துண்டு பிரதிகள்

முகப்பு துண்டு பிரதிகள்

டீனேஷாவின் சோகவாழ்வும் புதிய திருப்பமும்

விக்கிரகத் தேவர்கள் யாவும் கடலில் மூழ்கின

இந்தியாவிலிருந்து கென்னியாவிற்குக் குடிபெயர்ந்த டினேஷா, தனது குடும்பத்துடன் அங்கு வாழ்ந்து வந்தாள். இளவயதிலிருந்து ஒரு இந்துப்பற்றுள்ள அந்தப் பெண்மணி, வழக்கப்படி விரதம் இருந்து, கும்பிட்டு, அர்ச்சனை செய்துவந்தாள். டினேஷாவின் குடும்பத்தில் அதிக பிரட்சனைகள் இருந்தன, ஆகவே அவர்கள் அதிகமாக விக்கிரகத் தேவர்களை வணங்கி வந்தார்கள். “சிலவேளையில் அவைகளில்ஒன்றாவது எமக்கு உதவலாம்….” என்று நம்பிய டினேஷாவும் அவளது சகோதரியும் அதிகாலையில் மூன்றுமணிக்கு வீட்டில் உள்ள விக்கிரகங்களைக் கழுவிவந்தார்கள். அவர்கள் வீட்டில் பொன்னாலும், வெள்ளியினாலுமான நூற்றுக்கணக்கான விக்கிரகங்கள் காணப்பட்டன. அவைகளில் ஒவ்வொன்றும் உடுத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு, உணவு படைக்கப்பட்டும் வந்தன. அதன் பிற்பாடு அவர்கள் இருவரும் மணித்தியாலக் கணக்காக அந்த விக்கிரகங்கள் முன்பாக இருந்து தியானம் செய்து, எல்லாச் சடங்குகளையும் செய்து முடிப்பார்கள். காலை ஒன்பது மணிக்கு அவர்கள் தங்கள் கடையைத் திறப்பதற்கு முன்னதாக, காலைதோறும் அந்த வழிபாட்டைச் செய்து வருவார்கள். விக்கிரகங்களுக்குச் செய்யவேண்டிய சகல கிரியைகளும் டினேஷாவுக்கும் அவளது சகோதரிக்கும் முக்கியமாக இருந்தது.

டினேஷாவினதும் அவளது குடும்பத்தாரினதும் வாழ்வு இன்னும் கஷ்டமாகவே சென்று கொண்டிருந்தன. அவளது உடலில் நோய்கள் ஆரம்பித்து, அவைகள் பாரிசவியாதியை ஏற்படுத்தின. டினேஷா பதினான்கு தடவைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பதினொரு தடவைகள் சத்திர சிகிச்சை பெற்றாள். அவள் வியாதிப்பட்டுங் கூட, அவளது சமயச் சடங்குகள் யாவும் இன்னும் அதிகரித்தே வந்தன. மூடநம்பிக்கைகள் போன்ற பயங்கரச் செய்கைகளும் அவளிடத்தில் ஆரம்பித்தன. என்னவெனில் பறவைகள், மிருகங்கள் போன்றவைகளின் ஆவிகளுக்கு அவள் பலி செலுத்தினாள். மந்திரம், சூனியம், சாஸ்திரம் போன்றவற்றில் வசீகரிக்கப்பட்ட டினேஷா, தனது குடும்பத்தார் ஒவ்வொருவரிலும் சந்தேகப்பட ஆரம்பித்தாள். ஆகவே அவள் தனது குடும்பத்தாருடன் பகையை உருவாக்கி தனிமையும் ஆனாள்.

இந்த நாட்களிலேயே டினேஷா தனது விக்கிரகங்களைத் திட்டத்தொடங்கினாள்.”நீங்கள் உண்மையிலேயே எனக்கு உதவுகின்றவர்களா?”என்றுகேட்ட அவள்” நான் ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? எனக்கு நிம்மதியில்லை, சமாதானமில்லை நான் நோய்வாய்ப்பட்டும் போனேன், எனக்கு இருந்ததெல்லாம் உங்களுக்குச் செலுத்தினேன். இனி உங்களுக்குத் தருவதற்கு என்னிடத்தில் எதுவும் இல்லை, நீங்கள் எனது வீட்டில் இருந்த வண்ணம் ஒரு அறையைப் பிடித்துக் கொண்டு இருக்கிறீர்கள், நீங்கள் பொன்னும், வெள்ளியுமாய் இருக்கிறீர்கள். நீங்கள் ஊமைகளும், காதுகேளாதவர்களுமானவர்கள், நான் கும்பிட்டுப் பிரார்த்திக்கும் போது உங்களால் கேட்க முடியாதுள்ளது. இனி எனக்கு எல்லாம் போதும்!” இவைகளைக் கூறிய டினேஷா, அந்த விக்கிரகத் தேவர்களுக்குப் பரிட்சை கொடுக்க முன்வந்தாள். பொன்னிலும், வெள்ளியிலும் செய்யப்பட்ட அந்த விக்கிரகங்களால் நீந்த முடியுமா? என்று கேட்ட டினேஷா: “நீங்கள் உண்மையிலேயே தேவர்கள் என்றால், நான் உங்களைக் கடலில் எறியும் போது, நீங்கள் மீண்டும் மேலே வரவேண்டும். நீங்கள் உங்களைக்காத்துக்கொள்ள முடியாவிடில் மூழ்கிப் போகுங்கள், நான் இனிமேல் உங்களைப் பார்க்க விரும்பவில்லை” என்று கூறி அவைகளைக் கடலிலே எறிந்தாள். அவைகள் யாவும் கடலில் மூழ்கின.

இந்த நாட்கள் கடந்த பின்னர், ஒரு நாள் டினேஷாவின் இந்து நண்பி ஒருத்தி அவளிடத்தில் வந்து, அவள் இதுவரையில் கேள்விப்படாத ஒரு கடவுளைக் குறித்து அறிவித்தாள். அந்த கடவுள் “இயேசு பிரபு” இயேசு கிறிஸ்து என்று டினேஷாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தன்னிடத்தில் இதுவரையில் இருந்தவைகளிலும் பார்க்க இயேசு அதிகமானவர் என்பதை டினேஷா உணர்ந்தாள். அவர்கள் இருவரும் ஒருமித்து வேறொரு இந்தியப் பெண்ணிடம் சென்றார்கள். அப்பெண் இயேசுவில் விசுவாசம் உள்ளவளாக இருந்தாள். அவளுடன் ஆழ்ந்த சம்பாசணையை வைத்த டினேஷா, இயேசு கிறிஸ்து ஒருவரே உண்மையான கடவுள் என்பதை நன்கு அறிந்தாள். எல்லா இருளான அசுத்த வல்லமைகளிலிருந்து, இயேசு அவளை விடுவிக்க வல்லவர் என்று உணர்ந்த டினேஷா அவரை ஜெபத்தில் ஏற்றுக் கொண்டாள்

அந்த நாளிலிருந்து டினேஷா தனது வாழ்வை இந்த உண்மையுள்ள ஆண்டவரிடம் ஒப்படைத்தாள். அவள் அவருக்கு ஊழியம் செய்து, தனது சமயத்தாரும் இயேசுவை அறிய விரும்பினாள். இக்காலம் கழிந்த நாட்களில் டினேஷாவின் முழு குடும்பமும் இயேசுவில் விசுவாசம் வைக்க ஆரம்பித்தார்கள்.

நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார், தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.

அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.

அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது,

அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.

அவைகளுக்குக் காதுகளிருந்தும் கோளது, அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.

அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.

அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவை களை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.

(பைபிள்) சங்கீதம் 115: 3-8

சுமை தாங்கிகள்

நம் நாட்டில் பல பகுதிகளில் சுமை தாங்கி கற்கள் பாதையின் ஓரங்களில் அடுத்தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. சுமைகளை தூக்கி நடப்பவர்கள் சுமைதாங்கி மீது தங்கள் சுமைகளை வைத்து அருகிலுள்ள மரத்தின் நிழலில் சிறிது நேரம் இளைப்பாறுவார்கள். கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் ஒருவர், ஒரு சமயத்தில் இளைப்பாறிக்கொண்டிருந்தவர்களை நோக்கி ‘வேறு ஏதாவது சுமை உங்களுக்கு உண்டா” என்று கேட்டார்; ஆம், என்றார் அவர்களில் ஒருவர். என் மனைவியும் பிள்ளைகளும் எனக்கு சுமையாக இருக்கிறார்கள்; ஏனெனில் அவர்களுக்குப் போதுமான உணவு வகைகளை கொடுக்க என்னால் முடியவில்லை என மிக வருத்தத்துடன் கூறினார். என் பிள்ளைகளை படிக்கவைக்கமுடியவில்லையே என்றார் மற்றவர். உலக வாழ்க்கையில் கண்களினால் காணமுடியாத சுமைகள் பல உண்டு. இதை கேட்ட அந்த தேவனுடைய ஊழியர் பாவ சுமையைப் பற்றி அவர்களுக்கு சொன்னார், இந்த சுமையை அவர்கள் பார்க்க முடியாவிட்டாலும் அது உண்மை என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். மேலும் பாவச்சுமையை தம்மிடம் கொண்டு வரும்படி அழைத்த அன்புள்ள இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அவர்களிடம் கூறினார்.

அநேக மாதங்களுக்குப்பின் ஒருவன் அதே தேவஊழியரைச் சந்தித்து, “நான் இயேசு கிறிஸ்துவின் மூலம் என் பாவச் சுமையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறேன். நீர் எனக்கு மெய்யான தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி சொன்னதற்காக தேவனுக்கு மிகவும் நன்றி செலுத்துகிறேன்” என்றான். உடனே அவனை அடையாளம் கண்டுகொள்ள அவரால் முடியவில்லை. பின்பு சுமைதாங்கி கல் அருகே சந்தித்ததை நினைவுகூர்ந்தார். அந்த மனிதன் தன் கடந்தகால வாழ்க்கையில் சுய முயற்சியால் பாவச் சுமையை நீக்க எடுத்துக்கொண்ட முயற்சியையும் அதினால் தான் சோர்வடைந்ததையும், காலம் வீணானதையும் கூறினதோடு, இயேசு கிறிஸ்துவின் மூலம் தான் பெற்ற சந்தோஷத்தையும் கூறினான். இவனுடைய திடீர் மாறுதலைக் குறித்து அறிந்து கொள்ள அந்த கிராமத்து மக்களும், இவனுடைய உறவினர்களும்’ விருப்பங்கொண்டு விசாரித்தனர் (மாற்கு 10:46-52). இயேசு கிறிஸ்து ஒரு குருடனை முதலில் “அழைத்தார்” பின்னர் “அவர் கண்களை திறந்து குணமாக்கினார்” அவன் இயேசு கிறிஸ்துவை பின் தொடர்ந்தான். அதைப்போலவே இவனும் தான் குணமடைந்த பின்பு அவரை பின் தொடர்ந்தான். கிராமத்தார்களுக்கும், தன் உறவினர்களுக்கும் இரட்சகரைப்பற்றி சொல்வதில் ஆனந்தமடைந்தான். இந்த ஏழை மனிதன் தன்னுடைய பாவச் சுமையை “எக்காலத்திலும் மாறாத கன்மலையின் மேல் வைத்து ஓய்வடைந்தான். 1 பேதுரு 2:6-ல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலைக்கல் என்று சொல்லப்பட்டிருக்கிறார்.” அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை.” கர்த்தராகிய இயேசு “விடாய்த்த பூமிக்கு பெருங்கன்மலையின் நிழலாக இருக்கிறார்.

மனந்தளர்ந்து போனவர்களையும், பாவபாரம் சுமந்து தவிப்பவர்களையும் இயேசு கிறிஸ்து வருந்தி அழைக்கிறார். “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்பவர்களே ! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்.11:28).

இதைப் படித்துக்கொண்டிருக்கும் சிறு பிள்ளைகளே, பெரியோரே, இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதினால் “மரண வழி தொடராதிருக்க முடியும்.” தேவன் உங்களை நேசிக்கிறார். நீங்கள் உங்கள் பாவச் சுமையை உணர்ந்து விசுவாசத்தினால் இயேசு கிறிஸ்துவின் மூலமாக இரட்சிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார். இப்படி செய்யமாட்டீர்களா? அருமையானவர்களே உங்கள் பாவத்தை விட்டு மனந்திரும்புங்கள்; இயேசு இரட்சகரை விசுவாசியுங்கள். அவர் ஒருவரே உங்கள் பாவத்திற்காக சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் ஜெய வேந்தராக உயிர்த்தெழுந்தார். நீங்கள் தாமதிப்பீhகளானால் தேவனுடைய சந்நிதியை விட்டு நிரந்தரமாக புறம்பாக்கப்பட்டு பாவத்தின் கடும் சுமையை சுமந்துகொண்டு அக்கினி கடலுக்கு இரையாவீர்கள். இதிலிருந்து தப்புவதற்கு வேறெந்த நம்பிக்கையோ மார்க்கமோ இல்லை. இப்பொழுதே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது அவர் உங்கள் பாவச் சுமையை நீக்கி மெய்யான சமாதானத்தை இலவசமாக கொடுப்பார். “இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் எப்படி தண்டனைக்குத் தப்பித்துகொள்ளுவோம்” (எபிரெயர் 4:2).

மன அழுத்தம், ஆபத்தா?

நாம் வாழ்கின்ற இந்த உலகம் நிலையற்றதாக. வேகமான ஓட்டத்தில் மாறிக்கொண்டிருக்கின்றது. அந்த ஓட்டத்தோடு போகும் நம்முடைய அன்றாட வாழ்வில். மன அழுத்தமானது ஒரு எதிர்மறையான பகுதியாக அமைந்துவிட்டது. மன அழுத்தம் என்பதை விளக்கப்படுத்தும் போது வாழ்வில் திணிக்கப்படுகின்ற மேலதிக நம் தாக்கங்கள் தேவைகள் மற்றும் பாரங்களால், மக்களில் ஏற்படுகின்ற எதிர்விளைவு என குறிப்பிடலாம்.

லண்டனில் சுமார் 5.000,000 மக்கள் தங்கள் வேலைகளினால் மிக அதிகமான மன அழுத்தத்தை அனுபவிப்பதாக அறிக்கைகள் குறிப்படுகின்றன. 2004 மற்றும் 2005 இல் மொத்தமாக 12.8 மில்லியன் வேலை நாட்கள் மன அழுத்தம் காரணமாக இழக்கப்பட்டுள்ளன. மனஅழுத்தமானது ஒரு ஆரோக்கிய சமூகத்திற்கு பெரிதான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

தோற்றம்:

மன அழுத்தம் ஏற்படும் வேளையில், நாம் நம் வாழ்வை சிந்தித்துப்பார்க்க வேண்டும். மன அழுத்தமானது நம் சுயத்தால், உள்ளான மனதின் காரியங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம், அல்லது நம் மேல் சுமத்தப்பட்ட ஒன்றாக அமையலாம். எப்படி அமைந்தாலும், அடிப்படைக் கொள்கையில் எந்தவித மாற்றமும் இருப்பதில்லை. மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால். அதனால் அவனுக்கு என்ன லாபம்? என இயேசு கிறிஸ்து கேட்ட கேள்வியே அந்த அடிப்படைக் கொள்கை (மாற்கு 8:36)
இது நமக்கு நிஜமான சவாலோடு அமைகின்றது. முன அழுத்தங்கள் நிறைந்த வாழ்விலிருந்து. சூழ்நிலையிலிருந்து வெற்றி பெற அல்லது தப்புவதற்கு முக்கிய விஷயமாக அமைவது எது? இந்த பூமியில் நம்முடைய வாழ்க்கைக் காலமானது. நித்தியத்திற்கு ஒரு படியேறுகின்ற ஒரு குறுகிய பயணமே. நாம் நித்தியவாழ்வைக் குறித்ததான காரியங்களுக்கு நம் எண்ணங்களை ஒருமுகப்படுத்துவோமானால். நம் வாழ்வு வேறொரு தோற்றத்தில் காணப்படும். இந்த உலகின் அழுத்தங்கள். உடைமைகள். தகுதிகள் யாவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. ஏனெனில். நம் வாழ்க்கை முறைக்கேற்ப நம் ஆத்மா. நித்திய காலமும் இருக்கப் போகும் இடத்தின் முடிவு பரலோகம் அல்லது நரகம் ஆகும்.

ஆயத்தமா?

இது ஒரு மிக முக்கியமான விஷயமாகும். எல்லா மனிதர்களுமே ஏதோ ஒரு நித்திய இடத்திற்கு செல்ல வேண்டியது தவிர்க்க முடியாத கட்டாயமான ஒன்று. நல்ல இடத்தை அடைவதற்குரிய முன்னேற்றப்பாடுகளை செய்து, தயாரான நிலையில் இருந்தால் தான் பரலோகத்தினுள் போக முடியும். அதற்கு நாம் எப்படி தயாராக முடியும்?

நமது பாவங்களை தேவனிடத்தில் அறிக்கைவிட்டு. பாவ வழிகளை விட்டு விலகி மனம் திரும்ப வேண்டும். கிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைத்து அவர் சொல்லிய வழிப்படி நாம் வாழ வேண்டும் (அவரை நம் இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும்). தன்னிடத்தில் விசுவாசம் வைக்கிறவர்கள் எவர்களோ, அவர்களுடைய பாவங்களுக்கான தண்டனையை தன்மீது சுமந்து கிறிஸ்து இயேசு சிலுவையில் மரித்தார். அதன்பின், நமக்கு ஜீவன் கொடுக்கும்படி தேவனாக உயிர்தெழுந்தார். நமக்காக பாடுகள் பட்டு மரித்து, உயிர்தெழுந்து நமக்கு ஜீவன் தந்த கிறிஸ்துவை நாம் தொடர்ந்து பின்பற்றி வாழ வேண்டும். அப்போது தான். நமது வாழ்வில் பரலோகத்தை நாம் நிச்சயத்துடன் நோக்கிப் பார்க்க முடியும்.

இதில், சிறப்பான விஷயம் என்னவென்றால். அழுத்தங்கள் நிறைந்த உலகில் வெற்றி பெறுவதோ. உயிர்வாழ்வதோ முக்கியமல்ல. இரட்சிப்பை அடைவதும், நித்தியத்திற்கான ஆயத்தங்களை செய்வதுமே பெரிய காரியம். இயேசு கிறிஸ்து மூலமாக இரட்சிப்பைப் பெற்ற மனிதன். எவ்வித அழுத்தங்களுமில்லாமல், பரிபூரணம் நிறைந்துள்ள பரலோகத்தை, நித்திய எதிர்காலமாக நோக்கிப் போக முடியும். அங்கு நித்திய மகிழ்ச்சி உண்டு.

அதே வேளை, தேவனை விசுவாசிக்காமல் உலகத்தை ஆதாயப்படுத்த எண்ணி வாழ்பவர்கள் நித்திய நரகத்தை அடைவார்கள். அங்கே (நரகத்தில்) நித்தியமான மன அழுத்தங்களால் அவதிப்படுவர் என்பதையும் வேதாகமம் நமக்கு எச்சரிக்கின்றது.
இதை வாசிக்கின்ற உனது நிலை என்ன? உலகத்தை ஆதாயப்படுத்த எண்ணி மன அழுத்தங்களாலேயே சாகப் (மடிய) போகின்றாயா? அல்லது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாக கிடைக்கும் நித்திய வாழ்க்கையை நோக்கி வாழப்போகின்றாயா?

பானம் பண்ணுவோம் வாருங்கள்

உற்பத்தியைப் பெருக்கும் தொழிற்கூடங்கள் நிறைந்திருந்த ஒரு பெரிய பட்டணத்தில் ஒருநாள், நான் ஒருவரோடு சம்பாஷித்துக்கொண்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்து, “வாருங்கள், நாம் பானம் அருந்தி செல்வோம்’ என்றார். அதற்கு நான் அவர் அழைத்த நோக்கத்தை அறிந்துகொண்டு, ‘வேண்டாம், உம்முடைய அழைப்புக்கு மிக்க நன்றி” என்று சொன்னேன். அச்சமயததில் என் உள்ளத்தில் அநேக ஆண்டுகளுக்குமுன் நான் கேள்விப்பட்ட: ‘ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன்” (யோவான் 7:37). “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்” (யோ.6:35) என்ற வேத வசனங்கள் ஞாபகத்துக்கு வந்தன. அவைகளை அவருக்குச் சொன்னேன்.

மேற்கூறிய அழைப்புகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் இப்பூவுலகில் இருந்தபோது கூறியவைகள், அவரது ஆசீர்வாதமான உதடுகளால் அப்பொழுது சொல்லப்பட்டவைகள், இன்றும் உண்மையுள்ளவைகளாக இருக்கின்றன. உலகிலுள்ள ஒவ்வொருவருடைய எண்ணங்களையும் அவர் அறிந்து, “ஒருவன் தாகமாயிருந்தால்” எனக் கூறியுள்ளார். உண்மையான ஆத்தும தாகமுள்ள ஆயிரக்கணக்கான ஆத்துமாக்கள் இன்றைக்கு பல சிற்றின்ப ஊற்றுகளால் தங்களுடைய ஆத்தும தாகத்தை தீர்த்துகொள்ள முயற்சித்தும் வெற்றிபெறாமலிருக்கிறதை அவர் நன்கு அறிவார். துக்கம், துன்பம், துயரம், வேதனை, கொடுமை மனச்சித்திரவதை, உபத்திரவம் ஆகிய பாவ நோய்களின் மூலம் அவர்களின் ஆத்துமாக்கள் மன நிறைவு அடையாமல் ஏங்கித் தவித்து நிற்பதையும் அவர் அறிந்துள்ளார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கிறிஸ்துவினால் மட்டும் அம்மன நிறைவு அருளப்படக்கூடும். இதினிமித்தமே “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன்” எனக்கூறினார்.

அவரிடம் வந்து சேராத ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் இங்கே திட்டவட்டமான பரிகாரம் உண்டு. முதலாவதாக இதனை ஒரு தனிப்பட்ட அழைப்பாகத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். மனுக்குலத்தோர் யாராயினும் தங்களுடைய ஆத்தும தாகத்தை உணர்ந்து அவரண்டை வரக்கூடும். தேவனுடைய அருமையான குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே இந்த அழைப்பை விடுத்துள்ளார் என்பது எவ்வளவு ஆச்சரியமானது. ஆனால் என் அருமை நண்பனே ! நான் உம்மிடத்தில் மிக மிக முக்கியமான கேள்வி ஒன்றினைக் கேட்க அனுமதி கிடைக்கட்டும். இந்த அன்பும் கிருபையுமான அழைப்பிற்கு நீ இதுவரை எப்பொழுதாவது தக்க மறுமொழி கூறினதுண்டா?

உனது உள்ளம் தனிமையான நிலையில் துக்கத்தோடு பாவச் சுமையினால் அழுத்தப்பட்டு இருக்கும்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சமாரியப் பெண்ணுடன் சம்பாஷிக்கையில் “இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகம் உண்டாகும். ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகம் உண்டாகாது. நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய காலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்’ என்று உரைத்தபோது அப்பெண்ணுக்கு உண்டானதுபோல, நீ இதை வாசிக்கையில் கர்த்தரின் பரிசுத்தாவியானவர் அதனை உணரும்படி உன் மனதுக்குள் உன்னை ஏவவில்லையா ?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இதனை என்ன கருத்துடன் கூறியுள்ளார் என்பதனை வேறு விதமாக சொல்வோமானால் ‘நான் குடிக்கக் கொடுக்கும் தண்ணீர்’ என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான் அந்த வாழ்வளிக்கும் ஊற்றாக இருக்கிறார். உடலுக்குப் புத்துயிர் அளிக்கத்தேவையானது இயற்கையான தண்ணீராகும். ஆனால் மரிக்காமல் என்றும் நிலைத்திருக்கும் ஆத்மாவின் உள்ளான தேவைகளை நிறைவேற்ற அந்த ஜீவத் தண்ணீர் தான் தேவைப்படுகிறது. எனது அருமை நண்பனே நீ ஒரு ஏழ்மையான, ஆதரவற்ற அனாதியான இழந்துபோன பாவியாக உள்ள நிலையில், நம்பிக்கையின் அடிப்படையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை, உன் மீட்பராக ஏற்றுக்கொள்ளமாட்டாயா? தேவன் எங்குமுள்ள எல்லா மனுமக்களுக்கும் “இப்பொழுதே மனந்திரும்புங்கள்’ (அப்போஸ்தலர் 17:30) என்று கட்டளையிடுகிறார். மனந்திரும்பு என்பது பாவத்தினின்று விலகிவா என்பது பொருள். உன்னில் காணப்படும் அசுத்த நிலை, இழந்து போன சீரழிந்த நிலை இவைகளை உணர்ந்து பேதுருவைப் போல, கர்த்தரின் முந்நிலையில் இவைகளை ஒப்புக் கொண்டு.’ஓ கர்த்தாவே நான் ஒரு பாவி” என அறிக்கையிடு. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் (1 யோவான் 1:7). தெய்வத்தின் அதிசயமான அழைப்பை ஏற்றுக்கொள்ளாத எல்லோரும் நியாயத்தீர்ப்பின்போது அக்கினிக் குழியில் தள்ளப்படுவார்கள் என்று உணர்ந்து, நரகத்திலே தள்ளக்கூடிய வல்லமையுள்ள “அவருக்கே பயப்படுங்கள்’ (லூக்கா 12:5) என நான் உனக்குக் கூறிக்கொள்ளுகிறேன்.

“தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3:16)

இவர் யார்

இவர் பிறக்கும்போது, மிகவும் தாழ்வான சூழ்நிலையில் பிறந்தார். எனினும் அவர் பிறந்த அன்று வானமண்டலத்தில் தூதகணங்களின் மகிழ்ச்சியின் இன்ப கீதங்கள் எழும்பின. அவர் பிறந்த இடம் ஒரு மாட்டுக்கொட்டகையாய் இருந்தபோதிலும் ஒரு விண்மீன் அறிஞர்களைக் கீழ்த்தேசத்திலிருந்து வந்து அவரை வணங்கும்படி வழிநடத்தினது.

அவர் பிறப்பு இயற்கை விதிக்கு முரண்பட்டது. அவர் மரணம் மரணவிதிக்கும் மாறுபட்டது. அவர் ஜீவியமும், போதனையும் விளக்கவொண்ணாத ஒரு மாபெரும் அற்புதம். அவருக்கு கோதுமை வயலோ, மீன்பண்ணையோ இல்லாதிருந்தும் அப்பமும் மீனும் ஐயாயிரம் பேருக்கு திருப்திபடக்கொடுத்து மீதமும் வைக்கமுடிந்தது. அவர் நீர் மேல் நடந்தால் அது தரைபோல் அவரைத் தாங்கும்.

அவரைச் சிலுவையில் அறைந்ததோ கொடுமையிலும் கொடுமை. தேவன் அம் மரணத்தின்மூலம் கிருபையாய் பாவமன்னிப்பையும் மீட்பையும் மானிடர்க்கு அருளிச் செய்தார். அவர் மரித்த அன்று ஒரு சிலரே அவருக்காகப் புலம்பினர். ஆயினும் சூரியன் கருந்திரையினால் மூடப்பட்டதுபோல் அந்தகாரப்பட்டது. கீழிருந்த பூமியோ அக் கொடுமையின் பாரம் தாங்காமல் அதிர்ந்தது. சகல இயற்கையின் தத்துவங்களும் அவரை நன்கு மதித்து அவருடைய அநியாய மரணத்திற்கு தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்தன. ஆனால் இவ் உலகின் கொடிய பாவிகளோ அவரைத் தூஷித்து, புறக்கணித்து, சிலுவையில் அறைந்தனர்.

பாவம் அவரை எள்ளளவேனும் தீண்டவில்லை. அழிவோ அவரின் சரீரத்தை ஆட்கொள்ளஇயலவில்லை. அவர் இரத்தத்தால் கறைபட்ட மண் அவர் சரீரத்தை மேற்கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவர் மரித்து மூன்றாம் நாள் மண்ணிலிருந்து உயிருடன் எழுந்தார்.

அவர் நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்து மூன்றரை வருஷங்கள் சுவிசேஷத்தைக் கூறி அறிவித்தார். அவர் ஒரு புத்தகமும் எழுதியதில்லை. ஒரு கட்சியும் அமைக்கவில்லை. ஒரு ஆலயமும் கட்டவில்லை. அவர் மாபெரும் நிதிகள் ஒன்றும் திரட்டவில்லை. என்றாலும் கடந்த இரண்டாயிரம் வருடங்களாக மனித சரித்திரத்தின் நடுநாயகமாக வீற்றிருக்கிறார். இடைவிடாமல் போதிக்கப்பட்டுவரும் பிரசங்கங்களின் மத்திய பொருள் இவரைப் பற்றியதே. காலத்தின் சகல வர்த்தமானங்களும் இயேசு கிறிஸ்து எனும் ஒரு அச்சாணியிலேயே சுழன்றுகொண்டுவருகிறது. இவர் ஒருவரே மானிடவர்க்கத்தை மீட்டு புதுப்பித்து நித்தியஜீவனைக் கொடுக்க வல்லவர்.

அவர் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் தோன்றி மறைந்த மரியாளின் மைந்தனான வெறும் மைந்தனோ? இல்லை! இல்லை! இவர் தெய்வத்தில் தெய்வமானவர். பரஞ்சோதியான உண்மைக் கடவுள். இவர் சர்வத்துக்கும் மேலான தேவன். கல்வாரிச் சிலுவையில் அவர் செய்த ஒப்பற்ற தியாகம்தான் கடந்த நூற்றாண்டுகளில் கொடிய பாவிகளையும் நரமாமிசபட்சணிகளையும் மீட்டு, இரட்சித்து புனிதராக்கி, பிறரைத் தம் தோழராக நேசிக்கச் செய்து அவர்கள் ஜீவியத்தில் அற்புதமாறுதல்கள் உண்டுபண்ணிற்று.

இப்படிப்பட்ட மகத்துவம் நிறைந்த தூயவரை மானிடரை மீட்டு இரட்சித்து இம்மையில் பாவமன்னிப்பின் நிச்சத்தையும் மறுமையில் மோட்சானந்தத்தையும் அளிக்கவல்ல இவ் உன்னத மீட்பரை பகுத்தறிவுள்ள எந்த மனிதனும் என் ஆண்டவனே! என் தேவனே! என்னை இரட்சியும் என்று வணங்காமல் இருக்க மாட்டான்.

இதை வாசிக்கும் அன்பான நண்பரே, நீர் பாவ மன்னிப்பைப் பெற்று மோட்சம்செல்ல வாஞ்சிக்கிறீரா? இப்படிப்பட்ட ஒப்பற்ற நேசராகிய இயேசு கிறிஸ்துவை உமது உள்ளத்தில் உறையும் கடவுளாகவும், உமது சொந்த இரட்சகராகவும் ஏற்று அங்கீகரிப்பீராகில் அவர் உம்மை முற்றுமுடிய இரட்சித்து மோட்சானந்த பாக்கியத்தை உமக்கு அருளுவார். நீர் இம்மையிலும் மறுமையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் (அப்16:31).

மீட்பு

எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள். (ரோ.3:23-24)

புதிதாக ஒருவர் உங்களை சந்திக்க வந்தால் அவர் மதிப்புக்குரியவர் என எண்ணி வீட்டுக்குள் வரவேற்று தேனீர் அருந்தக்கொடுப்பீர்கள். விருந்தினரை வரவேற்று அவர்களை உபசரிப்பது நமது கலாச்சாரம். சில சமயங்களில் அவருக்கு உதவி புரியவும் முன்வருவோம்.

இதுபோன்ற நற்பழக்க வழக்கங்களை, கெடுதியானதும் துன்பம் நிறைந்ததுமான சூழ்நிலைகளில் மனிதர்கள் மறந்து விடுவதுண்டு. இவ்விதமான சூழ்நிலையில் அநேக மதிப்பிற்குரியவர்களும் கூட மிகவும் முரட்டுத்தனம் உள்ளவர்களாகவும், கொடுமையானவர்களுமாய் மாறிவிடுகிறார்கள். பசியுற்றவர்கள் திருடுவார்கள், பயமுற்றவர்கள் தங்கள் அயலாரைக் காயப்படுத்துவார்கள். பொய்யும், பகையும் நம் சூழ்நிலைகளை கெடுத்துவிடும். அனுபவங்கள் மற்றவர்களைக் குறித்து சந்தேகப்படவும் தீமையான எண்ணங்கொள்ளவும் வழிநடத்திவிடுகின்றது. இவ்வாறு நாடுகளுக்கிடையேயும் கெடுதியான இருளான எண்ணங்கள் காணப்படுகின்றது. நீங்கள் எப்படிப்பட்ட கசப்பானவர்கள்? உங்கள் எதிரியைவிட நீங்கள் முன்னேற முயற்சிக்கும்போது அவனுடைய அழிவைக்கண்டு நகைப்பதில்லையா? பள்ளிப்படிப்பிலும் கூட மற்றவர்களைக் குறித்த கரிசனை, பாரம் இல்லாது உங்களுடைய வெற்றியைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்பதில்லையா? உணவருந்தும்போதும் சுவையான ஆகாரத்தையே விரும்பி அதைப் பெற்றுக்கொள்ள துடிப்பதில்லையா? நீங்கள் ‘தூஆ’ செய்யும்போது உங்களுடைய பிரச்சனைகளுக்காகவே அதிகநேரம் இறைவனிடம் (அல்லாவிடம்) கேட்பது இல்லையா?

இயற்கையாகவே மனிதன் சுயநலமும், தயக்கமும், தீய நாவும் உடையவனாக இருக்கிறான். ஏனெனில் இறைவனின் இரக்கம் அவனில் வாசம் செய்வதேயில்லை. பிறர் உனக்கு எதிராக யாதொரு காரியத்தையும் செய்யும்போது இறைவன் உன்னில் அன்பு கூர்ந்ததுபோல நீ அவர்களில் அன்பு கூறுவதேயில்லை. நாமெல்லாரும் பாவம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து சாத்தானின் சோதனைகளைக் கண்டு நகைக்கிறவர்களாய் காணப்படுகிறோம். இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய நமக்கு பிரியமில்லை. மேலும், நம்மைப் படைத்தவரைப்பற்றிய எண்ணமும் நம்மில் இல்லை. நாம் நமது பாவங்களை விட்டுவிட மனமில்லாத அளவிற்கு நமது பாவத்தை விரும்புகிறோம். நமது எல்லா உறுப்புகளும் பாவம் நிறைந்ததாக இருப்பதால், நீதியும் நித்தியமுமான இறைவனின் கோபாக்கினைக்குப் பாத்திரராயிருக்கிறோம். நாம் நமது பாவங்கள் சிலவற்றை அறிந்திருக்கலாம். ஆயினும் இறைவன் நம் ஆன்மாக்களின் ஆழத்தையும் அறிந்திருக்கிறார். நமது பாவங்கள் அனைத்தும் அவருக்கு முன்னிருக்கின்றன. அவருடைய கட்டளையே நம்மை நியாயம் தீர்க்கிறது. அதன் தீர்ப்போ, “இப்பாவி தள்ளப்பட்டு இழக்கப்பட்டிருக்கிறான்” என்பதே.

மனிதத் தன்மைக்கு வேறுபட்ட தன்மையுடையவர் ஒருவர் இருக்கிறார். இவரே நமது பாவக்கட்டுகளைத் தகர்த்தெறிந்தவர். தம்மைப் பகைத்தவர்களையும் தம்மில் நிலைத் திருந்தவர்களையும் அவர் நேசித்தார். இறைவனுடைய மகிமை அவர் ஊடாக முடிவின்றிப் பிரகாசித்தது.

இந்த பாவமற்ற மனிதன் இயேசு கிறிஸ்துவே. இவர் நமதாண்டவர். கன்னிகையான மரியாளிடத்தில் இறைவனுடைய ஆவியினால் பிறந்தவர். அவருடைய உள்ளம் அன்பினாலும், சத்தியத்தினாலும் நிறைந்திருந்தது. அவரைக் குறித்து ரசூல்கள் கூறியதாவது, “அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.” (யோவான் 1:14) மனிதனை, பிசாசின் தந்திரங்களிலிருந்து விடுவிக்கவும், இறைஅன்பினால் மனிதனை நிரப்பவும் அவர் இவ்வுலகத்தில் வந்தார். அவர் ஊழியம் கொள்ளும்படிவராமல், ஊழியம் செய்யவும், எல்லாரையும் மீட்டுக்கொள்ளும் பொருட்டுத் தம் உயிரையே மீட்புப் பொருளாகக் கொடுக்கவும் வந்தார்.

தமது மகத்தான அன்பிலே, கிறிஸ்து நம்முடைய பாவங்களைச் சுமந்து, அவைகளுக்கான விலையை செலுத்தி, இறைவனுடைய கோபாக்கினையை நமக்குப் பதிலாக தாமே சகித்தார். நம்மை நித்திய அழிவிலிருந்து காப்பாற்ற, அவர் மரித்ததினிமித்தம் நம் மெய் மீட்பரானார். தம்மிடத்தில் சுகம் பெற்றவர்களிடத்தில் அவர் கூலி கேட்கவில்லை. மரித்தவர்களை உயிருள்ளவர்களாய் எழுப்பினார். “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்று உனக்கும் கூறுகிறார். உன்னிடம் நோன்பையோ, நற்கிரியைகளையோ அல்லது பலியையோ அவர் கேட்கவில்லை. உன்னை இறை சமாதானத்தில் ஆதரித்து, தம் சொந்த விலையேறப்பெற்ற இரத்தத்தினால் கழுவுகிறார். உன் இரட்சகரில் நம்பிக்கைவை, அப்போது உன்னுடைய விசுவாசத்தினால் நீ பிழைத்துள்ளாய் என்பதை நீ அறிந்து கொள்வாய்.

தம், நன்மையும் இரக்கமும் நிறைந்த கண்களினால் கடவுள் உன்னையும் மற்றெல்லா பாவிகளையும் பார்க்கிறார் என்பதனை நீ ஒருபோதும் மறந்துவிடாதே. நீ நல்லவன் என்பதால் உன்னை அவர் அவ்வாறு நோக்குகிறாறென்றல்ல, உன்னை நீயே மீட்டுக் கொள்ள முடியாதென்பதை அவர் அறிவார். சகல அங்கலாய்ப்பில் இருந்தும், துன்பத்தின் கண்ணியிலிருந்தும் உன்னை தூக்கியெடுக்க நித்தியமான கிறிஸ்து உன்னிடத்தில் வந்தார். கிறிஸ்துவண்டை வா! நீ சத்தியத்தைக் கண்டு கொள்வாய். இறை நீதியையும் பெற்றுக் கொள்வாய். கடவுள் உன்னைத் தள்ளிவிடாமல் அன்போடுன்னை வரவேற்கிறார். நீ அவரை உலக இரட்சகர் என நம்பியிருந்தால், இறைவன் உன்னை நீதிமானாகக் காண்கிறார். அன்புள்ள நண்பா, இறைவன் உன்னை நேசிக்கிறார். அதுமட்டுமல்ல, உன்னை சுத்தமாக்கவும் சித்தம் கொண்டுள்ளார். தாமதியாமல், அவர் உனக்கு அளிக்கும் அருளுக்காக அவருக்கு நன்றி செலுத்து. இறைவன் மகத்தானவரென்றும், தம்முடைய மீட்பின் நிமித்தம் மக்களை இலவசமாய் நீதிமானாக்குகிறாரென்றும் மற்றவர்களுக்குச் சொல். அவர்கள் மீட்பைப் பெற்றுக்கொள்ளவும், அளவில்லா அன்பினாலும், மகிழ்ச்சியினாலும், மேலும் நன்றியுள்ள இருதயத்தினாலும் நிரப்பப்படவும் உன் நம்பிக்கையினால் அவர்களுக்கு அறிவூட்டு.

நீ உன் தீய பழக்கவழக்கங்களிலேயே உழன்று கொண்டிராமல் அவைகளை விட்டு கிறிஸ்துவோடு வாழவும் அவருடைய பலத்தினால் தூய வாழ்வு வாழவும், கிறிஸ்து உன்னை உன் தீய பழக்கவழக்கங்களிலிருந்து விடுவிக்க வல்லவராயிருக்கிறார். இதற்கு சந்தேகமேயில்லை. கிறிஸ்துவின் மீட்பு ஒரு முற்றுப்பெற்ற ஒரு வேலை. உன் வாழ்வை அதோடு தொடர்புள்ள போராட்டங்களோடும், சிக்கல்களோடும், தோல்விகளோடும் அவருக்கு அர்ப்பணி. அப்போது அவர் தமது காயப்பட்ட கரங்களை உன்மேல் வைத்து உன்னை ஆசீர்வதித்து, தமது சமாதானத்தை உன் சரீரத்திலும், தமது மகிழ்ச்சியை உன் உள்ளத்திலும், தமது சுத்திகரிப்பை உன் மனச்சாட்சியிலும் ஊற்றுவார் என்பதை நீ அறிந்து கொள்வாய். கிறிஸ்துவினுடைய அன்பின்விளைவை மக்கள் உன் வாழ்விலும் உன் வாழ்வினூடாகவும் கண்டு கொள்வார்கள்.

கடமையா – பாசமா

கடமைக் கண்ணனான திரு. ஆல்பர்ட் ஃபைசான் நதியின்மேல் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான இரயில் பாலத்தை இயக்கும் பணியில் இருக்கிறார். படகு கடந்து செல்ல திறப்பார். இப்போதும் பாலத்தை மூடவேண்டும், ஏனெனில் நியூயார்க் நகரிலிருந்து வரும் இரயில் பாலத்தைக் கடந்து செல்லவேண்டும்.

பாலத்தை அவருடைய பையன் பீட்டர் பாலம் மூடப்படுவதைப் பார்க்க ஓடோடி வந்தான். வந்த வேகத்தில் திடீரென கால் தவறி நதியில் விழுந்துவிட்டான். மறுவினாடியே இரயில் பாலத்தை நெருங்கிவிட்ட கூ சீழ்க்கையை அவர் கேட்டார். ஆனாலும் இரயில் இன்னும் கண்களுக்குப் புலப்படவில்லை. தான் உடனடியாகப் பாலத்தை மூடவேண்டியதை அவர் அறிவார். தவறினால் இரயில் பயணிகள் விபத்திற்குள்ளாவார்கள்! நதியில் விழுந்த பையனைக் காப்பாற்றுவதா அல்லது பாலத்தை மூடி இரயிலுக்கு வழியை அமைப்பதா? கடமையா – பாசமா? திரு. அல்பர்ட் என்ன செய்வார்?

உடைந்த உள்ளத்தோடு பையன் நதியில் மூழ்கிப்போவதைப் பார்த்தப்படி பாலம் மூடப்பட அதை முறைப்படி இயக்கினார். குடமை பாசத்தை வென்றுவிட்டது. இரயில் பாலத்தைக் கடந்ததும் நதியில் குதித்து பீட்டரின் உடலைக் கரைக்கு கொண்டுவந்தார். ஐயோ! காலம் கடந்து விட்டது. பையன் இறந்துவிட்டான்….

இந் நிகழ்ச்சி நம் உள்ளத்தை உருகச் செய்கிறது. கதறி அழும் தகப்பனாருடன் நம் உள்ளம் கலந்து விடுகிறதில்லையா? பையனைக் காப்பாற்ற எவ்வளவாய் ஏங்கினார். சிக்கலான நேரம், திடீர் தீர்மானம் செய்யவேண்டும். சொந்தப் பையனா அல்லது பயணிகளின் உயிரா? இரண்டையும் செய்ய இவரால் இயலாது. பையனின் உயிரைப் பொருட்படுத்தாமல், இரயில் இரும்புப் பாதையின் சட்டத்திற்கு கீழ்ப்படிந்து, பாலத்தை இயக்கினார். விபரம் அறிந்ததும் எவ்வாறு பயணிகள் திரு. ஆல்பர்ட் அவர்களுக்கு ஆறுதல், நன்றி கூறியிருப்பார்கள்!

இப்போது மற்றொரு முக்கியமான காட்சியை நம் மனக்கண் முன்பாகக் கொண்டுவருவோமாக. இங்கு கீழ்ப்படிதல் மட்டுமல்ல, மனித சிந்தனைக்கு அப்பாற்பட்ட தெய்வீக அன்பும் வெளிப்படுத்தப்படுகிறது. முழு இருதயத்தோடும் கல்வாரிக் காட்சியை நோக்குவோமாக! பரமபிதா தமது திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவை சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, மனித இனத்திற்கு இரட்சிப்பாகிய விடுதலையை உண்டாக்கி வைத்திருக்கிறார். இது இலவசம். பாவிகள் மீட்படைய இதுவே வழி. ஒன்று நம் பாவத்திற்கான தண்டனையை நாமே அடைந்து அழியவேண்டும் அல்லது பரமபிதா தம் திருக்குமாரனை உலகத்திற்கு அனுப்பி தண்டனை முழுவதையும் அவர்மேல் சுமத்த வேண்டும். ஆண்டவருக்கு நன்றி! ஒப்பற்ற அவரது அன்பு வெளிப்பட்டது.

தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் (இயேசுவை) தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோ.3:16).

திரு. ஆல்பர்ட் தன் பையனை நதிக்கு அனுப்பவில்லை. கால் தவறி தானே விழுந்துவிட்டான். ஆனால் பரமபிதா தம் திருக்குமாரனை அனுப்பினார் (1.யோ.4:14). தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை (இயேசு கிறிஸ்துவை) இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது (1.யோ.4:9).

அருமையான நண்பரே! தேவ அன்புக்கு உம்முடைய உள்ளம் நன்றி செலுத்துகிறதில்லையா? உமக்காக உம் நல்வாழ்வுக்காக உமது பாவப் பிரச்சனைக்காக அவர் தம் திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவின் உயிரைக் கொடுத்தார் அல்லவா! நீர் அடையவேண்டிய தண்டனையைத் தாமே முன் வந்து ஏற்றுக்கொண்ட அருமை நாதராம் இயேசு பெருமானுக்கு உம்மையே ஜீவபலியாக, காணிக்கையாக அவரது மலரடிகளில் படைக்கமாட்டீரா? உம்மை அரவணைக்க, ஆசீர்வதிக்க, உமது பாவங்களை மன்னிக்க அவர் காத்திருக்கிறார். இயேசு பெருமான் சிலுவையில் சிந்திய இரத்தம் உம் பாவபாரத்தை நீக்கும். மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த இயேசு இரட்சகர் இன்றும் உம் உள்ளத்தின் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறார். திறந்துவிடுங்கள்.

வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன் (மத்.24:15)

விலை மதிப்பிடமுடியாத முத்து

நம் நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதியை ஒட்டியுள்ள ஒரு சிறிய கிராமத்தில் சாபு என்கிற வயதான முத்துக்குளிப்பவன் தனியே வசித்து வந்தான். ஒரு நாள் முத்துக்குளியல் முடித்துக்கொண்டு கரையை அடையும்போது, தன் நெருங்கிய நண்பர் நிற்பதை அடையாளம் கண்டுகொண்டதும் பெரு மகிழ்ச்சியடைந்தான். ஏனெனில், இருவரும் அடிக்கடி சந்தித்து மத சம்பந்தமான விஷயங்களை பேசுவர். சாபு இந்துமதப் பற்றுடையவனாக இருந்த போதிலும், தன் கிறிஸ்தவ நண்பரிடம் அன்போடு பழகுவான்.

இப்போது படகு தன் துறையை அடைந்துவிட்டது. நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்தபின், சாபுவின் குடிசையை நோக்கி பேசிக்கொண்டே நடந்தனர். ‘சாபு, உன்னைப் பார்க்கும்போது, மிகவும் சோர்ந்திருப்பதுடன், வயதாகிவிட்டபடியால் உன் நடையும் தள்ளாடுகிறது, இதுவே நீ கடைசி முறையாக முத்துக்குளிக்கச் சென்றதோ? என எண்ணுகிறேன்’ என்றதும், ‘ஆம், இனி இந்த கடலோரப் பகுதியில் நான் நடமாடப் போவதில்லை. மேலும், நான் விருத்தாப்பியம் அடைந்ததால் முத்துக்குளிப்பதும் சிரமமாக உள்ளது. என் வாழ்க்கையின் ஒரே இலட்சியம் நிறைவேறப்போகும் நாள் மிக அருகாமையில் இருக்கிறது, பல நூறு மைல்களுக்கு அப்பாலுள்ள கங்கை நதியில் நீராடி மனநிம்மதியடையப்போகிறேன். ஏனெனில் என் வாழ்நாள் எல்லாம் எதற்காக ஏங்கினேனோ அது விரைவில் நிறைவேறப்போகிறது” எனச் சொல்லி அளவிலா மகிழ்ச்சியடைந்தான்.

சாபுவின் கிறிஸ்தவ நண்பர், பலமுறை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அவனுக்கு தெளிவுபடுத்தியிருந்தார். மீண்டும் அதை அன்போடு விவரிக்க ஆரம்பித்தவர், பாவ மன்னிப்பானது எந்த புண்ணிய நதியில் நீராடுவதாலும் கிடைப்பதல்ல. ஆனால், பாவங்கள் மன்னிக்கப்பட ஒரே வழி யாதெனில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தத்தின் மூலமாக மட்டும் தான் கிடைக்கக் கூடியது. மேலும், இயேசுவானவர் நமக்கு இந்த மாபெரும் மீட்பையும், சந்தோஷத்தையும் இலவசமாக வழங்குவதற்காக சிலுவையில் தன்னுடைய ஜீவனைக் கொடுத்ததை விளக்கினார்.

இதை அடிக்கடி கேட்ட சாபு, நகைப்புடன் “நீர் சொல்லும் கிறிஸ்தவம் இலகுவானது, ஏனெனில் விசுவாசிப்பவனுக்கு இலவசமாக கிடைக்கிறதே ! நான் இரட்சிப்பை பிரயாசப்பட்டு சம்பாதிக்க விரும்புகிறேன்’ என்றான். இந்நேரத்தில் சாபுவின் சிறிய குடிசையை அடைந்துவிட்டார்கள். தன் நண்பரை அன்போடு வரவேற்றான் சாபு.

“நான் புண்ணிய யாத்திரை புறப்பட போவதால், நம் நட்பின் அடையாளமாக ஒரு வெகுமதியை உங்களுக்கு கொடுக்கப் போகிறேன்” என்றவன், குடிசையின் ஒரு மூலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறு துணி உருண்டையை தேடிக் கொண்டு வந்து மெதுவாகப் பிரித்தான். என்ன ஆச்சரியம்! சாபுவின் உள்ளங்கையில் நன்கு இழைக்கப்பட்ட, பிரகாசமான முத்து ஜொலிப்பதைக் கண்ட அவனுடைய நண்பரின் மூச்சு ஒரு விநாடி நின்று விட்டது. “எவ்வளவு அழகான ஒப்பற்ற முத்து ! இது அரசரின் கிரீடத்தில் பதிக்கப்பட வேண்டியது,” என்று அவர் சொன்னதும், சாபு ஆம், நான் என் ஆயுள் காலத்தில் பார்த்த முத்துக்களில் இதுவே பழுதற்றது. இதை நான் ஒரு விசேஷமான காரணத்திற்காக வைத்திருந்தேன். எனக்கொரு மகன் இருந்தான், அவன் முத்துக்குளிப்பதில் மிகவும் திறமைசாலி. பல மணி நேரம் மூச்சடக்கும் சக்தியுடையவனான அவன், ஒரு நாள் ஆழமான இடத்திற்குச் சென்று தேடிக்கொண்டு வந்ததுதான். இந்த விலையேறப்பெற்ற முத்து.’ எனக் கூறிவிட்டு அழஆரம்பித்தான் சாபு. ‘நண்பரே, நீண்ட நேரம் தண்ணீரில் இருந்ததால் அவன் நுரையீரல் பாதிக்கப்பட்டு மரணமடைந்தான்’, என்றவன், “நான் உமக்கு வெகுமதியாகக் கொடுக்கும் முத்தின் விலை மதிப்பு என் அன்பு மகனின் உயிர்” என்று கூறி கண்ணீரை துடைத்துக்கொண்டான்.

“இதையா எனக்குக் கொடுக்கப்போகிறாய்? வேண்டாம், இதை இலவசமாக பெற்றுக்கொள்ளமாட்டேன். யாரிடமாவது கடன் வாங்கியோ, அல்லது எப்படியாவது பாடுபட்டு வாங்கிக்கொள்கிறேன் ஆனால்,வெகுமதியாக இதை நான் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை” என்றார்.
‘நண்பரே, நீர் இதற்கு போதுமான தொகையை கொடுக்கவே முடியாது. ஏனெனில், இது விலை மதிப்பிட முடியாதது. அத்தோடு என் அன்பு மகன் தன் உயிரையே கொடுத்து சம்பாதித்ததல்லவா ! இதன் விலை என் மகனின் உயிர்’ என்றான் சாபு.

“சாபு, சற்று முன் சொன்னது என்ன? கிறிஸ்தவம் மிகவும் இலகுவானதும், இலவசமானதும் என்றல்லவா ! எதையாவது கொடுத்து சம்பாதிப்பதுதான் மதம் என்பது உன்னுடைய தவறான கருத்து. அருமையான நண்பா, உன்னுடைய இரட்சிப்புக்காக தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து தன் உயிரையே ஈடாகக் கொடுத்து அதை சம்பாதித்திருக்கிறார். நீ மீட்கப்பட்டு, சந்தோஷமுள்ளவனாக வாழ, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு மரித்து, பின் மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்தார். விசுவாசிக்கிற எவனும் எந்தக் கிரயமுமின்றி இலவசமாக இரட்சிக்கப்படலாம்’ என்றவர் கிறிஸ்தவம் ஒரு மதமல்ல என்பதையும் விவரித்தார். தொடர்ந்து, “இந்த முத்தின் விலை உன் அன்பு மகனின் உயிர் என்பது உண்மையே, அதுபோல தேவகுமாரனாகிய இயேசு இரட்சகர் தன் உயிரையே கிரயமாகக் கொடுத்து சம்பாதித்திருக்கும் இரட்சிப்புக்கு நீ விலை கொடுக்க முடியுமா? இது முற்றிலும் இலவசமான ஈவாகும்’ என்றார்.

வயதான சாபு கண்ணீரோடு, தேவனுடைய அன்பை எண்ணி தன்னையே அந்த அன்புள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு பரிபூரணமாக ஒப்புக்கொடுத்தான். அமைதியாக சிறிது நேரம் முழங்காலிலிருந்து எழுந்ததும், சாபுவின் நண்பர் தன்னிடமிருந்த தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமத்திலிருந்து கீழ்கண்ட பகுதிகளை உரக்கப் படித்தார். “….நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே. குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்’. (ரோமர் 5:6)

“தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன். தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்”. (1.யோவான் 5:11,12)

“கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல’. (எபேசி. 2:8,9)

பகைவரை நேசிக்கும் இறையன்பு

மிட்சுவோ புச்சிடா என்னும் ஜப்பானிய போர் விமானியே டிசம்பர் 7, 1941 -ஆம் ஆண்டு பேர்ல் துறை முகத்தின் மீது நடந்த விமானத் தாக்குதலைத் தலைமைதாங்கி நடத்தியவர். தாங்கள் நடத்திய அந்தத் தாக்குதலில் முழுவெற்றியை அடைந்து விட்டதைக் குறிக்கும் வகையில், “டோரா, டோரா, டோரா” என்ற செய்தியையும் அவர் அனுப்பினார்.

ஆயினும் இரண்டாம் உலகப்போர் நீடித்தது. கடும் சண்டை நடந்தது. இந்த ஜப்பானிய போர் விமானி தொடர்ந்து பல முறை பறந்து தங்கள் நாட்டின் எதிரிகளைத் தாக்கி வந்தார்.

பலமுறை அவர் சாவுக்கு மிக அருகில் வந்தும், பகைமை உள்ளம் கொண்டு தன் உயிரையும் துச்சமாகக் கருதினார். இறுதியில் போரின் திசை திரும்பியது, அமெரிக்க ஐக்கிய நாடுகள் வெற்றி பெற்றது.

இப்போர் நடந்துகொண்டிருந்தபோது, பிலிப்பைன்ஸ் நாட்டில் கிறிஸ்தவ ஊழியர்களாகப் பணியாற்றிய வயது முதிர்ந்த தம்பதிகள் இருவரை ஜப்பானியர் படுகொலை செய்துவிட்டனர். அமெரிக்காவில் வசித்துவந்த அவர்களுடைய மகள் அந்தச் செய்தியைக் கேட்ட பிறகு, ஜப்பானியப் போர்க் கைதிகளைச் சந்திக்கவும், அவர்களுக்கு நற்செய்தியை வழங்கவும் தீர்மானித்தார். ஜப்பானியப் போர்க்கைதிகள் அப்பெண்மணியின் அன்பு பாராட்டுதலைக் கண்டு வியந்து, அதன் காரணத்தை வினவியபோதெல்லாம், “என்னுடைய பெற்றோர்கள் கொல்லப்படுவதற்குமுன் செய்த ஜெபமே என்னை இப்பணியில் வைத்திருக்கிறது” என்று பதில் உரைப்பார்.

தோல்வியால் மனக்கசப்பு அடைந்த புச்சிடா, தனக்குள் எழுந்த பகைமை உணர்ச்சியின் காரணமாக போர்க்காலக் குற்றங்களுக்காக அமெரிக்க ஐக்கிய நாடுகளை உலகப் பொது நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று தீர்மானித்தார். அதற்கென, அமெரிக்காவில் போர்க்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த ஜப்பானிய வீரர்களைச் சந்தித்து, சான்றுகளைத் திரட்டலானார். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சிறை வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய வீரர்கள் தங்களுடைய அனுபவங்களைக் கூறியபோது, அவருக்குப் பெரும் எரிச்சலும் ஏமாற்றமும் உண்டாயிற்று. அது அவர்கள் அடைந்த இன்னல்களினால் அல்ல. பிலிப்பைன்ஸ் நாட்டிலே படுகொலைக்கு ஆளான ஒரு தம்பதியின் மகள் அவர்களுக்குக் காட்டின அன்பைக் குறித்து மீண்டும் மீண்டும் அவர் கேள்விப்படலானார். அந்தப் பெண்மணி தங்களுக்குப் புதிய ஏற்பாடு என்னும் நூலைக் கொடுத்ததாகவும், அவருடைய பெற்றோர்கள் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் ஏதோ புரிந்துகொள்ள முடியாத ஜெபத்தைச் செய்ததாகவும் கைதிகளாயிருந்த பலர் கூறினர். உண்மையில் புச்சிடா இதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், அவருடைய உள்ளத்தில் அந்நிகழ்ச்சி ஆழமாகப் பதிந்துவிட்டது.

பலமுறை அக்கதையை அவர் கேட்டதினால் தானும் புதிய ஏற்பாடு ஒன்றை வாங்கினார். மத்தேயு நற்செய்தி நூலைப் படித்தபோது அவருக்கு அதில் ஆவல் மேலிட்டது. அடுத்து உள்ள மாற்கு நூலைத் தொடர்ந்து வாசித்தார். இன்னும் ஆவல் அதிகமாயிற்று, லூக்கா 23:34 -ஆம் வசனத்திற்கு வந்தபோது அவருடைய ஆத்துமாவில் ஒளி பிரகாசித்தது, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.” வயது முதிர்ந்த தம்பதியினர் தாங்கள் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் என்ன ஜெபம் செய்தனர் என்பதை இப்பொழுது அவர் அறிந்துகொண்டார். தொடர்ந்து அந்த அமெரிக்க பெண்மணியைப் பற்றியோ, ஜப்பானியப் போர்க்கைதிகளைப் பற்றியோ அவருக்கு நினைக்கத் தோன்றவில்லை. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் ஜெபத்தைக் கேட்டு, கிறிஸ்துவிற்குப் பரம எதிரியாக வாழ்ந்த தன்னை மன்னிக்க ஆயத்தமாயிருக்கும் தேவனைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார். அந்த நேரத்திலேயே கிறிஸ்துவின்மீது விசுவாசம் கொண்டவராக, வேண்டுதல் செய்து, பாவமன்னிப்பையும், நித்திய ஜீவனையும் பெற்றுக்கொண்டார்.

பொதுநீதிமன்றத்தைக் குறித்து அவர் எண்ணியிருந்த திட்டம் அவரை விட்டு அகன்று போயிற்று. அதுமுதல் மிட்சுவோ புச்சிடா உலகெங்கும் சென்று, கிறிஸ்துவின் அளவற்ற ஐசுவரியத்தைக் குறித்துப் பிரசங்கித்துத் தனது எஞ்சிய வாழ்க்கையைக் கழித்தார்.

இயேசு கிறிஸ்து பாவங்களை மன்னித்து, பகையைக் கொன்று, அன்பினால் உள்ளங்களை வெல்லுகிறவர் என்பதை, அன்பு வாசகர்களே, இந்த உண்மைச் சம்பவம் உறுதி செய்கிறது. இதுவல்லவோ மனித உள்ளங்களை வெல்லும் இறையன்பு!

திருமறை கூறும் சத்தியங்கள் இவை:

“தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவான் 3:16).

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்

(1 தீமோ. 1:15). இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1 யோவான் 1:7,9).

உண்மையாதெனில், நாம் அனைவரும் தனிப்பட்ட நிலையில் பாவிகளாகவே இருக்கிறோம். “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை. தேவனைத் தேடுகிறவன் இல்லை. எல்லாரும் வழி தப்பி ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்.” என்று வேதம் கூறுகிறது (ரோமர் 3:10-12). ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களைச் சுமந்தவராகச் சிலுவைக்குச் சென்றார். நம் எல்லோருடைய பாவங்கள் அனைத்தையும் கழுவி, நம்மைச் சுத்தி செய்யத்தக்க வல்லமை, அவருடைய திரு உதிரத்திற்கு உண்டு. அவருக்கு நம்மை ஒப்படைப்போமாக! இயேசு கிறிஸ்து உங்கள் பாவங்களை மன்னிக்க ஆயத்தமாயிருக்கிறார்.

கிறிஸ்துவின் சிலுவைக் காட்சியை, ஒப்பற்ற திருக்காட்சியை, நம் கண்முன் நிறுத்துவோம். சிலுவையேயன்றி வேறொன்றிலும் நான் மேன்மை கொள்ளேன் என்ற பவுலடிகளின் கூற்றைச் சிந்திப்போம், தியானிப்போம், அவரை மனதார உள்ளத்தில் ஏற்போம்.

புச்சிடாவின் சாட்சி இது: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே’ என்ற வசனத்தை நான் படித்த அச்சணத்தில் முதன் முறையாக, இயேசு கிறிஸ்துவை நேரில் சந்தித்த உணர்வு எனக்கு உண்டாயிற்று. பாவிகளுக்கும் பகைவர்களுக்கும் பதிலாளாக சிலுவையில் மரிக்கையில் இயேசு ஏறெடுத்த ஜெபத்தின் பொருளைப் புரிந்துகொண்டேன். நான் என் பாவங்களை மன்னித்து என்னை ஏற்றுக்கொள்ளும்படியும், என் பகை உணர்வை அகற்றி நல்ல மனிதனாக ஆக்கும்படியும் ஆண்டவரிடம் ஜெபித்தேன். அவர் என்னைப் புதிய மனிதனாக்கினார்”, தனிப்பட்ட முறையில் நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உங்களை ஒப்படைப்பீர்களாக!

ஓர் அனுபவம்! ஓர் அறிமுகம்! ஓர் அழைப்பு!

ஓர் அனுபவம்!

ஒவ்வொருவருக்கும் பலவிதமான அனுபவங்கள் உண்டு. கிராமத்திலுள்ள ஒருவர் முதல் முறையாக பட்டணத்திற்குச் சென்று சுற்றிப்பார்ப்பது ஓர் ஆச்சரியமான அனுபவமாக இருக்கும். தாய் நாட்டை விட்டுகடல் கடந்து கப்பலிலோ, அதிலும் சிறப்பாக ஆகாய விமானத்திலோ வெளி நாடுகளுக்குச் சென்று திரும்புவது மகிழ்ச்சிகரமான ஒரு அனுபவமாக இருக்கும். பெருந் தலைவர் ஒருவர் நம் வீட்டிற்கு வந்து தங்கிச் செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அது மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கும் அல்லவா? பத்து மாதங்கள் சுமந்து குழந்தையைப் பெற்றெடுப்பது ஒரு பெண்மணிக்கு விலையேறப்பெற்ற அனுபவமாக இருக்கிறது. ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளும் ஒருவர் தன்னுடைய கடின உழைப்பு, அயராத முயற்சி. கட்டுப்பாடு, திறமை காரணமாக போட்டியில் வெற்றி பெறுவது பெருமிதம் அடையக்கூடிய அனுபவமாக இருக்கும்.

மேற்கூறிய அனுபவங்களை விடயெல்லாம்சிறப்பானது ஆன்மீக அனுபவமாகும். ஒவ்வொரு மனிதனும் இறைவனோடு தனிப்பட்ட விதத்தில் தொடர்பு கொண்டு அவரோடு நிலையான உறவிற்குள் வருவது எல்லாரும் பெற வேண்டிய ஓர் ஒப்பற்ற அனுபவமாகும்! மனித உள்ளத்தில் இறைவன் தங்க விரும்புகிறார். மனிதன், இறைவனின் அவதாரமாகிய இயேசு கிறிஸ்துவை உள்ளத்தில் ஏற்றுக் கொள்வது ஓர் உன்னதமான அனுபவமாகும். இருள் இருந்த இடத்தில் வெளிச்சம் வருவதைப் போலவும் வெறுமையும் குறைவும் மாறி நிறைவடைவதைப் போலவும் உயிரற்ற நிலைமாறி உயிர் பெறுவதைப்போலவும் இந்த அனுபவம் மறக்க முடியாத மகத்தான ஓர் அனுபவமாகும். உங்களுக்கு இப்படிப்பட்ட அனுபவம் இருக்கிறதா? நீங்கள் இந்த ஆன்மீக அனுபவத்தைப் பெற விரும்புகிறீர்களா?

ஓர் அறிமுகம்!

2000 ஆண்டுகளுக்கு முன் இவ்வுலகில் மனிதனாக அவதரித்த இயேசு கிறிஸ்துவைப் பற்றி ஒவ்வொருவரும் அறிந்துகொள்ளுதல் அவசியம். இயேசு கிறிஸ்துவை, வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஓர் மகாத்மாவாக மக்கள் கருதுகின்றனர். இயேசு கிறிஸ்துவை அல்லாமல் மக்கள் மறுமை வாழ்வில் மோட்ச பாக்கியத்தை அடைய முடியாது. இயேசு கிறிஸ்துவை நீங்கள் நம்புவதும் அவரை ஏற்றுக்கொள்வதும் அவரைத் தொடர்ந்து பின்பற்றுவதும் ஓர் அற்புதமான புதிய வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது. நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி ஓரளவிற்கு கேள்விப்பட்டிருப்பீர்கள். அவரைப் பற்றிய சரியான உண்மைகளை தெரிந்துகொள்வது உங்களுடைய வாழ்வை நிறைவுபடுத்தும் வாய்ப்பாக அமையமுடியும். இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார்!

ஓர் அழைப்பு!

இவ்வுலகில் ஒவ்வொரு நாளும் சோர்வுறச் செய்யும் சூழ்நிலைகள் பல உண்டு’ விடுதலைக்காகவும் ஏங்கி நிற்கும் மக்களை ஆண்டவராகிய இயேசு அழைக்கிறார் “வருந்தி மன பாரத்தினால் சோர்வுற்றவர்களே! என்னிடத்தில் வாருங்கள். நான் உங்கள் உள்ளத்தை இளைப்பாற்றி உங்களுக்கு என் ஆறுதலை அருளிச் செய்வேன்’ என்று ஆண்டவர் இயேசு அன்புடன் அழைக்கிறார். இவ்வுலக வாழ்க்கையோடு மனித வாழ்க்கை முடிவு பெறுவதில்லை. மரணத்திற்குப் பின் உள்ள நித்திய வாழ்வை மோட்சத்தில் நீங்கள் அவருடன் என்றென்றும் வாழவேண்டும் என்று உங்களை அழைக்கிறார். இவ்வுலக வாழ்க்கையின் பிரச்சனைகளிலிருந்து விடுதலை பெறுவது ஆசீர்வாதமே. அதற்கு மேலாக உலகத்தின் பல கவர்ச்சிகளுக்கு இடமளிக்காமல் பரிசுத்தமாய் வாழ்வதற்கென தம்முடைய வழிகளில் நடக்க ‘நீ என்னை பின்பற்றி வா’ என்று இயேசு இன்று உங்களை அழைக்கிறார்!

Popular Posts

My Favorites

மனம் மாறிய மாலுமி

பல ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை ஒரு பெரிய கப்பல் நடுக் கடலில் சென்று கொண்டிருந்த சமயம் அக் கப்பலின் தலைவன் கேப்டன் ஜான் கொடிய வியாதிப் பட்டு மரணத் தருவாயில் இருந்தான். அப்பொழுது மரண...

முடிந்தது