தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 34

நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்

பெப்ரவரி 19

“நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்.” மத். 6:34

வீணாய் வருத்தப்பட்டு, மனதைப் புண்ணாக்கிக் கொள்ளும்படி கவலைப்படாதேயுங்கள். நாளை நமக்குரியதில்லையென்று அறிவோமே? இன்றிரவு கர்த்தர் ஒரு வேளை உங்களை எடுத்துக்கொள்ளலாமே! நீங்கள் உயிரோடிருக்கிறதால் இன்றைக்கிருக்கிறவிதமாய் கர்த்தர் உங்கள்மேல் கவனமாய்ப் பட்சமாய் காப்பாராக. அனுதின உணவுப்போல் அனுதின கிருபையும் வேண்டும். நீங்கள் தகப்பனற்றவர்களல்ல: தரவற்றவர்கள் அல்ல. உங்களை கவலைக்குள்ளாக்குகிற காரியங்கள் எதுவானாலும், அது உங்கள் பரமபிதாவுக்கு தெரியும். தேவையானதை அவ்வப்போது உங்களுக்கு தந்து கொண்டேயிருப்பார். தேவ சமாதானம் உங்களை ஆளுகை செய்யட்டும். கர்த்தருடைய வார்த்தையை நம்பியிருங்கள்.

கவலைக்கு இடங்கொடாமல் இருங்கவும், வீண் சிந்தனைகளுக்கு இடங்கொடாமலிருக்கவும் கர்த்தரிடம் காத்திருந்து பொறுமையாய் விசுவாசித்தால் பெற்றுக்கொள்ளவுமே அவர் விரும்புகிறார். இன்றிரவு நீ அமைதியாய் உன் ஆண்டவர் சொன்னதை யோசித்துப்பார். ‘முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்போது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூட கொடுக்கப்படும். ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள். நாளை தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலை;படும். அந்தந்த நாளுக்கு அதினதன் பாடுபோதும்.” காலையில் நீ விழிக்கும்போது உன் தேவன் உன்னோடிருப்பார். ஆறு துன்பங்களில் உன்னை விடுவித்தவர், ஏழு துன்பங்களிலும் உன்னை கைவிடார்.

ஆகவே கவலைப்டாதே.
வீட்டிலும் வெளியிலும்
இரவிலும் பகலிலும்
அவர் கரம் உன்னைப் போஷிக்கும்
அவர் கரம் உன்னை நடத்தும்.

என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்

ஜனவரி 14

“என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்”  சங் 17:5

நமது பாவங்களும், தவறுகளும், நஷ்டங்களும், புத்தியீனங்களும் மன்னிக்கிற தேவனண்டையில் நம்மை நடத்த வேண்டும். தேவ வல்லமையையும் தேவ ஞானத்தையும் பெற்றுக்கொள்ள அதுவே சிறந்த வழி. முறிந்த வில்லைப்போல் பலவீனர்களாயிருக்கலாம். அநேகர் விழுந்தார்கள். அநேகர் விழலாம், அல்லது பின்வாங்கி போயிருக்கலாம். சோதனைகள் வரும்போது விழுந்துவிட கூடியவர்களாய் இருக்கலாம். சாத்தான் விழித்திருக்கிறான்.சோதனைகள் கடுமையாகி, நமது பலவீனமான வாழ்க்கையைச் சோதிக்கும்போது கர்த்தரிடத்தில் வந்து அவரை அண்டிக்கொள்வோம். அனுதினமும் என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும் என்று ஜெபிப்போமாக. எந்த வேளையிலும் சோதனையிலும் கொந்தளிப்பிலும், அமைதியான வேளையிலும் நம்முடைய நடைகளை அவர் ஸ்திரப்படுத்தவேண்டும்.

கர்த்தர் நம்மை தாங்கிவிட்டால் நாம் துணிகரத்தில் விழுந்துவிடுவோம். அல்லது அவிசுவாசத்தில் மாண்டு போவோம். சுய நீதியையும் பெலத்தையும் பாராட்டுவோம். அக்கிரமத்தில் விழுந்து பின்வாங்கி போவோம். இன்றுவரை கர்த்தர் நம்மை காத்தால்தான் நாம் பத்திரமாய் இருக்கிறோம். நமது பலவீனத்தையும் சுயத்தையும் அவரிடம் ஒப்படைத்து அவரின் பெரிய ஒத்தாசையை நாடும்போது அவரின் பெரிய பெலத்தைப் பெறுவோம். நம்மையும் உலகத்தையும் நம்பும்போது நாம் விசுவாசத்தைவிட்டு விலகி விடுவோம். மன தாழ்மையோடும் விசுவாசத்தோடும் அவரிடம் வரும்போது நமது பாதைகளைச் செம்மையாக்கி விசுவாசத்தில் நிற்கவும் பெலன் தருகிறார்.

அன்பானவர்களே, தேவ ஒத்தாசையை அனுதினமும் தேடாவிட்டால் சாத்தானால் ஜெயிக்கப்பட்டு மோசம் போவீர்கள். உங்களைப் பரிசோதித்துப் பாருங்கள். விழித்திருந்து ஜெபியுங்கள்.

சுத்த தேவ ஆவியே
சுத்தம் ஞானம் தாருமேன்
மோசம் அணுகும்போது
என்னைத் தாங்கும் அப்போது.

கிறிஸ்துவுடன் எழுந்திரு

மார்ச் 20

“கிறிஸ்துவுடன் எழுந்திரு.” கொலோ. 3:1

இயேசுவானவர் நமது பிணையாளியாகையால் நமக்கு பதிலாக மரித்தார். தம்முடைய ஜனங்கள் எல்லார் சார்பாகவும் மரித்தார். அப்படியே எல்லாருக்காகவும் உயிர்த்தெழுந்தார். அவர் மரித்தபோது அவருடைய ஜனங்கள் எல்லாரும் மரித்தார்கள். அவர் உயிர்த்தெழுந்தபோது அவர்கள் எல்லாரும் அவரோடு உயிர்த்தெழுந்தார்கள். இதனால்தான் கிறிஸ்துவிலுள்ள ஜீவ ஆவியினால் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு, நம்பிக்கையினாலும் ஆசையினாலும், அன்பினாலும் எழுந்து அவரோடு பரத்திற்கு ஏறுகிறோம். அவருடைய ஜீவன் நம்மில் வெளிப்படும்போது, உயிர்த்த கிறிஸ்துவின் ஜீவன் நம்மில் வெளிப்படுத்த வேண்டியவர்களாகிறோம். பாவத்திற்கு நாம் செத்தவர்களாயும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்துவின்மூலம் தேவனுக்குப் பிழைத்திருக்கிறவர்களாயும் நம்மை எண்ணிக்கொள்ள வேண்டும்.

விசுவாசிகள் எல்லாரையும் அவர் எழுப்பி கிறிஸ்துவோடுகூட தமது வலது பாரிசத்தில் உட்காரப்பண்ணினார் என்று சொல்லியிருக்கிறது. கிறிஸ்துவும் அவருடைய ஜனங்களும் ஒன்றுதான். அவுர் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினபோதும், உயிர்த்தெழுந்தபோதும், தமது இரத்தத்தால் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்தபோதும் அவர்களுக்கு முதலாளியாகத்தான் அப்படி செய்தார். அவரின் மரணத்தின்மூலம் அவர்கள் பிழைக்கிறார்கள். அவருடைய ஐக்கியமாகத்தான் பிழைக்கிறார்கள். அவருக்கு கனம் மகிமையும் உண்டாகத்தான் பிழைக்கிறார்கள். கிறிஸ்துவோடு எழுப்பப்பட்டவர்கள் உலகத்தை பிடித்துக்கொண்டிருப்பது சரியல்ல. அவர்களின் ஆசையும், பாசமும், எண்ணமும், தியானமும் பரலோகத்தில் தான் இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களுடைய சிரசும், பங்கும், ஜீவனுமானவர் அங்கேதான் இருக்கிறார்.

கிறிஸ்துவோடு எழுந்து
அதை உணர்ந்த பக்தரே
கீழானதை இகழ்ந்து
மேலானதை நாடுவீரே.

வேண்டுதல் செய்யும்படி அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறார்

ஜனவரி 28

“வேண்டுதல் செய்யும்படி அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறார்.” எபி. 7:25

நம்முடைய பாவங்களுக்காக அவர் ஒரே தரம் மரித்தார். என்றாலும் தினந்தோறும் ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நிமிஷமும் நமக்காகப் பரிந்து பேச அவர் உயிரோடிருக்கிறார். அவருக்கு முடிவில்லாத ஜீவனும் மாறாத ஆசாரியத்துவமும் உண்டு. Nhட்சத்தில் நம்முடைய பிரதான ஆசாரியராக அவர் வெளிப்படுவார். நம்முடைய பெயர்கள் அவருடைய இருதயத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. நமது காரியங்களையெல்லாம் அவர் நன்றாய் அறிவார். நமக்காகப் பரிந்துப் பேசத்தான் அவர் அங்கேயும் உயிரோடிருக்கிறார். தம் அருமையான இரத்தத்தையும், பூரண நீதியையும் தேவன் முன்பாக வைத்து, அவைகளின்மூலம் நமக்கு மன்னிப்பு, தந்து நம்மை மகிமைப்படுத்த வேண்டுமென்று வேண்டுகிறார்.

பிதா அவருக்குச் செவிக் கொடுக்கிறார். ஏனென்றால் அவர் அவரை அதிகம் நேசிக்கிறார். நமது செழுமைக்காக தம்மாய் ஆனதெல்லாம் அவர் செய்தார். அவர் அன்பு எத்தனை ஆச்சரியமானது. நமக்காக பரலோகத்தைத் துறந்தார். பூமியிலேவந்து பாடுபட்டு உத்தரித்து நமக்காக மரித்தார். பின்பு மோட்சலோகஞ்சென்று அங்கே நமக்காக வேண்டிக்கொண்டு நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கிறார். நாம் மாறுகிறதை அவர் பார்க்கிறார். துக்கப்பட்டு இன்னும் நமக்காக மன்றாடுகிறார். நமக்கு நன்மை செய்யப் பிரியப்படுகிறார். இது எத்தனை ஆறுதல்! நம்பிக்கைக்கு எத்தனை ஆதாரம். நாம் தேவனுக்குச் சத்துருக்கயரிருக்கையில் அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், பின்பு நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாம்.

இரக்க ஆசனத்தின் முன்னே
நமக்காய் நின்று பேசுவார்
பாரியத்தில் உத்தமர்
வீரம் கொண்டு ஜெயிப்பார்.

நித்திய ஜீவனைக் குறித்த நம்பிக்கையைப்பற்றி

மார்ச் 15

“நித்திய ஜீவனைக் குறித்த நம்பிக்கையைப்பற்றி.” தீத்து 1:3

உத்தம கிறிஸ்தவன் ஒருவன் இப்படித்தான் ஜீவியம் செய்ய வேண்டும். அவன் இருதயம் கீழான உலக காரியத்தைப்பற்றாமல் நித்திய ஜீவனுக்கென்று இயேசுவின் இரக்கத்தையே நோக்கிக்கொண்டிருக்கிறது. கிறிஸ்தவனின் முழு நம்பிக்கைதான் அவன் ஆத்துமாவுக்கத் தைலமாகவும் மருந்தாகவும் இருக்கிறது. அவன் மறுமையில் தேவனோடு பூரண வாழ்வுள்ளவனாய் இருப்பேன் என்றே நம்பியிருக்கிறான். தான் நித்திய நித்தியமாய் மகிழ்ச்சி, சமாதானம் இவைகளை அனுபவிப்பான். தனக்கு நித்திய ஜீவன் நிச்சயமாகவே கிடைக்குமென்று நம்புகிறான்.

பொய்யுரையாத தேவன் வாக்களித்திருக்கிறார். உலகம் உண்டாகுமுன்னே அநாதியாய் முன் குறித்திருக்கிறார். விசுவாச சபைக்குக் கீரீடமான இயேசுவுக்கு வாக்களித்திருக்கிறார். சுவிசேஷமும் அதற்கு சாட்சியிடுகிறது. தேவன் நித்திய ஜீவனைக் கொடுத்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்குpறது. கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டருக்கு இந்த நித்திய ஜீவன் உண்டு. முற்கனி நமக்குக் கிடைத்திருக்கிறது. மகிமையான அறுப்பு கிடைக்கும். நம்பிக்கையில் வளர்ந்தே நாம் தனிந்தோறும் ஜீவித்து வருகிறோம். இந்த நம்பிக்கை துன்பத்தில் வழிநடத்தி நித்திய போராட்டத்தில் நம்மை உயிர்ப்பித்து மோசம் வரும்போது நம்மைக் காக்கிறது. இரட்சிப்பு என்னும் தலைச்சீரா இதுவே. விசுவாசியே மரணத்தையல்ல, நித்திய ஜீவனுக்காக நீ எதிர்நோக்க வேண்டியது, பரம தேசத்தையே அதை அனுபவிப்போம் என்ற நம்பிக்கையும் அதை நிச்சயித்துக் கொள்வோம் என்ற எதிர்பார்த்தலும்தான் விசுவாசம்.

எது வந்தாலும் எது போனாலும்
எது மாறிக் கெட்டாலும்
பேரின்பத்தை நோக்குவேன்
மோட்ச நம்பிக்கைப் பிடிப்பேன்.

நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?

மார்ச் 08

“நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?.” யோவான் 6:67

ஆண்டவர் இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது, அவருடைய சீஷர்கள் அவரை விட்டுப் பின்வாங்கி போய்விட்டார்கள். அதேப் போல பலர் இந்நாளிலும் அவரை விட்டுப்போய்விட மனதுள்ளவர்களாயிருக்கிறார்கள். அநேகர் லோத்தின் மனைவிப்போல திரும்பிப் பார்க்கிறார்கள். பெத்தேலிலிருந்து வந்த தீர்க்கதரிசியைப்போல் சோதனைக்கு இடங்கொடுத்து விடுகிறார்கள். எத்தனைப் பேர் தோமைவைப்போல ஆண்டவரை நேசித்து பிறகு விசுவாசத்தை விட்டு போய்விடுகிறார்கள். ஆனால் நீங்களோ இளைப்பாறுதலில் பிரவேசிக்கும்வரை அவரை விட்டு பின் வாங்கவே கூடாது என்று தீர்மானியுங்கள்.

இயேசுவை விட்டுப் போகிறது பின்மாறிப்போகிறது ஆகும். இது ஒளியைவிட்டு இருளுக்கும், நிறைவை விட்டு குறைவுக்கும், பாக்கியத்தை விட்டு நிர்ப்பந்தத்துக்கும், ஜீவனை விட்டு மரணத்திற்கும் செல்வதாகும். கிறிஸ்துவை விட்டு போனால், வேறு யாரிடம் போவோம்? உலகமும் அதில் உள்ள பொருள்களும், நிலையான ஆத்துமாவுக்கு சமமாகாது. நம்மில் சிலர் நான் தேவ பிள்ளை என்று சொல்லி உலகத்தை இச்சித்து அதன்பின் சென்று விடுவதால் பின்வாங்கிப் போகிறோம் என்று அறியாதிருக்கிறோம். எச்சரிக்கையாயிருங்கள். எப்போதும் நாம் விழித்திருக்க வேண்டும். தேவனைவிட்டு விலகுகிறோமா என்று எல்லா காரியங்களிலும் சோதித்துப் பார்க்க வேண்டும். தன்னை நிற்கிறவன் என்று சொல்லுகிறவன், தான் விழாதபடி எச்சரிக்கையாயிருக்கடவன்.

ஒரு நிமிஷமாவது இரட்சகரை விட்டு பரிந்து போவதற்கு வழியே இல்லை. அவரை விட்டு பின் வாங்கிப் போவது புத்தியீனம். அவருடைய நியமங்களை அசட்டை செய்வது தவறு. அவருக்கு முதுகைக் காட்டுவது துரோகம். ஆத்துமாவே உன்னையும் பார்த்து, நீ என்னை விட்டுப் போகிறாயா என்று அவர் கேட்கிறார்.

ஒன்றை தேவை என்றீரே
அதை எனக்குத் தாருமே
நான் உம்மை விட்டு,
ஒருபோதும் விலகாதிருக்கட்டும்.

நீர் என்னைப் புடமிட்டுப் பார்த்தீர்

பெப்ரவரி 13

“நீர் என்னைப் புடமிட்டுப் பார்த்தீர்.” சங். 17:3

ஆகையால் ஜெபத்திற்குப் பதில் கிடைத்தது. கிருபை வரங்கள் பெருகியது. தேவன் உன்னைக் கண்டிப்பாய் நடத்தியிருக்கிறார். நீதிமானைக் கர்த்தர் புடமிடுகிறபடியால் அவனுக்கு வரும் துன்பங்கள் மூலம் நற்குணங்கள் பிரகாசிக்கின்றன. அவருடைய அக்கினி சீயோனிலும் அவருடைய குகை எருசலேமிலும் இருக்கினறன. அங்கேதான் அவர் தமது ஜனங்களைப் புடமிடுகிறார். எந்தத் துன்பமும் நமது நன்மைக்கு அவசியம் வேண்டியது. நித்திய நேசத்தால் ஏற்படுத்தப்பட்டு எவ்வளவு காலம் அது தேவையோ அவ்வளவு காலம் அது இருக்கும். அதற்கு மிஞ்சி ஒரு நொடியும் இருக்காது. எந்தப் பக்தனுக்கும் துன்புங்கள் வேண்டும். எந்த விசுவாசியும் புடமிடப்படுகிறான். நம்மைப் பரிசுத்தராக்க தேவன் சித்தங்கொண்டால் நம்மை அக்கினியில் வைப்பார்.

பரிசுத்தத்திற்காக நாம் ஜெபிக்கும்போதெல்லாம் துன்பங்கள் வேண்டுமென்று கேட்கிறோம். துன்பங்கள் வாக்குத்தத்தங்களை அதிக அருமையாக்கி, கிருபாசனத்தின்மேல் நாம் வாஞ்சைக்கொள்ள செய்கிறது. இது இரட்சகரை எவ்வளவோ அருமையுள்ளவர் ஆக்குகிறது. துன்பங்கள் வரும்போது நம்முடைய சொந்த இருதயங்களை நாம் நன்றாய் பார்க்கிறோம். உலகம் நம்மைச் சாந்திப்படுத்தாது என்று அறிகிறோம். நாம் தேவனுடைய பிள்ளைகளென்று காட்டுகிற சாட்சிகளைக் கூர்ந்து கவனிக்கச் செய்கிறது. ஒரு புடமிடப்பட்ட கிறிஸ்தவன் உறுதியுள்ளவனாவான். சோதனையில்லாமல் இருக்கிறவர்கள் பரம சிந்தையில் குறையுள்ளவர்களாயிருப்பார்கள். அதிக பிரயோஜனமுள்ளவர்களாயும் இருக்க மாட்டார்கள். பிறருக்கு ஆறுதலாயுமிருக்க முடியாது. துன்பங்கள் மழை காலத்தில் விழும் மூடுபனிபோல் வசனமாகிய விதையை ஏற்றுக்கொள்ள நமது இருதயத்தைப் பண்படுத்துகிறது. அப்போதுதான் நாம் அதிக கனிகளைக் கொடுப்போம்.

அக்கினியில் என்னைச் சோதித்தீர்
அதை அவித்து தினம் துதிப்பேன்
தண்ணீரில் மூழ்கப் பண்ணினீர்
நீரே இரட்சித்தீரென்று போற்றுவேன்.

Popular Posts

My Favorites

அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதும் இல்லை

ஜனவரி 27 "அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதும் இல்லை." உபா. 31:6 தேவன் சொன்னதை நாம் எதிர்பார்ப்பது வீணாய் இராது. அவர் உண்மையை நாம் நம்புவதினால் நமக்குக் குறை வராது. தமது வார்த்தையை...