டிசம்பர் 22
“உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்” யோவான் 13:15
இயேசு கிறிஸ்து காட்டின மாதிரியின்படியே நீ நடக்க ஆயத்தமா? அவருடைய மாதிரியில் ஆச்சரியங்களைக் கண்டு பிடித்தாயா? அதன்படி நடக்க முழுமனதோடு விரும்புகிறாயா? அவருடைய மாதிரியின்படி நடவாமல், அவர் செலுத்தின பலியினால் நான் இரட்சிக்கப்பட்டவன் என்று சொல்லுவது வீண்பேச்சு. அவருடைய காலடிகளை நாம் தொடர்ந்து செல்லுமாறு அவர் நமக்கு நல்ல மாதிரிகளை வைத்துப்போனார். அவர் பிதாவின்மேல் வைத்த விசுவாசம், அவர்மீது காட்டின அன்பு, ஊழியத்தில் அவருக்கிருந்த பக்தி வைராக்கியம், பிதாவின் வேலைகளில் அவருக்கிருந்த வேகம், இவைகளை எல்லாம் கவனித்துப்பார். அவர் தமது ஜனத்தின்மேல் வைத்த அன்பு, பொறுமை, அமைதி, அவருடைய இரக்க உருக்கம், தன்னை வெறுத்தல், தாழ்மை இவைகள் எல்லாவற்றையும் கவனித்துப் பார்.
அவர் பாவிகளின்மேல் வைத்த அன்பைப் பார். அவர்களுக்காக அவர்விட்ட பெருமூச்சைப் பார். அவர்களுக்காக சிந்திய கண்ணீரைப் பார். அவர்களைப்பற்றி அவருக்கிருந்த பாரத்தைப் பார். அவர்களுக்கு நன்மை செய்யவேண்டுமென்று அவருக்கிருந்த எண்ணத்தைக் கவனி. இவைகளை எல்லாம் சிந்தித்துப் பார். அவர் தம்மை எவ்வளவாய் தாழ்த்தினார். தமக்கெதிராக அவர்கள் செய்த கொடுமைகளை எவ்வளவு பொறுமையாகச் சகித்தார். அவர்தான் உன் முன்மாதிரி. எப்பொழுதும் அவரைப்போலிருக்க அவருடைய முன்மாதரியைப் பின்பற்றுங்கள். ஓவ்வொருமுறையும் உங்கள் நடத்தையை அவருடைய நடத்தையோடு ஒப்பிட்டுப்பாருங்கள். அவருடைய மாதிரி எத்தனை அழகு, எவ்வளவு நல்லது, எவ்வளவு பாக்கியமானது. „அவருடைய மாதரியின்படி நடத்த பரிசுத்த ஆவியானவரே, எனக்கு வலிமையையும், பெலத்தையும் தாரும்“ என்று தினமும் ஜெபி.
கிறிஸ்துவே என் முன்மாதிரி,
கிறிஸ்துவின் சாயல் ஏற்பேன்,
அவரது அடிகளைப் பின்பற்றி,
அவரைப்போலாக முயற்சிப்பேன்.