலை, கல்வாரி மலை என்று பல மலைகள் உள்ளன. அவற்றுள் கல்வாரி மலையைத் தான் தேவன் காண்பித்திருப்பார். ஈசாக்கின் பலி இயேசுவின் பலிக்கு முன்னடையாளமானதாலும், கல்வாரி உட்பட்ட தேசத்திற்கு ஆபிரகாம் சென்றதாலும் இந்த மலை தான் அது எனலாம். ஆபிரகாம் பலி செலுத்துவதற்காக இவ்விடத்திற்குப் பயணமானான்.

எருசலேமில் முதல் பலி : இதற்கு முன் பலிகளெல்லாம் எருசலேமுக்கு வெளியே நடைபெற்றன. ஆனால் சாலமோனின் ஆலயம் முதல் அநேகம் பலிகளைச் செலுத்த தேவன் தெரிந்து கொண்ட நகரமாகும் எருசலேம். கர்த்தராகிய இயேசுவும் இந்த நகரத்தில் தான் பலியானார். இந்தக் காரியங்கள் எதுவும் நடைபெறும் முன்னரே விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு எருசலேம் தேசத்தை (மோரியா தேசம்) காண்பித்தார். பலிகள் மெதுவாக நகர்ந்து எருசலேமை அடைந்ததைக் காண்கிறோம். மகாபலியான கிறிஸ்து பலியான இடத்தையும் இப்போது தேவன் வெளிப்படுத்தினார் 11:8.

முதலாவது மனித பலி : கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனிதனாக அவதரித்துப் பலியானார். மனிதனுக்காக அவதரிக்கின்ற ஒருவரே உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கப் பலியாவார் என்பதை முதல் தடவையாக இங்கு வெளிப்படுத்துகின்றார். இங்கேயே குறிப்பாக ஒரு மனிதன் பலிபீடத்தில் வைக்கப்பட்டார்.

இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு முதலாவது ஒப்பனை : ஆபிரகாம் செலுத்திய பலியில் ஈசாக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டார். ஈசாக்கு வெட்டப்படவில்லையென்றாலும் ஆபிரகாம் வெட்டுவதற்கு கத்தியை எடுக்கும் வரை சென்றதால் பலியிடப்பட்டதாகவே தேவன் எண்ணுகிறார். ‘அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால்” என்கிறார் (ஆதி 22:16). ஆனால் ஈசாக்கு அற்புதமாய் விடுவிக்கப்பட்டார். இது இயேவின் உயிர்த்தெழுதலுக்கு ஒப்பனை. கீழ் வரும் வசனத்தைக் கவனியுங்கள். ‘தனக்கு ஒரே பேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான். மரித்தோரிலிருந்து அவனைப் பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான். எபி 11:19. அதாவது ஈசாக்கு பலியாகி மரித்து உயிர்த்தெழுந்ததற்கு பாவனை (ஒப்பனை) யாக உள்ளது. பரமபலியாக இயேசு பலியாகி, மரித்து பின்பு உயிர்த்தெழுந்திருப்பார் என்பதை முதல் தடவையாக இங்கே தேவன் வெளிப்படுத்தினார். முந்திய பலிகளில் இந்த சத்தியம் விளங்கவில்லை. பலியிடப்பட்ட ஜீவன் திரும்பி வரவில்லை. நமது கர்த்தராகிய இயேசுவோ! மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிரோடே எழுந்தார். இவ்வாறு முற்காலத்துப் பலிகளில் இயேசுவின் சிலுவைப் பலியின் இரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டு கல்வாரியில் பரிபூரணமடைவதைக் காணலாம்.

இயேசு சிலுவையை சுமப்பதற்கு முதல் அறிகுறி : ஈசாக்கைப் பலியிடுவதற்கான கட்டைகள் ஈசாக்கின் மீது வைக்கப்பட்டது. ஆதி 22:6, ஈசாக்கு கட்டைகளைச் சுமந்தது போல இயேசுவும் சிலுவையைச் சுமந்தார். இயேசு சிலுவையை சுமக்கும் நிகழ்ச்சியைக் கூட சுமார் அதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஒருவருக்குப் பதிலாக வோறொருவர் முதலாவது பலி : ஈசாக்கு இயேசுவுக்கு நிழல். அதே வேளையில் தண்டனையாக மரிக்கவேண்டிய மனித இனத்திற்கு ஒப்பனை. ஈசாக்கு பலிபீடத்திலிருந்து இறக்கிவிடப்பட்டு, பதிலாக ஒரு கடா பலி இடப்படுகிறது. (ஆதி 22:13) ‘இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக் கொண்டு இருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான். அதை தன் குமாரனுக்குப் பதிலாக தகனபலியிட்டான்.” ஆம்! இயேசு கிறிஸ்து நமக்குப் பதிலாக பலியானர். நமது பாவங்களுக்காக நாம் தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக அவர் தண்டிக்கப்பட்டார். ஏசாயா இதை அழகாக விளக்குகிறார். ‘மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார், நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்.” ஏசாயா 53:4-5. இன்று பாவங்களினால் தண்டிக்கப்பட வேண்டிய எல்லாருக்காகவும் இயேசு ஏற்கனவே தண்டிக்கப்பட்டார். இயேசுவைப் பிடிக்க தேடி வந்தவர்களிடம், ‘என்னைத் தேடுகிறதுண்டானால் இவர்களைப் போகவிடுங்கள்” என்றார் (யோவா 18:8). தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்து மனுக்குலத்தையும் விடுவிக்கிற மாபெரும் விளம்பரமாகும் இது. இங்ஙனம் ஒருவருக்குப் பதிலாக வேறொருவர் பலியாகும் சத்தியம் ஈசாக்கின் பலியில் முதன் முறையாக வெளிப்பட்டது.

பலிகள் ஏன் வந்தன?

மனிதன் பாவத்தில் விழுந்து விட்ட காரணத்தினால் ஒரு பரிகாரம் தேவைப்பட்டது. ஆதாம் பாவத்தில் விழுந்த உடனே அவனைக் காட்டிலும் அதிக விசனமடைந்தவர் சிருஷ்டிகராகிய தேவன் தான். அவனைச் சிருஷ்டித்தவர் என்ற நிலையில் விழுந்தவனை உத்தரிக்கும் பொறுப்பும் அவர் மேல் வந்தது. தாம் வைத்த மகிமையில் குன்றினவனாகக் காணப்பட்ட மனிதனை அந்நிலையில் விட்டுவிட அவரால் முடியவில்லை. அழுக்கில் விழுந்துவிட்ட நமது பிள்ளையைக் கழுவிவிடும் பொறுப்பு நம்மேல் இருப்பது போல, தமது கரத்தால் உருவாக்கப்பட்ட மனிதனுடைய இந்த நிர்ப்பந்த நிலைமையை மாற்றியமைக்கும் பொறுப்பு தேவனைச் சார்ந்தது. எதனால் மனிதனை மீட்டுக்கொள்ளலாம்? தேவன் யோசித்தார்.

உயிரற்றவைகளால் உயிருள்ளவற்றை மீட்க இயலாது. உயிரற்றவைகளிலிருந்து உயிருள்ளவைகளை உண்டாக்க முடியாதது போல மீட்கவும் முடியாது. ஆத்துமாவுக்கு ஈடாக பணமோ, பொருளோ, நற்கிரியைகளோ, பக்தியோ ஈடாக அமைவதில்லை. ‘ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவனல்ல” என்றும் வரையறுத்துக் கூறுகிறது வேதம் (லூக்கா 12:13-20). ‘மேலும் மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது. அதை நான் உங்களுக்கு பலிபீடத்தின் மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காக பாவநிவர்த்தி செய்யும்படிக்கு கட்டளையிட்டேன். ஆத்துமாவிற்காக பாவநிவர்த்தி செய்கிறது இரத்தமே.” லோவி 17:11. உயிருக்கு உயிரே ஈடு. எனவே, இரத்தம் சிந்தி பாவநிவர்த்தி செய்து கொள்ள தேவன் கட்டளையிட்டார். அவ்வாறு இரத்தம் சிந்தும் முறைமைக்கு பலி என்று பெயர். மற்ற பொருட்கள் பாவநிவர்த்திக்கு போதுமானதல்லாததினால் இரத்த பாதகத்திற்கு இரத்தமே சிறந்த வழி எனக் கண்ட தேவன் பலி மார்க்கத்தை ஏற்படுத்தினார். பலியை அங்கிகரிக்காமல் சுயதோற்றமான வழிகளில் வீண் முயற்சி செய்பவர்கள் இனியாகிலும் மெய்யான பலியைக் கண்டடையட்டும்.

ஆம்! இரத்தத்தினாலேயே பாவங்களைப் போக்க முடியும்! இரத்தம் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பு உண்டாகாது என்பது வேதப்பிரமாணம். தேவ நீதி (லேவி 17:11). ஆனால் எந்த இரத்தம்? மிருக இரத்தம் மனிதனை இரட்சிக்குமா? அது தாழ்ந்த இனம். அதனால் மனிதனுடைய பாவநிவாரணத்தைப் பூரணப்படுத்தமுடியவில்லை. எனவே அது ஒழிக்கப்பட்டது. மனித இரத்தமா? இல்லை! ஏனென்றால் பாவமுள்ள மனித இரத்தம் பாவமுள்ள மனிதனை இரட்சிக்கத் தகுதியற்றது. நரபலி ஒழிக்கப்பட்டது. பாவ நிவர்த்திக்கானாலும் சரி மனிதனுடைய இரத்ம் சிந்தப்படக்கூடாது என்பது கட்டளை. இது கொலைபாதகம். கொலை செய்யாதிருப்பாயாக (யாத் 20:13). எனவே, மிருக இரத்தமோ, மனித இரத்தமோ மனிதனை இரட்சிக்காது என்றால் இரட்சிப்பு வருவது எப்படி? இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு உண்டாகாது என்பதே தேவ விதி. ஆனால் எந்த இரத்தம் மனிதனுடைய பாவத்தைப் போக்கும் என்பதைப் பார்க்கிலும், எப்படிப்பட்ட இரத்தம் பாவத்தைப் போக்கும் என்பதே முக்கியம். குற்றவாளியாகிய மனிதனை மீட்க, குற்றமில்லாத இரத்தமே வேண்டும். மனிதரெல்லாம் பாவத்திற்குட்பட்டு சாபத்தை ஏற்றுக்கொண்டதால் அவனுடைய இரத்தம் போதுமானதல்ல. இதினிமித்தம் மிருகங்களுடைய இரத்தம் பலிக்காக கொடுக்கப்பட்டது. இஸ்ரவேலர் ஆடு, மாடு, புறா ஆகியவற்றைப் பலியிட்டு வந்தனர். ஆனால் மிருக இரத்தம் பாவத்தினின்று பரிபூரணமாக இரட்சிக்கப் போதுமானதாக இருக்கவில்லை. ஒரு பலியினாலே ஒரு குறிப்பிட்ட பாவம் மட்டுமே நிவர்த்தியாக்கப்பட்டது. எனவே, வாழ்நாள் முழுவதும், பலிகளைச் செலுத்தி அல்லல்படுவதைக் கண்ட தேவன் அவனுக்கு இரங்கினார். அவர் இரக்கம் நிறைந்த தேவன். அவனது தீராப்பிரச்சனைக்கு ஒரு முடிவுண்டாக்க எண்ணினார். அதற்காக குற்றமில்லாம இரத்தபலி ஒன்றைத் தேடினார்.

சிறந்த பறவைகள், அழகுள்ள ஜீவன்கள், வலிமையான மிருகங்கள், தோற்றத்தில் பெரியவைகள் ஆகிய பார்வையிடப்பட்டன. எதிலும் மனிதனுக்கு பாவபரிகாரம் காணப்படவில்லை. மனிதனை மீட்கும் வழியைத் தேடின தேவன் பிரபஞ்சம் முழுவதிலும் அதைக் காணாத தேவன் தன்னிலேயே அதைக் கண்டார். தேவன் மட்டுமல்ல, தேவபக்தியுள்ள மனிதரும் தகுதியான பாவநிவாரண பலியைத் தேடிவந்தனர். பிரபஞ்சம் அனைத்திலும் தங்களால் அதைக் கண்டுபிடிக்க இயலவில்லை. எனவே, தேவன் தாமே பலியாக வேண்டும். வேறு எதினாலும் மனித பாவத்திற்கு முடிவுண்டாக்க இயலாதென்று முடிவுக்கு வந்தனர்.

அப்படியாகத்தான் ‘பிரஜாபதி பலி” என்ற தத்துவம் உருவாகியது. பிரஜாபதி என்றால் சிருஷ்டிகராகிய தேவன் சாம வேதத்திலுள்ள தந்திய மகா பிரமாணத்தில் காண்பதாவது, ‘பிரஜாபதி தேவப்யம் ஆத்மனம் யக்னம் கருத்வ பிராயசித்த.” சிருஷ்டிகராகிய தேவன் தம்மையே பலியாகக் கொடுத்து பாவ மீட்பைச் சம்பாதிப்பார் என்பதே. எனவே, தேவனும், மனிதனும் ஒரே முடிவுக்கு வந்துவிட்டாற்போல் அமைந்துவிட்டது. தேவனிடத்தில் சேருவதற்கு ஆசை கொண்ட மனிதரெல்லாம் தேவன் எப்பொழுது வந்து பலியாவார் என்று காத்துக்கொண்டு இருந்தனர். அவர் காலத் நிறைவேறினபோது, தமது திட்டத்தின்படியே மனிதனாக அவதரித்தார். நித்தியவாசியாகவும், ஆவியாகவும், அழிவைக்காணக்கூடாதவருமாக உள்ள தேவன் பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமானால் அவர் மனிதனாகப் பிறக்கவேண்டும். ‘ஆதலால் பிள்ளைகள் (பாவசந்ததி) மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க அவரும் அவர்ளைப் போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார் (எபி 2:14).

இதினிமித்தமே இயேசுவின் திரு அவதாரம் உண்டாயிற்று. தேவன் மனிதராகப் பிறந்து மரித்த வரலாற்றை, பரிசுத்த வேதத்தில் மட்டுமே காணலாம். அவர் தான் இயேசு கிறிஸ்து. அவரது பலி மரணத்தினால் இரட்சிப்பை அடையலாம். அவர் ஒருவரே பாவத்திற்காகப் பலியானவர். சிலுவையில் அவர் மரணமடையுமுன்னமே முடிந்தது என்றார் (யோவா 19:30). பலிகள் எல்லாம் முடிந்தது என்பதே பொருள். காலாகாலங்களில் செலுத்தப்பட்டு வந்த மிருக பலி ஒழிந்தது. இயேசுவின் சிலுவை பலியினால் மிருகங்கள், பறவைகள் யாவும் விடுதலை அடைந்தன. மனிதனுடை பாவங்களுக்காக இனி அவைகள் பலியாக வேண்டுவதில்லை. பாவத்தின் பயங்கர சாபத்தினால் நரகத்தண்டனைக்குச் சென்றுகொண்டிருந்த அனைவரும் விடுதலையடைந்தனர். அதுவும் விலையின்றி, வருத்தமின்றி விசுவாசத்தினால் மட்டும். இலவசம்! இலவசம்! முற்றிலும் இலவசம்!!!