செப்டம்பர் 12
“நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்” ஆதி. 6:9
நோவா தேவனோடு வாழ்ந்து வந்தான். தேவனோடு ஒன்றித்திருந்தான். தேவன் பேசுகிற குரலைக்கேட்டு அவருடைய வழியைத் தெரிந்துகொண்டு, அவருடைய நினைவிலே மூழ்கி அவருடைய சித்தமே சரி என்று ஒப்புக்கொண்டான். தேவனோடு உரையாடுவதென்றால் அவனுக்கு மிகப்பிரியம். ஆலோசனைக்காக அவரண்டை அவன் செல்வான். அவரிடத்தல் அன்புடன் பழகுவான். தேவனே அவருடைய சிறந்த நண்பர். அவன் அவருடைய சமுகத்தை விரும்பி, அவருடன் நடந்து, அவருடைய நட்பில் மகிழ்ந்தான். பூவுலகில் இருந்து கொண்டே, குமாரரையும் பெற்று வாழ்ந்து கொண்டே நோவா தேவனோடு சஞ்சரித்தான். அவருடைய வழியில் நடந்தான். ஒவ்வொரு நாளும் பல நன்மைகளைப் பெற்றான்.
அவனுக்குப் பக்தி இருந்ததுடன் கவனமும் இருந்தது. தேவ சமுகத்தையே அவன் பாக்கியமாகவும், மேன்மையாகவும், பெரியதாகவும் எண்ணினான். இந்த மனிதனைப்போலவே நாமும் தேவனுடன் பழகும் சிலாக்கியம் உள்ளவர்களே. நாம் கர்த்தராகிய கிறிஸ்துவை விசுவாசித்தால் இந்த ஐக்கியத்தைப்பெற்று, அவரோடு சஞ்சரிக்கலாம். தேவன் நம்மோடுகூட இருக்கிறார். நாம் அவரோடு கூட இருக்கிறோமா? அவரோடுகூட நடக்கிறோமா? அன்பானவரே, நீர் தேவனோடு வாழ்கிறீரா? இன்று அவரோடே நடந்ததுண்டா? தேவ சமுகத்தினாலுண்டான மகிழ்ச்சியைப் பெற்றீரா? அவருடைய சமுகத்தில் நீங்கள் இருந்து உற்சாகமடைந்தீர்களா? தேவனோடு சஞ்சரிப்பது பெரும் பாக்கியம். இது அவருடைய பெரிதான இரக்கம். கிருபை. நீங்கள் தேவனோடு இருந்தால் அவர் உங்களோடு இருப்பார்.
லோகம் ஆளும் ஆண்டவர்தாம்
என் உயிர் நண்பராம்.
அவரோடு சஞ்சரிப்பேன்
என்றும் பெரும் பேறு பெறுவேன்.