நமது விடுகளில் நம்மைப் பார்க்க வருகிறவர்களுண்டு. அவர்களில் சிலரை நாம் அன்புடன் வரவேற்கிறோம். மற்றவரை அவ்வாறு ஏற்றுக் கொள்வதில்லை வருகிறவர்களில் சிலர் நம்மை சந்தோஷிப்பிக்கின்றனர். நான் இங்கு எடுத்துரைக்கப்போகிற நபரோ எல்லாக்குடும்பங்களையும், எவ்விடத்திலும், எந்த நேரத்திலும் பார்த்துப்போகவருபவராவர். இவரது வருகை ஒருபோதும் விரும்பப்படத்தக்கதல்ல. ஆயினும், அவர் அரண்மனை வாசல்களிலும், ஏழைகளது குடிசைகளிலும், துணிச்சலோடு பிரவேசிப்பவர். ராஜாக்கள் இவரைப் பார்த்த மாத்திரத்தில் தலைகுனிகிறார்கள். ஐசுவரியவான்களின் சம்பத்து இவர் முன்நிற்காது, பிச்சைக்காரர் இவரது கட்டளைகளுக்கு கீழ்ப்படிகிறார்கள்.
இன்னும் கொஞ்சக்காலம் இங்கு தாமதிக்கலாம் என்றிருக்கும் காலங்கடந்த வயோதிபரையும், தொட்டிலில் தாலாட்டப்படும் குழந்தைகளையும், இளவயதின் முறுக்கில் இருக்கும் வாலிபரையும் இவர் தன்னுடன் எடுத்துச் செல்லுவார்.
அவர் நுழையாத இடமில்லை. ஜனங்கள் குடித்து வெறிக்கும் ஸ்தலங்களிலும், கூத்தாடும் அரங்கத்திலும் அவர் நுழைவார். அவரைத்தடுப்பார் யாருமில்லை. சமையலறையோ படுக்கையறையோ, உணவருந்தும் இடமோ, இளைப்பாறும் இடமோ, எங்கும் அவர் உட்பிரவேசிப்பார். மனிதரைப்பற்றி அவரிடத்தில் தாட்சணியம் யாதுமில்லை. அவரைக்கண்டதும் யாவரும் நடுங்குகிறார்கள்.
1956-ம் ஆண்டு யூலை மாதம் 16-ம் தேதி நள்ளிரவில் ஆறு வாலிபர் ஒருகாரில் ஏறிக்கொண்டு “வாழ்விலோர் திருநாள்” கொண்டாடப் புறப்பட்டனர். அவர்கள் உள்ளம் களிப்பால் நிறைந்திருந்தது. அவர்கள் முகத்தில் கவலைக்குறி யாதொன்றுமில்லை. துக்கமும் காணப்படவில்லை. நாளை நடப்பதைப்பற்றிய எண்ணமின்றி, வாழ்க்கையில் ஆனந்தத்தில் மூழ்கி இருந்தனர். உலக சிற்றின்பங்களின் மாயையின் மத்தியில், எல்லாம் கேளிக்கையும், தமாஷாகவே இருந்தது. அவர்கள் ஏறிச்சென்ற மோட்டார் கார் மணிக்கு 75 மைல்வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அதிக வளைவான வீதியில் போகையில், பாதையின் பள்ளத்தில் கார் விலகி, எதிரேயுள்ள ஆலமரத்தில் மோட்டார் மோதினது. அந்தோ பரிதாபம்! கடந்ததை விவரிக்க என் கை கூசுகிறது. காரில் இருந்தவர்களில் ஒருவர் வெளியே தூக்கி எறியப்பட்டார். உள்ளே சிக்கி தங்கள் உயிரைப் போக்கிக்கொண்டிருந்தவர்களுடைய கூக்குரலை அவர் கேட்கவே, தன் தோழர்களில் ஒருவரை மரணத்தின் பிடியினின்று மீட்டார். ஆனால் மற்ற நால்வரோ, ரத்த வெள்ளமாக மாறின மோட்டாருக்குள் சிக்கி மரித்துப்போனார்கள். எனவே நான்கு வாலிபரும், இப்பயங்கரமான சூழ்நிலையில், கண் இமைக்கும் நேரத்தில் முடிவில்லாத நித்தியத்துக்குள் எடுத்துச் செல்லப்பட்டனர்.
சக்தியும், இளமையும் பொருந்தியவருடைய ஜீவனை உரிந்துகொள்ளும் இந்த “வரவேற்கப்படாத விருந்தாளி” யைப் பற்றி வாசிக்கும், என் அருமை நண்பரே! கவனியுங்கள். எதிர்பாராத விதமாய் இந் நபர் மோட்டாரில் நுழைந்தார். பறக்கும் ஆகாய விமானத்திலும், ஓடும் கப்பல்களிலும், இவர் துழைவார். நாம் நடக்கும்போதும், பேசிக்கொண்டிருக்கும் வேளையிலும் அவர் வந்து விடுவார். இந்த ‘மரணம்‘ என்றழைக்கப்படும் இவரது வருகையை தைரியத்தோடு ஏற்றுக்கொள்ள நீ ஆயத்தமாய் இருக்கிறாயா? இதுதான் இப்பொழுது எழும்பும் கேள்வி, உன்னுடைய கடவுளும் சிருஷ்டி கர்த்தாவுமாய் இருக்கிறவரை சந்திக்க நீ ஆயத்தமா? தேவன் பேசுவதைக் கவனித்துக்கேள்! ‘வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.” பிரசங்கி 11-ம் அதிகாரம் : 9-ம் வசனம் “அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,” எபிரேயர் 9 : 27.
மேற் கூறியுள்ள வசனங்கள், ஒருவன் ஜீவனோடிருக்கையில் தானே,கடவுளோடு ஒப்புரவாக வேண்டும் என்பதை நமக்கு எடுத்துள் காட்டுகின்றவையல்லவா? ஆத்துமாவின் இரட்சிப்பை, மரணத்துக்கு முன் ஒருவன் பெறவேண்டும். மரணம் அடைந்தபின் ஒருவரும் இந்த விஷயத்தில் உதய முடியாது; கடவுளும் இந்த விதமான பிந்தின நிலைமையில் தம்முடைய இரட்சிப்பின் கரங்களை நீட்டக் கூடாதவராய் இருக்கிறார். “இப்போதே இரட்சண்ய நான். இதுவே தகுந்த சமயம். “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” யோவான் 3:16.
இயேசு உன்னைநேசிக்கிறார் – உனக்காகத் தன் ஜீவனையும் கொடுத்தார். தம்முடைய திரு இரத்தத்தினாலே ஆயத்தம் பண்ணின இரட்சிப்பின் ஆனந்தத்திற்கு உன்னை ஆளாக்க, இயேசு அழைக்கிறார். எப்போது? இப்போதே, இதற்கு நீ செவி சாய்க்கமாட்டாயா?
உன் காலமெல்லாம் போகுதே போகுதே
உலக மாய்கையிலே
ஒ! தேவகோபம் வரும்முன் வரும்முன்
உன் மீட்பரண்டை வாராயோ?
