யூலை 20
“ஜெயங்கொள்ளுகிறவன்” வெளி 2:17
ஒவ்வொரு கிறிஸ்தவனும் போர்ச்சேவகனானபடியால் கிறிஸ்து இயேசுவின் நற்சேவகனாக இருக்க கற்பிக்கப்படுகிறான். கிறிஸ்தவனாகிய போர்ச்சேவகன் யுத்தத்திற்குப்போக வேண்டும். அவனுக்குச் சத்துருக்கள் ஏராளம், பலசாலிகள். கிறிஸ்தவன் அவர்களை ஜெயிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் அடங்கமாட்டார்கள். கிறிஸ்தவன் அவர்களோடு சமாதானமாகக் கூடாது. முழுவதும் அவர்களை ஜெயிக்கும்வரை அவர்களோடு போராடவேண்டும். இந்த உலகத்தை மேற்கொள்ள வேண்டும். சாத்தானை ஜெயிக்க வேண்டும். தன் சொந்த இருதயத்தை அடக்கி ஆளவேண்டும்.
மோட்சம் ஜெயவீரரின் ஸ்தலம். அங்கே சொல்லிமுடியாத மேன்மைகள் அவர்களுக்காக வைக்கப்பட்டுள்ளன. அவர்களுடைய இரட்சிப்பின் தலைவராகிய இயேசுவானவர் ஜீவவிருட்சத்தின் கனியையும் மறைவான மன்னாவையும் அவர்களுக்குப் புசிக்க கொடுப்பார். புதிய பெயர் எழுதப்பட்ட வெள்ளைக் கல்லையும், விடி வெள்ளி நட்சத்திரத்தையும், வெள்ளை அங்கியையும், அவர்களுக்குக் கொடுப்பார். தேவனுடைய ஆலயத்தில் ஒளிசுடர்களாய் நிறுத்தப்பட்டு, ஜீவ கிரீடத்தைத் தரித்து, அவரோடு சிம்மாசனத்தில் உட்காரும் சிலாக்கியத்தையும், பெறுவர். ஜெயங்கொள்ளுகிறவனுக்கு இப்படிப்பட்ட பாக்கியங்கள் வாக்குப்பண்ணப்பட்டுள்ளபடியால், நாம் தைரியப்பட்டு உற்சாகமடைவோமாக. அவர் கொடுக்கும் எந்தக் கனமும் அவர் அளிக்கும் எந்த மேன்மையும், ஜெயங்கொள்ளுகிறவனுக்கு உண்டு. ஆகவே நாம் போராடி யுத்தம் செய்வோமாக. தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தைத் தரித்து இயேசுவின் கிருபையில் பலப்பட்டு பந்தையப் பொருளை நோக்கி போராட மற்றவர்களையும் உற்சாகப்படுத்துவோமாக. நாம் விசுவாசத்தினால் ஜெயங்கொள்ளுவோமாக.
என் சத்துருக்கள் மூவரையும்
போராடி ஜெயிப்பேன்
உலகம் மாம்சம் பிசாசு
ஜெயித்து அவரைப் பற்றுவேன்.