தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 3

சாவு எனக்கு ஆதாயம்

ஜனவரி 5

“சாவு எனக்கு ஆதாயம்”  பிலி. 1:21

தேவ சிருஷ்டிகள் என்ற அடிப்படையில் நாம் மரணத்தைப் பார்த்தால் அதற்குப் பயப்படுவோம். ஆனால் கிறிஸ்தவர்கள் என்ற அடிப்படையில் பார்த்தால் பயப்படமாட்டோம். முன்னே அது நமக்குச் சாபம்: இப்பொழுதோ அது ஆசீர்வாதம். முன்னே அது நமக்கு நஷ்டம். இப்பொழுதோ அது நமக்கு இலாபம். சாகும்போது எல்லாவித சத்துருவினின்றும், சோதனையினின்றும், துன்பத்தினின்றும் விடுதலையடைந்து, கணக்கற்ற நன்மைகளைப் பெற்றுக்கொள்ளுவோம். பாவத்தினின்று விடுவிக்கப்பட்டு பரிசுத்தத்தில் பூரணமாகிறோம். அறிவிலிருந்து தேறுகிறோம். அப்போதுதான் நாம் அறியப்பட்டிக்கிறபடி அறிந்துகொள்வோம். பரிசுத்தமும் பெறுவோம், ஏனென்றால் கிறிஸ்துவோடும் அவரைப்போலும் இருப்போம்: மேன்மையும் கிடைக்கும். ஏனென்றால் வெள்ளை வஸ்திரம் நமக்குக் கொடுக்கப்படும். சாத்தானையும், உலகையும், பாவத்தையும் வென்ற வெற்றி வீரர்களாகக் கருதப்படுவோம். கிறிஸ்துவோடு அவர் சிங்காசனத்திலும் உட்காருவோம்.

எந்த விசுவாசிக்கும் மரணம் இலாபம்தான். உடனடியாகக்கிடைக்கிற இலாபம்: பெரில இலாபம், என்றுமுள்ள இலாபம். மரண நதியைக் கடக்கிறது கடினந்தான். கடந்த பிறகோ மகிமைதான். நாம் மரணத்திற்குப் பயப்படலாமா? ஏன் பயப்படவேண்டும்? இயேசு கிறிஸ்து என்ன சொல்லுகிறார்? ‘என் வார்த்தைகளைக் கைக்கொள்ளுகிறவன் மரணத்தை ருசிப்பதில்லை” என்கிறார். அவன் உறங்கலாம், அவன் துன்பங்கள், போராட்டங்கள் நீங்கி இளைப்பாற வீடு பேறு பெறலாம். ஆகிலும் அவன் மரிக்கவே மாட்டான். மரணம் அவன்மேல் ஆளுகைச் செய்யாது. இயேசுவின் மூலம் மரணத்தைப்பார், மரணத்தின்மூலம் இயேசுவைப் பார்.

கிறிஸ்து வெளிப்படுகையில்
என் துக்கம் நீங்குமே
கிறிஸ்து என் ஜீவனாகில்
பாவம் துன்பம் நீங்குமே.

அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்

யூலை 03

“அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.” மீகா 7:18

தேவனை விரோதிப்பவர்கள்மேல்தான் தேவ கோபம் வரும். தேவனுடைய கோபம் யார்மேல் வருகிறதோ அவர்களுடைய நிலை மகா வருத்தமானது. கொஞ்ச காலம் அவருடைய ஜனங்களுக்கு விரோதமாகவும் அது வரலாம். ஒவ்வொருவனும் நீர் என்மேல் கோபமாயிருந்தீர் என்று சொல்லக்கூடும். தேவனுடைய கோபத்திற்கு காரணம் பாவம். அவர் தம் பிள்ளைகள்மேல்தான் கோபப்படுகிறார். அது தகப்பனுக்கொத்த கோபம். நம்மைச் சீர் செய்யவேண்டும் என்பதே அவருடைய கோபத்தின் நோக்கம். அந்தக்கோபம் பல விதங்களில் நம்மை வருத்தப்படுத்தக்கூடும்.

தேவ கோபத்தால் உலக நன்மைகள் கெட்டு ஆவிக்குரிய ஆறுதலும், சந்தோஷமும் குறைந்து போகலாம். அது குறுகிய காலம் தான் இருக்கும். அவர் கோபம் ஒரு நிமிஷம். அவருடைய தயவோ நீடிய வாழ்வு. தேவன் நம்மேல் கோபமாய் இருக்கும்போது ஒரு மணிநேரம் ஒரு நாள்போலவும், ஒரு மாதம், ஒரு வருடம்போலவும் இருக்கும். ஆகையால் அவர் எப்பொழுதும் கோபம் வைக்கிறதில்லை என்ற உண்மை நமக்கு இன்பமாய் இருக்கவேண்டும். கோபப்படுவது அவர் இயல்பு அல்ல. அவர் சுயசித்தமாய் கோபிக்கிறவரும் அல்ல. அவர் வெகுகாலம் கோபம் வைக்கிறதில்லை. அவர் பிராயசித்த பலியை நோக்கி சீரடைந்தவனுடைய விண்ணப்பத்திற்குப் பதிலளிக்கிறார். தம்முடைய உடன்படிக்கையை நினைக்கிறார். இரக்கம் காட்டுவதே அவருக்குப் பிரியம் என்று நிரூபிக்கிறார். அவருடைய கோபம் பாவிகளுக்கு விரோதமாக, பாவத்தால் நெருப்பு மூட்டப்பட்டு எப்பொழுதும் எரியும். ஆனால் அவர் பிள்ளைகளின்மேல் வைக்கும் கோபம் சீக்கிரம் அணைந்துப்போம். தேவனின் அன்பு என்கிற நீர் அதை அவித்துப்போடும்.

பாவத்தை ஒழித்து
முற்றும் மன்னிப்பார்
கோபம் ஒரு நொடி மாத்திரம்
அவர் அன்போ என்றும் உள்ளது.

நான் திரும்பி வருமளவும் இதைக் கொண்டு வியாபாரம் பண்ணுங்கள்

ஏப்ரல் 02

“நான் திரும்பி வருமளவும் இதைக் கொண்டு வியாபாரம் பண்ணுங்கள்.” லூக்கா 19:13

நமது நேசர் நமக்கு தேவையானதெல்லாம் சேர்த்து வைத்திருக்கிறார். அவர் பயப்படாதே என்கிறார். தாலந்துகளை நமக்குத் தந்து தமது திரவியத்தை நமக்கு ஒப்புவித்திருக்கிறார். தமது பிதாவினிடமிருந்து சீக்கிரம் திரும்பி வருவார். அவர் வருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்கிறார். நாம் தேவனுடைய கரத்தில் அதிக ஜாக்கிரரையாய் இருக்க வேண்டும். கிறிஸ்துவின் காரியத்தில் சுறுசுறுப்பாயிருக்கவேண்டும். தமது வேலையை எப்படி செய்தோம, எந்த நோக்கத்தோடு அதைச் செய்தோம் என்று விசாரிக்க திரும்பவருவார். அவர் வந்து நமது செய்கைகளுக்குத் தக்கபடி நம்மீது கோபப்படுவார், அல்லது மகிழ்ச்சியடைவார். கடிந்துக் கொள்ளவும், புகழ்ந்துக் கொள்ளவும் செய்வார். ஒவ்வொருவனுக்கும் அவனவனுக்குத் தக்கப் பலன் அளிப்பார். இதை நாம் விசுவாசிக்கிறோமா? இதை நம்பினவர்கள் போல் வாழ்ந்து வருகிறோமா?

நாம் ஒருநாள் கிறிஸ்துவின் நியாயசனத்துக்கு முன்பாக நிற்க வேண்டும். அவருக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோமா? அன்பரே, நமது நேரமும், நமது தாலந்தும், ஏன் நாமும்கூட கர்த்தருடையவர்கள். அவருக்கென்றே அவைகளைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். அவருக்காகவே எல்லாவற்றையும் உபயோகிக்க வேண்டும். இந்த நாளை கிறிஸ்துவுக்கென்று செலவிட்டோமா? இன்று நமது வேலைகளை கர்த்தருக்குமுன் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்ற நோக்கோடு செய்திருக்கிறோமா? நாம் மற்றவர்களைப்போல தூங்கச் கூடாது. நமக்கென்று வாழாமல் அவருக்கென்று மட்டும் தீர்மானிக்க வேண்டும். கிறிஸ்துவை நோக்கி ஜீவனம்பண்ணி அவருக்காக மாத்திரம் பிழைப்போமாக.

என் தாலந்தை உபயோகித்து
இயேசுவில் நான் பிழைத்து
அவர் சித்தப்படி செய்து
அவரைச் சேர்வதே நலம்.

என் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்

நவம்பர் 17

“என் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்” யோபு 29:18

யோபு தனக்கிருந்த கூடாகிய வீட்டை சௌகரியமுள்ளதாகவும் ஆறுதல் தருவதாகவும் நினைத்திருந்தான். அது நிரந்தரமானது என்றும் எண்ணினான். ஆனால் இம்மண்ணுலகில் எங்கு நம் வீட்டை நாம் அமைத்தாலும் அது இயற்கையின் உபாதைகளான புயல், வெள்ளம், நெருப்பு, பூகம்பம் இவற்றிற்குத் தப்பாது. நிலையான நரகம் நமக்கு இங்கு இல்லை. நாம் இங்கு நிரந்தரமாக வாழ முடியாது. யோபு வாழ்வில் பழுதில்லாதவன். நேமையான, தூய வாழ்க்கையுடையவன். அவனும் இவ்வாழ்க்கையை வெறுத்து மேலான தேவனுடைய இடத்தையே நாடினான். இப்பூமியில், அந்தப் பரம வீட்டிற்கு இணையானது எதுவும் கிடையாது. இம்மைக்குரிய நன்மைகள் நமக்குத் தற்காலிகமாகத் தரப்பட்டவைதான்.

இவ்வுலகில் எங்கு நமது கூட்டை ஏற்படுத்தினாலும் அது அழிந்துபோகும். நமக்கு நிரந்தரமான வீடு பரலோகம். எனவே நம்முடைய வாழ்வை நிர்ணயிக்கும் தேவனுடைய கரத்தில் நாம் ஒப்புக்கொடுப்போம் என்று இருந்தாலும், ஒரு நாள் நாம் இவ்வுலகை விட்டுப்போ வேண்டியவர்களே. மரணத்தை நாம் சந்தித்தே ஆக வேண்டும். படுக்கையில் மரிப்போமா. விபத்தில் மாள்வோமா. ஏழையாக மரிப்போமா. ஐசுவரியவனாக மரிப்போமா என்பது முக்கியமல்ல. நாம் கிறிஸ்துவின் மகனாக, மகளாக மரிக்கிறோமா என்பதே முக்கியம். அவ்வாறு நாம் மரித்தோமானால், நமக்கு நித்திய வாழ்வு கிடைக்கும். அங்கு மரணம் இல்லை. அவ்விடம் ஒன்ற நமக்கு நிரந்தரமாக வீடு. அதையே நாடித் தேடி, அதைப் பெற உழைப்போம். வாழ்வோம்.

இவ்வுலகம் சதமல்ல
என் வீடு பரத்திலேயேதான்
என் மீட்பர் இருக்குமிடமே
என் வீடாக என்றுமிருந்திடும்.

விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலன் இல்லாமற்போயிற்றோ

டிசம்பர் 12

“விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலன் இல்லாமற்போயிற்றோ” (ஏசா.50:2)

இவ்வசனம் அவிசுவாசத்தைப் பார்த்துக் கேட்கப்படும் கேள்வி. உன்னுடைய அவிசுவாசத்தையும் பார்த்து இக்கேள்வி கேட்கப்படுகிறது. தேவன் விடுவிக்கக்கூடியவர். விடுவிப்பேன் என்று அவர் வாக்களித்திருப்பதால், எந்தப் பயமும் கூடாது. எந்த வருத்தமும் வேண்டாம். எந்தக் கலக்கமும் வேண்டாம். உன்னை மனமடிவாக்கிய உன் துன்பத்தை நன்றாக கவனி. ஆண்டவர் எந்தக் கோணத்திலிருந்து வரும் உன் துன்பங்களைச் சந்திப்பார். பிறகு விடுவிப்பதற்கு என்னிடத்தில் பெலன் இல்லாமற்போயிற்றோ என்று கர்த்தர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல். பாவத்திலிருந்தும், குற்றத்திலிருந்தும், பிசாசின் வல்லமையிலிருந்தும், தண்டனையிலிருந்தும் உன்னை விடுவிக்க அவர் வல்லவரே, தேவனுடைய காரியத்தில் வரும் எப்பிரச்சனையிலிருந்தும் உன்னை விடுவிக்க அவர் வல்லவரே.

உன் தேவனால் உன்னை விடுவிக்க முடியாதா? உன்னை இரட்சிக்கக் கூடாதபடி அவருடைய கரங்கள் குறுகிப்போகவில்லை. உன் விண்ணப்பங்களுக்குப் பதில் கொடுக்க முடியாதபடி அவருடைய செவிகள் மந்தமாகிப்போகவில்லை. இல்லையென்றால் ஏன் சந்தேகப்படுகிறாய். தேவனிடத்தில் நம்பிக்கை வை. இதற்கு முன்னே அவர் உனக்குச் செய்தவைகளையெல்லாம் எண்ணிப் பார். உன்னைக் காத்தார், மீட்டார், நடத்தினார், ஆசீர்வதித்தார். இவைகளுக்காக அவரைப் போற்று, அவரைத் துதி. இனிமேலும் அவர் உன்னை நடத்துவார். அதை நம்பு. உன் அவிசுவாசத்தை விலக்கு. அவரை நோக்கிக் கூப்பிடு. அவருடைய வல்லமை உன்னை நிரப்பட்டும். என்னை நோக்கிகக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன் என்கிறார்.

விடுவிக்கிறவர் வல்லவர்,
ஞானம் ஆற்றல் உள்ளவர்,
நித்தியத்தின் மீது அதிகாரம்
உள்ளவர், அவரைப் பற்று, பெலன் கொள்.

கீழ்ப்படிகிற பிள்ளையாய் இருங்கள்

மார்ச் 03

“கீழ்ப்படிகிற பிள்ளையாய் இருங்கள்.” 1.பேதுரு 1:14

தேவன் என் தகப்பன், நான் அவரின் பிள்ளை என்று ஒவ்வொரு விசுவாசியும் அனுதினமும் பிரியத்தோடு உணரவேண்டும். அவர் ஒரு பிள்ளையைப்போல் அவனை நடத்துகிறார். என் பரமபிதா எனக்கு வேண்டியதெல்லாம் சுதந்தரித்து வைத்திருக்கிறார். பாவியான ஒருவன் பக்தனானபோது இயேசுவிடமிருந்து எல்லாம் கிடைக்கிறது. இயேசுவிலுள்ளதெல்லாம் அவனுக்காகதான். இயேசுவின் நிறைவிலிருந்து கிருபை மேல் கிருபையைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

நீயோ அவர் பிள்ளைப்போல் பிதாவின் சத்தத்திற்குச் செவிகொடுக்க வேண்டும். அவர் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அவர் சித்தத்திற்கு அடிபணிய வேண்டும். கீழ்ப்படிவதுதான் உன் கடமை. உனக்கு வேண்டியதெல்லாம் உன் பிதா தருவார். அவர் சொல்படி செய்வதுதான் உன் வேலை. பின்னால் நடக்கப்போவதைப்பற்றி கவலைப்படாதே. எந்த விஷயத்திலும் பிதாவின் சித்தம் மட்டும் தெரிந்து கொண்டால் அதுவே அவர் திட்டப்படி செய்ய சுலபமாயிருக்கும். உனக்கு இருக்கும் nரிய கௌரவம் தேவன் உனக்கு தகப்பனாயிருப்பதுதான். உன்னை சொல்லமுடியா அன்பினால் ஒருவர் நேசிக்கிறார். அதுவே உனக்குப் பாக்கியம். அவர் பாதம் அமர்ந்து காத்திருக்கும்போது இன்னும் உன்னை நேசிக்கும் பிதா, சகல ஞானத்திலும் அறிவிலும் வல்லமையாலும் நிறைந்த பிதா உனக்கு இருக்கிறார் என்று நினை. இதுவே உனது மகிழ்ச்சி. பிள்ளையைப்போல உன் மனதை அவருக்கு ஒப்புவி. உன் கவலைகளையெல்லாம் அவர் மேல் போட்டுவிடு. அப்போது உனக்கு ஆசீர்வாதமும், ஆறுதலும் நிச்சயமாய் கிடைக்கும். உனக்கு வேண்டியதெல்லாம் தாராளமாய்ப் பெற்றுக்கொள்வாய்.

கர்த்தாவே எனக்கிரங்கி
எனக்குத் தயை காட்டி
குறைவையெல்லாம் நீக்கி
என்மேல் நேசம் வைத்திடும்.

துக்கம் நிறைந்தவர்

ஓகஸ்ட் 23

“துக்கம் நிறைந்தவர்” ஏசாயா 53:3

தேவகுமாரன் துக்கமாய் இருப்பது எவ்வளவு விசித்திரமான காரியம். அவர் மகிமையின் பிரகாசமானவர். பிதாவின் அச்சடையாளமானவர். ஆனாலும் அவருடைய ஜனங்கள் பட்ட துன்பத்தையும், பட வேண்டிய துன்பத்தையும் அனுபவத்தால் அறியவே இந்த உலகில் வந்தார். அவர் துயரங்களை கேள்வியால் அறிந்தவர். அவர் நம்முடைய சுபாவத்தை தரித்துக் கொண்டார். நமக்கு பதிலாக வந்தார். பிறந்தது முதல் துன்பத்தைச் சகிக்க ஆரம்பித்தார். மரணபரியந்தமும் துன்பத்தையே அனுபவித்து வந்தார். தன்னுடைய கடமையில் அதிக பாரத்தைச் சுமந்தவர். பிதாவை நிந்தித்தவர்களுடைய நிந்தை அவர்மேல் விழுந்தது. அவர் துக்கம் அனுபவித்தவர். பலவகையில் துக்கம் அனுபவித்தார். துக்கத்தின் ஆழம் அவருக்குத் தெரிந்திருந்தது.

அவரைப்போலவே துயரங்களை அனுபவித்தவர் வேறே ஒருவரும் இல்லை. சில வேளைகளில் சந்தோஷப்பட்டாலும் பல வேளைகளில் துக்கப்பட்டார். துக்கமே அவர் கூட்டாளிகளாய் இருந்தது. நண்பரே, கர்த்தர் உனக்காய் துக்கப்பட்டார். உன்னைப்போல் துக்கப்பட்டார். உன்னைவிட அதிகம் துக்கப்பட்டார். அதனால் இப்போது உனக்காகப் பரிதபிக்கிறார். மனிதன் அனுபவிக்கும் துக்கம் ஒவ்வொன்றும் அவருக்குத் தெரியும். அவருக்கு எப்பக்கத்திலிருந்தும் துக்கம், துயரம் ஏற்பட்டது. வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் ஏன், நரகத்திலிருந்தும்கூட அவருக்குத் துன்பம் வந்தது. உனக்காய் அவர் பாடுபட்டார். ஆதலால் உனது எல்லா துக்கத்திலும், துயரத்திலும் நிர்பந்தத்திலும் உனக்காகப் பரிதபித்து, உனக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறார்.

மனிதனால் எனக்கிரங்கி
உருக்கத்தால் தவிர்க்கிறார்
கர்த்தாவே என்னைத் தாங்கி
முற்றிலும் இரட்சியுமே.

நான் பொல்லாப்புக்குப் பயப்படேன்

மார்ச் 28

“நான் பொல்லாப்புக்குப் பயப்படேன்.” சங். 23:4

நான் கர்த்தருடையவனானால் ஏன் பயப்பட வேண்டும்? கர்த்தருக்கம் பயந்து நடந்தால் எதற்கும் பயப்பட தேவையில்லை. கர்த்தர் உன்னை எல்லா தீமைக்கும் விலக்கிக் காப்பார். ஒரு சோதனையும் வராமல் காப்பாரென்றல்ல. சோதனைகள் தீமையல்ல. நன்மைகள்தான். தீமையானவைகள் இரண்டுதான். ஒன்று பாவம், மற்றொன்று பின்மாற்றம். விசுவாசிகளுக்கு பாவம் மன்னிக்கப்பட்டு போயிற்று. அவர்கள் கிறிஸ்துவுடன் சிலுவையிலறைப்பட்டவர்கள். விசுவாசியின்மேல் அது ஆளுகை செய்வதில்லை. பின்மாற்றத்திற்கு விசுவாசிகள் வாழ்க்கையில் இடமில்லை. கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மை ஒன்றும் பிரிக்க முடியாது.

நமக்குள் இருந்து நம்மை நமத்த வேண்டியது பயமல்ல. அன்பே! திகிலல்ல, நம்பிக்கையே! கர்த்தர் நம்மைக் காக்கிறவர். அவர் நம்முடைய ஆத்துமாவைக் காக்கிறவர். நமக்கு கஷ்டங்களும், துன்பங்களும், பிசாசாலும், மனிதனாலும் வரலாம். வறுமையும் வியாதியும் நண்டாகலாம். மரணமும் நமக்குத்தீமை அல்ல. அதற்கும் நாம் பயப்பட தேவையில்லை. கிறிஸ்துவைப்பற்றி அவருக்காக அவரைப்போல நடப்போமாக. அப்போது மரிக்கும்போது கிறிஸ்துவுடன் இருப்போம். இங்கிருப்பதைவிட அங்கிருப்பதே நல்லது. சாவு நமக்கு ஆதாயமாகும். ஆகவே வாக்குத்தத்தத்தை உறுதியாய் பற்றிப்பிடித்து, இரத்தம் சிந்திய கிறிஸ்துவின் அருகே நடந்து, தேவனை மகிமைப்படுத்திய உயிரோடிருக்கும் நாளெல்லாம் பொல்லாப்புக்குப் பயப்படேன் என்று சொல்லுவோமாக.

கலங்காதே திகையாதே
இயேசுவுக்கு நீ சொந்தம்
உன்னை மோட்சத்தில்
சேர்ப்பதே அவர் ஆனந்தம்.

எங்களை எப்படிச் சிநேகித்தீர்

செப்டம்பர் 23

“எங்களை எப்படிச் சிநேகித்தீர்” மல். 1:2

இது எவ்வளவு விபரீதமான கேள்வி! கர்த்தருடைய ஜனங்கள் இவ்வாறு கேட்பது சரியல்ல. ஆயினும், அநேகர் இப்படிப்பட்ட துணிகரமான கேள்வியைக் கேட்கிறார்கள். நீங்கள் எப்பொழுதாகிலும் கர்த்தர் உங்களை எப்படிச் சிநேகித்தார் என்று கேட்டதுண்டா? அவர் உங்களுக்கு செய்துள்ள நன்மைகளை எண்ணிப்பாருங்கள். உங்கள் பாவங்களுக்காக மரிக்கத் தம்முடைய குமாரனையே தந்தார். உங்களை உயிர்ப்பித்து, உங்களுக்கு போதித்து, வழிநடத்தித் தூய்மையாக்கத் தமது ஆவியானவரைத் தந்திருக்கிறார். அவருடைய மார்க்கத்தைப் போதிக்க தம்முடைய போதகர்களைத் தந்தார். உங்கள் துயரத்தில் உங்களை ஆற்றித் தேற்றக் கிருபையாகப் பல வழிகளைத் திறந்திருக்கிறார். உங்களுக்கு ஊழியம் செய்யச் தம்முடைய தூதர்களையும் அனுப்பியுள்ளார். உங்களைப் பாதுகாக்க உடன்படிக்கையனி; ஆணைகளையும் கொடுத்திருக்கிறார். நீங்கள் நித்திய காலமாகச் சுதந்தரித்து வாழத் தமது பரம வாசஸ்தலத்தையும் உங்களுக்கு வாக்களித்திருக்கிறார்.

உங்களைத் தமது ஆத்துமாவுக்கு அருமையாக எண்ணுகிறார். தமது ஆபரணங்கள், மகுடம், குமாரர், குமாரத்திகள் என்று அழைத்து மேன்மைப்படுத்தியிருக்கிறார். உலகம் வெறும் களிமண். நீங்களோ பொன் என்றும், அது பதர், நீங்கள் கோதுமை மணி, அதுவுமன்றி நீங்கள் ஆடுகள், அது பாம்பு. நீங்கள்புறாக்கள் என்று கூறுகிறார். உங்களுக்கும் அவருக்கும் உள்ள உறவைக் கவனியுங்கள். அவர் உங்கள் பிதா. இயேசு உங்கள் உடன்பிறப்பு. நண்பன். உங்களுக்காகப் பரிந்துரைப்போர், தலைவர், மன்னர், உங்களுக்கு மன்னிப்பை அருளினார். பரம நன்மைகளால் அவர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆச்சரியமான அவருடைய அன்பிற்கு ஒப்பில்லை.

என்றும் நன்றியுடன்
நானிருக்க அருளும்
உமதன்பிற்காகத் துதித்து
உமதிரக்கத்திற்காய் நன்றி சொல்வேன்.

இஸ்ரவேலில் நம்பிக்கை

அக்டோபர் 09

“இஸ்ரவேலில் நம்பிக்கை” எரேமியா 14:8

தேவன் இஸ்ரவேலின் நம்பிக்கைக்குக் காரணர். அந்த நம்பிக்கை அவருடைய ஆவியானவராலும், அவருடைய வசனத்தினாலும் உண்டாகிறது. வாக்கில் அவர் உண்மையுள்ளவராதலால், அவருடைய வாக்கிலும் ஆழமான கருத்துள்ள நித்திய வசனங்களிலும் நம்பிக்கை கொள்ளவேண்டும். இஸ்ரவேல் கர்த்தரை நம்புகிறான். தேவ பிள்ளைகள் அவரை நம்பியிருப்பார்களாக. கர்த்தரிடத்தில் கிருபையும், திரளான மீட்பும் உண்டு. மனிதனை நம்புவதில் பயன்யாதும் கிடையாது. மனிதன் பெலவீனன். மாறக்கூடியவன், உண்மையற்றவன். சுயநலக்காரன். அவனை நம்பாதே, கர்த்தரோ பெரியவர். உயிர் நண்பர், மன்னிப்பளிப்பவர், ஞானத்தோடு நடத்துபவர், கிருபையாகக் காப்பவர், இரக்க உருக்கம் உள்ளவர், மாறா அன்புள்ளவர். ஆகவே அவரையே நம்பு.

அவருடைய கிருபை நமக்குப் போதும். அவருடைய பெலன் நமக்குப் பூரணமாய்க் கிடைக்கும். அவர் இஸ்ரவேலின் கன்மலையாக நம்பிக்கைக்குரியவர். உறுதியானவர். அவரே அடைக்கல பட்டணமானவர். எனவே, ஆபத்துக்காலத்தில் அவரே நமக்கு ஒதுக்கிடமானவர். ஜீவ ஊற்றாகிய அவரில் நம் தாகம் தீர்த்துக்கொள்ளலாம். அவர் பாவத்தினின்று நம்மை இரட்சிக்கும் இரட்சகர். ஆதலால் அவரிடம் போவோம். அவரை நம்புவோம், அவரில் விசுவாசம் வைப்போம்! யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் தன் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். எனவே, இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு. அவரை உன் முழுமனதோடும், முழுப்பெலத்தோடும் நம்பு. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்.

இஸ்ரவேல் நம்பும் கர்த்தாவே
என் வேண்டுதல் கேட்டிடும்
எத்துன்பத்திலும் எனைக்காப்போரே,
என் முழுமையும் உம்மையே நம்பும்.

Popular Posts

My Favorites

கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்

பெப்ரவரி 04 "கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்."  மத். 24:6 அதாவது கவலைக்கொள்ளாதபடி மனமடிவாகாதபடி, திகையாதபடி எச்சரிக்கையாயிருங்கள். துன்பங்களைத் தைரியமாய்ச் சந்தித்து, பொறுமையோடும், மனதிடனோடும் சகித்து தேவனுக்கு முற்றிலும் கீழடங்கப் பாருங்கள். உலகத்தார் கலங்கி நிற்கலாம். நீங்கள் கலங்கக்கூடாது....